மண மகரிஷிக்கு அந்தப் பெயரிட்டு, அவர் முருகன் அவதாரமென்று உணர்ந்து கூறியவர் காவ்ய கண்ட கணபதி.

தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகில் வலங்கைமான் உள்ளது. பதினா றாம் நூற்றாண்டில் அங்கு சோமயாஜுலு என்பவர் வசித்தார். பின்னர் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கலுவராயி என்னும் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். ராயி என்றால் கல்; கலுவ என்றால் தாமரை மலர். கல்மேல் தாமரை மலர்ந்ததால் கிராமத்திற்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. சோமயாஜுலு வம்சத் தில் வந்த நரசிம்ம சாஸ்திரி- நரசம்மாள் என்னும் ஆன்மிகத் தம்பதிக்கு 17-11-1878-ல் பிறந்தவரே கணபதி. நாட்டுப்பற்று, வேதங்களில் ஈடுபாடு, தேவ நம்பிக்கை போன்றவையுள்ள ஒரு மகன் வேண்டுமென வேண்டிட பிறந்தவர். நரசம்மாள் சூரிய பக்தை; நரசிம்ம சாஸ்திரி காசி டுண்டி கணபதி பக்தர்.

கணபதி பிறந்ததும் ஒரு அதிசயமே. ஸ்ரீகாகுளம் அருகே அரசவல்லியிலுள்ள சூரியநாராயணன் கோவில்வந்து பணிந்தாள் நரசம்மாள். இரவில் ஒரு கனவு தோன்றியது. கோவிலின் பின்புறம் சூரிய பிரகாசத்துடன் ஒரு பெண் கலசம் ஏந்திவந்து நரசம்மாள் கையில் தர, அது ஒரு குழந்தை யாயிற்று. சூரியன், அக்னி அம்ச புதல்வன் என தம்பதியர் எண்ணினர். நரசம்மாள் கருவுற்றாள். நரசிம்ம சாஸ்திரி தனது இஷ்ட தெய்வமான காசி டுண்டி கணேசரை சென்று தரிசித்தார். நாள் முழுவதும் விரதமிருந்து, இரவு ஒரு குவளை பால்மட்டுமே அருந்தினார். இவ்வாறு ஏழு நாட்கள் விரதம் முடிந்தது. 17-11-1878 அன்று நண்பகலில் ஆழ்ந்த தியானத்தில் அவர் இருந்தபோது, கணபதியிடமிருந்து ஒரு குழந்தை தோன்றி இவர் மடியில் அமர்ந்தது; மறைந்தது! பின்னர் தன் ஊருக்குப் புறப் பட்டார்.

அந்த நாளிலேயே நரசம்மாள் ஆண் குழந்தை பெற்றாள். கணபதி அருளால் பிறந்த தால் சூரியகணபதி என்று பெயரிட்டனர்.

Advertisment

அவருக்கு வசிஷ்ட கோத்திரம். எனவே அவர் பெயர் வாசிஷ்ட கணபதி சாஸ்திரி என்றாயிற்று. ரமண மகரிஷியின் தொடர்பில், ரமணர் அவரை "நாயனா' (தெலுங்கில் அப்பா) என்று அழைக்க, அதுவும் நிலைத்தது.

g

குழந்தை கணபதி ஆறு வயதுவரை செயலற்று சோம்பிக் கிடந்தது. வருந்திய தந்தை குழந்தையின் வயிற்றிலும் நெற்றி யிலும் கம்பியால் சூடுபோட்டார். வினோதம்!

Advertisment

குழந்தை சுறுசுறுப்பாகி பேசவும் ஆரம்பித் தது. கணபதி தன் சித்தப்பா பிரகாசம் சாஸ்திரியிடம் கல்வி பயின்றார். பால இராமாயணமோ சிவ சஹஸ்ரநாமமோ- ஒருமுறை பார்த்தாலும் கேட்டாலும் திரும்பக் கூறும் இயல்புபெற்றார். பத்து வயதுக்குள் வடமொழி காவியங்கள், ஜோதிடக் கலையும் கற்றார். தானே பஞ்சாங்கம் கணித்தார். ஒரு மணி நேரத்தில் 34 துதிகள்கொண்ட "பாண்டவ- திருதராஷ்டிர சம்பவம்' என வடமொழி கிரந்தம் எழுதினாராம்.

கணபதிக்குப்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அன்னபூர்ணா என்னும் பெண் குழந்தை பிறந்தது. அடுத்து மூன்றா வது ஆண்டில் தாய் மீண்டும் கருவுற்று, குழந்தை பிரசவமாகும் சமயம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு கணபதியிடம், "குழந்தை பிறக்கும் காலநிலை எப்படி?' என்று கேட்டாள். கணபதி, "இப்போது பிறப்பவர்; பிறப்பிப்பவர் இறப்பர்' என்றார். அதுபோலவே தாயும் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் இறந்தனர். அத்தகைய ஜோதிட ஞானம் உள்ளவர் கணபதி.

கணபதியின் பன்னிரண்டாவது வயதில் பொம்மிகபாடு எனும் கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சி என்னும் எட்டு வயது பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் காளிதாசரின் "மேக சந்தேசம்' போல, "பிருங்க சந்தேசம்' என்னும் காவியத்தை அவர் எழுதினார்.

14 வயதுக்குள் சம்பு இராமாயணம், சாகுந்தலம், உத்தர ராமசரிதம், குவலயானந் தம், சந்த்ரலோகம், பிரதாப ருத்தரீயம் என இலக்கியங்கள் எழுதினார். வடமொழி யில் பிரவசனம் செய்தார். அஷ்டாவதா னம் செய்யவும் தேர்ச்சிபெற்றார். மகாபாரதத்தைப் பலமுறை ஆர்வத்துடன் படித்தார். மானுட சேவையின்மூலம் மாதவ சேவைசெய்ய வேண்டுமென எண்ணினார்.

தந்தையிடம் சிவ பஞ்சாட்சரம், அஷ்டாட் சரம் உபதேசம்பெற்று துதித்தார். தவம் மேற்கொள்ள ஆவல் எழுந்தது.

மனைவி விசாலாட்சியும் கணவர் கணபதியிடம் மகா கணபதி, ஸ்ரீவித்யா தீட்சைகள் பெற்று ஜெபம்செய்தாள். பெண்களும் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டுமென்னும் கொள்கைகொண்டவர் கணபதி. ஒருமுறை அவர் ஜெபம் செய்யும்போது வெண்ணிற ஆடை, நீண்ட தாடியுடன் ஒருவர் தோன்றி, "நான் பத்ரகன், கனகன்' என்று சொல்லி மறைந்தாராம்.

அவர் யாரென்று கணபதிக்குப் புரியவில்லை.

காசி விஜயம்

gg

காசியில் தவம்செய்ய கணபதி புறப்பட்டார். அவரது உறவினரான பவானிசங்கர் என்பவர் காசியில் வசித்தார்.

அவரது இல்லம் சேர்ந்து காசியிலுள்ள புண்ணிய தலங்களை தரிசித்தார். ஒருசமயம் அவர் தவத்தில் இருந்தபோது, ராம்நகர் துர்க்கா மந்திர் யோகி என்பவர் வந்தார். அவர் கணபதியிடம், "நாம் 16 பேர் வந்துள்ளோம். நான் சுகேது. தவமென்பது உனக்கு இயற்கையிலேயே அமைந்தது. எனவே உடலை வருத்திக்கொள்ளாதே'' என்றார்.

கணபதி அவரிடம், "என்னைப்பற்றி என் தந்தை கவலைப்படுகிறார். அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதுகிறேன். நீங்களும் அதில் ஏதேனும் எழுதவும்'' என்றார்.

அவரோ "சோமயா ஜீவ சூரியநாராயணன்' என்று எழுதினார். மறுநாள் கணபதி அந்த யோகி குறிப்பிட்ட துர்க்கா மந்திர் சென்றார்.

அங்கு யோகியென்று எவருமே இல்லை என்றனர். அப்படியானால் அவர் யார்?

நாசிக் விஜயம்

அன்றிரவு கணபதி ஒரு கனவுகண்டார். அதில் வந்த ஒரு பெரியவர், "நாசிக் சென்று தவம்புரிவாய்' என்றார். மறுநாள் கணபதி தந்தையின் ஆசியோடு நாசிக் சென்றார்.

அங்கிருந்து திரயம்பகம் சென்று கோதாவரியில் நீராடி சிவனை தரிசித்தார். பின்பு அங்கு "நவசூதிம்' என்னுமிடத்தில் எழுபது நாட்கள் தவம்புரிந்தார். அச்சமயம் ராமபாபு என்பவர் இரவில் கொடுத்த பாலை மட்டுமே அருந்தினார். எழுபதாம் நாள் சிவபெருமான் அசரீதியாக, "உனக்கு கடமைகள் உள்ளன; ஊருக்குச் செல்' என்றா ராம்.

புவனேஸ்வர் விஜயம்

கணபதி தன் வீடுவந்து சேர, காசியிலிருந்து அவர் அனுப்பிய கடிதத்தை தந்தை காட்டி னார். கணபதி எழுதியது மஞ்சள் காகிதத்தில். இதுவோ வெள்ளை நிறமாக இருந்தது. விநாயகர் படம் போட்டிருந்தது. கணபதி போடவில்லை. எழுத்து அவருடையதே. வினோத தெய்வச் செயல் என எண்ணினார்.

சில மாதங்களில் மனைவி கருவுற்று தன் பிறந்தகம் சென்றாள். இவர் புவனேஸ்வர் சென்று அம்பாள் ஆலயத்துக்குப் பின் தனிமையான ஓரிடத்தில் தவம்புரிந்தார். தினமும் ஒன்பதுமுறை லலிதா சகஸ்ரநாமம் ஜெபித்தார். ஒன்பது வாரங்கள் இவ்வாறு கடந்தன. கடைசிநாளில் தேவி அழகிய வடிவில் தோன்றி, பொற்கிண்ணத்தில் தேன் கொடுத்து அருந்தச் செய்தாள்.

அவர் உதட்டில் தேன் இருந்ததால் அம்பாள் புன்னகையுடன் அவர் உதட்டைத் தடவினாள்.

ஸ்பரிசத்தால் அது உண்மை என உணர்ந்தார்.

gag

அங்கு எழுபது வயதான ஒரு மூதாட்டி கனவுகண்டாள். அதில் தனது கணவர் லம்போதர தாஸும், விநாயகரும் மாறிமாறி வந்து, "இப்போது தேவியின்பின் உள்ளேன்' என்றனராம். இதை அந்த மூதாட்டி தனது மகன் பாஸ்கர தாஸிடம் கூற, அவர் கோவில் வந்து விநாயகர் சிலையாக இருக்குமென எண்ணினார். ஆனால் தவம்செய்யும் கணபதி முனியைக் கண்டார். அவர் தன் தாயுடன் வந்து கணபதி மந்திர உபதேசம் பெற்று, அவருக்குப் பணிவிடை செய்தார். .ஆக, மேலும் நான்கு மாதங்கள் அங்கு தவம்செய்தார். ஒருநாள் அவர் பசுவொன்று கன்று ஈன்றதாகக் கனவுகாண, தனக்கு மகன் பிறந்திருக்கும் செய்தி வந்தது. திரயம்பக சிவ தரிசன நினைவாக குழந்தைக்கு மகாதேவன் என்று பெயரிட்டார்.

காவ்ய கண்ட கணபதி

காஞ்சி, அமராவதி, நாளந்தா, நவத்வீபம் போன்ற நகரங்களில் கல்வி கேள்வி களில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. ஆண்டுக்கொருமுறை நவத் வீபத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பண்டிதர்கள் வருவார் கள். இலக்கிய போட்டி கள் நடக்கும். வெற்றி பெறுபவருக்கு பட்டங்கள் வழங்குவார்கள். கணபதி அங்குபோய்ச் சேர்ந்தார். விழாவுக்குத் தலைவராக அம்பிகா தத்தர் என்பவர் இருந்தார். அவருக்கும் கணபதிக்கும் நீண்ட வாக்குவாதம் நடந்தது.

அம்பிகா தத்தர் கணபதியின் பாண்டித்யத்தை மெச்சி "காவ்ய கண்ட கணபதி' என்னும் பட்டத்தை அளித்தார்.

திருவண்ணாமலை தரிசனம்

கணபதியின் தந்தை தனக்கு பார்வை சரியில்லை என்றும் வீடு வருமாறும் கூற, வீடுவந்து சேர்ந்தார். ஒன்றரை வருடம் சிகிச்சையளித்தும் சரியாகாததால், அவரே ஆயுர்வேதம் கற்று அதன்மூலம் தந்தையின் கண்களை குணமாக்கினார். பின்பு விஜய வாடா கனகதுர்க்கை அம்மனை தரிசித்து, பின்னர் காளஹஸ்தி சென்று சிவனை வணங்கினார். அங்கிருந்து காஞ்சி வந்து சிவன்- அம்பாளை தரிசித்தார். காஞ்சியில் நாராயண தேசிகர் என்னும் ஜோதிடரை சந்திக்க, இருவரும் ஜோதிடத் தில் ஆழ, நாராயண தேசிகருக்கு பல ஜோதிட ரகசியங்களைக் கூறினார். அங்குள்ள பாழடைந்த அனுமன் கோவில்சென்று தவம்செய்தார். அங்கிருந்து புறப்பட எத்தனித்தபோது, ஜோதிடர் திருவண்ணா மலை சென்று சிவனை தரிசிக்குமாறு வேண்டினார். ஆக திருவண்ணாமலை வந்தார்.

நேரே அம்பாள் சந்நிதி சென்றார்.

அங்கே மாலையிலிருந்து பூக்கள் விழுந்த தைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். பின் சிவன் சந்நிதி சென்றார். அந்த தரிசன அனுபவத்தைப் போன்று வேறெங்கிலும் அவர் உணரவில்லை. எனவே தனது விருப்பங்கள் இங்கு பூர்த்தியாகுமென்று மனசாந்தி அடைந்தார்.

உடன்வந்த தம்பி சிவராமனுக்குப் பசி. ஏகாதசி வேறு. இரவு 9.00 மணி ஆகிவிட்டதால் எங்கும் உணவு கிடைக்க வில்லை. எனவே சிவன்மீது உரக்க ஒரு துதி பாடினார்.

அப்போது ஒரு வீட்டு நபர் வந்து, "எனது மனைவி விரதம் மேற்கொண்டு இரண்டு அந்தணர்களுக்கு உணவு தரவேண்டும். ஏகாதசி என்பதால் எவரும் வரவில்லை. நீங்கள் இருவரும் வாருங்கள்'' என அழைத்தார். அவர் மனைவி நன்கு பரிமாற, இருவரும் உண்டனர். மறுநாள் காலை அந்த வீட்டு நபரின் மனைவிக்கு நன்றி கூறலாமென்று தேடினால் வீடு தென்படவில்லை. அங்கு விநாயகர் ஆலயம் தான் இருந்தது. சுந்தரருக்கு பலமுறை சிவன் உணவளித்ததுபோல கணபதிக்கு விநாயகரே வேற்றுருவில் வந்து உணவளித்தார் போலும்!

தர்மச் சத்திரம் மற்றும் பக்தர்கள் இல்லத்தில் உணவென்று நாட்கள் கழிந்தன. கார்த்திகை தீப உற்சவ சமயம். எனவே சிவன்மீது "ஹர ஸ்துதி' என்று ஆயிரம் துதிகள்செய்ய விரும்பினார். தினமும் எழுதி நந்திகேசர் அருகில் பாடினார். ஆயிரம் துதிகள் எழுதியபிறகு, முழுவதையும் பக்தியின் உச்சநிலையில் பாடினார். அச்சமயம் பலரும், தவசீலர்களுடன் சேஷாத்ரி சுவாமி களும், ரமணரும் அந்த துதிகளைக்கேட்டு நெகிழ்ந்தனர். கல்பட்டு ராமசுவாமி என்பவர் ஹரஸ்துதி பிரதியைத் தன் கிராமத்துக்கு எடுத்துச்சென்றார். அவர் மரணமடைந்தபின் ஹரஸ்துதி கிடைக்கவில்லையாம். ஒரு பொக்கிஷம் மறைந்தது.

வேலூரில் பணி- பைபிள்

gga

வேலூரில் ஊரிஸ் என்னும் இயேசு கல்லூரிக்கு தெலுங்கு பண்டிதர் தேவையென அன்பர்கள் கூறிட, அங்குசென்றார். அங்கு "பால் ஹாரிஸ்' என்பவர், கணபதிக்கு பைபிள் பற்றி எதுவும் தெரியாதென நினைத்து சில வாக்கியங்களைப் படித்துக் காட்டினார். கணபதியோ பைபிளிலுள்ள பல வசனங் களைக் கூறி, "மற்ற மதங்களில் நல்லன எதுவோ அதனைத் தயங்காமல் பின்பற்றவேண்டும்'' என கூறினார். கணபதியின் அபார பைபிள் ஞானம் மற்றும் பெருந் தன்மை கண்டு வியந்தார் பால்.

கர்னல் ஆல்காட்

12-2-1907-ல் கணபதியின் கனவில் பத்ரகன் தோன்றி, "நான் என் உடலைவிட்டுச் செல்கிறேன். நீ கவனமாக இரு. உன் தவத்தால் சமுதாயம் பயன்பெறும்' என்றார்.

மறுநாள் நாளேட்டில் தியோசபிகல் சொசைட்டியின் தலைவர் கர்னல் ஆல்காட் மறைந்துவிட்ட செய்தியுடன் படமும் வந்தது. அவரே காசியில் முன்பு கணபதி கண்ட பத்ரகன். சென்னையில் அவர் இருப்பது தெரியாமல் போயிற்றே என்று வருந்தினார். ஆன்மிகத்தில் ஏதேதோ வினோதங்கள் நடைபெறுகின்றன. நமக்கு அது புரிவதில்லை.

ரேணுகாதேவி தரிசனம்

வேலூருக்கு அருகே இருபத்துநான்கு கிலோமீட்டர் தொலைவில் படவேடு (படைவீடு) எனும் தலம் உள்ளது. அது ரேணுகாதேவி அருளாட்சி புரியும் தலம். கணபதியும் அவரது மனைவி விசாலாட்சியும் அத்தலத்தை தரிசிக்க விரும்பினர். 1907-ஆம் ஆண்டு நவராத்திரி சமயத்தில் அவர்கள் இருவரும் அங்குசென்று தரிசனம் செய்தனர்.

ஆன்மிக வாழ்வில் கணபதிக்கு ஒரு திருப்புமுனை. தவ வேட்கையின் ஆர்வம் அதிகரித்தது. எனவே அவர் வேலூர் பணியைத் துறந்தார். பால் ஹாரிஸ் எவ்வளவு கூறியும் கேட்கவில்லை.

ரமண நாமம் சூட்டியது

வேலூரிலிருந்து திருவண்ணாமலை வந்து, தனது சீடர் வாசுதேவ சரஸ்வதி வீடு சென்று, பின்னர் தன் தவத்திற்கு பச்சையம்மன் கோவிலைத் தேர்ந்தெடுத்தார். அங்கு மன நிம்மதி ஏற்படவில்லை என்பதால், நிருதி லிங்கம் அருகே மாறினார். இரவு நன்கு தியானம் செய்து, விடியலில் சிறிது கண்ணயர்ந்தார். ஒரு கனவு. அந்த கோவிலின் பூசாரி, "கோவிலின் தேர் இடையில் நின்றுவிட்டது. தாங்கள் வந்தால் தவிர அது நகராது. தயவுசெய்து வரவும்' என்றார்.

கனவில் தோன்றிய இடம் நினைவிருந்ததால் இருட்டில் அவ்விடம் வந்து சேர, தேர் நகராமல் இருப்பதைக் கண்டார். காலை வருவதாகக் கூறிவிட்டுச் சென்று, காலையில் அனுஷ்டானங்களை முடித்து அங்குவந்து, ஈசனை வணங்கி, "உன் ஆணைப்படி வந்துள்ளேன்; தேர் நகரட்டுமே' என வேண்டி, மற்றவர்களுடன் சேர்ந்து வடத்தைப் பிடித்திழுக்க தேர் நகர்ந்ததாம்.

பிராமண சுவாமியை (ரமணரின் முற்பெயர்) முன்பும் தரிசித்துள்ளார்.

அன்று பகல் 2.00 மணிக்கு மீண்டும் தரிசிக்க மனம் விழைந்தது. திருவிழா சமயம். எனவே பலரும் இருப்பார்கள் என்றெண்ணினார். ஆனால் அவரோ தனித்திருந்தார். கணபதி வயதில் மூத்தவர். பிராமண சுவாமிமுன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். "நான் படிக்கவேண்டியவை அனைத்தும் படித்துள்ளேன். ஜெபதபங்கள் பல ஆண்டு செய்துள்ளேன். உண்மையான தவமென்பது என்னவென்று புரியவில்லை. அதை எனக்கு உணர்த்தவேண்டும்'' என மனம் கசிந்து வேண்டினர்.

பல ஆண்டுகளாக பேசாமலிருந்த பிராமண சுவாமி கனிவுடன் அவரைப் பார்த்து மெதுவாக, "நான் என்னும் எண்ணம் எங்கு எழுகிறதென்று கூர்ந்து கவனித்தால் மனம் அங்கே அடங்கும். அதுவே தவம். ஒரு மந்திரத்தை ஜெபிக்கும்போது அந்த மந்திரத்தின் ஒலி எங்கிருந்து எழுகிறதென்று கவனித்தால் மனம் அங்கே அடங்கும். அதுவே தவம்'' என்றார். அந்த நாள் 18-11-1907.

சுவாமிகளின் போதனையில் ஆழ்ந்தால், அதன்மூலம் அனைவரும் நலன் பெறலாம் என மெய்ம்மறந்தார். தான் எங்கு தவம் செய்யவேண்டுமென கேட்க, விருபாக்ஷா குகையில் அமருமாறு கூறினார். அலையும் மனதை அடக்குவது எளிதல்ல; நான் என்னும் அகந்தை அறவே அழியவேண்டும் எனவும் உணர்ந்தார்.

சற்று நேரத்தில் பழனிச்சாமி என்பவர் வந்தார். அவர்மூலம் பிராமண சுவாமியின் இயற்பெயர் வெங்கடரமணன் என்றறிந்தபின்பு, அவர் பெயரை "ரமண' என்று சுருக்கினார். ஆகவே அவர் பகவான் ரமண மகரிஷி என பின்பு போற்றப்பட்டார். ரமணரும் ஏதும் சொல்லவில்லை. இரண்டு நாட்களில் கணபதியின் மனைவி விசாலாட்சியும் வந்துசேர, சீடர்களுடன் தனது குருவை வணங்கினார். அண்ணாமலை தீப தரிசனமும் கண்டு நெகிழ்ந்தனர்.

உமா சகஸ்ரம்

கணபதி முனி அருணாசலேஸ்வரரை ஹர சகஸ்ரம் என துதித்தது முன்பு கண்டோம். இப்போது குரு தரிசனத்திற்குப்பிறகு அம்பாள்மீது உமா சகஸ்ரம் என 20 நாட்களில் துதிப்பதாக 26-11-1907 அன்று முடிவுசெய்தார். ரமணரும் ஆமோதித்தார். மாமரக் குகையில் அமர்ந்து எழுதினார்.

15 நாட்கள் கடந்தன. அப்போது அவரது வலக்கை கட்டைவிரலில் ஒரு கட்டி இருந்தது. எனினும் தன் பணியைத் தொடர்ந்தார். 19 நாட்கள் கடந்தபோது 700 துதிகளே எழுதமுடிந்தது. சென்னையிலிருந்த புண்ணியகோடி என்னும் மருத்துவர் கனவில் அருணாசலேஸ்வரர் தோன்றி, கணபதி முனியின் நோயைத் தீர்க்குமாறு கட்டளையிட, அவரும் வந்து கட்டியை அறுவை சிகிச்சைமூலம் அகற்றி கட்டுப் போட்டார். எனவே அவரால் தொடர்ந்து எழுத இயலவில்லை. எனினும் அன்றிரவு மீதமுள்ள 300 துதிகளை முடிப்பதென தீர்மானித்து, ஐந்து சீடர்களை எழுதுவதற்கு நியமித்தார். அனைவரும் மாமரக் குகையில் அமர்ந்தனர். ரமண மகரிஷி வந்து தியானத் தில் மூழ்கினார். கணபதி முனி கூற, மற்றவர்கள் எழுத, இரவிலேயே 300 துதிகள் முடிந்தன. கண்களைத் திறந்த ரமணர், "நான் கூறிய யாவும் எழுதி முடிந்ததா'' என்றார்.

ஆக, அந்த 300 துதிகள் மகரிஷியின் வாக்குகளே.

தான் எழுதியதை கணபதி பொறுமையாக வாசித்து சீர்படுத்துவார். அதுபோல முதல் 700 துதிகளை எட்டுமுறை சீர்செய்துள்ளார். கடைசி 300 துதிகள் தனதல்ல என்று சீர்செய்யவில்லை.

ஒருசமயம் கணபதி முனி திருவொற்றியூர் சென்றார். அங்கொரு பாழடைந்த விநாயகர் கோவிலில் 18 நாட்கள் தவம்செய்தார். இரவு ஒரு குவளை பால் மட்டுமே உணவு. 18-ஆம் நாள் பகல் 2.00 மணி. உடலில் சக்தியில்லை. எனவே படுத்துக்கொண்டே தியானம் செய்தார். ஆன்மாவில் ஆழ்ந்து, "இப்போது ரமணர் இங்கே இருந்தால் நன்றாக இருக்குமே' என எண்ணினார்.

அடுத்த கணம் ரமணர் அங்கு தோன்றினார்.

தலையில் ஒரு கை, இதயத்தில் ஒரு கை வைத்துத் தடவினார். கணபதியின் உடலில் தெய்வீக சக்திகள் பாய்ந்தன. ரமணர் மறைந் தார். அதேசமயம் திருவண்ணாமலையில் இருந்த ரமணர், திடீரென்று தன் உடல் மேலெழுந்து சென்று திருவொற்றியூரை அடைந்து கணபதி முனியைப் பார்த்ததாக சொன்னாராம்.

இதுபோல கணபதி முனியின் வாழ்வில் பல்வேறு ஆன்மிக அற்புதங்கள் நிகழ்ந் துள்ளன.

மனைவி மறைவு

25-2-1926 அன்று, கணபதி முனியின் மனைவி விசாலாட்சி ஸ்ரீவித்யா ஜெபம் செய்துகொண்டே, குண்டலினியின் ஓட்டம் உணர்ந்துகொண்டே, ஒன்பது நாள் விரதம் முடிந்தபிறகு அம்பாள் திருவடி சேர்ந்தார். கணவனின் சாதனையில் உறுதுணையாய் இருந்தார். அவருடன் சேர்ந்து பல தலங்களை தரிசித்துள்ளார். பெண்களும் ஆன்மிக சாதனையால் முக்தியடையலாம் என்பதற்கு சான்றாக வாழ்ந்த அந்த உத்தமியை வணங்குவோம்.

அரவிந்த ஆசிரமம்

கணபதி முனியின் உமா சகஸ்ரம் வாசித்த அரவிந்தர் கணபதியைக் காண ஆவலுற்றார். எனவே புதுச்சேரி ஆசிரமம் வந்து ஒரு மாதம் தங்கினார்.

அவரது சீடர்கள் விரும்பிக் கேட்க, "தத்துவ தரிசனம்' என்னும் நூலை கணபதி எழுதினார். அதை வாசித்த அரவிந்தர் மிகவும் பாராட் டினார். மிர்ரா அன்னை யுடன் கண் திறந்தே தியானம் செய்ததைக் கண்டு அன்னை வியந்தார்.

ரமணரின் வாழ்க்கையை ஆங்கிலத்தில் நரசிம்ம சுவாமி (மயிலையில் சாய்பாபா கோவிலை ஸ்தாபித்தவர்) எழுதினார்.

கணபதி முனியின் வரலாற்றை அவருடன் பேசி சேகரித்தார். அதனைக்கொண்டு கபா- சாஸ்திரியார் "வாசிஷ்ட வைபவம்' என்று வடமொழியில் அதனை வெளியிட்டார். ஆக, கணபதி முனியின் சரிதம் யாவும் உண்மையே. கற்பனைக் கதையல்ல. அது பின்னாளில் தெலுங்கிலும் தமிழிலும் பிரசுரிக்கப்பட்டது.

ஸிர்ஸி ஆனந்தாசிரமம் வர, அங்கு ரமணரின் "உள்ளது நாற்பது' என்னும் நூலை "ஸத் தரிசனம்' என்று வடமொழியில் செய்தார். அர்ஜுன- கிருஷ்ண சம்வாதமாக பகவத்கீதை அமைந்ததுபோன்று, ரமண பக்தர்கள் சந்தேகம்- ரமணரின் பதில்களை "ரமண கீதை' என்று வடமொழியில் எழுதினார்.

கரக்பூர் ஆசிரமம்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த ஆன்மிகர். அவர் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தபோது கணபதியை அழைத்து தன் வீட்டில் தங்கவைத்து, மகாபாரதத்திலுள்ள தத்துவங்களை உரையாற்றச் சொன்னார்.

வேதஞானம் எவ்வளவு ஆழமானது என்பதை அவர் உரையைக் கேட்ட அனைவரும் உணர்ந்தனர்; வியந்தனர்.

1935-ல் அன்பர்க ளின் அழைப்புக்கிணங்கி கணபதி முனி கரக்பூர் சென்றார். சீடர்கள் அவருக்கொரு ஆசிரமம் அமைக்க விரும்பினர். ஒரு அன்பர் நிலம் தந்தார். விநாயகர் சதுர்த்தியன்று உயிருள்ள கணபதிக்கு பூஜைகள் நடத்தினர். 1935-ல் ஆசிரமமும் அமைந்தது. அச்சமயம் அவர் கையிலிருந்த செப்புக்காசு தங்கமாக மாறியது. கணபதியோ தனது காலம் நெருங்கியதென எண்ணினார். திருவண்ணா மலையிருந்து வந்த சேஷ ஐயர்மூலம் ரமணரைப்பற்றி அறிந்தார்.

அச்சமயம் காஞ்சி பெரியவர் கரக்பூரில் முகாமிட்டிருந்தார். அவர் கணபதி முனியைக் காண விரும்பிட, இவரும் அங்கு சென்று பார்த்து, ஒரு மணிநேரம் வட மொழியிலேயே உரையாடி மகிழ்ந்தனர்.

பெரியவர் கணபதியை வெகுவாக கௌரவித்தாராம்.

25-7-1936 அன்று கணபதி உற்சாகமாக இருந்தார். சீடர்கள் நடத்திய வேள்வியில் கலந்துகொண்டார். பகல் 2.00 மணியளவில் கண்களை மூடினார். அவரது மகன் மகாதேவன், "நான் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்க, "ஜெபம் செய்'' என்றார். 2.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. ரமணருக்கு தகவல் அனுப்பப்பட்டது. "இவரைப் போன்ற ஒருவரை இனி எங்கே காண்போம்' என்று அவர் கண்களை மூடினா ராம்.

கணபதிமீது ஒரு துதியுடன் நிறைவு செய்வோம்.

"மகா கணபதி அவதாரம் காவ்ய கண்ட கணபதி முனிம்வேதாந்த சித்தாந்த ஸார புருஷம் சின்மயம் நமாம்.'