ஆதிமனிதர்கள் குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடி வாழக் கற்றுக்கொண்ட நாள் முதலே, ‘வேல்’ என்னும் கூரிய ஆயுதத்தை நீண்ட மரத்தண்டத்தின் நுனியில் பொருத்தி தங்களது பாதுகாப்பு ஆயுதமாக்கிக் கொண்டனர். அவர்கள், இரவு நேரங்களில் கொடிய மிருகங்களிட மிருந்தும், மழை மற்றும் குளிர் காற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மலைப் பகுதி களிலிருந்த பாறைக் குகை களையே தங்களது இருப்பிடமாக வைத்துக் கொண்டனர்.
வேற்படையும் வேல் கோட்டமும்..
புதிய கற்கால முடிவில் இரும்பினைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, தாங்கள் வாழ்ந்த குகைகளின் வாசற் பகுதிகளைச் சுற்றிலும் இரும்பு வேல்களை அரணாக நட்டு வைத்துக் கொண்டனர். ஏனெனில், திடீரென புலி, கரடி, சிங்கம், ஓநாய், கழுதைப்புலிகள் போன்ற கொடிய மிருகங்கள் வந்துவிட்டால், அப்போது, வேல்களைத் தேடக்கூடாது என்றும், உடனுக்குடனே தங்கள் கைவசம் அவை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும், வேட்டைக்கு எடுத்துச் செல்வதற்கு சிறிய, பெரிய வேல்கம்புகளை நட்டு வைத்திருந்தனர். இவற்றுக்கு ‘வேற்படை’ என்றும், இவ்வேற்படையோடு இருக்கும் பாதுகாப்பான குகைப் பகுதிகளுக்கு ’வேல்கோட்டம்’ எனவும் பெயரிட்டு அழைத்தனர்.
மணியோசை கேட்டு...
இந்த வேல் கோட்டங்களில்தான் அங்கு வாழ்ந்த இனக் குழுவைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இருப்பார்கள். அதில்தான் அக்குழுவிற்குரிய தலைவனும் இருப்பான். இருப்பினும் அவர்களை அக்குழுவின் வயதான பெண்தான் வழிநடத்துவாள். இளைஞர்கள் தினந்தோறும் காலையில் வேட்டைக்குச் செல்ல வேண்டும். வேட்டைக்குச் செல்லும் குழுவினர்களில், முதலில் செல்பவரும் கடைசியாகச் செல்பவரும் இரும்பினால் செய்த வேலின் கூர்மைப் பகுதிக்குக் கீழும், தண்டுப் பகுதி ஆரம்பிக்கும் இடத்திலும் ஒரு சதுர வடிவத் தகட்டினைப் பொருத்தி, அதன் நான்கு முனைகளிலும் நான்கு மணிகளைப் பொருத்தி, அதை ஊன்றிச் செல்வார்கள். அவ்வாறு, அவர்கள் செல்லும் வழியெல்லாம் மணிசை கேட்டுக் கொண்டே இருக்கும். மற்றவர்கள் வில், அம்புகளோடு செல்வார்கள். வேட்டையாடும் போது யாராவது திசை தப்பினால் வேலில் மணி பொருத்தியவர்கள், ஓரிடத்திலிருந்து நகராமல் அம்மணிகளை ஒலித்துக்கொண்டே இருப்பர். திசை தப்பியவர்கள் அம்மணிகளின் ஒலி கேட்டு அவ்விடத்திற்கு வந்துவிடுவார்கள்.
இவ்வாறான மணிபொருத்திய வேலேந்தியவர் கள், அம்மலையைப் பற்றிய அறிவும் அனுபவமும் மிக்கவர்களாக இருப்பர். இவர்கள், அந்தக் கானகப் பகுதிகளில் தேனடைகள் இருக்குமிடம், கனிகள் இருக்குமிடம், கிழங்குகள் இருக்குமிடம், உணவுக்குத் தேவையான சிறுவிலங்குகள் பதுங்கியுள்ள இடங்களைப் பற்றியும், குடிநீர் இருக்கும் இடங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருப்பர். இவர்களுக்கு வேலர்கள் என்று பெயர். இவர்களது வழிகாட்டுதலின்படியே ஒவ்வொரு நாளும் வேட்டை நடக்கும். இவர்கள், சூரியன் மறைவதற்குள் கானகப் பகுதியில் எங்கிருந்தாலும் வேல் கோட்டத்திற்கு வந்துவிட வேண்டுமென்பது அந்தக் காலத்து நியதி.
தினைப்புனம் காத்தல்!
இதேபோல், தினைப்புனம் காத்தல் என்ற நிகழ்வும் தினை அறுவடை நாட்களில் நடக்கும்.
அது என்னவெனில், மனித இனம்- அதாவது, ஆதித் தமிழினம் முதன்முதலில் உணவுக்குப் பயன்படுத்திய சிறுதானியம் என்பது மலைத் தினையாகும். இது, மலைகளிலுள்ள கானகப் பகுதிகளில், மண்வளமுள்ள இடங்களில், ஆடிமாதம் முளைத்து, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் செழிப்பான கதிர்களாக முதிர்வடை யும். இவ்வாறு செழிப்பாக, நெருக்கமாக தினைப் பயிர்கள் இயற்கையாக வளரும் பகுதிகளுக்கு ‘தினைப்புனம்’ என்று பெயர்.
இத்தினைப்பயிர் கதிர்பிடிக்கும் காலங்களில், அதிலிருக்கும் தினையரிசிகளைத் தின்பதற்கு கானகப் பறவையினங்கள் கூட்டங்கூட்டமாக வரும். அப்பறவைகள் தினைமணிகளை மேய்ந்து விடாத வண்ணம், அப்பகுதிகளில் உறுதியான காட்டுக் கடம்ப மரத்தினால் உயரமான பரண்கள் அமைத்து, அவற்றின்மீது அமர்ந்து கொண்டு, கவண்களில் கற்களை வீசி, பறவைகள் வராத வண்ணம் காவல் காப்பதற்கு ‘தினைப் புனம் காத்தல்’ என்று பெயர்.
இந்தத் தினைப்புனம் காத்தலுக்கு ஐப்பசி மாதம் முதல் அறுவடை செய்யும் கார்த்திகை மாதம் வரை வேல் கோட்டத்திலிருந்து சிறுவயது ஆண்களும், பெண்களும் காலையில் சென்று இரவு திரும்புவார்கள். இவ்வாறு செல்லும் குழுவினருக்குக் காவலாய் செல்பவர்களுக்கு ‘விருத்தர்கள்’ என்று பெயர்.
குறியீடுகளை வரைந்து...
ஒவ்வொரு வேல்கோட்டத்திலும், அப்பகுதியைப் பற்றிய மிகுந்த அனுபவம் வாய்ந்த பலசாலியே அங்கு வாழும் குழுவிற்குத் தலைவனாக இருப்பான் எனக் கூறினோம். அவன், தனது ஓய்வு நேரங்களில் வேல்கோட்டக் குகைப் பாறைகளில் பச்சிலைகளைக் கொண்டும், கூரிய வேலாயுதங்களைக் கொண்டும் ஓவியங்கள் தீட்டுவான்.
இவ்வோவியங்கள் வருங்காலத்தில் அவர்களுடைய இளைய சமுதாயத்தினர், அவ்விட வாழ்வியல் சூழல்களை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் அமைந் திருக்கும். அம்மலைப்பகுதிகளில், எவ்வகை மிருக இனங்கள் இருக்கும்? அவற்றை எப்படியெல்லாம் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடலாம்? இங்கு ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்? பருவகால மாற்றங்கள், இங்கு நடந்த விழாக்கள் மற்றும் இடர்ப்பாடுகளை எப்படியெல்லாம் வென்றெடுத்தார்கள் என்பன குறித்து, பார்ப்பவர்களுக்கு உணர்த்தும் முறையில் சில குறியீடுகளோடு சேர்த்து வரைவார்கள். இவ்வாறு வெவ்வேறு வேல்கோட்டங்களில் வாழ்ந்த வெவ்வேறு இனக்குழுக்கள், தங்களுக்கென வெவ்வேறு அடையாளக் குறியீடுகளுடன் வரைந்திருப்பர்.
மூதாதையர் நினைவாக!
இவ்வாறு வாழ்ந்த தனித்தனி குழுக்கள் தங்களுக்குக்கென்று ஒவ்வொரு ஒலிக் குறியீடுகளையும், அவற்றை உணர்த்தும் வடிவத்தையும், தாங்கள் வாழ்ந்த குகைப் பாறைகளின் உச்சியில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பொறித்திருந்தனர்.
உதாரணமாக ‘ம’ என்ற குறியீடு, வானத் தைக் குறிப்பதாக இருந்தது. இதுவே பின்னாளில், குறியீடு ஓவிய எழுத்தாகவும், பின் வரிவடிவம் பெற்று தமிழ் இலக்கணம் உருவாகவும் வித்திட்டது. இவ்வாறு வாழ்ந்த இனத்தில் இனப் பெருக்கம் அதிகமாக ஆரம்பித்தவுடன், அவ்விடத்தைவிட அதிகமான வளம் பொருந்திய இடத்தை நோக்கி அக்குழுவினர் இடம் பெயர்ந்த காலகட்டத்தின்போது, வேல் கோட்டத்திலிருந்த வேற்படைகளில் சில வேலாயுதங்களை மட்டும், அங்கு வாழ்ந்த தங்களது மூதாதையர்களது நினைவாக விட்டுவிட்டு அல்லது நிலையாக இருக்குமாறு பொருத்திவிட்டு, மற்றவற்றைத் தங்களோடு எடுத்துக்கொண்டு, இயற்கை வளம் சூழ்ந்த இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
முருகு ஏற்றுதலும் முருகு அயர்தலும்...
இனக்குழுவில் உறுப்பினர்களும் குடும் பங்களும் அதிகமானபோது, தங்களுக்குப் பயனளிக்கும் கால்நடைகளைத் தங்களோடு சேர்த்தே வளர்க்கப் பழகிக் கொண்டனர்.
அப்போதுதான் அறிவியல் முன்னேற்றத் திற்கு அடிகோலிய ‘சக்கரம்’ என்ற அமைப்பு கண்டறியப்பட்டு, மண்ணைப் பயன்படுத்தி பாண்டங்கள் செய்யும் தொழில், போக்குவரத்திற்கு வண்டிகள் போன்ற புரட்சிகரமான வளர்ச்சிகள் உருவாகின. அப்போது தங்களின் வாழ்வாதாரங்களாக, தாங்கள் வளர்த்த கால்நடைகளையே கருத்திற் கொண்டனர்.
இதைக் கருத்திற்கொண்டே, இரு குழுக்களுக்கிடையே, அவரவருக்குச் சொந்தமான கால்நடைகளைக்கொண்டே, அவர்களுக்கிடையேயான செல்வ வேறுபாட்டினை மதிப்பிட்டனர். ஒரு குழுவிற்குரிய ஆநிரைகளை மற்றொரு குழுவினர் வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்று தங்கள் உடைமையாக்கத் துணிந்தனர்.
அதனாலேயே, குழுக்களுக்கிடையே சிறுசிறு போர்கள் உருவாகத் தொடங்கின. இவ்வாறான போர்களில், வேற்படைதான் அவர்களுக்குத் தலைசிறந்த ஆயுதமாகப் பயன்பட்டது.
அவ்வாறு நடந்த போர்களில் ஆநிரைகளைக் கவரவிடாமல் தடுத்துக் காப்பாற்றியபின், படுகாயத்தால் இறந்த மாவீரர்கள் போரிட்ட இடத்தில், அவர்களின் நினைவாக நடுகல்லாக இந்த வேலாயுதமே வெற்றியின் சின்னமாக நடப்பட்டது. அந்தச் சமயத்திலிருந்து ஒரு வெற்றியின் சின்னமாகவே வேலாயுதம் தமிழர்கள் மனதில் வேரூன்றியது. பின், வீரம் செறிந்த நேரங்களில் வேலைக் கையிலேந்தி வீரமுழக்கமிடும் பழக்கம் தமிழர்களின் வழக்கமானது.
பின், போருக்குச் செல்லும் நேரங் களில் எல்லாம், வேலினைக் கையிலேந்தி வெற்றிவேல் வீரவேல் என முழங்கி, தங்களுக்குள் இருக்கும் தினவேறிய வீரச் செருக்கை பகைவர்கள்முன் காட்டுதலுக்கு முருகு ஏற்றுதல் என்றும், போரில் வெற்றியடைந்தபின், அதிலிருந்து இனைப் பாறுதல் பொருட்டு கறி, கள் விருந்தினை வீரர்களுக்குக் கொடுத்து மகிழ்வித்தலை “முருகு அயர்தல்’’ என்றும் பழந்தமிழர்கள் அழைத்துவந்தனர்.
அகத்தியனுக்கு அருளிய வள்ளல்!
இவ்வாறு பைந்தமிழர்கள் குடிசை வீடுகள் அமைத்து, பின் மருதநில மேம்பாட்டுடன் சுட்ட செங்கல் வீடுகள் அமைத்து, நெசவு, விவசாயம், தச்சு, உலோகவியல், வாணிபம் இவற்றையெல்லாம் உருவாக்கிய பின்னும், அவர்களது வாழ்வின் பாதுகாப்புச் சின்னமாக விளங்கியது இவ்வேல் வடிவ மேயாகும்.
மேற்சொன்ன நிகழ்வுகள், கடற்கோளால் அழிந்த குமரிக் கண்டத்திலிருந்து வேங்கடமலைவரை நிகழ்ந்த வரலாற்றிற்கு முந்தைய காலப்பகுதியாகும். இவ்வாறு, தமிழரின் மூதாதையர் இருந்த வேல் கோட்டத் திற்கு அன்றைய தமிழர்கள் ஓய்வு நேரங்களில் சென்று, தங்கள் குலத்தாருக்கு ஆடு, சேவல் போன்றவற்றை கறி சமைத்து, கள் முதலிய ஆனந்தமளிக்கும் வஸ்து களைத் தந்து விருந்தோம்பல் செய்யும் போது, அந்த விருந்தில் சமைக் கப்பட்ட அத்தனை பண்டங்களையும், தம் முன்னோர்கள் நட்டு வைத்திருந்த வேலுக்கு முன்னால் படைத்து, அதைத் தமது முன்னோர்களுக்கான படையல் என்றும், அதை அவர்கள் சாப்பிடுவார்கள் என்றும் நம்பிக்கையோடு வழிபாடு செய்துவந்தனர். அவ்வாறு செய்யும் வழிபாட்டின்போது பூஜை செய்பவர், அக்குழுவினரிடையே இருக்கும் முதியோராக இருப்பர். அவருக்கு வேலன் என்று பெயர். அவர் பூஜிக்கும்போது, கையில் வேலேந்தியபடி தம் முன்னோர் களின் வாழ்வியல் செழிப்பைப் பற்றி பாடி ஆடுவார். இதனை வேலனாட்டம் எனக் கூறுவர்.
இவ்வாறு படிப்படியாக மருதநிலத்தை உருவாக்கி, அதை வெற்றிகண்டு, கடல் மார்க்கமாய் வந்த பகைவர்களை வேரறுத்து, பாலை நிலக் கள்வர்களை அடக்கிய குமரிக் கண்டமான தமிழர் பூமியில் தலைசிறந்த தலைவனானவனை ‘முருகன்’ என்று, பகைவர்களும் அஞ்சும் அழகு டைய தலைவனுக்குக் கீழ், தமிழினமே ஒரே வெண்கொற்றக்குடையின் கீழ், தலைநிமிர்ந்து நின்ற காலத்தை நெடியோன் காலம், சேயோன் காலம் எனக்கூறுகிறது தொல்காப்பியம்.
அக்காலத்தில்தான் ஓவிய எழுத்து களுக்கும், குறியீடுகளுக்கும் வரி வடிவம், ஒலி வடிவம், இலக்கண வடிவம் கொடுத்து, அனைத்து தமிழினக் குழுக்களை யும் சங்கமிக்கச் செய்து, முதல் சங்கம் எனும் ‘கூடலை’ உருவாக்கி, செம்மொழி யாய்த் தமிழ்மொழியை சமைத்து, அங்கிருந்த அத்தனை தமிழருக்கும் பறைசாற்றி, அதற்கு இலக்கணமும் கூறி, அகத்தியன் எனும் மாமேதைக்கு அள்ளித் தந்த வள்ளலே நம் முருகப் பெருமான்! தமிழர் வரலாறு மேலும் செழிக்கும்
தொடர்புக்கு:
அலைபேசி 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்