கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள்!
அளவில் சிறியதாக இருந்தபோதும் காரசாரமானது கடுகு.
சிறு கடுகை வைத்தே படைப்பின் நியதியை, உலகியலின் உண்மையை, வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துச் சொன்னவர் புத்தர்.
இளவரசனான சித்தார்த்தன் தன் சுகபோகங்களைத் துறந்து, ஞானம் பெற்று புத்தனாகி, தான் கண்ட மெய்ஞானத்தின் மூலம் அறியாமையில் உழலும் மக்களுக்கு உதவ, ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த சமயம்...
ஒரு ஊரில் கிருசாகௌதமி என்கிற பெண்மணி தன் ஒரே மகனான சிறுவனை சீராட்டிச் செல்லமாக வளர்த்து வந்தார்.
ஒருநாள் விளையாடச் சென்ற அந்தச் சிறுவனை பாம்பு கடித்துவிட்டது.
பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வைத்தியரிடம் ஓடினாள்.
"உன் மகன் இறந்துவிட்டான்' எனச் சொன்னார் வைத்தியர்.
இருப்பினும் ஏதோ நம்பிக்கையில் வேறு வேறு வைத்தியர்களிடம் சென்றாள். அவர் களும் சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர்.
மகனின் உடலைச் சுமந்துகொண்டு துக்கம் தாளாமல் துடித்தபடி வந்துகொண்டிருந்தாள்.
அப்போதுதான் புத்தர் மகான் ஊருக்குள் வந்திருப்பதாக அறிந்து, மகனின் சடலத்துடன் புத்தரிடம் சென்று வணங்கி, நடந்ததைச் சொன்னாள்.
"நீங்கள் கடவுள் போன்றவர். உங்களால் நிச்சயம் என் மகனை உயிர்ப்பிக்க முடியும். நீங்கள் என் செல்வமகனை மீட்டுத்தாருங்கள்' என புத்தரிடம் கோரிக்கை வைத்தாள்.
"நான் உன் மகனை மீட்டுத்தருகிறேன். ஆனால்... அதற்கு கொஞ்சம் கடுகு வேண்டும்' என்றார் புத்தர்.
"இப்போதே கொண்டுவருகிறேன்' என மகனின் சடலத்தை தோளில் போட்டுக் கொண்டே கிளம்பியவளை நிறுத்திய புத்தர் "நீ கொண்டு வரும் கடுகு மரணத்தையே இதுவரை காணாத வீட்டிலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்' என்றார்.
"மகன் இப்போது இறந்திருப்பதால் தன் வீட்டிலிருந்து கடுகு கொண்டுவர முடியாது' என்பதால் "நீங்கள் சொன்னபடியே மரணத்தைப் பார்த்திருக்காத வீட்டிலிருந்து கடுகு வாங்கி வருகிறேன்' எனச் சொல்லிவிட்டுப்போனாள்.
ஒரு வீட்டிலிருந்த பெண்மணியிடம் தனக்கு கடுகு தேவைப்படுவதைச் சொல்லி, "உங்கள் வீட்டில் யாரும் இதுவரை இறக்கவில்லையே?' எனக் கேட்டாள்.
"போன வருஷம் தான் என்னோட சகோதரன் இறந்தான்.'
"பகக்த்து வீட்டில் கடுகு வாங்கிக்கிறேன்.'
"போன வாரம் தான் அந்தம்மாவோட புருஷன் செத்தாரு.'
"எதிர் வீட்டுல...'
"அங்கயும் ஒரு சாவு நடந்திருக்கு.'
இப்போது கிருசா கௌதமிக்குப் புரிந்தது.
"ஜனனமாகிற உயிர்களுக் கெல்லாம் மரணம் வாய்க்கும்' என்கிற உலகியல் உண்மை தெளிவாகத் தெரிந்தது.
மனதை திடப்படுத்தினாள்.
தன்மகன் மரணித்து விட் டான் என்கிற உண்மையை அவள் மனம் ஏற்றுக் கொண்டது.
மகனின் உடலுடன் சுடுகாடு சென்று, இறுதிச் சடங்குகளைச் செய்தாள்.
புத்தரிடம் வந்தாள்.
அவள் உலகியல் உண்மை என்கிற ஞானத்தை உணர்ந்து கொண்டதை அறிந்து கொண்டு புத்தர் கருணையுடன், அன்பை வெளிப்படுத் தும் விதமாக மென்மையாகச் சிரித்தார். ஜனனத்திற்கும், மரணத் திற்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை! அதற்காக "எப்படியிருந் தாலும் மரணம் வரத்தானே போகுது' என முடங்கிப் போகவேண்டாம்.
கடமையைச் செய்து கொண்டே இருப்போம்.
பாலுமகேந்திரா இயக்கத்தில் தியாகராஜன் நடித்து வெளிவந்த "நீங்கள் கேட்டவை' படத்தில் சோமயாஜுலு நடிப்பில், இளையராஜா இசையில், கே.ஜே.யேசுதாஸ் குரலில், வைரமுத்துவின் வரிகளில் ஒருஅருமையான பாடல் இடம்பெற்றது.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்'எனத் தொடங்கும் அந்தப் பாடலின் முதல் சரணத்தில்... "பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே!' என்கிற வரிகள் எதார்த்தம் பேசும்.
இரண்டாவது சரணத்தின் இறுதியில்...."பேதை மனிதனே.... ஏஏஏஏஏ...
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில்தானே ஆனந்தம்' என எழுதியிருப்பார் வைரமுத்து.
கடமையைச் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காதவன் ஞானி!
கடமையைச் செய்யாமலேயே பலனை எதிர்பார்ப்பவன் அஞ்ஞானி!
கடமையைச் செய்துவிட்டு பலனை எதிர்பார்ப்பவன் நான்- நீ!
நானும், நீயும் கடமையைச் செய்வோம், அதற்குரிய நியாயமான பலனையும் எதிர்ப்பார்ப்போம். ஆனால் ஒரு கண்டிஷன்...கடமையைச் செய்வது முக்கியமல்ல! கடமையை களிப்புடன் செய்வதே முக்கியம்!