ஆசீர்வாதம் என்பது நமக்கு எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கிடைக்கக் கூடியது அல்ல. அது எப்போதாவதுதான் கிடைக்கும். அது அரிதானது. எதிர் பாராதவிதமாக நம் வீட்டிற்கு மூத்த முதிய தம்பதிகள் வந்தால் அவர்களை வரவேற்று, அவர்களின் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெறு வோம். இது நாமாக அவர்களிடமிருந்து கேட்டுப்பெறும் ஆசீர்வாதமாகும். சிலசமயம் எதிர் பாராதவிதமாக ஒரு பெரியவர் நம்மைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு "நீ நன்றாய் இரு' என்று ஆசீர்வாதம் செய்தால் அது அவர்களாக நமக்கு தாமே முன்வந்து செய்யும் ஆசீர்வாதமாகும். எனவே ஆசீர் வாதத்தில் பெரியவர்களிடம் நாமாக சென்று ஆசீர்வாதம் பெறுவது என்றும், பெரியவர்கள் அவர்களாகவே முன்வந்து நம்மை ஆசீர்வாதம் செய்வது என்றும், இரண்டு வகைப்படும்.
முதியவர்களின் ஆசீர்வாதம் என்பது எப்பொதும் நம்முடனேயே இருந்துகொண்டிருக்கும். அதாவது எப்படி நமது நிழல் நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறதோ அதைப்போல ஆசீர்வாதமும் நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நம்மைத் தொடர்ந்து வரும் நிழலை எப்படி தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாமோ அதைப்போலவே நம்மைத் தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தையும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
சிலசமயம் நாம் "இசகு பிசகாக' ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் அப்போது இந்தப் பெரியோர்களின் ஆசீர்வாதம் நம்மை அந்த சிக்கலிலிருந்து காப்பாற்றிவிடும். அப்படியொரு அபாரசக்தி இந்த ஆசீர்வாதத்திடம் உண்டு. அதேபோல நாம் ஏதாவது முக்கியமான காரியமாக வெளியே சென்றால் இந்தக் காரியம் நடக்குமா? நடக்காதா? என்ற மனக்குழப்பத்தோடு செல்வோம். நிச்சயமாக இந்த வேலை நடக்காது என்று உள் மனம் சொல்லும். இருந்தாலும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று போவோம். ஆனால் அந்த வேலை ஏற்கெனவே நல்லபடியாக முடிக்கப்பட்டு நாம் போனதும் அது நம் கைக்குக் கிடைத்துவிடும். இதற்குக் காரணம் நம் பெரியோர்களின் ஆசீர்வாதம்தான் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதான் கிடைக்கும் என்றால் கிடைக்காது. கிடைக்காது என்றால் கிடைத்துவிடும் என்பதாகும்.
கீழ்க்கண்ட ஐந்து வகைப்பட்டுவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றால் அதைப்போல வேறு ஒரு அதிர்ஷ்டம் வேறு எதுவுமில்லை.
1. அவர் உண்மை மட்டுமே பேசுபவராக இருக்கவேண்டும். அந்த உண்மையைக் கடைப்பிடிப்பதால் அவருக்குப் பல சிக்கல்கள், இடையூறுகள் வரும் என்று தெரிந்திருந்தாலும், அவர் அந்த உண்மையை மறைக்காமல் உண்மையையே சொல்பவராக இருக்கவேண்டும்.
2. அவர் நல்ல ஒழுக்கத்தில் மிகச் சிறந்தவராக இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டு அவர் அந்த நல்ல ஒழுக்கத்திலிருந்து தவறியவராக இருக்கக்கூடாது.
3. ஒரே தெய்வத்தை மட்டுமே துதிப்பவராக இருக்கவேண்டும்.
4. அவர் அரிய பெரிய மகான்களிடம் உதாரணமாக இராமகிருஷ்ண பரமஹம்ஸர், காஞ்சி மகாப்பெரியவர், இராமானுஜர், தேசீகன், பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகள் போன்ற ஜீவன் முக்தர்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். (இவர்களது ஜீவ சமாதியில்கூட ஆசீர்வாதம் பெற்றிருக்கலாம்).
5. ஆசீர்வாதம் செய்பவர் சகல வேத சாஸ்திரம், சம்பிரதாயம், அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராக, பெரிய மகானாக இருக்கவேண்டும்.
சிறந்த குருமார்களின் பட்டியலில் அவர் இருப்பவராக இருக்கவேண்டும்.
இந்த ஆசீர்வாதங்களைவிட நம்முடைய மூதாதையர்களின் (பித்ருக்களின்) ஆசீர்வாதம்தான் மிகச் சிறந்த ஆசீர்வாதம். நாம் நம்முடைய மூதாதையர்களை (பித்ருக்களை) என்றும் மறக்கக்கூடாது.
அவர்களை தெய்வமாக வழிபட்டு, அமாவாசை, திதிபோன்ற நாட்களில் தர்ப்பணம் விட்டு, திதி நாட்களில் தவசம் செய்து அன்னதானமிட்டு அவர்களின் வயிற்றுப்பசியைப் போக்கவேண்டும். இப்படி செய்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து, மனம் நிறைந்து நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள். இந்த ஆசீர்வாதத்தால் நம் வாழ்க்கை மேம்படும். பிரகாசமாக வளரும்.
இந்த ஆசீர்வாதற்கு ஈடு இணை ஏதுமில்லை. ஆக, இப்படியாக ஆசீர்வாதம் என்பது பலவகைப்படுகிறது. ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து ஆசீர்வதித்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறுகிறான்.
தாய்- தந்தையர், ஆசீர்வாதம் இருந்தால் நாம் என்றென்றும் சீரும், சிறப்புடன் மனமகிழ்ச்சியோடு இருக்கலாம். பெரியோர்களின் ஆசீர்வாதம் வீண் போவதில்லை. எல்லாவற்றையும்விட நமக்கு இறைவனின் ஆசீர்வாதம் நிறைந்திருந்தால் குறைவில்லாத செல்வம், கரை காணமுடியாத கல்வி ஞானம், உயர்ந்த பதவி, நல்ல பிள்ளைகள், நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல குடும்பம் அமையப்பெறலாம்.