னி மனிதனின் பிரார்த்தனை அந்த மனிதனின் குறிக்கோளை அடைய வழிசெய்கிறது. ஆனால், சமுதாயம் செய்யும் பிரார்த்தனையோ சமுதாயமே உயர, உய்ய வகைசெய்கிறது. அன்னதானம் பரிமாறுபவருக்கு உண்ண உணவு கிடைப்பதுபோல், விளக்கேற்றியவருக்கும் சேர்த்து ஒளி கிலிலிடைப்பதுபோல், மற்றோருக்காக நாம் பிரார்த்திக்கும்போது நம் பிரார்த்தனையும் நிறைவேறுகிறது.

சுனாமி வந்தால் மட்டும்தான் மத நல்லிணக்கம் பேணவேண்டும் என்றெண்ணாமல், இயற்கை வளத்திற்காகவும், நாட்டு நன்மைக்காகவும், வீட்டு நன்மைக்காகவும் சாதி, மத, இன பேதமில்லாமல், அனைவரும் கூடிப் பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக அது நிறைவேறும். அத்தகைய வெற்றிகரமான பிரார்த்தனைகளை இடைவிடாமல் செய்துவரும் இடமாக வண்டலூர் வழித்துணை பாபா ஆலயம் திகழ்கிறது.

saibaba

சாயிநாதர் அனைத்து மதமும் ஒன்றே என்றும், இறைவன் ஒருவனே என்றும் போதித்து, இந்த உலகுக்கு வந்த குருநாதர்களில் தனித்தன்மை வாய்ந்தவராகத் திகழ்கிறார். கவலை களிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு பாபாவின் குரு வருளும், திருவரு ளும் பெற்று நலம் பெறுவோம். நமது வழித்துணை பாபா தியான மையத் திலுள்ள தூனியானது தொடர்ந்து எரிந்து அனைவரது ஞானவேட்கையைத் தீர்க்கும் அறிவுச்சுடராக விளங்குகிறது. அந்த தூனியில் போடப்படும் மட்டைத் தேங்காய்போல், நெய்போல், சமித்து சுள்ளிகள் போல் அனைவரின் நோய்களும் நீங்கி, துன்பம் தொலையும். தூய்மையான நல்வாழ்வு கிடைக்கும் என்பது திண்ணம். இந்த தூனியையே ராத்தல் விளக்காக, நமது வழிப்பயணத்திலும், ஞானப் பயணத்திலும் நமக்கு வழிகாட்டியாக இருந்து, சாயிநாதரே வழிநடத்திச் செல்வார் என்பது திண்ணம்.

Advertisment

கோடிக்கணக்கான சாயிசொந்தங்கள் உலகம் முழுவதும் இன்றைக்கு சாயிநாதரின் பக்தர்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல நாடுகளில், பல்வேறு இனங்களில், பல்வேறு தேசங்களில் உருவாக இருக்கிறார்கள். இனிமேல் சாயிநாதன் மட்டும்தான் என்றைக்கும் சாய்ந்திடாத, யாராலும் மறுக்கப்படாத, மறைக்கப்படாத, மறந்துவிடமுடியாத சத்குருவாகவும், சமத்துவ சித்தராகவும், எல்லா மதங்களையும் இணைக்கிற பாலமாகவும் இருக்கப்போகிறார். அத்தகைய சாயி நாதரின் அருள் பொங்கிப் பெருகும் இடமாக விளங்கி வருகிறது வழித்துணை பாபா கூட்டுப்பிரார்த்தனை கோபுரம்.

ஆன்மிக சிந்தனைகள்

உங்களின் எண்ணம், செயல் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisment

கடவுள் ஒருவரே. இந்த உலகம் முழுவதையும் அவர் ஆட்சிசெய்கிறார்.

குழந்தை தாயை நம்புவதுபோல கடவுளின்மீது பூரண நம்பிக்கை கொள்ளுங்கள்.

உடம்பைப் புறக்கணிக்கவும் கூடாது. அதிக அக் கறையுடன் பராமரிக்கவும் தேவையில்லை. அதை இயல்புடன் அதன்போக்கில் விட்டுவிடுங்கள்.

தேவையானதைக் கடவுளிடம் கேட்டால் அது நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

மற்றவர்களின் குறைகளைப் பொறுத்துக் கொள்பவன் கடவுளுக்கு இனிமை சேர்ப்பவனாக விளங்குகிறான்.

வாழ்வில் நடப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு கடவுள்மீது நம்பிக்கை கொள்பவனே சிறந்த பக்தன்.

மனத்தூய்மையுடன் வாழும் மனிதன் கடவுள் அருளால் எப்போதும் நிம்மதியாக வாழ்வான்.

கடவுளை இடைவிடாமல் தியானிப்பதால் எண்ணம், சொல், செயல் மூன்றும் தூய்மை பெறும்.

பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பது பாவம். பிறர் துன்பம் போக்க உதவுவது பெரும் புண்ணியம்.

பாபாவின் அமுதமொழி

1. நீ என்மேல் அன்பு செலுத்தினாய். ஒரு தாய், தன் குழந்தை தன்மேல் அன்பு செலுத்துவதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி யடைவாள். அதுபோல் நானும் உன்பேரில் மிக்க அகம்மகிழ்ந்து, உன்னை உச்சிமுகர ஓடோடி வருவேன். நீ ஒருபோதும் என்மேல் சந்தேகம் கொள்ளாதிரு.

2. உன் துன்பங்கள் நான் அறியாததல்ல. இருந்தாலும் ஒரு தாய் தனது குழந்தையின் துன்பம் காரணமில்லாதது; மிகவும் அற்ப மானது; குழந்தை இதற்கெல்லாம் துன்பப் படவேண்டிய அவசியமில்லை என்பதால் தாயானவள் சில தருணங்களில் அமைதி யாயிருக்கிறாள். ஆனால், குழந்தை எது உண்மை நிலை தெரியாமல் அழுது புலம்பு கிறது. அதுபோல் நீயும் அழாமல் புத்திசாலிக் குழந்தையாக இனிமேலாவது இருந்து என் சொற்கேட்டு நட.

3. தேவையில்லாமல் கலங்கி வேதனைப் படாமலும், எது நிரந்தரமான தேவை என்பதை அறிந்தும் இருப்பதே எனது இயல்பாக இருக்கிறது. எந்த நேரத்தில், எதை எந்த இடத்தில் தந்தால் உனக்கு ஏதுவாக இருக்கும் என்பதை நானறிவேன். நானறிவேன் என்பதை நீயறியாமல், என்னுடைய கருணை உன்மீது படவில்லை என்று கலங்கிக்கொண்டிருப்பதே உனது செயலாக இருக்கிறது. எனவே, உனது கருத்தை மாற்று. நான் எனது செயலை உனக்காக என்றென்றும் செய்யக் காத்திருக்கிறேன்.

4. என்னிடம் வந்து ஒருசில குழந்தைகள் எனக்கு கருணையே இல்லையென்றும், ஏனிந்த துன்பத்தை எனக்களிக்கிறாய் என்றும் புலம்புகிறார்கள். நீ செய்த கர்மவினைகளுக்கு நீ இன்னும் தீயிலிட்டுப் பழுக்கக் காய்ச்சி ஒழுங்குபடுத்த வேண்டிய ஆன்மா. எனது கருணானந்தம் உன்னை இதோடு விடுவித்து, உனது கர்மவினைகளுக்கும், பாவச்செயல்களுக்குமான தண்டனையைப் பாதியாகக் குறைத்தது. எனவே, எனது குழந் தாய், மேலும் பாவம் செய்யாமலிருப்பாயாக.

5. எல்லா சித்தர்களையும் என்னோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். நான் ஒரு சித்தன் மட்டுமே என்று கருத வேண்டாம். நான் செய்வது சித்து அல்ல. உன் மனதையும், உலகத்தின் மனததையும் சீர்திருத்த வந்த சிவனே என்பதை உணர்.

6. எனது அருமை ஆண் குழந்தைகளே, உங்களை அண்டிய மனைவியை சந்தேகிக் காதீர்கள். குழந்தைகளுக்காக குறுக்குவழியில் சம்பாதிக்காதீர்கள். மனைவி சொல் கேட்டு வயதான பெற்றோரைத் துன்பத்தில் ஆழ்த் தாதீர்கள். உங்கள் உழைப்பும், நேர்மையுமே எனது காணிக்கை என்றுணருங்கள்.

7. எனது அருமைப் பெண் குழந்தைகளே, உங்கள் கணவரிடம் அன்பாயிருங்கள். கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள். கணவரிடம், குழந்தைகளிடம் சிக்கனத்தை சொல்லித் தாருங்கள். நாகரிகமல்லாத பெண்களின் தொடர்பைத் துண்டித்து மங்கள குணமுடைய மங்கையர்களின் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களின் எண்ணங்களில் இருந்து உங்களுக்கானதை செய்யச் சொல்லிக் கட்டளையிடுவேன். எனவே, நீங்கள் எப்பொழுதும் அவர்களோடு நட்பாயிருங்கள்.

8. சகோதர உறவிலுள்ள எனது பக்தனே, நீ உனது சகோதரனைவிடவும் சப்பாணி என்றெண்ணி சுய பச்சாபத்திலேயே சஞ்சரித்து மனம் துன்பப்படுகிறாய். அவன் தைரியமாயிருப்பதை ஏன் ஒருநாளும் எண்ணிப் பார்க்கவில்லை? இனி, அவனை எண்ணி மனமுருகிப் பொருமுவதை நிறுத்தி, அந்த எண்ணம் வரும்போதெல்லாம் என்னை நினை. பிறகு உணர்வாய். நான் உனக்கு எவ்வளவு மங்களங்களை அள்ளித் தருவேன் என்று.

9. வயது முதிர்ந்த பெண் பக்தையே, உன் கருணையும், எனது கருணையும் ஒன்றேயாகும். நீ எப்படி உன் குழந்தைகளுக்காக உனது வாழ்நாளைத் தியாகம் செய்தாயோ, அப்படியே நான் உனக்காகவும், உன்னைப் போல் லட்சோப லட்ச வயதான தாய்மார்களின் இதயங்களிலும் அம்ர்ந்து அவர்களின் உயிருள்ளவரை தத்தெடுத்து ஆட்கொள்வேன்.

10. வயது முதிர்ந்த எனது ஆண் பக்தனே, உனது உழைப்பால் உன் குடும்பம் உயர்ந்ததை அறிவேன். உனது நாட்டுக்கு நீ உழைத்ததெல்லாம் தெரியும். உனது உறவினர் கள் அறிவார்கள். அங்ஙனமிருக்கையில் நான் மட்டும் அதையறியாமல் இருப்பேனா? இனி ஏன் கலங்குகிறாய். மீதமுள்ள நாட்களை என் ஸ்மரணை செய்து கழித்திடு. மிஞ்சியுள்ள கர்மவினை கழியும். பேரப்பிள்ளை, பெற்ற பிள்ளைகளை இனி நீ மறந்துவிடு. உன் உற்ற துணைவன் நான் இருக்கிறேன். எனவே என்னில் கலந்துவிடு.

11. படிக்கும் மாணவ- மாணவியராகிய எனது பக்தர்களே, படிப்பில் கவனம் செலுத்து என்று சொல்கிறவர்களைப் பார்த்துக் கோபப்படாதே. அவர்கள் படும் துயரத்தைப் பார்த்தாவது நீ படி. படித்து வல்லவராதோடு நல்லவராகவும் முயற்சி செய். அதுவே எனக்கு நீ செய்யும் ஆரத்தி.

12. எனது சங்கத்தில் வாழும் கணவன்- மனைவிகளே, நீங்கள் சமுதாயச் சிற்பிகளை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் உலகத்தினுடைய குழந்தைகள். பிற்காலத்தில் எனது சாம்ராஜ்ஜியத்தை, சமதர்ம சமுதாயத்தை அமைக்க இருப்பவர்கள். ஆகவே, அவர்களை நல்லவராகவும், வல்லவராகவும் உருவாக்குங்கள். அவர்களை வளர்க்க நானே துணைநிற்பேன்.

13. எஜமான் நிலையில் இருக்கும் எனது பக்தரே, நீர் உண்மையில் எனது பக்தராயிருப்பின் உமது வேலையாளிடம் கண்டிப்பை உணர்த்தும். அதே நேரம் கருணையோடு இரும். உதடு கண்டிப்பு காட்டினாலும் உள்ளத்தைக் கருணையோடு வைத்திரும். அவர்கள்மீது கவனமாயிராமல் அவர்களைக் குற்றம் செய்யும் அளவிற்கு இடம்கொடுத்து வளர்த்துவிட்டு, பிறகு அவர்களை தண்டிப்பது அர்த்தமற்றது. அந்த குற்றத்தில் உனக்கும் பங்குண்டு என்றுணர்ந்து, அவர்களை முதலிலிருந்து கவனமாகக் கையாண்டு, கூலிக்கு வேலை செய்யாதவர்களாயும், அன்பிற்கு வேலை செய்பவர்களாயும் உருவாக்கு. அப்படி உருவாக்கினால் உலகம் மட்டுமல்ல, நானும் உனக்கு வெற்றிமாலைசூட அருள்புரிவேன்.

14. ஏ... உட்கார்ந்திருக்கும் தொழிலாளியே, நீ உட்கார்ந்திருந்தால் நீ சார்ந்திருக்கும் நிறுவனமும் உட்கார்ந்துவிடும் என்பதை அறிந்ததில்லையோ. நீ உன் எஜமானுக்கு துரோகமிழைப்பது எனக்கே துரோக மிழைப்பதாகும். நீ சிந்தும் வியர்வை எனது காலைக் கழுவுகிறது. உன் முதலாளி எனது ஆலயத்தைக் கட்டியிருந்தாலும்கூட உனது உழைப்புதான் எனக்கு சுவாசம் போன்றது. கலங்காதே. உனது விசுவாசம் என் முன்னிலை யில் உன்னை அனைவரிடத்திலும் உயர்வானவனாக்கும்.

15. ஒரு சாயி பக்தனான வியாபாரி சாயாமல், சரியாமல் வியாபாரம் செய்யவேண்டுமென் றால்- உண்மையைச்சொல்லி விற்பனை செய்தால், வாங்குபவன் கேட்ட விலையை விட கூடவே வாங்க எத்தனிப்பான். பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம் பாவத்தை புற்றுநோய்போல் வளரச்செய்யும். எனது பக்தனுக்கு உண்மை சொல்வதுதான் வழக்கமாக இருக்கவேண்டும். அவனே சிறுகக்கட்டிப் பெருக வாழ்வான்.

16. நீ அறிவாயோ என்னைப்போல் என் மனமும் வெள்ளை என்பதை.உன் மனமும் வெள்ளையானால். உன் மனமும், என் மனமும் ஒன்றாகிவிடும். பிறகு இவ்வுலக இயக்கத்தின் பங்கில் உனக்கும் பங்கிருக்கும். எனவே, பல்லக்கு தூக்குபவனாயிருந்தாலும் பல்லக்கில் பவனி.

வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம் தொலைபேசி: 86087 00700.

சாயி பக்தர்களின் அனுபவங்கள் அடுத்த இதழில் இடம்பெறும்.

(தொடரும்)