"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.'
-திருக்குறள்
உள்ளத்தில் கோணுதலில்லாத தன்மையான நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கிருந்தால், அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும்.
அதுதான் நடுநிலைமை தவறாத நீதியாகும்.
கௌதம முனிவருக்கு சிரகாரி எனும் மகன் இருந்தான். வேதங்களில் கரைகண்டவன். எந்த செயலையும் நிதானமாகத்தான் செய்வான்.
அவசரம் என்பதே தெரியாது. அதன்காரணமாக அவனை சோம்பேறி என கேலி பேசினர் பலர்.
ஒருசமயம் கௌதமர் தம் மனைவிமீது கொண்ட கோபத்தின் காரணமாக மகனை அழைத்து, "சிரகாரி, உன் தாயின் நடவடிக்கை கள் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே அவளைக் கொன்றுவிடு...'' என்று உத்தரவிட்டு வெளியேறி விட்டார். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. "தந்தையின் சொல்லைக் கேட்ப தென்றால் தாயைக் கொன்றாக வேண்டும். தாயைக் கொல்லவில்லையென்றால் தந்தை சொல்லைமீறிய பாவம் வரும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பரே... இந்த இரண்டில் எதைச் செய்தாலும் பிழையாகி விடுமே' என்று தீவிர ஆலோ சனையில் இருந்தான்.
அதேசமயம், வெளியே சென்ற கௌதம முனிவர், "எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டேன். கோபத்தை நீக்காத நான் எப்படி முனிவனா வேன். விநாடி நேரத்தில் கோபப் பட்டு தாயைக் கொல் என்று பிள்ளைக்கு உத்தரவு போட்டு விட்டேனே... நான் சொன்னபடி அவன் செய்திருந்தால் என்னசெய்வது...!' என பதறியடித்து திரும்ப ஆசிரமத்துக்கு வந்தார்.
தந்தையைப் பார்த்ததும் ஓடிவந்து, அவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான் சிரகாரி. அவனைப் பார்த்த முனிவர், அங்கு உயிருடனிருந்த தன் மனைவியை யும் பார்த்தார். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டார்.
மகனைப் பலவிதங்களிலும் புகழ்ந்து உச்சிமுகர்ந்து, கட்டித் தழுவி, "நீண்ட காலம் வாழ்வாய்'' என வாழ்த்தி னார். இதன்பிறகு, தாமதமாகச் செய்ய வேண்டிய செயல்களையும், உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையையும், அதன் பலன்களையும் விரிவாகவே சொன்னார் கௌதமர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் என்றாலே அங்கு சிதம்பர ரகசியமும் இருக்கிறதென்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கே இன்னொரு ரகசியமும் இருக்கிறது.
பொதுவாக, வீட்டைவிட்டுக் கிளம் பிய ஒருவரை திரும்ப அழைக்கக்கூடாது என்பர். அதற்குக் காரணமாக இருப்ப தும் இந்த ஊர்தான். சிதம்பரத்தில் சிவன் ஆனந்தத் தாண்டவம் ஆடவிருந்தார். தேவலோகமே திரண்டிருந்தது. அப்போது, சிவன் பார்வையில் சனிபகவான் பட்டுவிட்டார்.
"சனி... நீ, ஏன் இங்கு நிற்கிறாய். நான் நடனமாடும்போது நீயும் என்னைப் ப ôர்ப்பாயல்லவா? அது நல்லதல்ல. எனவே நீ புறப்படு'' என்றார். சனிபகவானுக்கு மிக வருத்தம். ஆனாலும் சிவன் உத்தரவிட்டபின் என்ன செய்வது? போய்விட்டார்.
இதன்பின் மீண்டும் ஒருநாள் சனியைக் கண்டார் சிவன்.
"சனி... நான் கயிலையில் இருக்கப் போகிறேன். எனக்கென்று மாளிகையோ, ஏன் சிறு குடில்கூட அங்கு தேவையில்லை. யாராவது எனக்காக இருப்பி டம் கட்டினால் தாராளமாக இடித்துவிடு...'' என்றார்.
சனிபகவானும் தலையாட்டினார். இதன்பின் இமவான் மகள் பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம் நடந்தது. தான் கணவருடன் தனித்திருக்க ஒரு வீடுகூட இல்லையே என வருத்தப்பட்டாள் பார்வதி.
ஒருமுறை உலகுக்குப் படியளக்க சிவன் சென்றிருந்தபோது, தேவதச்சன் மயனை அழைத்த பார்வதி, ஒரு மாளிகையை உருவாக்கக் கட்டளையிட்டாள். மாளிகை தயாரா னது. திரும்பிவந்த சிவன் பார்வதியிடம், தனக்கும் சனிக்கும் உள்ள ஒப்பந்தத்தைத் தெரிவித்தார்.
"நீங்கள் சனியிடம் "என் மனைவி அறியாமல் மாளிகை கட்டிவிட்டாள். இருந்துவிட்டுப் போகட்டுமே' என சிபாரிசு செய்யுங்கள்...'' என்றாள் பார்வதி.
அதன்படியே சிவனும் புறப்பட்டார். அப்போது அவரை மீண்டும் அழைத்த பார்வதி, "ஒருவேளை இதற்கு சனி சம்மதிக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் உடுக்கையை அடியுங்கள், அதன் ஒலியைக் கேட்டதும் நான் இதை இடித்துவிடுகிறேன்...'' என்றாள்.
அதாவது, வெளியே புறப்பட்ட சிவனைத் திரும்பவும் அழைத்து விட்டாள் பார்வதி. சனியை சந்தித்தார் சிவன். "அறியாமல் செய்ததுதானே. இருந்துவிட்டுப் போகட்டும். சனி, இதற்குக் கைம்மாறாக, ஏதாவது கேள்; தருகிறேன்'' என்றார்.
"பகவானே... நீங்கள் எனக்கு சிதம்
பரத்தில் மறுத்த ஆனந்தத் தாண்ட
வத்தை இங்கே ஆடவேண்டும். அதைக்
கண்டு நான் ரசிக்க வேண்டும்'' என்றார்
சனி. "நான் வாத்தியங்களுடன் வரவில்
லையே, எப்படி நடனமாடுவது...''
என்றார் சிவன்.
"உங்கள் கையில்தான் உடுக்கை இருக்கிறதே...
அதை அடித்து ஆடுங்கள். அது போதும்...'' என்றார் சனி. பிறகென்ன நடந்திருக்கும்? சிவன் உடுக்கையடித்து ஆட, அரண்மனையை இடித்துவிட்டாள் பார்வதி.
சனியும் கடமை தவறவில்லை; சிவனும் வாக்கைக் காப்பாற்றினார். அத்துடன் "நடராஜ தரிசனம் காண்பவர்களை என் தோஷம் ஏதும் செய்யாது' என்று வாக்கு தந்தார் சனிபகவான். வெளியே கிளம்பியவர்களை மீண்டும் அழைக்கக்கூடாது என்ற பழக்கம் இதன்பிறகுதான் உருவானது.
அத்தகைய கடமை தவறாத, நேர்மையும் நெஞ்சுறுதியும்கொண்ட சனிபகவானும், கொடுத்த வாக்கை எந்த நிலையிலும் காக்கும் சிவபெருமானும் நடராஜ தரிசனமும் ஒருங்கே அமையப்பெற்று; அடிப்படை உண்மையை உணர்ந்து, அல்லல்கள் நீங்கி, வாழ்வில் உயர்வைப் பெறவைக்கும் உன்னதமான திருத்தலம்தான் கொங்கு மண்டலத்திலுள்ள அன்னூர் மன்னீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: மன்னீஸ்வரர் (அன்னீஸ்வரர்).
இறைவி: அருந்தவச் செல்வியம்மை.
உற்சவர்: சோமாஸ்கந்தர்.
விசேஷ மூர்த்தி: சனிபகவான்.
ஆகமம், பூஜை : காரணாகமம்.
புராணப் பெயர்: மன்னியூர், அன்னியூர்.
ஊர்: அன்னூர்.
தலவிருட்சம்: வன்னி மரம்.
தீர்த்தம்: அமராவதி தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருமையுடன் கொங்கு நாட்டு வைப்புத் தலமாகவும், நொய்யல் நதியின் வடகரைத் தலமாகவும் போற்றப்பட்டு வரும் இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப் பாட்டில் செயல்பட்டு வருகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் அன்னூர் மன்னீஸ்வரர் திருகோவில்.
தலப் பெருமை
இங்குள்ள சிவலிங்கம் மணலின் நிறத்திலேயே இருக்கிறது. லிங்கத்தின் இருபுறமும் பறவைக்கு இருப்பதுபோல இறகு போன்ற வடிவம் உள்ளது.
உற்றுப் பார்த்தால் கருடன் தனது இறக்கைகளை மடக்கி வைத்து அமர்ந்திருப்பதுபோல காட்சியளிக்கிறது.
கருடன் கூர்மையான பார்வை கொண்டது. வானத் தில் எவ்வளவு உயர்த்திலிருந்தாலும் கீழே இருக்கும் மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது. அதுபோல சிவனும், "யாருக்கும் தெரியாது' என்றெண்ணி நாம் செய்யும் தவறுகளையும் பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. இத்தகைய அரிய சிவலிங்க வடிவை தமிழகத்தில் ஒரே ஒரு ஆலயத்தில்தான் காணமுடியும். அதுதான் அன்னூர்.
தல வரலாறு
பல்லாண்டு களுக்குமுன் அன்னூர் வன்னி மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்தது. அந்த வனத்திற்குள் அன்னி என்ற வேடன் (சிவபக்தன்) விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். உயிர்களைக் கொல்வது பாவமென்று தெரிந்திருந்தும், வேறெந்த வேலையும் தெரியாதென்பதால் வேட்டையாடி வந்தான்.
ஒருநாள் அவன் காட்டுக்குள் நீண்ட நேரம் அலைந்து திரிந்தும் ஒரு மிருகமும் கண்ணில் படவில்லை. அவன் நடந்து நடந்து சோர்வடைந்து விட்டான். இதற்கு மேலும் நடக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவன் வன்னி வனத்திற்குள் ஒரிடத்தில் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.
பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது சாப்பிட்டால்தான் இனி நடக்கமுடியும் என்று நினைத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு வள்ளிக்கிழங்கொன்று முளைத்திருப்பதைக் கண்டான். அதையாவது உண்ணலாம் என் றெண்ணி, அதைச் சுற்றியிருந்த மண்ணை அகற்றினான். பிறகு வள்ளிக்கிழங்கை வெட்டி னான். வெட்ட வெட்ட அது வளர்ந்து கொண்டே இருந்தது. வேடனுக்கு ஆச்சரியம்! அதைக் கண்டறிவதற்காக கிழங்கு முளைத் திருந்த இடத்தை மேலும் ஆழமாகத் தோண்டி னான். ஆனால் அந்தக் கிழங்கு அடிப்பாகம் முடிவடையாமல் சென்றுகொண்டே இருந்தது. வேடனுக்கு எதுவும் புரியவில்லை. இனி கிழங்கை கிடைத்தவரை வெட்டியெடுக்கலாம் என்று முடிவுசெய்து வெட்டினான்.
அப்போது வெட்டப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. ரத்தத்தைப் பார்த்தும் வேடன் மயங்கி விழந்தான். அந்த சமயத்தில் காட்டுக்குள் ஆடுகளை மேய்ப்பதற்காக சிறுவர் கள் வந்திருந்தனர். அவர் கள் வேடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர்.
உடனே ஊருக்குள் சென்று விவரத்தைத் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் சேர மன்னன் அந்த வனப் பகுதிக்கு மற்றொரு ஆலயத் திருப்பணிக் காக வந்திருந்தான். தகவலறிந்து மன்னனும் காட்டுக்குச் சென்றான். வேடனின் மயக்கத்தைத் தெளியவைத்து "என்ன நடந்தது?' என்று விசா ரித்தான். அப்போது வேடன் நடந்த சம்பவங் களைக் கூறினான்.
ஆச்சரியமடைந்த சேர மன்னன் அந்த வள்ளிக்கிழங்கைத் தோண்டியெடுக்குமாறு தனது படைவீரர்களுக்கு உத்தர விட்டான். வீரர்கள் அனைவரும் பள்ளம் தோண்டி அந்தக் கிழங்கை வெளியிலெடுக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து யானையை வரவழைத்து அதன் கால்களில் சங்கிலியைக் கட்டி வள்ளிக்கிழங்கை வெளி யிலெடுக்க முயன்றனர்.
அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
இதனால் அனைத்துப் படை களையும் அங்கு சேரமன்னன் வரவழைத் தான்.
அப்போது அங்கு ஒரு அதிசயம் நடந்தது. வெட்டுப்பட்ட வள்ளிக்கிழங்கிலிருந்து மிகப்பெரிய ஜோதி எழும்பியது. அந்தப் பகுதியே ஒளி வெள்ளத்தில் பிரகாசமாக மாறியது. இதைக் கண்டதும் சேர மன்னன் ஏதோ ஒரு சக்தி அந்த இடத்தில் இருப்பதாக உறுதியாக நம்பினான்.
அன்றிரவு மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, "வன்னிமரக் காட்டுக்குள் நீங்கள் என்னைக் கண்ட இடத்தில் இருக்கவே விரும்புகிறேன். என்னை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்ற முயற்சிக்க வேண்டாம். என்னை வெட்டி பாவம் சேர்த்து விட்டீர்கள் என்றாலும், நீங்கள் செய்த பாவங்களை மன்னிக்கிறேன். எனக்கு ஆலயம் கட்டி வழிபடுங்கள்' என்று கூறினார்.
கண் விழித்ததும் சேரமன்னன் மிகுந்த ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தான். சிவபெருமானின் திருவிளையாடலை எண்ணி மனம் குளிர்ந்தான். இறைவனின் உத்தரவுப்படி அந்த வள்ளிக்கிழங்கு முளைத்திருத்தப் பகுதியிலேயே மிகப்பெரிய ஆலயத்தை சேரமன்னன் உருவாக்கினான்.
வள்ளிக்கிழங்கில் சுயம்புலிங்கமாகத் தன்னை வெளிப்படுத்தி ஈசனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சேரமன்னன் பலரிடமும் கருத்து கேட்டான். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பெயரைக் குறிப்பிட்டனர்.
இறுதியில் தனது செயலுக்குத் தண்டனை தராமல் ஈசன் மன்னித்தருளியதாôல் மன்னீஸ்வரர் என்ற பெயரை சேரமன்னன் சூட்டினான். அன்றுமுதல் இந்த தலத்து ஈசன் மன்னீஸ்வரர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
கருவறையில் வள்ளிக்கிழங்கு வெட்டப்பட்டது போன்ற தோற்றத்தில்தான் சிவலிங்கம் அமைந்துள்ளது. வேடன் அன்னி கோடரியால் வெட்டியதற்கு அடையாளமாக சுவாமியின் தலையில் காயம் இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. அதுபோல சேரமன்னன் யானையைக்கொண்டு சங்கிலியால் இழுத்த அடையாளமும் லிங்கத்தில் உள்ளது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது மட்டும்தான் இதை நன்றாகப் பார்க்கமுடியும்.
அன்னி என்ற வேடன்மூலம் சிவபெருமான் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதால் இத்தல ஈசனுக்கு அன்னீஸ்வரர் என்ற பெயர் உண்டு. என்றாலும் அந்த வேடனையும் மன்னித்ததால் மன்னீஸ்வரர் என்ற பெயரே நிரந்தரமாகிவிட்டது. வேடன் பெயரில் அந்தப் பகுதி "அன்னியூர்' என்றழைக்கப்பட்டு தற்போது அன்னூர் எனப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ப் இறைவன் மன்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாய் மேற்கு நோக்கியருள்கிறார்.
ப் பழமையான இந்த ஆலயத்தில் பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
ப் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது திருமணக் கோலத்தில் மன்னீஸ்வரரும் அருந்தவச் செல்வி அம்பாளும் தேரில் பவனிவருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ப் "ஆயிரம் கிழக்குப் பார்த்த கோவில்களை தரிசித்தால் என்ன பலன் கிட்டுமோ அந்தப் பலன் ஒரேயொரு மேற்கு நோக்கிய கோவிலை வழிபட்டால் கிட்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அருந்தவச் செல்விக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது அம்பாளை வழிபட்டால் திருமணம் கைகூடும்'' என்று கூறுகிறார் குருமூர்த்தி சிவாச்சாரியார்.
ப் "மற்ற கோவில்களில் சிவன் சந்நிதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பாள். இங்கு அம்பாள் சந்நிதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பது வித்தியாசமானதாகும். இவளது சந்நிதி எதிரில் விநாயகர் இருக்கிறார். இவர் தாயைப் பார்த்தபடி இருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும். ராஜகோபுரத்தின் அருகில் சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கும், முதல் திங்கட்கிழமை சந்திரனுக்கும் அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கும். நவகிரக மண்டபத்திலுள்ள அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி இருப்பதும் சிறப்பு'' என்கிறார் ஆலய அர்ச்சகர் கணேஷ்.
ப் "மேற்றலைத் தஞ்சாவூர் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் மன்னீஸ்வரரை மனமுருக வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் தீரும். மன்னீஸ்வரருக்கு 21 தீபமேற்றி 21 முறை வலம்வந்து வணங்கினால் 21 தலைமுறை பாவங்கள் நிவர்த்தியாகும். இத்தலத்தில் தனிச்சந்நிதி கொண்டு திகழும் சனீஸ்வரருக்கு சனிக்கிழமை காலையில் எள்சாதம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. சனிபகவான் அநியாயத்தைத் தண்டித்து அருள்பவர்; மூலவர் மன்னீஸ்வரரோ பக்தர்களை மன்னித்து அருள்பவர்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் மற்றொரு ஆலய அர்ச்சகரான ராஜேஸ் சிவாச்சாரியார்.
திருக்கோவில் அமைப்பு
நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, மேற்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கடந்தால் சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. அர்த்த மண்டபம், மகாமண்டபம், அதற்குமுன் கொங்குமண்டல வழக்கப்படி தீபஸ்தம்பம், பலிபீடம், நந்தி சந்நிதி உள்ளது. கருவறையில் மூலவர் சுயம்புமூர்த்தியாய் அருள்கிறார். அர்த்தமண்டபத்தில் தெற்கு நோக்கியபடி வள்ளி, தேவசேனாவுடன் முருகன் அருட்காட்சி தருகிறார். நடராஜர்- சிவகாமியும் அருள்கின்றனர். நால்வர் சந்நிதியும், ஆஞ்சனேயர், திருநீலகண்ட நாயனார் சந்நிதியும் உள்ளன.
கயிகலாய விமானத்துடன் மூலவிமானம் உள்ளது. தலவிருட்சமான வன்னிமரத்தின்கீழ் சர்ப்பராஜர் சந்நிதியில் ஏழு நாகங்கள் உள்ளன. வன்னிமரம் அருகில் பஞ்சலிங்கம் மற்றும் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்கள் சிவாகாம விதிப்படி அமைந்துள்ளன.
அம்பாள் அருந்தவச்செல்வி நின்றநிலையில் தனிச் சந்நிதிகொண்டு அருள்கிறாள்.
"சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சிக் காலங்களில் உலகநலன் கருதி சிறப்பு ஹோமங்கள் செய்யப்படுகின்றன. அதில்கலந்து கொண்டு மன்னீஸ்வரரின் அருளைப்பெற்று, மனச்சுமையை இறக்கி வைத்து மகிழ்வுடன் வாழலாம்'' என்கிறார் செயல் அலுவலர்.
காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், மன்னீஸ்வரர் திருக்கோவில், அன்னூர் (அஞ்சல்), கோயம்புத்தூர் மாவட்டம்- 641 653.
பூஜை விவரங்களுக்கு: ராஜேஸ் சிவாச்சாரியார், அலைபேசி: 98426 62937. குருமூர்த்தி சிவாச்சாரியார், அலைபேசி: 98422 38564. கணேஷ் சிவாச்சாரியார்,
அலைபேசி: 98422 58564.
அமைவிடம்: கோயம்
புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 33 கிலோமீட்டர் தொலைவில் அன்னூர் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு நிமிடத்தில் நடந்து சென்று விடலாம். கோவை மாவட் டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் அன்னூருக்கு பேருந்து வசதி நிறைய உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா