எவ்வளவோ அதிசயங்கள் நிறைந்தது இவ்வுலகம். இறந்து, மீண்டும் உயிர்பெற்றெழுந்த சம்பவங்களும் அவற்றுள் ஒன்று. நாமே சிலநேரங்களில் இத்தகைய தகவல்களை செவிவழிச் செய்தியாகக் கேட்டிருக்கி றோம். ஆனாலும் ஆதாரம் உள்ளவைதானே நம்பப்படுகின்றன. அவ்வகையில் இறந்து மீண்டும் பிறந்த ஒரு சிறுமியைப் பற்றிய செய்தியை இங்கு காணலாம்.
பொதுவாக இறந்த ஒரு ஆன்மா பித்ரு லோகம் சென்றுசேர ஓராண்டு காலமாகும் என இந்துமத நூல்களில் சொல்லப்பட் டுள்ளது. ஆனால் இந்த சிறுமி இறந்து அங்கு சென்று, மீண்டும் பூமிக்குத் திரும்ப 15 நிமிடங்களே ஆயின.
1977-ஆம் ஆண்டு லண்டன் பி.பி.சி தொலைக்காட்சியில் "எவ்ரி மேன்' என்னும் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்த துர்த்தானா என்னும் 12 வயது சிறுமி, "இரண்டு வயதில் நான் மரணமடைந்துவிட்டேன். 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிர்பெற்றெழுந்தேன்' என்றாள். அதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த உலகமே திகைத்துவிட்டது.
துர்த்தானா என்னும் அந்தச் சிறுமியின் தந்தை பெயர் ஏ.ஜி. கான். அவரது இரண்டாவது மகள்தான் இந்தச் சிறுமி. கான் இமயமலைச் சாரலில் இராணுவ மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மருத்துவமனையின் பின்புறத் திலேயே அவர்கள் வசித்த வீடு இருந்தது.
துர்த்தானாவுக்கு இரண்டு வயது நடந்து கொண்டிருந்தபோது மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டாள். தந்தையால் சரிவர தனது பணியைக்கூட செய்யமுடியவில்லை. தாயார் தான் மகளின் அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் சிறுமியின் தாயார், "மகளே... மகளே... எழுந்திரு' என்று சொல்லி கதறிக்கதறி அழுதார். அதைக்கேட்டு மருத்துவ மனையிலிருந்த தந்தை ஓடிவந்தார். மகளைத் தொட்டுப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர், மீண்டும் மருத்துவமனைக்கு ஓடிப்போய் உயிர்காக்கும் உபகரணங்களை எடுத்துக்கொண்டு விரைந்து வந்தார். இதற்கிடையே அந்தத்தாய் தன் மகளைத் தூக்கிச்சென்று தந்தை படுக்கும் கட்டிலில் படுக்கவைத்து வாயில் மருந்தை ஊற்ற, அது உள்ளே செல்லாமல் இருபுறமும் வெளியே வழிந்தது. தந்தை கருவிகளைக்கொண்டு சுய நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். அவள் கண்விழிக்காதது கண்டு தாங்கமுடியாமல், "துர்த்தானா... எழுந்து வா' என்று அழுதார்.
அப்படியே சோர்ந்து அமர்ந்துவிட்டார்.
அப்போது அந்தச் சிறுமி மெல்ல கண்களைத் திறக்க, அவர்கள் பதற்றத்துடன், "மகளே... என்ன செய்கிறது?' என்று கேட்க, "மருந்து கசக்கிறது' என்று சொன்னபடி மீண்டும் கண்களை மூடி விட்டாள் அவள். தந்தை அவசர சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தி ஏதேதோ செய்தபடி, "துர்த்தானா! எழுந்து வா... எழுந்து வா...' என்றபடி கதறினார். சுமார் 15 நிமிடங்கள் கழித்து அவளது உடலில் அசைவு ஏற்பட்டது. மெல்ல கண்களைத்திறந்தாள். கொஞ்ச நேரத்தில் இயல்புநிலைக்கு வந்துவிட்டாள். அதற்குமேல் அந்த சிறுமியிடம் இதுபற்றி பெற் றோர்கள் எதுவும் கேட்கவில்லை.
அதன்பின் அவளுக்கிருந்த காய்ச் சல் குணமாகி நல்ல முறையில் தேறிவிட்டாள். சில நாட்கள் கழித்து அவளது தாயார், ""மகளே, அன்று நீ காய்ச்சலில் படுத்திருந்தபோது திடீரென்று இறந்துவிட்டது போலாகி விட்டாயே. என்ன நடந்தது தெரியுமா?'' என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுமி, ""அம்மா, நான் நட்சத்திரங்களையெல்லாம் கடந்துசென்றேன்'' என்றாள்.
நட்சத்திரங்களைக் கடந்து செல்வ தென்றால் அண்டத்தையே கடந்துசெல்வது. ஒளியானது ஒரு வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 282 மைல்கள் கடந்து செல்வதாக அறிவியலார் கூறுகின்றனர். இவ்வளவு வேகத்தில் ஓராண்டு பயணித்தால்தான் நமது அண்டத்தையே கடக்கமுடியும்.
அதற்கு அப்பாலும் பேரண்டங்கள் உள்ளன. இதில் அந்த சிறுமி கடந்துசென்றது நமது அண்டத்தையா அல்லது பேரண்டத்தையா என்பது தெரியவில்லை.
""நட்சத்திரங்களையெல்லாம் கடந்தவுடன் நீரோடைகளைப் பார்த்தேன். திராட்சைப் பழங்கள், ஆப்பிள் பழங்கள், மாதுளம் பழங்களைப் பார்த்தேன். அங்கே தாத்தா, பாட்டி எல்லாரும் இருந்தார்கள். அவர்கள்தான் என்னை அழைத்து, "நான் உன் தாத்தா, நான் உன் பாட்டி' என்று சொன்னார்கள். நான் பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டேன். அப்போது, "துர்த்தானா... எழுந்து வா. திரும்ப வா' என அப்பா அழுகிற குரல் கேட்டது. உடனே நான் தாத்தாவிடம், "அப்பா கூப்பிடுகிறார். நான் போகவேண்டும்' என்று சொன்னேன். அதற்கு அவர், "எங்களால் உன்னைத் திரும்ப அனுப்பமுடியாது. நீ கடவுளிடம் கேள்' என்று கூட்டிச் சென்றார். ஓரிடத்தில் நின்றோம். கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. நான், 'அப்பா அழுகிறார். நான் திரும்பப் போகவேண்டும்' என்றேன். "சரி, போய் வா' என்று குரல் கேட்டது. நான் திரும்ப என் அப்பாவின் படுக்கைக்கு வந்துவிட்டேன்'' என்றாள்.
இந்த விவரத்தைக் கேட்ட அந்த சிறுமியின் தந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்குமுன் அந்தச் சிறுமி தந்தையின் கட்டிலில் படுத்த தில்லை. அவளது தாயார்தான் நினைவற்றிருந்த அவளைத் தந்தையின் கட்டிலில் கிடத்தி அழுதுகொண்டிருந்தார். "அப்பாவின் கட்டிலுக்கு வந்தேன்' என்று எப்படி இரண்டு வயது சிறுமி சரியாகச் சொன்னாள்?
அதன்பின் சில மாதங்கள் கழித்து, பாகிஸ்தான் ஜின்னா முதுகலை மருத்துவ மையத்தில், மூளை நரம்பியல் பிரிவில் துர்த்தானாவுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தார்கள். அது முடிந்த நிலையில், ஏ.ஜி. கான் தன் மனைவி, மகளுடன் கராச்சியில் இருக்கும் தனது மாமா வீட்டுக்குச் சென்றார். அங்கு ஏதோ ஒரு விழாவில் எடுக்கப்பட்ட பெரிய குடும்பப் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதிலிருந்த நபர்களைப் பார்த்தவுடன் அந்தச் சிறுமி துள்ளிகுதித்து, ""அம்மா, இந்த தாத்தாவுடைய அம்மா மடியில்தான் நான் படுத்திருந்தேன்"" என்றாள்.
அதைக் கேட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம். ஏனெனில் துர்த்தானாவின் தாயாரே பாட்டனாரின் தாயைப் பார்த்ததில்லை. அப்படியிருக்க, இந்த பழைய படத்தில் உள்ளவரை எப்படி இவள் சரியாகச் சொல்கிறாள்? ஆனால் அவள் அப்பாவுடைய மாமா, ""இவள் சொல்வது உண்மைதான். பாட்டனாரின் தாயார்தான் இப்படத்தில் இருப்பவர்'' என்று கூறினார். மாமா வயதானவர் என்பதால், அவர் அவர்களைப் பார்த்திருக்கிறார். அவர் வீட்டில் மட்டும்தான் அந்தப் படம் இருந்தது. இந்த சம்பவம்தான் துர்த்தானா சொல்வது உண்மை என்பதற்கான சாட்சி!
அந்த சிறுமிக்கு ஓவியம் வரையும் திறமையுண்டு. அவள் தனது பன்னிரண்டாவதுவது வயதில் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்குப்பிறகு, அங்கு வேறொரு நிகழ்ச்சியை வழங்கிவந்த தயாரிப்பாளரான ஆஞ்சலா டெல்பி என்பவர், ""நீ நட்சத்திரங் களையெல்லாம் கடந்துசென்றதாகவும், ஓடைகளையும் பழ மரங்களையும் பார்த்ததாக வும் கூறுகிறாயே. அவற்றை உன்னால் ஓவிய மாக வரைந்துகாட்ட முடியுமா?'' என்று கேட்டார்.
உடனே அந்தச் சிறுமி தான் பார்த்தவற்றையெல்லாம் ஓவியங்களாக வரைந்தாள். அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அதைப் பார்த்து உலகமக்கள் வியப்படைய, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த யூதப் பெண்மணி மிஸஸ் கோல்ட்ஸ்மித் என்பவர் மிகவும் ஆச்சரியப்பட்டு, உடனடியாக துர்த்தானா வைத் தேடிவந்து, ""நான் பார்த்த நீரோடை, ஆப்பிள், மாதுளை மரங்கள் என எல்லா வற்றையும் ஒன்றுவிடாமல் அப்படியே வரைந்திருக்கிறாயே'' என்று சொல்லி மெய்சிலிர்த்தார். (அந்தப் பெண்மணியும் அதைப்போலவே இறந்துபின் சுமார் பத்து பதினைந்து நிமிடங்களில் மீண்டும் உயிர்பெற்றவராம்.)
உண்மையில் அந்த சிறுமி மேலுலகம் சென்றாளா? அல்லது மூளையில் ஏற்பட்ட ரசாயன சமநிலை மாற்றம், மின்காந்த மாற்றம் போன்றவற்றால் அவ்வாறு சென்று வந்ததாக உணர்ந்தாளா? அல்லது இந்த பிரபஞ்சம் தோன்றி அழிவது வரையிலான விஷயங்கள் நம் மூளைக்குள் பதிவாகி இருக்கின்றதா? "லைப்ரரி ஆஃப் சோல்' என்பார்கள். நம் மூளைக்குள் ஒரு நூலகம்போல் எல்லா விஷயங்களும் உள்ளனவாம். எல்லாராலும் அதைப் புரட்டிப்பார்க்க முடிவதில்லை. சிலர் மட்டும் அதை எடுத்துப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு அந்தப் பெண் தன் மூளைக்குள் இருக்கும் பிரபஞ்ச ரகசியங்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாளா என்பதுபோன்ற பல கேள்விகள் இதில் இருக்கின்றன.
ஆனால் அவள், "அப்பாவின் படுக்கையில் மீண்டும் வந்து படுத்தேன்' என்று சொன்னாளே- பாட்டனாரின் தாயார் மடியில் படுத்திருந்ததாகச் சொன்னாளே- புகைப்படத்தைப் பார்த்து எப்போதோ இறந்து விட்ட அந்த அம்மையாரை அடையாளம் காட்டினாளே? இவற்றில் எது உண்மை? அதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இந்தப் பிரபஞ்சம் ஆரம்பமும் இல்லாதது; முடிவும் இல்லாதது. "இன்ஃபினிட்டி' என்று சொல்வார்கள். அதுபோல இந்த பிரபஞ்சத்தில் கண்டறியப்படும் உண்மைகளுக்கும் முடிவிருக்காது அல்லது முடிவு தெரியாது. மனிதன் எவ்வளவு அறிந்தாலும் அவற்றுக் கெல்லாம் ஒரு காற்புள்ளி வைக்கலாமே தவிர, முற்றுப்புள்ளி வைக்க இயலாது.
சென்னையைச் சேர்ந்த ராஜவேல் என்பவர் வெல்டிங் கடை நடத்தி வந்தார். சொந்தவீடு இருந்தது. ஓரளவுக்கு வசதியானவர்தான். ஆனால் அவருக்குத் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. இதனால் அவரது தாயார் மிகவும் கவலையில் இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் வெள்ளை ஆடை அணிந்து, கையில் ஒரு சிறு கோலுடன் குறிசொல்லும் பெண்மணி ஒருவர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் ராஜவேலின் தாயாருக்கு மகனின் திருமணம்பற்றிக் கேட்டுப்பார்க்கலாமே என ஆவல் எழ, அந்தப் பெண்மணியை அழைத்துக் கேட்டார்.
மகனின் கைரேகைகளைப் பார்த்த அவர், ""உங்கள் மகனுக்கு விரைவிலேயே திருமணம் நடக்கும்'' என்றார். தாயாருக்கு மிகவும் மகிழ்ச்சி. ""பெண் எங்கிருந்து அமைவாள்? சொந்தத்திலா அந்நியத்திலா?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். ""சொந்தத்தில்தான். உங்கள் உடனபிறந்த சகோதரருடைய மகளே உங்களுக்கு மருமகளாக வருவாள்'' என்றார்.
இதைக்கேட்ட தாயாருக்கு பெரும் அதிர்ச்சி. தன் பிறந்தவீட்டோடு எவ்விதத் தொடர்புமின்றி வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர். திருமணமான புதிதில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இனி தாய்வீட்டுக்குச் செல்வதில்லை என்று வைராக்கியம் கொண்டு, 27 ஆண்டுகளாக அதே வைராக்கியத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பவர். பெற்றோர் மரணத்துக்குக்கூட செல்லவில்லை. அப்படி யிருக்க, தான் இதுவரை பார்த்துக்கூட அறியாத தம்பி மகள்தான் மருமகளாக வருவாள் என்றதைக் கேட்டதும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார். குறிசொன்ன பெண்மணியைப் பார்த்து, ""அது நடக்காத விஷயம். நீங்கள் சொன்னது பலிக்கப்போவதில்லை. நான் வேறொரு இடத்தில் பெண்பார்த்து சீக்கிரமாகத் திருமணம் செய்துவைக்கிறேனா இல்லையா என்று பாருங்கள்'' என்றார் சற்று கோபமாக.
அதற்கு அந்தப் பெண்மணி, ""அம்மா, எனக்கு ஐம்பது வயதாகிறது. பேரன் பேத்தி எடுத்துவிட்டேன். இதுவரை நான் சொன்ன வாக்கு பொய்த்ததே இல்லை. உங்கள் தம்பி மகள்தான் உங்களுக்கு மருமகளாக வருவாள்.
நடக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் பாருங் கள்'' என்று சவால்விட்டுச் சென்றுவிட்டார்.
சவாலில் வென்றவர் யார்?
(அதிசயங்கள் தொடரும்)