நமது ஊர்ப்பக்கம், "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்லக் கேட்டிருப்போம். "அவன் கண்பட்டாலே எதுவும் விளங்காது' என்று சிலரைக் குறிப்பிட்டுச்சொல்வார்கள். இன்னும் சிலர் எல்லாரை யும் வீட்டினுள் அனுமதிக்க மாட்டார்கள். ஏற்றத்தாழ்வு காரணமாக அல்ல. அவர்கள் கண் பட்டால் கெடுதி நேர்ந்து விடும் என்ற பயத்தின் காரண மாகத்தான். சிலர் முகத்தில் விழித்தாலே போகிற காரியம் நடக்காது என்றும் பொதுவாகச் சொல்வார்கள். இவையெல்லாம் மூட நம்பிக்கை என்று கூறுவோரும் உண்டு. ஆனால் அவற்றுக்குள்ளும் அறிந்துகொள்ள முடியாத அதிசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
கடந்த இதழில், திருவண்ணாமலையில் ஒரு பெரியவரின் பார்வை ஏற்படுத்திய விளைவைப் பார்த்தோம். இன்னொருவர் இருக்கிறார். அவர் ஓரிடத்திற்குப் போனாலே ஏதாவது நடக்கும். அவரது பெயர் உல்ஃ கேங் பாலி. இவர் ஜெர்மன் நாட்டிற்கு அருகேயுள்ள ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். அவரால் ஏற்பட்ட விளைவுகளை "பாலி எஃபெக்ட்' என்றே சொல்வார்கள். இவர் தனது 18 வயது முதல் 21 வயதுக் குள்ளாக "குவான்டம் பிசிக்ஸ்' (அணுத்துகள் இயற்பியல்) துறையில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டார். ஐன்ஸ்டீனைவிட அறிவாளி என்று இவரைச் சொல்பவர் களும் உண்டு.
மிகப்பெரிய அறிவாளியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், "குவான்டம் பிசிக்ஸி'ல் உள்ள இவரது ஆழ்ந்த அறிவைப் பார்த்து, இவரது கண்டுபிடிப்பைப் பார்த்து, பாலிக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டுமென்று பரிந்துரைத்திருக்கிறார். அதன்பேரில், 1945-ஆம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் பரிசு பாலிக்கு வழங்கப்பட்டது.
இவரிடமிருந்த ஒரு வியப்பூட்டும் தனித்தன்மை என்னவென்றால், இவர் ஓரிடத்திற்குச் சென்றால் அங்கு இயல்புக்கு மாறான ஒரு செயல் நடக்கும். ஒரு ரயிலில் ஏறினால் அது புறப்படாது. ஒரு காரில் ஏறினாலும் அதுபோல நடக்கும். ஒரு ஆய்வுக்கூடத்திற்குச் சென்றா ரென்றால் அங்கு எரிந்துகொண்டிருக்கும் "பர்னர்' அணைந்துவிடும். பொதுவாக, இவர் எந்த ஒரு ஆய்வுக் கூடத்தில் நுழைந்தாலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும். இதுபோன்று ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
ஒருமுறை இவர் தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவர் மிகவும் நேசமாக வைத்திருந்த "ஸ்போர்ட்ஸ் மாடல்' காருக்கருகே இவர் சென்றபோது, அது தீப்பிடித்து எரிந்துவிட்டது. "இந்த நிகழ்வுக்கு நான் இங்கு வந்ததே காரணம்' என்று பாலி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இதை நம்பாத பலரும், "இவை தற்செயலாக நிகழ்ந்தவை. இவற்றுக்கும் பாலிக்கும் தொடர்பில்லை' என்று சொல்லி, ஒரு நூறு நிகழ்வுகளைத் தொகுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். அதன்மூலம் எதனையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இவர் வரும் இடங்களில் எதிர்பாராத இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருந்தன. "இதற்கெல்லாம் நான்தான் காரணம்' என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.
பெர்லினில் உள்ள "யுனிவர்சிடி ஆஃப் கர்டிங்ஜன்' என்னும், ஆய்வுக் கூடத்திலுள்ள மிகச்சிறந்த ஆய்வாளரான ஜேம்ஸ் ஃபிராங்க்தன் ஆய்வுக்கூடத்தின் பக்கமே வரக்கூடாது என பாலிக்கு உத்தரவே போட்டுவிட்டாராம். அவர் பாலிக்கு நண்பர்தான். ஒருமுறை அந்த ஆய்வுக்கூடத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறு நேர்ந்துவிட்டது. அப்போது ஜேம்ஸ் ஃபிராங்க் பாலிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்- "நல்லவேளை நீ இங்கு வரவில்லை. நீ இங்கு இருந்திருந்தால் உன்னால்தான் இது நடந்ததென்று எல்லாரும் சொல்லிலியிருப்பார்கள்' என்று.
அதற்கு பாலி பதில் கடிதமெழுதினார்.
"நீங்கள் குறிப்பிட்டிருந்த அதே நாள், நேரத்தில், உங்கள் ஆய்வுக்கூடத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையத்தில் நான் ரயிலுக்காகக் காத்திருந்தேன். உங்கள் ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்கு நான்தான் காரணமென்று நினைக்கிறேன்'.
"பிரிங்க்ஸ்டன்' பல்கலைக்கழகத்தின் கீழ்த்தளத்தில் ஐம்பது டன் எடையுள்ள சக்திவாய்ந்த காந்தம் இருந்தது. ஒருமுறை பாலி அங்கு சென்றபோது அவ்வளவு காந்தமும் தீப்பிடித்து எரிந்தன. ஆறுமணி நேர போராட்டத்துக்குப் பின்னரே அந்தத் தீயை அடைத்தனர்.
பாலியின் 27-ஆவது வயதில் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அந்த நேரத்தில் பாலி, மதுக்கூடத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை விரும்பி மணந்துகொண்டார். ஆனால் மூன்று வாரங்களிலேயே அந்தப் பெண் பாலியைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். துணையின் பிரிவால் கடும் வேதனைக் குள்ளான பாலி மதுவுக்கு அடிமையானார்.
மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்தது குடிப் பழக்கம்.
கால் ஜங்க் என்றொரு மனோதத்துவ நிபுணர். அவர் பாலியின் நண்பர். அவர் ஒரு பல்கலைக் கழகத்தைத் திறந்துவைக்க விருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிக்கும் அழைப்பு விடுத்திருந்தார். பாலிலி அந்த அரங்குக்குள் காலெடுத்து வைத்த அந்த நிமிடம்- அங்கு ஆறடி உயரத்தில் கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு சீன ஜாடி வைக்கப்பட்டிருந்தது. அது நிறைய தண்ணீர் இருந்தது. அது தானாக கவிழ்ந்து உடைய, அதிலிருந்த நீர் எங்கும் வழிந்தோடி யது! அப்போது பாலி தன் நண்பர் ஜங்கிடம் ரகசியமாக, "இதற்கு நான்தான் காரணம். நான் வரவில்லையென்றால் இப்படி நடந்தி ருக்காது' என்று சொல்லி மிக வருத்தப்பட்டாராம்.
இதுபோன்ற நிகழ்வுகளை அறிந்த சிலர், "எதேச்சையாக நிகழும் செயல்களுக்கும் பாலிக்கும் என்ன தொடர்பு? இது மூட நம்பிக்கை. இதை நாம் நிரூபிக்க வேண்டும்' என திட்டமிட்டனர். அதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியது. ஒரு விழாவில் பாலி பங்கேற்க விருத்தார். அந்த அரங்கின் உத்தரத்தில் கட்டப் பட்டிருந்த "சாண்டிலியர்' என்று சொல்லப் படும் மிகப்பெரிய அலங்காரக் கண்ணாடி விளக்குத் தொகுப்பை, பாலி வரும் நேரத்தில் அறுந்துவிழச் செய்யுமாறு அவர்களே ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு கயிறை அறுத்து விட்டால் அடுத்த நொடி அந்த சாண்டிலியர் தரையில் விழுந்து நொறுங்கும். ஆனால் அவர்கள் இது நிகழ்ந்த பிறகு, "பாலி வந்ததனால் இது அறுந்து விழவில்லை. நாங்கள்தான் இதற்கான ஏற்பாட்டைச் செய்தோம்' என்று சொல்லி, பாலிலியின் மீதிருந்த மதிப்பீட்டைக் குலைக்கலாம் என திட்டமிட்டிருந்தனர்.
விழா மண்டபத்திற்குள் பாலி நுழைந்தார். திட்டமிட்டபடி சாண்டிலியரைப் பிணைத் திருந்த கயிறு அறுக்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம்! சாண்டிலியர் கீழே விழவே இல்லை! அப்போதுதான் அவர்கள் உணர்ந் தனர்- பாலியின் உடலில் ஏதோவொரு அதிர்வலையின் தாக்கம் உள்ளதென்று!
இதுபோன்ற இன்னும் பல விஷயங்களை ஆய்வுசெய்த உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்ட், கால் ஜங்க் ஆகியோர் "மீனிங்ஃபுல் கோ-இன்சிடண்ட்ஸ்' "அர்த்தமுள்ள இணை நிகழ்வுகள்) என்று இவற்றைக் குறிப்பிடுகின் றனர். எந்த ஒரு செயலும் தனியே நிகழ்வதில்லை; ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது என்ற றிந்து, "சிங்கர்னோசிடி' என்னும் கோட்பாட்டை வகுத்து, அதை புத்தகமாகவும் எழுதினர்.
சிக்மண்ட் ஃப்ராய்டின் தந்தை, "எல்லா அற்புதங்களையும் விந்தைகளையும் அறிவியலால் விளக்கமுடியும். அது தெரியாத தாலேயே பல நிகழ்வுகளை நாம் பொய் என்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
"நாடோடி மன்னன்' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடந்துபோவது போன்ற காட்சி. அது படமாக்கப்பட்டபோது அவரது அங்க வஸ்திரம் அருகிலிலிருந்த குத்துவிளக்கில் பட்டு தீப்பிடித்துக்கொண்டது. உடனே அதைத் தட்டி அணைத்துவிட்டனர். இது நிகழ்ந்து அரை மணி நேரத்திற்குள் எம்.ஜி.ஆர். அவர் களுக்கு ஒரு செய்தி வருகிறது- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இறந்துவிட்டதாக. எம்.ஜி.ஆர் மிகவும் கவலைக்குள்ளானார். இதையும் ஒரு "இணை நிகழ்வு' எனலாம்.
திரையுலகில் பல சென்ட்டிமென்ட்கள் உண்டு. "காளி' என்று பெயரிட்டுப் பட மெடுத்தால் ஏதேனும் பிரச்சினை வருமென் பதும் அதிலொன்று. இது உண்மையா என்று தெரியாது. ஆனால் உதாரண சம்பவங் கள் உண்டு. "மகாகவி காளிதாஸ்' முதல்நாள் படப்பிடிப்பின்போதே நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு காலில் அடிபட்டு நகம் தனியே வந்து நிறைய ரத்தம் கொட்டிவிட்டது. ரஜினிகாந்த் நடிப்பில் "காளி' என்றொரு படம் எடுத்தார்கள். அதன் படப்பிடிப்பின்போது தீவிபத்து ஏற்பட்டு பல குதிரைகள் இறந்து விட்டன. சிவகுமார் நடிப்பில் "பத்ரகாளி' படம் உருவாகிக்கொண்டிருந்த சமயம், அப்படத்தின் கதாநாயகி ராணி சந்திரா விமானவிபத்தில் இறந்துபோனார்.
இப்படி பல விஷயங்கள் உள்ளன. இவை யெல்லாம் "மீனிங்ஃபுல் கோ-இன்சி டண்ட்'ஸில் அடங்கும். இவை குறித்து ஆங்கிலத்தில் பல ஆய்வு நூல்கள் எழுதப் பட்டன. தமிழில் மறைமலையடிகளின் நூல்களைக் குறிப்பாகச் சொல்லலாம் குடுகுடுப்பைக்காரர்கள் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர்களை தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்வார்கள். நள்ளிரவு பன்னிரண்டு மணி யளவில் ஊருக்குள் வருவார்கள். குடுகுடுப்பை அடித்தபடி வீட்டு வாசல்களில் நின்று குறிசொல்லிலிவிட்டுப் போய் விடுவார்கள். விடிந்தபின் குறி சொன்ன வீடுகளுக்குச் சென்று காசு கேட்பார்கள். இதில் விந்தை என்னவென்றால், இரவில் அவர்கள் குறிசொல்ல வரும் போது வீட்டு நாயாகட்டும்- தெரு நாயாகட்டும், ஒரு நாயும் அவர்களைப் பார்த்து குரைக்காது. ஏனென்றால் மந்திரத்தால் நாய் களின் வாயைக் கட்டிவிடுவார்கள் போகும் போது அவிழ்த்துவிட்டுச் சென்று விடுவார்கள்.
பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு என்னும் கிராமம். எனது அப்பாவின் ஊர். 1968-ல் விடுமுறையில் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். எங்கள் அத்தை வீட்டு திண்ணையில் அமர்ந்து எல்லாரும் பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் வீட்டில் ஒரு அருமையான நாய் வளர்த்தார்கள். யார் அந்தப்பக்கம் வந்தாலும் குரைக்கும். மிக ஆக்ரோஷமாக இருக்கும். வீட்டுக்கு வரும் உறவினர்களை எதுவும் செய்யாது. காலை சுமார் பத்து மணியிருக்கும். தெருவில் ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். கால்களில் செருப்புகூட இல்லை. சுமார் 65 வயதிருக்கும். நீண்டதாடி. வாரப்படாத அடர்ந்த தலைமுடி. காவி உடை அணிந்திருந்தார். தோளில் ஒரு ஜோல்னா பை தொங்கிக்கொண்டிருந்தது. கையில் ஒரு தடி வைத்திருந்தார்.
அவரைப் பார்த்ததும் இந்த நாய் குரைக்க ஆரம்பித்துவிட்டது. "ச்சூ ச்சூ' என்று சொல்லிலியபடி அவர் மேற்கொண்டு நடந்தார். ஆனால் நாய் விடவில்லை. கடிப்பதுபோல அருகே சென்று பயங்கரமாகக் குரைத்தது.
அவர் "ச்சூ ச்சூ' என்று சொன்னபடியே குனிந்து தரையை இரண்டுமுறை தட்டினார்.
அவ்வளவுதான். நாய் ஈனமான குரலிலில் முனகிக்கொண்டே அப்படியே தரையில் படுத்துவிட்டது. அவர் போய்விட்டார். நாங்கள் ஓடிச்சென்று பார்த்தோம். நாயால் எழுந்துநிற்க முடியவில்லை. அதைத் தூக்கிவந்து வீட்டில் படுக்கவைத்தோம். இரண்டு மூன்று நாட்களில் அது உண வருந்தாமல் இறந்துவிட்டது! அந்த சந்நியாசி நாயைத் தொடக்கூட இல்லை. ஏதோ சொன்னபடி தரையில்தான் இரண்டுமுறை தட்டினார்.
அடுத்த நொடியே ஆக்ரோஷ நாய் அடங்கி, பின் இறந்தும் போனது!
(அதிசயங்கள் தொடரும்)