தமிழக சமூக நலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் பிங்க் ஆட்டோ திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் பிங்க் ஆட்டோ சேவையை வழங்கவுள்ளார்கள்.
இவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது.
ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முற்றிலும் பெண்களாலேயே இயக்கப்படும். இதனால் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப் படுகிறது.
மேலும் இந்த ஆட்டோக்களில் பாதுகாப்புக்காக மகளிர் காவல் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் கருவி, பெண்களுக்கான உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோ திட்டத்திற்காக மொத்தமாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோக்களை பெற தகுதியானவர்கள்- பெண்கள் மட்டும்தான், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
சென்னையில் குடியிருக்க வேண்டும். CNG/Hybrid ஆட்டோ வாங்க தமிழக அரசு ரூ. 1 லட்சத்தை மானியமாக வழங்கும்.
ஆட்டோ வாங்குவதற்கு தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடனாக பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
இந்த ஆட்டோக்களை மானிய விலையில் பெற குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.