திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது.
இந்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தினால் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிச. 18-ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவானது.
அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ., திருச்செந்தூரில் 69 செ.மீ.,
ஸ்ரீவைகுண்டத்தில் 62 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 61 செ.மீ., மாஞ்சோலையில் 55 செ.மீ.,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் 53 செ.மீ., தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 51 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 47 செ.மீ., பாளையங்கோட்டையில் 44 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 43 செ.மீ., மணியாச்சியில் 42 செ.மீ., சேரன்மகாதேவி, கன்னடயன் அணைக் கட்டில் 41 செ.மீ. மழை பதிவானது.
கடந்த 200 ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் பெய்துள்ள அதிகபட்ச மழை அளவாக இது உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமவெளி பகுதிகளின் மீது பெய்துள்ள அதிகபட்ச மழையாகவும் இந்த மழை உள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 24 மணி நேரத்தில் 92 செ.மீ. அளவு பெய்த மழையே இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத் தில் 24 மணி நேரத்தில் 95 செ.மீ. மழை பெய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. இது அந்த பகுதியில் ஒரு ஆண்டின் சராசரி மழை அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காயல்பட்டினத்தில் இரண்டு நாட்களில் 116 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதே போல் திருச்செந்தூரிலும் இரண்டு நாட்களில் மொத்தம் 92 செ.மீ. மழை பதிவானது.
அதே போல் பாளையங்கோட்டையில் 1931-ஆம் ஆண்டு 20 செ.மீ. மழை பெய்ததே அதிகபட்ச மழை அளவாகும். ஆனால் டிசம்பர் 17-ஆம் தேதி பெய்த மழை அளவான 44 செ.மீ. அதை முறியடித்துள்ளது.
அதே போல் தூத்துக்குடியிலும் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதனால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது.
ஆனால் தூத்துக்குடியில் பெய்த மழை அளவின் தரவுகள் கிடைக்க பெறவில்லை.
தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.