மிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்து 754 பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.

dd

Advertisment

இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.

11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

இதற்காக மொத்தம் 31,150 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், பிப்ரவரி 22-ஆம் தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியது.

மாநகராட்சிகளில் திமுக 948, அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, இந்திய கம்யூனிஸ்ட் 13, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 125 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

நகராட்சிகளில் திமுக 2,360, அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, மார்க்சிஸ்ட் 41, இந்திய கம்யூனிஸ்ட் 19, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 526 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பேரூராட்சிகளில் திமுக 4,388, அதிமுக 1,206, காங்கிரஸ் 368, பாஜக 230, மார்க்சிஸ்ட் 101, இந்திய கம்யூனிஸ்ட் 26, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 1,260 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சியில் கே.கே.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 137-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தனசேகரன் அதிகபட்சமாக 10,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சட்டபேரவை தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக குறிப்பிடும்படியாக வெற்றி பெறவில்லை.

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான உள்ளாட்சிகளை திமுக தன் வசப்படுத்தி உள்ளது.

இந்த தேர்தல் வெற்றி குறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்பது மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கியிருக்கும் நற்சான்று என்று தெரிவித்தார்.