விர்ஜின் நிறுவனத்தின் சர் ரிச்சர்ட் பிரான்சன் உடன் விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிக்குச் சென்று திரும்பிய சிரிஷா பண்ட்லாவை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2003-ஆம் ஆண்டில் கொலம்பியா விண்வெளி விண்கலம் வெடித்துச் சிதறியபோது உயிரிழந்த கல்பனா சாவ்லா, 2012-இல் விண்வெளி சென்ற சுனிதா வில்-லியம்ஸ் ஆகியோர் வரிசையில் தற்போது விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக பண்ட்லா திகழ்கிறார்.
இவரது விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.
இவர்களில் கல்பனா சாவ்லா இந்தியாவின் ஹரியானாவிலும், சிரிஷா ஆந்திர மாநிலத்தின் குண்டூரிலும் பிறந்திருந்தாலும், அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டு குடியுரிமையை பெற்றவர்கள். சுனிதாவின் ஆணிவேர் இந்தியாவில் இருந்தாலும் அவர் அமெரிக்காவிலேயே பிறந்தவர்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்குப் பறந்த ராக்கெட், ஒரு மணி நேரத்தில் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது.
இந்த பயணத்தை "வாழ்நாள் அனுபவம்” என சர் ரிச்சர்ட் பிரான்சன் கூறியுள்ளார். விண்வெளி சுற்றுலா ஆய்வில் அமேசானின் ஜெஃப் பெசோஸ். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஈலோன் மஸ்க் போன்றோர் ஈடுபட்டு வரும் நிலையில், தனது சொந்த நிறுவனம் தயாரித்த விமானத்தில் முதல் முறையாக விண்வெளி சுற்றுலா சென்றவர் என்ற பெருமையை பிரான்சன் பெற்றுள்ளார்.
சிறு வயதிலே விண்வெளிக் குறித்த ஆர்வம் பெற்ற பண்ட்லா, தற்போது விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் அரசு விவகாரங்களின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
"ஆரம்பத்திலி-ருந்தே அவர் வானத்தை நோக்கி ஈர்க்கப்பட்டர், விண்வெளியில் என்ன இருக்கிறது என்பது குறித்தும், எப்படி நுழைவது என்பது பற்றியும் அவர் ஆர்வமாக இருந்தார்”என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சிரிஷா பண்ட்லாவின் தாத்தா தெரிவித்துள்ளார்.
விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத் தில் விண்வெளிக்குப் பயணம் செய்ய உள்ள ஐந்து பேரில் தானும் ஒருவர் என ஜூலை மாத தொடக்கத்தில் பண்ட்லா தெரிவித்திருந்தார்.
வரலாற்றுபூர்வ பயணத்தில் அவர் இடம்பெற்றது இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராக்கெட் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியவுடன் இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
"சிரிஷா பண்ட்லாவின் சாதனை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இன்னும் பல இளம் பெண்களைச் சவாலான வேலையைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கும்,” என இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ட்வீட் செய்துள்ளார்.
"இந்திய பெண்கள் பூமியில் அவர்களை சுற்றிய தடங்கல்களை மட்டுமின்றி பூமியில் உள்ள தடங்கல்களை தகர்த்து விண்வெளிக்குள்ளும் ராக்கெட்டில் பறந்துள்ளனர்,” என இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார்.
இவர்கள் பயணம் செய்த "யுனிட்டி' என்ற இந்த ராக்கெட், பூமிக்கு மேலே 85 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது.
அதாவது இரண்டு லட்சத்து 82 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ராக்கெட் பறந்தது. "குழந்தைப் பருவத்திலிருந்தே விண்வெளிக்குச் செல்ல விரும்பினேன்.
ஆனால், விண்வெளியிலிருந்து பூமியின் காட்சியை நீங்கள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது” என பயணத்தை நிறைவு செய்த பிறகு சர் ரிச்சர்ட் பிரான்சன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
விண்வெளிக்குச் செல்லும் தனது விருப்பத்தை 2004-இல் தெரிவித்தார் பிரான்சன். பல தடைகளைக் கடந்து இப்போது தான் நனவாகியிருக்கிறது அவரது கனவு.