உக்ரேனி பிரதேசத்துக்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே வான் மற்றும் தரை வழியாக ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்து தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் ரஷ்ய எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கார்கிவ் நகரில் ராணுவ தாக்குதலை கடுமையாக்கியுள்ளனர்.
பல அரசு கட்டடங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்புடைய கட்டடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அண்டை நாடுகளுக்கு சாலை வழியாக தப்பி வெளியேறி வருகின்றனர்.
1990-கள் வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. இப்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன். இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.
2014 -ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ - உக்ரைனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது. பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
2015-ஆம் ஆண்டு உக்ரைனின் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ - ரஷ்யாவின் விளாதிமிர் புதின் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தான் மின்ஸ்-க் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்னையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.
அதன் பிறகு 20-க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சினை
ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளுமே கிழக்கு உக்ரைன் பிரதேசம் குறித்து தங்களுக்கென தனித்தனிப் பார்வையைக் கொண்டுள்ளன. அது ஒன்றோடொன்று ஒத்துப் போகாமல் இருக்கிறது என்கிறார் சதம் ஹவுஸ் அசோசியேட் ஃபெல்லோவான டன்கன் ஆலன். உக்ரைன் தன் நிலப்பரப்புகளை மீண்டும் தன் நாட்டோடு இணைக்கவும், தன் இறையாண்மையை நிலைநிறுத்தவும் விரும்புகிறது, ஆனால் ரஷ்யாவோ, கீவ் (ஃஹ்ண்ஸ்) நகரத்தில் உள்ள அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி கிழக்கு உக்ரைன் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயல்வ தாக டன்கன் ஆலன் கருதுகிறார்.
உக்ரைன் உள்நாட்டுத் தேர்தலை நடத்தவில்லை என்றும், கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் அரசாங்கமோ, கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி விட்டதாகக் கூறுகிறது. மின்ஸ்க் ஒப்பந்தத்தின் படி, உக்ரைன் தன் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு முன், உள்நாட்டில் தேர்தலை நடத்த வேண்டும்.
கிழக்கு உக்ரைனில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால், அப்பகுதி முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என வலியுறுத்துகிறது உக்ரைன். இல்லை எனில் தேர்தல் ரஷ்யாவின் அழுத்தத்தின் கீழ் நடைபெறும் என உக்ரைன் தரப்பு கூறுகிறது. உள்ளூர் அளவிலான தேர்தல்களை நடத்தாமல் உக்ரைன், கிழக்கு உக்ரைன் பகுதிகளைப் பெற அனுமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்தது.
உக்ரைனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என தமது பழைய வாதத்தை தற்போதைய சம்பவங்களின் தொடர்ச்சியாக மீண்டும் புதுப்பித்து வலியுறுத்தி வருகிறது ரஷ்யா. மேலும் நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் என்றும் ரஷ்யா கோருகிறது.
மேற்கு நாடுகளின் போக்குகள் தொடர்ந்தால் ராணுவ ரீதியில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு புதின் எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கை இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 2008-இல் உக்ரைனை நேட்டோவில் இணைக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் பக்கம் சாயாமல் உக்ரைனின் அப்போதைய ஆட்சியாளர்கள் ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வந்தனர்.
இதை முறியடிக்க அமெரிக்கா திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஆரஞ்சு புரட்சி என்ற பெயரில் உக்ரைனில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு எதிராக கலவரம் வெடித்து போலீஸார் உட்பட 130 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அதே ஆண்டில் ஆட்சி கலைந்தது.
சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா வலுவிழந்திருந்தாலும் ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு சரிசமமாக உள்ளது. தற்போது உக்ரைனை மீண்டும் நேட்டோவில் சேர்த்து அந்த நாட்டில் நேட்டோ படைகளை குவிக்க அமெரிக்கா திட்டமிட்டதால் போர் மூண்டிருக்கிறது.
நேட்டோ என்பது
நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949-இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின.
இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.
ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
1955-இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது.
இந்த போரில் பல நாடுகளின் பின்னணி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலைமை வகித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியும் இந்தியா நடுநிலை வகித்தது.
அரசியல் கொள்கை ரீதியாக ரஷ்யாவை விட அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக உள்ளது. எனினும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ரஷ்யா வழங்கிய உதவிகளை யாரும் மறக்க முடியாது. 1971 போரின்போது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. வங்கதேசத் தில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு அமெரிக்காவும் முக்கிய காரணமாக இருந்தது. அணுசக்தி சோதனை, காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராகவே அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட் களை இந்தியாவுக்கு வழங்குவதற்குகூட தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார்.
உக்ரைன் தனி நாடாக மாறிய பிறகு தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டுகூட டி-80 ரக டாங்கிகளை பாகிஸ்தானுக்கு வழங்க உக்ரைன் ஒப்பந்தம் செய்தது. சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப்-யின் கிரே பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்போது அந்த நாட்டுக்கு உக்ரைன்ஆயுதங்களை வழங்குவதை எந்தவொரு மேற்கத்திய நாடும் இதுவரை கண்டிக்கவில்லை.
பல்வேறு பின்னணிகள் இருந்தாலும் அப்போதும் இப்போதும் இந்தியா நடுநிலை தவறாமல் தனது கொள்கையில் உறுதியுடன் நிற்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. தனது நலன்களை மட்டுமே அந்த நாடு முன்னிறுத்துகிறது. இதற்கு நேர்மாறாக சர்வதேச அரங்கில் நடுநிலைமைக்கு மறுபெயராக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இந்தியா தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்தான் தங்களது கொள்கைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.