விடுதலையை 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் பெற்ற இந்தியா, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாடானது. யாருடைய ஆளுகைக்கும் ஆட்படாமல், இந்தியாவுக்கென வடிவமைக்கப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலான மக்களாட்சிக்கு இந்தியா தயார் என்பதை இந்தக் குடியரசு நாள் உணர்த்தியது. இதனடிப்படையில், இந்திய நாடாளுமன்றத் திற்கும் மாநில சட்டமன்றங் களுக்கும் 1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

சென்னை மாகாணத்தில் அப்போது இருந்த மொத்த தொகுதிகள் 375. பாதிக்கும் கூடுதலான இடங்கள் கிடைத்தால்தான் ஆட்சியமைக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தன. முதல்வர் குமாரசாமிராஜா உள்பட 6 அமைச்சர்கள் தோல்வி கண்டனர். சென்னை மாகாணத்திற்குள்ளடங்கிய ஆந்திரா பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி அதிக இடங்களைப் பிடித்தது. அத்துடன் கிஸான் மஸ்தூர் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, காமல்வீல் கட்சி, சுயேச்சைகள் ஆகியோரின் கூட்டு பலம் காங்கிரசின் தனி பலத்தைவிட கூடுதலாக இருந்தது. கம்யூனிஸ்ட்டு களின் முயற்சியால் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற அணி உருவாக்கப்பட்டு, ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியது.

அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் ஆட்சி அமைவதை தொழிலதிபர்களும் மிட்டாமிராசுகளும் விரும்பவில்லை. ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க தொழிலதிபர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி (டி.டி.கே), பத்திரிகையதிபர் ராம்நாத் கோயங்கா (தினமணி இந்தியன் எக்ஸ்பிரஸ்) போன்றோர் முயற்சியெடுத் தனர். சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் என்ற பெருமையைப் பெற்றிருந்த ராஜாஜியும் தேசியப் பதவியிலிருந்து மாநில அளவிலான பதவிக்கு வருவதில் விருப்பம் காட்டினார். ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்த சில கட்சிகளை காங்கிரசுக்கு ஆதரவாகத் திருப்புவதில் ராஜாஜி வெற்றி பெற்றார். 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார்.

அறுதிப்பெரும்பான்மை பெறாத நிலையிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கும் அரசியல் காய் நகர்த்தல்கள் ராஜாஜியால் திறம்பட நிகழ்ந்தது. பொதுத்தேர்தலில் போட்டியிடாத ராஜாஜி, சட்ட மேலவை உறுப்பினரானார். (மக்களால் தேர்ந்தெடுக் கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் என்றும், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படா சட்ட மேலவை உறுப்பினர்கள் எம்.எல்.சிக்கள் என்றும் அழைக்கப்படுவர்) ராஜாஜியின் அமைச்சரவையில் 17 பேர் அமைச்சர்களாக இருந்தனர்.

Advertisment

ராஜாஜி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக்கியது. முற்பகலில் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், பிற்பகலில் அவரவர் குலத் தொழிலை செய்யவேண்டும் என்பதுதான் இத்திட்டம். இதனால் சலவைத் தொழிலாளியின் மகன் ஒரு நாளின் பாதி நேரம் சலவைத் தொழிலையே மேற்கொள்ள வேண்டியிருக்கும். முடிதிருத்துபவர்கழிவு அகற்றுபவர்களின் பிள்ளைகளும் அதே தொழிலைத் தொடர வேண்டியிருக்கும். இது சமுதாய நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல் என பெரியார் பெரும் போராட்டம் நடத்தினார். மாநிலம் முழுவதும் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் 1954 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாள் முதல்வர் பதவி யிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

kamaraj

பொற்காலம் படைத்த காமராஜர்

Advertisment

ராஜாஜியைத் தொடர்ந்து யார் முதல்வர் பொறுப்பையேற்பது என காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவியது. சி.சுப்ரமணியத்தை ராஜாஜி முன்னிறுத்தினார்.

ஆனால், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு காமராஜருக்கு இருந்தது. அதனால் அவரே 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வர் பதவிக்கு தன்னுடன் போட்டியிட்ட சி.சுப்ரமணியத்தையும் அமைச்சராக்கிக் கொண்டு 9 பேர் கொண்ட அமைச்சரவையுடன் திறம்பட ஆட்சி நடத்தி, படிக்காத மேதை எனப் பெயரெடுத்தார் காமராஜர். பதவியேற்கும்போது காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. மேலவை உறுப்பினராகவும் அவருக்கு விருப்பம் இல்லை.

அதனால், காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.

எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவரான காமராஜர் அவர்களுக்கான திட்டங்களைத் தீட்டினார். இதற்காக மாநில அபிவிருத்தி கமிட்டி என்ற குழுவை அமைத்தார். இந்த கமிட்டியில் அமைச்சர்களும் பல்வேறு துறைச் செயலாளர்களும் இருந்தனர். திட்டங்களின் செயல்பாடு குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆராய்ந்த இக்குழுவின் செயல்பாடுகள் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன. குறிப்பாக, கல்வித் துறையில் காமராஜர் ஆட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டன. கட்டணக் கல்வி முறையினாலும், பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் கிராமப்புறஏழைக் குழந்தைகள் பலர் கல்வி கற்க முடியாத சூழல் நிலவுவதைக் கண்ட காமராஜர் இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அத்துடன் 3 கி.மீ சுற்றளவுக்குள் ஒரு பள்ளி அமைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ராஜாஜி ஆட்சிக்காலத்தில் மூடப்பட்ட 6000 ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டார். அத்துடன், மேலும் பல பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதியவேளை யில் பள்ளியிலேயே அரசின் செலவில் உணவு வழங்குவதுதான் இத்திட்டம். இத்திட்டத்தை முதன்முதலாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நீதிக் கட்சித் தலைவரும் சென்னை மேயராக இருந்தவருமான சர் பிட்டி தியாகராயர் நடைமுறைப் படுத்தியிருந்தார். அதன் விவரங்களைக் கேட்டு, மாநிலம் முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு வழங்க ஆகும் செலவைக் கணக்கிட்டு இத்திட்டத்தை செயல்படுத்தினார் காமராஜர். அதன் விளைவாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்தது. கல்வித் துறையில் காமராஜர் செய்த உதவிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் அப்போதைய கல்வித்துறை அதிகாரி நெ.து. சுந்தரவடிவேலு ஆவார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியானது. இதற்கான தீர்மானம் 27.12.1956 அன்று சட்டமன்றத் தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாணைகள், சுற்றறிக்கைகள் உள்ளிட்ட யாவும் தமிழில் வெளியாக வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், இன்றுவரை அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் (மெட்ராஸ் ராஜதானி) என அழைக்கப்பட்டு வந்த நம் மாநிலத்தின் பெயரை தமிழில் எழுதும்போது தமிழ்நாடு எனக் குறிப்பிடலாம் என்ற முடிவும் காமராஜர் ஆட்சியில் எடுக்கப்பட்டது.

1957ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் தமிழக அரசியலில் மிக முக்கியமானதாகும். பெரியாரின் சமுதாய சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் பிரிந்த அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற இயக்கத்தை தொடங்கினர். திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கையை தி.மு.க வலியுறுத்தி வந்தது. அக்கட்சி முதன்முதலாக 1957ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டபின், தமிழகத்தில் 205 சட்டமன்றங்கள் இருந்தன. இதில் 151 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக விளங்கியது. முதன்முறையாக தேர்தலை சந்தித்த தி.மு.க 15 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்ற நுழைவை மேற்கொண்டது. தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக காமராஜர் பொறுப்பேற்றார். அவருடைய மக்கள் நலப் பணிகள் தொடர்ந்தன. கல்விக்கு அடுத்தபடியாக நீர்ப்பாசனத்தில் அவரது கவனம் குவிந்தது. வைகை நீர்த்தேக்கம், அமராவதி சாத்தனூர் கிருஷ்ணகிரி மணிமுத்தாறு ஆரணியாறு நீர்த்தேக்கங்கள் ஆகியவை அவரது ஆட்சியில் உருவான அணைகளாகும். மேட்டூர் கால்வாய் திட்டம், காவிரி டெல்டா பாசன விரிவாக்கத் திட்டம் ஆகியவையும் அவரது ஆட்சி காலத்திட்டங்களாகும். இத்திட்டங்களின் விவசாயப் பாசன பகுதிகள் அதிகரித்ததுடன் நீர் மின் உற்பத்தியும் பெருகியது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீர் மின் திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது.

மூன்றாவது பொதுத்தேர்தல் 1962ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. எனினும் அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 151லிருந்து 139ஆகக் குறைந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க 50 இடங்களை வென்றது. 1957இல் 15 இடங்களில் வென்றிருந்த தி.மு.கவினரில் 14 பேர் இந்த தேர்தலில் தோல்வியுற்றனர். கலைஞர் மு.கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். அவருடன் புதிதாக 49 தி.மு.கவினர் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றார் காமராஜர்.

இந்திய அரசின் செயல்பாட்டால், வடக்கு வாழ்கிறதுதெற்கு தேய்கிறது என்ற முழக்கத்துடன் திராவிடநாடு கோரிக்கையை தி.மு.க வலியுறுத்தியது. தி.மு.க தலைவர்களின் பேச்சாற்றலும் அவர்கள் வைத்த வாதமும் மக்களைக் கவர்ந்தன. இதனால் காமராஜர், மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் அரசிடம் வாதாடிபோராடி தமிழகத்திற்கு பல பெருந்திட்டங் களைக் கொண்டுவந்தார். இதன் காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, கல்பாக்கம் அணு மின் நிலையம், கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, சங்கரிதுர்கம் இந்தியா சிமெண்ட்ஸ், பள்ளிப்பாளையம் சேஷசாயி காகிதத் தொழிற்சாலை, பல இடங்களிலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஆகியவை உருவாகின. சென்னை அம்பத்தூர், கிண்டி ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. தொழில்துறை யில் மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடி யாக இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழகத்தைக் கொண்டு வந்தார் காமராஜர். நிலச்சீர்திருத்த சட்டம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ஆகியவை காமராஜர் ஆட்சியின் முக்கியமான சட்டங்களாகும்.

பல திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த காமராஜர், தன் பெயரில் காமராஜ் திட்டம் (கே பிளான்) என்ற திட்டத்தை அகில இந்திய காங்கிரசுக்கு அளித்தார்.

அமைச்சர் பதவிகளில் புதியவர்களுக்கு வழிவிட்டு, மூத்தவர்கள் கட்சிப்பணி ஆற்றவேண்டும் என்பதுதான் அவரது திட்டம். அதற்கு முன்மாதிரியாக அவரே தனது முதல்வர் பதவியிலிருந்து விலகி, கட்சிப் பணி யில் ஈடுபட்டார். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள், தாமாகவே முன்வந்து பதவி விலகினார். மும்முறை முதல்வர் பொறுப்பை ஏற்று தமிழகத்தை ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சி செய்த காமராஜரின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

காமராஜர் பதவி விலகியதையடுத்து, 1963, அக்டோபர் 2ஆம் நாள் தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் பொறுப்பேற்றார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் காங்கிரஸ் இயக்கப் போராட்டவாதியுமான அவர் ராஜாஜி, காமராஜர் அமைச்சரவைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர். இவருடைய ஆட்சியில் சட்டம்ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இக்கால கட்டத்தில், தனிநாடு பிரிவினை கோரும் கட்சிகளை தடை செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து, தி.மு.க தனது திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது. ஒன்றுபட்ட இந்தியாவிற்குள் தமிழகத்தின் நலன் காக்கும் மாநில சுயாட்சி கொள்கை வயுறுத்தப்பட்டது. 1965இல் கடுமையான வறட்சியும் அதைத் தொடர்ந்து வெள்ள சேதமும் ஏற்பட்டது. கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தனுஷ் கோடி பகுதி கடலில் மூழ்கியது. காங்கிரஸ் அரசு நெருக்கடிக் குள்ளானது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

இந்தி மொழியில் தமிழகத்தில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கினர். தன்னெழுச்சியாகத் தொடங்கிய இப்போராட்டம் பிறகு அரசியல் வடிவம் பெற்றது. தி.மு.க தலைவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றனர். தமிழகத்தின் இளைஞர்களும் மாணவர்களும் மொழி காக்கும் போரில், தங்கள் உடலுக்கு தீ வைத்துக்கொண்டு உயிர் துறந்தனர். கீழ்ப் பழுவூர் சின்னசாமி, மயிலாடுதுறை சாரங்க பாணி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன் உள்ளிட்ட பலர் தீக்குளித்தனர். தங்கள் சொந்த மண்ணில் தங்களின் தாய்மொழியைக் காப்பதற்காக தீக்குளித்து உயிர் துறந்த வேதனை நிகழ்வு தமிழகத்தில்தான் நடை பெற்றது. மாணவர் போராட்டத்தின் மீது காங்கிரஸ் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் பயானார். இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற நேரு அளித்திருந்த உறுதிமொழியை பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வழிமொழிந்தார். இதையடுத்து, அரசியல் ரீதியான போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் மாணவர்கள் போராட்டம், அரசியலுக்கப்பால் தீவிரமடைந்தது.

திராவிட இயக்க ஆட்சி

மொழிப்போராட்டம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான அலையை தமிழகத்தில் உருவாக்கியிருந்தது. அத்துடன் விலைவாசி உயர்வு, அரிசிப் பஞ்சம் ஆகியவை பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில்தான், 1967ஆம் ஆண்டு நான்காவது பொதுத்தேர்தல் நடந்தது. காமராஜர் வழிகாட்டுதலுடன் களமிறங்கிய காங்கிரஸ் கட்சிக்கு பெரியாரின் ஆதரவு இருந்தது. (பச்சைத்தமிழர் காமராஜர் என்ற புகழுரையுடன் 1957, 62 தேர்தல்களிலும் காங்கிரசை பெரியார் ஆதரித்தார்). எதிர்க் கட்சியான தி.மு.க தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணியை உருவாக்கியது. அக்கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தேர்தல் நேரத்தில், நடிகரும் தி.மு.கவின் நட்சத்திரப் பிரமுகருமான எம்.ஜி.ஆரை நடிகர் எம்.ஆர்.ராதா சொந்தக் காரணங்களால் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவம் தி.மு.கவுக்கு சாதகமான அனுதாப அலையை உண்டாக்கியது. மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் தி.மு.க பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது.

அதன்காரணமாக, 1967 தமிழகத் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

1937லிருந்து தொடர்ந்து வந்த காங்கிரஸ் ஆட்சி 1967ல் வீழ்ந்தது. 138 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே கிடைத்தது. சொந்த தொகுதியான விருதுநகரில் போட்டியிட்ட காமராஜரே தோல்வியடைந்தார். அமைச்சர் பூவராகனைத் தவிர ஏனைய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். தமிழக அரசியலிலும் ஆட்சியிலும் புதிய அத்தியாயம் தொடங்கியது.

anna

தமிழ்நாடு தந்த அண்ணா

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி, அந்த மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் தி.மு.கவின் நிறுவனரான சி.என்.அண்ணாதுரை. 1967ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி, கே.ஏ.மதியழகன், கோவிந்த சாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக் பாட்சா, முத்துசாமி ஆகிய 8 பேர் இடம் பெற்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வை மக்களைக் கவரும் மொழி நயத்துடன் எடுத்துச்சொல்லி வாக்கு கேட்டு ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. அத்துடன், ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம் என வாக்குறுதியும் தந்திருந்தது. ஆட்சிக்கு வந்ததும் சென்னை, கோவை நகரங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் அண்ணா நடைமுறைப்படுத்தினார். விலைவாசி கட்டுக்கடங்காத தால் இத்திட்டத்தை செம்மையாகத் தொடர முடியவில்லை. தி.மு.க அரசு அமைந்த சமயத்தில் சென்னையின் பல இடங்களில் தீவிபத்து ஏற்பட்டு குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இதனையடுத்து, குடிசையில் வாழ்வோருக்குத் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவையெல்லாம் ஓர் அரசு செயல்படுத்தும் வழக்கமான திட்டங்கள். அண்ணாவின் ஆட்சி நடைமுறைப்படுத்தியவற்றில் சமுதாய பண்பாட்டு அடையாளமாக 3 முடிவுகள் இன்றளவும் நிலைப் பெற்றிருக்கின்றன. மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி ஆங்கிலம்தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இனி தமிழ்நாடு தான் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்றவர் முதல்வர் அண்ணா. 1968ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் முதல் நமது மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்திய தி.மு.க, தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் இருமொழிக்கொள்கை நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் மட்டுமே அரசு அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் நீடிக்கும் என சட்டமியற்றினார் அண்ணா.

திராவிட இனம் வழிவந்த தமிழர்கள் ஆரிய இனத்தின் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டதனி பண்பாட்டை உடையவர்கள் என்பதன் அடையாளமாக சுயமரியாதை திருமணங்களுக்கு முன் தேதியிட்டு சட்ட ஏற்பளிப்பு தந்தார். இதன்படி மதச்சடங்குகள், புரோகிதர், தாலி உள்ளிட்ட சின்னங்கள் எதுவுமின்றி உறுதி மொழியேற்புடன் நடைபெறுகின்ற திருமணங்களும் செல்லுபடியாகும் என்ற நிலை ஏற்பட்டது. இம்மூன்றும் திராவிட அரசியல்சமுதாய இயக்கங்களின் பார்வையில் நிறைவேற்றப்பட்டவையாகும்.

தமிழக அரசின் இலச்சினையில் "சத்ய மேவ ஜெயதே'' என இடம்பெற்றிருந்ததை "வாய்மையே வெல்லும்'' என மாற்றினார் அண்ணா. அவரது முயற்சியால் தமிழர்களின் நாவில் புழங்கிய பல வடசொற்கள் நீங்கி, நல்ல தமிழ் குடியமர்ந்தது. நமஸ்காரத்திற்கு பதில் வணக்கம், விவாக சுபமுகூர்த்தத் திற்குப் பதில் திருமணம், அபேட்சகருக்குப் பதில் வேட்பாளர், சபா என்பதற்கு பதில் மன்றம் உள்ளிட்ட சொற்கள் அண்ணாவால் பழக்கத்திற்கு வந்தவை. 1968ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை மிகச் சிறப்பாக அவரது அரசு நடத்தியது. அண்ணாவின் ஆட்சியின்போதுதான் பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பரிசுச் சீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டுநலப் பணிகளில் அக்கறையுள்ள இளைஞர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கட்டிடம் கட்டுவது, தூய்மை செய்வது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக சீரணித் தொண்டர்கள் அமைப்பை அண்ணா உருவாக்கினார். ஆட்சியில் மக்களின் நேரடி பங்கேற்பு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டதுதான் சீரணித் தொண்டர் படை. புதிய சிந்தனைகள், எளிய மக்களுக்கானத் திட்டங்கள், ஜனநாயகத்தை பரவலாக்கும் முயற்சி, திராவிட இனத்தின் சிறப்பு அடையாளங்களை மீட்டெடுக்கும் கொள்கை இவற்றின் அடிப்படையில் செயல்பட்ட அண்ணாவை இயற்கை நீண்டகாலம் அனுமதிக்க வில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றும் முழுமையான உடல்நலன் பெறமுடிய வில்லை. 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தார்.

j

கலைஞர் மு. கருணாநிதி

அண்ணாவின் மறைவையடுத்து புதிய முதல்வர் யார் என்ற தேர்வில் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி இருவரது பெயர்களும் முன்னின்றன. கட்சிப் பொறுப்பின் அடிப்படையில் நாவலர் மூத்தவர் என்றபோதும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கலைஞருக்கே பலமாக இருந்தது. எம்.ஜி.ஆர் உள்ளிட்ட கட்சியிலும் மக்களிடமும் செல்வாக்குமிக்கவர்களும் கலைஞரையே ஆதரித்தனர். இதனையடுத்து, 1969, பிப்ரவரி 10ஆம் நாள் தனது 45வது வயதில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் கலைஞர் மு. கருணாநிதி. அண்ணாவைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர், தமிழகத்தின் உள் கட்டமைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தினார். சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் அண்ணா மேம்பாலம், புதிய குடியிருப்பு வசதிக்காக அண்ணாநகர் ஆகியவற்றை உருவாக்கினார். தமிழகத்தில் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பல பாலங்களும் அவரது ஆட்சியில் கட்டப்பட்டவை. காவிரி ஆற்றின் குறுக்கே குளித்தலைமுசிறி ஊர் களை இணைத்து கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலமான (சுமார் ஒன்றரை கி.மீ நீளம்) அவரது ஆட்சியில் கட்டப்பட்டதுதான். இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டித்தரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்ட, போக்குவரத்தும் அதிகப்படுத்தப்பட்டது. அரசு சார்பில் பல போக்குவரத்துக் கழகங்கள் இவரது ஆட்சியில் உருவாக்கப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் கல்லூரிக் கல்வி இலவசமாகக் கிடைத்ததுடன், பல நகரங்களிலும் அரசு கலைக்கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் 1969ல் நியாய ஊதியச் சட்டம் அமல்படுத்தப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களுக்கு கூநிர்ணயம் செய்யப்பட்டது. 1970ல் நில உச்சவரம்பு சட்டம் புதிய முறையில் வடிவமைக்கப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 15 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. அரக்கோணத்தில் உருக்கு வார்ப்படத் தொழிற்சாலை சோவியத் நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது.

காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் இரண்டுபட்ட நிலையில், பிரதமர் இந்திரா காந்தி முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்டார். தமிழக சட்டப்பேரவைக் கான தேர்தலையும் முன்கூட்டியே நடத்த கலைஞர் முடிவு செய்தார். 5 ஆண்டு இடைவெளியில் நடை பெறவேண்டிய தேர்தல், 4 ஆண்டுகளிலேயே 1971ல் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க.வும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்தன. தி.மு.கவுக்கு பெரியார் ஆதரவளித்தார். காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசும் ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்தன. இது கிரேட்டர் அலையன்ஸ் (பெருங் கூட்டணி) என அழைக்கப்பட்டது. இந்தக் கூட்டணியே வெல்லும் என பத்திரிகைகள் கணித்தன. அதிகாரிகள் சிலரும் இந்த கணிப்பின் அடிப்படையில் செயல்பட்டனர். ஆனால், கணிப்புகளை மீறி தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 184 தொகுதிகளை தி.மு.க வென்றது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பும் பின்பும் எந்தவொரு கட்சியும் இத்தனை இடங்களை வென்றதில்லை. இரண்டாவது முறையாக கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

கலைஞரின் திட்டங்கள் தொடர்ந்தன. சமூக நலத்திட்டங்களான கண்ணொளி திட்டம், மனிதனை மனிதன் இழுக்கும் கொடுமையை ஒழிக்கும் கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம், பிச்சைக்காரர்தொழுநோயாளர்கள் மறுவாழ்வு திட்டம் உள்ளிட்டவை கலைஞர் ஆட்சியின் மனித நேயத் திட்டங்களாகும். இவரது ஆட்சிக் காலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான மதுவிலக்குசட்டம் ரத்து செய்யப்பட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது பெரும் விவாதத்தை உண்டாக்கியது.

mgr

அ.தி.மு.கவின் தோற்றம்

திரைப்படங்களில் கலைஞர் வசனம் எழுதத் தொடங்கிய காலத்தில் அவருக்கு அறிமுகமாகி நடிப்புலகில் ராஜபாட்டை அமைத்தவர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன். இருவருக்குமான கலையுலக நட்பு அரசியலிலும் தொடர்ந்தது. கலைஞரால் திராவிட இயக்க கொள்கையில் ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆர், அரசியலிலும் செல்வாக்கு பெற்றார். துப்பாக்கிச்சூட்டில் குண்டுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், 1967ஆம் ஆண்டு தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞரை முதல்வராக்குவதில் முன்னின்றவர் எம்.ஜி.ஆர். ஆனால், சிறிது காலத்திலேயே இருவருக்கும் மனக் கசப்புகள் ஏற்பட்டன. கட்சியின் பொருளாளரான எம்.ஜி.ஆர், பொது மேடையில் கட்சித் தலைமையிடம் பகிரங்கமாக கணக்கு கேட்டதால் அது பெரும் விவாதமானது. இதைத் தொடர்ந்து கட்சி யிலிருந்து அவர் நீக்கப்பட்டார். தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர், தனது திரைப்பட ரசிகர் மன்றங்கள் என்ற கட்டுக்கோப்பான அமைப்பினாலும் பொதுமக்களிடம் தனக்கிருந்த செல்வாக்கினாலும் 1972இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் இது, மத்திய அரசின் நெருக்கடி நிலை காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) என பெயர் மாற்றம் பெற்றது.

நெருக்கடி நிலை

பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என 1975ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, இந்திய அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. இந்திராகாந்தி அம்மையார் பதவி விலகாமல், எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலையை குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது ஒப்புதலுடன் அமல்படுத்தினார்.

வட நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இந்திராவுடன் நல்லுறவு கொண்டிருந்த தி.மு.க அரசு, நெருக்கடி நிலையை எதிர்த்தது. அதற்கு எதிரான தீர்மானத்தை சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றியது. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தை இரண்டாவது சுதந்திரப் போர் என வர்ணித்தது. இதன் காரணமாக 1976ஆம் ஜனவரி 10ஆம் நாள் தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு நடைபெறுவது அதுவே முதல்முறை. தி.மு.கவினர் 500 பேர் மிசா சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்டனர். நெருக்கடி நிலையும் மிசா சட்ட கைதுகளும் இந்திராகாந்திக்கு எதிரான பேரலையை உருவாக்கியிருந்தது. 1977ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஜனதா கட்சி ஆட்சியமைத்தது. இந்தியாவில் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. தமிழகத்தில் 1972, டிசம்பர் 25இல் ராஜாஜி மறைவு, 1973, டிசம்பர் 24இல் பெரியார் மறைவு, 1975, அக்டோபர் 2இல் காமராஜர் மறைவு முக்கிய தலைவர்கள் காலமாயினர். புதிய அரசியல் சூழல் நிலவியது.

எம்.ஜி.ஆர் ஆட்சி

1977 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. தி.மு.க அணி, காங்கிரஸ்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அணி, அ.தி.மு.கமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணி, ஜனதா என பலமுனைப் போட்டி நிலவியது. இத்தேர்தலில் அ.தி.மு.க 128 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலம் பெற்றது. 1977ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்.பொறுப்பேற்றார். திரையுலக நடிகர் ஒருவர் மக்களின் வாக்குகளால் அமோக வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவையும் பல நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திரையில் ஏழை மக்களின் துயரம் தீர்க்கும் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்து வந்ததால் அவர் மீது நம்பிக்கைக் கொண்ட ஏழைஎளிய மக்கள் அமோக ஆதரவளித்தனர். எம்.ஜி.ஆர் ஆட்சி அந்த மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி நடைபெற்றது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும் குறைந்த விலையிலும் கிடைக்கச் செய்வதில் எம்.ஜி.ஆர். கவனம் செலுத்தினார். ஏழைகளின் வாகனமான சைக்கிளில் இருவர் அமர்ந்து சென்றால் காவல்துறையினர் பிடிப்பது வழக்கமாக இருந்தது. இதனால் கணவன் சைக்கிளை ஓட்டியபடி செல்வதும், மனைவி ஓட்டமும் நடையுமாக தொடர்ந்து வருவதும் வழக்கமாக இருந்தது. சைக்கிளில் இருவர் (டபுள்ஸ்) செல்வது தண்டனைக்கு உரியதல்ல என உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். கல்வித்துறையில் எஸ்.எஸ்.எல்.சி (பதினொன்றாம் வகுப்பு)க்குப் பிறகு கல்லூரியில் புகுமுக வகுப்பு(பி.யூ.சி) பயில வேண்டும் என்ற நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பத்தாம் வகுப்பு எஸ்.எஸ். எல்.சி பொதுத்தேர்வாகவும், அதன் பிறகு +1, +2 பயின்று பொதுத்தேர்வு எழுதும் இன்றைய முறையையும் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்தான். இதனால் பள்ளியிலேயே மாணவர்கள் தொழிற்படிப்பை தேர்வு செய்யும் வாய்ப்பு அமைந்தது. இரண்டரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஆட்சி நடைபெற்ற நிலையில், மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்து, 1980ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தது. இந்திரா காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி அமைத்திருந்தது. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1980ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வலுவான தி.மு.ககாங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, கம்யூனிஸ்ட்டுகளை சிறுகட்சிகளையும் கூட்டணி சேர்த்துக் கொண்டு அ.தி.மு.க போட்டியிட்டது. தி.மு.க கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என கணிப்புகள் வெளியாகி, வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால், தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. நியாயமான காரணம் எதுவுமின்றி எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டதை தமிழக மக்கள் ஏற்கவில்லை. மீண்டும் அவரது கட்சிக்கே வாக்களித்தனர். 131 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. 1980, ஜூன் 9ஆம் நாள் இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றார் எம்.ஜி.ஆர்.

பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவதற்கு ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்ற வரம்பை எம்.ஜி. ஆர். கொண்டுவந்தார். இதற்கு தி.க., தி.மு.க உள்ளிட்ட இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணம் என நினைத்த எம்.ஜி.ஆர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 35 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். 1981, ஜனவரியில் மதுரையில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்திய எம்.ஜி.ஆர், அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாயின. இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த காலத்தில்தான் அவரது பெயர் சொல்லும் திட்டமான சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்தி, 2 வயது முதல் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய வேளையில் சத்தான உணவு வழங்கும் திட்டமாக இது அமைந்தது. 1982ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் இத் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமத் தன்னிறைவுத் திட்டம், சென்னைக்கு ஆந்திராவின் கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரைக் கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டத் தொடக்கம் ஆகியவை அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்றவை. 1984இல் சிறுநீரகப் பாதிப்பினாலும் வாத நோயினாலும் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனிடையே, பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்படவே ராஜீவ் காந்தி பிரதமரானார். ஓராண்டு பதவிக்காலம் மிச்சமிருந்த நிலையில் முன் கூட்டியே தேர்தல் நடத்த முடிவுசெய்தார். தாயின் மறைவு தனக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பது அவரது கணக்கு. நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் உடல்நிலையும் அனுதாப வாக்குகளைப் பெற்றுத்தரும் என்ற முடிவுடன் அ.தி.மு.கவும் தமிழக தேர்தலை முன்கூட்டியே நடத்த பரிந்துரைத்தது.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 1984, டிசம்பர் 24ஆம் நாள் தமிழகத்தில் நாடாளுமன்றசட்டமன்றத் தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். வேட்புமனுவில் அவரது கையெழுத் துக்குப் பதில் கைரேகை பதிவாகியிருந்தது. 1967, 71, 77, 80 ஆகிய 4 தேர்தல்களில் கையெழுத்திட்டு விண்ணப்பம் தாக்கல் செய்தவர், 1984இல் கைரேகை வைத்திருந்தது தேர்தல் விநோதங்களில் ஒன்று. தேர்தல் ஆணையம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தலில் மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் 400 இடங்களுக்கும் அதிகமாகப் பெற்று மிகப் பெரிய பலத்துடன் ஆட்சியமைத்தது. தமிழகத்தில் அ.தி.மு.க 133 இடங்களில் வெற்றி பெற்றது. டிசம்பரில் முடிவுகள் வெளியான நிலையிலும் பிப்ரவரியில்தான் அமெரிக்காவிலிருந்து திரும்பினார் எம்.ஜி.ஆர். 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் தமிழக முதல்வராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடல்நலக் குறைவைப் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்தார். புகளூர் காகித தொழிற்சாலை, எல்காட் நிறுவனம் ஆகியவை அவரது ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தொழில்நிறுவனங்களாகும். போக்குவரத்து வசதிகள் பிற மாநிலங்களைவிட பல மடங்கு மேம்படுத்தப்பட்டது. பல ஊர்களில் சிப்காட் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவ பொறியியல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இதற்கான மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வு வாயிலாக நடத்தப்பட்டது. தனியார் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்கள் நுழைவுத் தேர்வு மூலமாகவும், மீதம் நிர்வாக வசதிக்கேற்பவும் நிரப்பப்பட்டன. மருத்துவ பொறியியல் பட்டதாரிகள் அதிகளவு உருவாக இந்தத் திட்டமே காரணமாகும். எனினும், உயர்கல்வியை இத்திட்டம் பெரும் வியாபாரம் ஆக்கியதையும் கவனிக்க வேண்டும். 1987இல் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் மாரடைப்பால் காலமானார். தமிழக அரசியல் வரலாற்றில் 1977 முதல் 1987 வரை தொடர்ச்சியாக பத்தரை ஆண்டுகள் முதல்வர் பொறுப்பில் இருந்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.

எம்.ஜி.ஆரின் மரணத்தையடுத்து, அவரது துணைவியார் வி.என்.ஜானகி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். இது அ.தி.மு.கவுக்குள் பிளவை உண்டாக்கியது. சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் நாளில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உள்ளே புகுந்து எம்.எல்.ஏக்களைத் தாக்கிய சம்பவம் தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு கறையாக அமைந்தது. சபாநாயகர் இருக்கை மியூசிக்கல் சேர் போட்டி போலானது. ஜானகி அம்மையாரால் நம்பிக்கை வாக்கைப்பெற முடியவில்லை. இதையடுத்து, 1988, ஜனவரி யில் (பதவியேற்ற சுமார் 25 நாட்களில்) அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமலானது. அ.தி.மு.க இரண்டு பிரிவாகி ஜானகி அணி, ஜெயலதா அணி என செயல்பட்டது.

மீண்டும் தி.மு.க ஆட்சி

ஓராண்டுகால ஆளுநர் ஆட்சிக்குப் பிறகு 1989ல் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அணி, காங்கிரஸ், அ.தி.மு.க (ஜெ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அணி, அ.தி.மு.க (ஜா) சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி அணி என 4 முனைப் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 151 இடங்கள் கிடைத்தன. 1976இல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டு திறப்புவிழாவுக்கு தயாராக இருந்தது. ஆட்சி கலைக்கப்பட்டதால், திறப்பு விழாவுக்கு அதனை நிறுவிய கலைஞரை அழைக்கவில்லை. மீண்டும் முதல்வராகி வள்ளுவர் கோட்டத்தில் கால் வைப்பேன் என சபதம் எடுத்த கலைஞர், 13 ஆண்டுகளுக்குப்பின் 1989ல் சபதத்தை நிறைவேற்றினார். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.

பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், ஏழைப் பெண்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினருக்கான 20% இடஒதுக்கீடு, பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், சத்துணவில் முட்டை, மகளிர் சுய உதவிக்குழு தொடக்கம் என புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தி.மு.க அங்கம் வகித்த தேசிய முன்னணி மத்தியில் ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார். அவர் மூலமாக தமிழகம் கர்நாடகம் இடையிலான காவிரி தண்ணீர் சிக்கலைத் தீர்க்க காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விவேலை வாய்ப்பை அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரை நாடாளுமன்றத் தில் கொண்டு வரப்பட்டது. இதனால் வி.பி.சிங் ஆட்சிக்கான ஆதரவை பாரதிய ஜனதாகட்சி விலக்கிக் கொள்ளவே அவரது அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ் ஆதரவில் பிரதமரான சந்திரசேகர், விடுதலைப்புலிகளுக்கு அரசின் ரகசியங்களை தி.மு.க தெரிவித்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆளுநரின் ஒப்புதல் பெறாமலேயே குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மூலம் தி.மு.க அரசைக் கலைத்தார். 1991, ஜனவரியில் இரண்டாண்டு கால தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலை தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட சில நாட்களில் மத்தியில் சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ் கட்சி. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்து, பொதுத் தேர்தல் வந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி 1991, மே 17ஆம் நாள் தமிழகத்தின் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இந்த அதிர்ச்சி மரணம் தேர்தல் களத்தில் பெரும் அனுதாப அலையாக உருவானது. மொத்தமுள்ள 234 இடங்களில் அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களைக் கைப்பற்றியது. அ.தி.மு.கவின் 167 வேட்பாளர்களில் 4 பேர் மட்டுமே தோல்வியடைந்தனர். தி.மு.க ஒரேயொரு இடத்தை மட்டுமே பிடித்தது. அதன் தலைவர் கலைஞர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். இத்தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா ஆட்சி

அ.தி.மு.க சார்பில் 163 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு பெற்றதையடுத்து, பெரும்பான்மையுடன் 1991, ஜூன் 24ஆம் நாள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் செல்வி ஜெயலலிதா. பதவியேற்றதும் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மவு விலை மது திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. பின்னர் அவரது ஆட்சியிலேயே மதுபானக் கடைகளில் பார் வசதி உருவாக்கப்பட்டது. உசிலம்பட்டி, தர்மபுரி போன்ற பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அவற்றை சுமையாக கருதி கள்ளிப்பால், எருக்கம்பால், நெல்மணி ஆகியவை கொடுத்துக் கொன்றுவிடும் கொடுமை நிகழ்ந்து வந்தது. இந்த சமூக அவலத்தைப் போக்கும் விதத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். பெண் குழந்தையை விரும்பாத பெற்றோர் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்படும் தொட்டிலில் இந்தக் குழந்தைகளை விட்டுச் செல்லலாம். அரசே இந்த குழந்தைகளை வளர்க்கும். காவல்துறையில் மகளிருக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, மகளிர் காவலர்களை மட்டுமே கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் விதத்தில் சென்னையில் நேரு விளையாட்டரங்கத்தை உலகத்தரத்துடன் அமைத்தார். மேலும் பல விளையாட்டு அரங்கங்களும் மேம்படுத்தப்பட்டு 1995இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன. திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக சென்னையில் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டது. மாநிலங்களில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் தமிழகத்தில் நிலவி வந்த 69% இடஒதுக்கீட்டுக்கு (பிற்படுத்தப்பட்டோர் 30% மிக பிற்படுத்தப்பட்டோர் 20%, ஆதிதிராவிடர்கள் 18% பழங்குடியினர் 1%) ஆபத்து உருவானது. இதனை யடுத்து, 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத்தைக்கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றார் ஜெயலலிதா. காவிரிநீர் தொடர்பான தமிழககர்நாடகம் இடையிலான சிக்கலுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் 1995ஆம் ஆண்டு ஜனவரியில் தஞ்சையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதனால் தஞ்சை நகரம் மேம்படுத்தப் பட்டது. முத்தமிழுடன் அறிவியல் தமிழை நான்காம் தமிழாகக் கொள்ள வேண்டும் என உலகத் தமிழ் மாநாட்டில் ஜெயலலிதா வலியுறுத்தினார். அறிஞர் அண்ணா, எழுத்தாளர் கல்வி ஆகியோரது நூல்களை நாட்டுடைமையாக்கியது ஜெ. அரசு. சென்னை கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புதிய வடிவில் அமைத்தது. திராவிட இயக்க முதல்வர்களில் 5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த முதல் முதலமைச்சர் ஜெயலலிதாவே ஆவார்.

நான்காம் முறையாக கலைஞர்

நாடாளுமன்றசட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் 1996ல் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சி அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்ததை பெரும்பகுதியான காங்கிரசார் விரும்பவில்லை.

மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி உருவாகி திமு.கவுடன் கூட்டணி அமைத்தது. அரசியல் பிரவேசம் செய்வார் என எதிர் பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி இந்தக் கூட்டணியை ஆதரித்தார். வலுவான இந்தக் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.ககாங்கிரஸ் கூட்டணி படுதோல்வி யடைந்தது. ஜெயலலிதாவும் தோல்வியடைந்தார். திராவிடக் கட்சிகளில் முதல்வர் பதவியிலிருந்த ஒருவர் தேர்தலில் தோற்றது அதுவே முதல் முறை. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பா.ம.க 4 தொகுதிகளில் வென்றது. தி.மு.கவிலிருந்து பிரிந்த வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) முதன்முறையாக தேர்தலை சந்தித்து எந்த இடத்திலும் வெற்றிபெற முடியாமல் போனது. 1996, மே 13ஆம் நாள் தமிழகத்தின் முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றார் கலைஞர் மு. கருணாநிதி. எதிர்க்கட்சிகள் அற்ற சட்டசபை மீண்டும் அமைந்தது. கூட்டணிக் கட்சியான தமிழ்மாநில காங்கிரஸே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. சென்னை ராஜ்ஜியம் தமிழ் நாடாக பெயர் மாற்றப்பட்டிருந்தாலும் தலைநகரத்தை மெட்ராஸ் என்றே ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் குறிப்பிட்டு வந்தனர். இதனை மாற்றி, சென்னை என்ற தமிழ்ப் பெயரே அனைத்து மொழிகளிலும் குறிப்பிடும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்தார் கலைஞர். இந்த ஆட்சிக்காலத்தில், கிராம மக்கள் தங்கள் தேவைகளை அரசு உதவியுடன் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நமக்கு நாமே திட்டம், ஊராட்சிகளை மேம்படுத்தும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டன. அனைத்து சமூகத்தினரும் பாகுபாடின்றி ஒரே இடத்தில் வாழும் வகையிலான பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திட்டம் 1997இல் தொடங்கப்பட்டது. மகளிர் சிறு வணிகக் கடன், பூமாலை திட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இடைத் தரகர் இன்றி தாங்களே விற்பனை செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் உழவர் சந்தை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடம் ஒதுக்கப்பட்டதுடன் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் தொடங்கி ஊராட்சிகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டன. இதனால் ஒவ்வொரு ஊரிலும் உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின. ஃபோர்டு, ஹுண்டாய் கார் தொழிற்சாலைகள் சென்னையருகே அமைக்கப்பட்டதால் இந்தியாவின் டெட்ராய்டு என சென்னை அழைக்கப்படலாயிற்று. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை அதிகமானது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திராவின் கிருஷ்ணா ஆற்று நீர்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன. தொழிற்படிப்பகளில் ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடந்தது. கணினித்துறை வளர்ச்சி முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழ் இணைய மாநாடு 1999இல் சென்னையில் நடந்தது. 2000ஆம் ஆண்டில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் கணிணிமயமாக்கப்பட்டன.

ஆட்சி மாற்றம் நான்காவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதுதான் கலைஞர் முதன் முறையாக தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தார்.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி

தி.மு.க. கூட்டணியின் பலம் குறைந்தததுடன் சாதி மத அடையாளமும் படிந்தது. தி.மு.க ஆட்சியில் பணப்புழக்கம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சாரம் வலுவாக இருந்தது. ஊழல் வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும் இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி ஏறத்தாழ 200 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க பெரும்பான்மை பெற்றது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலும் 2001, மே 14ஆம் நாள் இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. இடைக்கால முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டத்திற்குப் புறம்பாக ஜெயலலிதாவுக்கு தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக உச்ச நீதிமன்றம் 2001 செப்டம்பர் 21ஆம் நாள் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பதவி விலக, அன்றைய தினமே அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். எம்.ஜி.ஆர் படங்களின் ரசிகராக இருந்து அவரது கட்சியில் இணைந்து படிப்படியாக முன்னேறியவர் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம். அவர் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்தார் ஜெயலலிதா. அரசியலில் யாருக்கும் எந்த நேரத்திலும் நல்வாய்ப்புகள் வரலாம் என்பதற்கு பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்றது ஓர் எடுத்துக்காட்டு. தன்னை தற்காலிக முதல்வர் என அழைத்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில், கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் மையங்களும் மருத்துவமனைகளும் அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பொதுஇடங்களில் சிகரெட், பான்பராக் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டது. அரசு கட்டிடங்களிலும் குடியிருப்புகளிலும் மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. கள்ளச்சாராய பலிகள் அதிகரித்ததால் குறைந்த விலையில் மது குடிக்க வசதியாக மினி குவார்ட்டர் என்ற சிறிய ரக மது பாட்டில்கள் பன்னீர்செல்வம் ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தன. 162 நாட்கள் முதல்வர் பதவியிலிருந்தார் பன்னீர்செல்வம். அப்போது ஒருமுறைகூட சட்டமன்றம் கூட்டப்பட வில்லை.

டான்சி ஊழல் வழக்கில் ஜெயலதா மேல்முறையீடு செய்து விடுதலையானார். இதையடுத்து ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று 2002, மார்ச் 2ஆம் நாள் ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களைத் தந்த தொகுதி என்ற பெருமை ஆண்டிப்பட்டிக்கு மட்டுமே உண்டு. மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கோவில்களில் அன்னதானம், உழவர் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு அரசு வைப்புநிதி என புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஜெயலலிதாவின் இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் குறிப்பிடத்தக்கது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப் பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டமாகும். தமிழகத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு திட்டத்தை மக்கள் செயல்படுத்தும்படி செய்த முதல் திட்டம் இது எனலாம். லாட்டரி சீட்டுக்குத் தடை, சென்னை குடிநீர் தேவையை எதிர் கொள்ளும் புதிய வீராணம் திட்டம் ஆகியவையும் ஜெயலலிதா ஆட்சியின் முக்கியத் திட்டங்கள்.

திரும்பவும் பதவியேற்ற தி.மு.க

ஜெயலலிதா அரசின் ஆட்சிக்காலம் 2006இல் முடிவுக்கு வந்ததையடுத்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல இலவசத் திட்டங்களை வாக்குறுதியாக அளித்த தி.மு.கவின் தேர்தல் அறிக்கையே இந்த தேர்தன் கதாநாயகன் எனச் சொல்லப்பட்டது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இரண்டு ஏக்கர் நிலம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகள் வெளியான போது தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. எனினும் தி.மு.கவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 95 உறுப்பினர்களையே அக்கட்சி பெற்றிருந்தது. (பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை). கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2006, மே 13 அன்று ஐந்தாம் முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் கலைஞர் மு. கருணாநிதி. பதவியேற்பு மேடையிலேயே 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் வாரம் இரண்டு முட்டை, விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் ரத்து ஆகியவற்றுக்கு கையெழுத்திட்டார். இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அண்ணாவின் நூற்றாண்டையொட்டி 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு நியாய விலைக்கடைகளில் வழங்கும் திட்டம் தொடங்கியது. ஏழைமக்களுக்கான உயர் மருத்துவ சிகிச்சையளிக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச கேஸ் அடுப்புத் திட்டம், இஸ்லாமியர்களுக்கு 3% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு ஆகியவை கலைஞர் அரசின் திட்டங்களாகும். நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, அரசு கேபிள் கழகத்தின் செயல்பாடுகள் முடங்கிப்போனது, தவறான புள்ளி விவரங்களால் இரண்டு ஏக்கர் இலவச நிலம் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலைமை ஆகியவை தி.மு.க அரசுக்கு ஏற்பட்ட சரிவுகளாகும்.

மாநிலங்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் தி.மு.க முன்னோடி இயக்கமாகும். சுதந்திர தினத்தில் மாநில தலைமைச் செயலகத்தில் கொடியேற்றும் உரிமை அந்தந்த மாநில முதல்வர்களுக்கே உரியது என்பதை போராடிப்பெற்றுத் தந்தவர் கலைஞர். மத்திய அரசில் கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க பங்கேற்றிருப்பதன் மூலம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தமிழகத்தில் பல நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் உருவாக்கம், புதிய தொழில் முதலீடுகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை கிடைத்துள்ளன. எனினும் அண்டை மாநிலங்களுடனான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறுப் பிரச்சினைகளில் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தம் தமிழக மீனவர்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதால் அவற்றில் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியும் வெற்றி தரவில்லை. தமிழர்களின் 150 ஆண்டு கனவான சேது சமுத்திரத்திட்டத்தின் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. 86 வயதிலும் தமிழக அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்தி பல திட்டங்களை கலைஞர் செயல்படுத்தி வருகிறார். வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133அடி வள்ளுவர் சிலை, பூம்புகார் கலைக்கூடம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ஆகியவை அவர் உருவாக்கிய வரலாற்றுபண்பாட்டுச் சின்னங்களாகும். புதிய கட்டிடங்கள் பல அவரது ஆட்சியில் தொடர்ந்து கட்டப்பட்டன. 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது.

மூன்றாம் முறையாக ஜெயலலிதா அரசு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. செல்வி. ஜெயலலிதா மூன்றாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வரானார். தி.மு.கவுக்கு பிரதான எதிர்க்கட்சி என்ற தகுதியும்கூட கிடைக்காத அளவிற்கு 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 29 தொகுதிகளை வென்ற தே.மு.தி.கவுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி என்ற தகுதி கிடைக்க, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். தி.மு.க ஆட்சியில் பரவலான வெற்றி பெற்ற இலவச திட்டங்களை அ.தி.மு.க அரசு மேலும் அதிக அளவிலும் புதிய முறையிலும் விரிவாக்கியது. இலவசம் என்கிற சொல்லுக்குப் பதில், விலையில்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வழக்கம் உருவானது.

1 ரூபாய்க்கு ஒரு கிலோ என்று நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட்ட 20கிலோ அரிசி, விலையில்லா அரிசியாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மடிக்கணினி, புத்தகப்பை, எழுதுப்பொருட்கள் ஆகியவை விலையின்றி அளிக்கப்பட்டன. குடும்ப அட்டை கொண்ட குடும்பங்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் வட்டந்தோறும் திறக்கப்பட்டன. மவுவிலையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் உள்ளிட்டவை அறிமுகமாயின. ஏழைப் பெண்களுக் கானத் திருமண உதவித் திட்டத்தொகை உயர்த்தப்பட்டதுடன், தாலிக்குத் தங்கமும் விலையின்றி வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாற்றப்பட்டு, கூடுதல் பலன்கள் கிடைக்கும் வகையில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விஷன் 2021 என்கிற மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கானத் தொலைநோக்குத் திட்டமும் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற முந்தைய அரசின் உத்தரவை ரத்து செய்தது ஜெயலலிதா அரசு.

199196 ஆட்சிக்காலத்தில் தனது வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதாவும் அவரைச் சார்ந்தவர்களும் சொத்துக் குவித்தது தொடர்பாக போடப்பட்ட வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின் 2014 செப்டம்பர் 27 அன்று பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கும் மற்றவர்களுக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஜெயலலிதா விற்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தண்டனை காரணமாக அவர் தனது முதல்வர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து, சிறை சென்றார். பின்னர் ஜாமீனில் விடுதலை யானார்.

ஜெயலலிதா பதவி இழந்ததால் ஓ.பன்னீர்செல்வம் 2014 செப்டம்பர் 29 அன்று தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றார். ஜெ. ஜெயலதா 2015 மே மாதம் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சிறிது காலத்தில் ஓ, பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட எடப்பாடி கே, பழனிச்சாமி முதல்வரானார். ஓ. பன்னீர் செல்வம் துணை முதல்ரானார்.

எடப்பாடி கே. பழனிச்சாமி ஆட்சி

இவரது ஆட்சியில் காவிரிப்படுகையை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது, குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீர்மேலாண்மையை உறுதி செய்தது, விவசாய பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்தது, மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், ரூ.2,000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அரசின் தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தூர்வாரப் படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் போன்றவை எடப்பாடி பழனிச்சாமியின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.