பி.எஸ்.எல்.வி சி 50

ஆந்திர பிரதேசத்தில், ஸ்ரீஹரிகோட்டா வில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் திட்டமிட்ட நேரத்தில் சீறிப்பாய்ந்தது. இந்தியாவின் பி.எஸ்.எல்.வி தன்னுடைய 52-வது திட்டமான பி.எஸ்.எல்.வி சி50-ல், எக்ஸ் எல் ரக ராக்கெட்டை இதற்காக பயன்படுத்தியிருக்கிறது.

இது 6 ஸ்டிராப்களைக் கொண்டது. இது இந்தியா ஏவும் 42-வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோள் விரிவுபடுத்தப்பட்ட சி-பேண்ட் அலைவரிசையை வழங்கும். இந்த சி-பேண்ட் மூலம் இந்தியா, அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் அலைவரிசை சேவையை பெற முடியும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்த பி.எஸ்.எல்.வி - சி50 ராக்கெட், சி.எம்.எஸ் - 01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை தாங்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்து வெற்றிகரமாக அது புவி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Advertisment

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் என இஸ்ரோ வலைதளத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. பி.எஸ்.எல்.வி சி 50 ஏவப்பட்டு 20 நிமிடம் 11 நொடிகளில், சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோள், ராக்கெட்டில் இருந்து பிரிந்து புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நடவடிக்கை, இந்திய விண்வெளி வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ""தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய செயற்கைக்கோள் ஆனந்த் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, சதீஷ்சாட், யூனிட்டிசாட் ஆகியவையும் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது"" என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

சந்திரயான் 3, ஆதிகேசவன், ககன்யான் போன்ற செயற்கைக்கோள் திட்டப்பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

Advertisment

நிலா சென்று மண் எடுத்துத் திரும்பியது சீன விண்கலம் சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிவிட்டது.

இந்த விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், தரையிறங்கியது. விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, விண்கலத்தின் வெப்பத்தை வைத்து, ஹெலிலிகாப்டரில் சென்று கண்டுபிடித்தார்கள் மீட்புக் குழுவினர்.

அமெரிக்காவின் அப்பல்லோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன், நிலவில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன. அதற்குப் பின் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சீனா, நிலவில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த மாதிரிகள், நிலவின் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும்.

கடந்த நவம்பர் மாதம் சாங்கே - 5

விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் பல பகுதிகள் இருந்தன. நிலவை சுற்றிவரும் சுற்றுவட்டக் கலனில் இருந்து ஒரு பகுதி நிலவில் தரையிறங்கியது.

பிறகு, நிலவின் மேற்பரப்பில் துளையிடும், அள்ளும் கருவிகள் உதவியோடு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. எவ்வளவு மாதிரி களை அது சேகரித்தது என தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது 2 முதல் 4 கிலோ வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கலன் மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே நிலவில் செலவழித்தது. நிலவின் பாறை கற்களை ஆராய்ச்சி செய்யும் சீனா - அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பிறகு சீனா பெறும் சிறப்பு நிலவின் துருவப்பகுதியில் தரையிறங் கியது சீன ரோபோ விண்கலம் பிறகு அந்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு ஒரு வாகனம் சுற்றுவட்டக் கலனுக்குத் திரும்பியது. அங்கிருந்து புவிக்குத் திரும்பும் ஒரு சிறுகலன் மூலம் இந்த மாதிரிகள் புவிக்கு அனுப்பப்பட்டன.

அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளும் இதுவரை மொத்தம் சுமார் 400 கிலோ அளவுக்கு நிலவின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன.

இந்த மாதிரிகள் அனைத்துமே மிகவும் பழமையானவை. அதாவது சுமாராக 3 பில்லிலியன் ஆண்டுகள் பழமையானவை.

ஆனால் சாங்கே - 5 கொண்டு வந்திருக்கும் நிலவின் பாறை மற்றும் மண் மாதிரிகள் மாறுபட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சாங்கே-5, நிலவின் வடமேற்குப் பகுதியில், மூன்ஸ் ரூம்கெர் (Mons Rumker) என்கிற எரிமலைப் பகுதியைத் தான் குறி வைத்தது. இந்த பகுதியைச் சேர்ந்த நிலவின் மாதிரிகள் 1.2 அல்லது 1.3 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதோடு இந்த மாதிரிகள், நிலவு எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான கூடுதல் விவரங்களை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

rocket

சீனாவின் சாங்கே - 5 வெற்றி, விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் சீனாவின் திறனை பறைசாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டில், அமெரிக்காவும் நிலவுக்குத் தன் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் நிலவில், இயந்திரங்களைக் களமிறக்க இருக்கிறது அமெரிக்கா. ஆக, மீண்டும் நிலவு ஒரு போட்டிக் களமாக மாறியிருக்கிறது.

விண்வெளி தொலைநோக்கியும் 180 கோடி நட்சத்திரங்களும்

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். தலையில் இருக்கும் மயிர். ஆற்றில் இருக்கும் மணல். இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கான எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கம். ஆனால், எண்ண முடியாதவை என்று கருதப்பட்ட நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.

பல அதி நவீன தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பட்டியலிடும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்து விரிவாக்கப்படும் இத்தகைய ஒரு நட்சத்திரப் பட்டியலிலில் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்தி இத்தகவலைத் தெரிவிக்கிறது.

விண்வெளியில் நட்சத்திரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக கொட்டிக் கிடக்கவில்லை. நம்முடைய சூரியக் குடும்பத்தில் கோள்கள் ஓர் ஒழுங்கில் சூரியனை சுற்றி வருவதைப் போல, நட்சத்திரங்களும் கூட்டம் கூட்டமாகவே இருக்கின்றன. ஒரு கூட்டத்தின் மையத்தில் உள்ள பேரடர் கருந்துளையை அந்தக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. நம்முடைய சூரியனும் அப்படி ஒரு நட்சத்திரம்தான். நம்முடைய சூரியன் இடம் பெற்றிருக்கிற நம்முடைய நட்சத்திரக் கூட்டத்தின் பெயர்தான் பால்வழி மண்டலம் என்பது. தற்போது கயா தொலைநோக்கி எண்ணி அடையாளப்படுத்தியிருக்கிற 180 கோடி விண்மீன்களும் நம்முடைய நட்சத்திரக் கூட்டமான பால்வழி மண்டலத்தில் இருப்பவைதான். இந்த கயா தொலைநோக்கி வழக்கமான தொலைநோக்கியைப் போல புவியில் எதோ ஒரு இடத்தில் நிறுவப்பட்டதல்ல. இது விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு விண்கலம். 2013-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்ட இந்த கயா தொலைநோக்கி விண்கலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு வேலை செய்யும். இந்த தொலைநோக்கி விண்கலத்தின் நோக்கமே நம்முடைய பேரண்டத்தை, அதிலும் குறிப்பாக நமது பால்வழி மண்டலத்தை ஆராய்வதுதான்.

கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வருணிக்கப்படும் இந்த தொலைநோக்கி தினமும் விண்வெளி பற்றி புதிது புதிதாக நாம் அறிந்திராத ஏராளமான தகவல்களைக் கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருக்கிறது. இது தரும் தரவுகளை வைத்து தினமும் சுமார் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளாவது வெளிவருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் இதன் வேகம் அபரிமிதமானது. விண்வெளி தொலைநோக்கிகளில் மிகவும் புகழ்பெற்றதான ஹபுள் தொலைநோக்கிகூட இந்த அளவுக்கு வேகத்தில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவில்லை என்கிறார்கள்.

கயா தொலைநோக்கி உற்பத்தி செய்யும் தரவுகள் விண்வெளி இயற்பியலில் ஒரு சுனாமியைப் போல என்கிறார் பேராசிரியர் மார்ட்டின் பார்ஸ்டோ. இவர் பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். நம் அருகில் உள்ள நட்சத்திரங்கள், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் என்று விண்வெளி இயற்பியலில் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு பேரண்டத்தின் விளிம்புவரையில் செல்கிறது இந்த தொலைநோக்கி என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். புவி சூரியனைச் சுற்றும்போது, ஒப்பீட்டளவில் அருகில் உள்ள நட்சத்திரங்கள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை நோக்கி நகர்வதாகத் தோன்றும். பேரலாக்ஸ் கோண அளவீடு என்ற முறையைப் பயன்படுத்தி குறிவைக்கிற நட்சத்திரம் அப்போது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கணக்கிட முடியும்.

திரும்பத் திரும்ப ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை கவனிப்பதன் மூலம் கயா தொலைநோக்கி கோணப் பிழைகளை மிகவும் குறைக்கிறது. கோணங்களை அளக்க கணித்ததில் பாகை என்ற அளவைப் பயன்படுத்துகிறோம். வட்டத்துக்கு 360 பாகை. ஒரு பாகையில் 60-ல் ஒரு பங்கு ஆர்க் நிமிடம் எனப் படுகிறது. ஒரு ஆர்க் நிமிடத்தில் 60-ல் ஒரு பங்கு ஆர்க் நொடி எனப்படுகிறது. அதற்கு அடுத்த நுட்பமான கோண அளவீடு மில்லிலி ஆர்க். ஒரு பாகையில் 36 லட்சத்தில் ஒரு பங்குதான் மில்லிலி ஆர்க். அதைவிட நுண்ணியது மைக்ரோ ஆர்க் நொடி. மிகப் பிரகாசமான நட்சத்திரங்களின் கோணத்தை, தூரத்தை அளவிடும்போது இந்த கயா தொலைநோக்கி 7 மைக்ரோ ஆர்க் நொடி அளவுக்கே பிழைகளைச் செய்கிறது.

இந்த கயா தொலைநோக்கி வானில் ஒரு பறக்கும் தொப்பியைப் போலத் தோன்றுகிறது. ஆனால், மிக நுட்பமான பொறியியலுக்கான எடுத்துக்காட்டு இது. புவியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த விண்வெளி தொலைநோக்கி, அதில் பொருத்தப்பட்டுள்ள பிரிட்டனில் தயாரான கேமரா மூலம் வானில் ஒளிர்கிற, நகர்கிற எல்லாப் பொருள்களையும் பதிவு செய்துகொள்கிறது. அதுவும் விழிகளை விரிய வைக்கும் துல்லிலியத்தோடு. கயா பதிவு செய்துள்ள நட்சத்திரங்கள் அடுத்த நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு எப்படி நகரும் என்கிற கணக்கீட்டை, தொலைநோக்கி திரட்டித் தந்திருக்கிற தரவுகளின் உதவியோடு கணிக்க முடியும்.