உலகில் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப ஏற்றத்தாழ்வு களும் அதிகரித்து வருகின்றன. ஒரு சாராரிடம் மட்டும் செல்வம் குவிந்துகொண்டிருக்க மற்றவர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத் தாழ்வு மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. ஏன் உலகம் இத்தகைய ஏற்றத்தாழ்வுமிக்கதாக மாறியிருக்கிறது? ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கு மனிதர்களுக்கிடையிலான உடல் வலிமை மற்றும் அறிவுத்திறன் போன்றவற்றில் நிலவும் இயற்கையான வேறுபாடுகள் மட்டும்தான் காரணமா? அல்லது, சமூக, பொருளாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் காரணமா? ஏற்றத்தாழ்வுகளின் தோற்றம் பிற உயிரினங்களிடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஆனால் அவை உடல் பலத்தினால் ஏற்பட்டவை. மனிதர்கள் போல் உபரி உற்பத்தி, சொத்துரிமை என்ற வாழ்வியல் முறை பிற உயிரினங்களிடத்தில் இல்லாததால் அவை யிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிப்பதற்கோ, பெருகுவதற்கோ வாய்ப்பில்லை. மனித சமுதாயம் ஒரு காலகட்டம் வரை அப்படித்தான் இருந்தது. காய், கனிகளை சேகரித்து உண்டகாலத்திலும், விலங்குகளை வேட்டையாடி உணவாக்கிய காலகட்டத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அதனால் தான் அப்போது அரசும், மதங்களும் தோன்றவில்லை.
விவசாயம் தோன்றிய பின் உபரி உற்பத்தி உருவாகியதால் அதை சேமிக்க வேண்டிய தேவை உருவானது. விளைவாக, சொத்துரிமை தோன்றியது. இருந்தபோதிலும், உபரி என்பது தானியமாக, கால்நடைகளாக இருந்த வரை ஏற்றத்தாழ்வுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. எப்போது மனித குலம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமைவு என்கிற வாழ்க்கை நிலைக்கு மாறியதோ அப்போதுதான் சேமிப்புக்கான தேவை அதிகரித்தது. இதனால் அதிக அளவில் உபரி உருவாக்கப்பட்டது. அதன் நீட்சியாக நிலவுடைமையும் உழைப்புப் பிரிவினையும் தோன்றி ஏற்றத்தாழ்வுகள் பெருக ஆரம்பித்தன.
நல அரசும் நவதாராளமயமாக்கலும்
அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை பல மடங்கு அதிகரித்தது. ஆனால் அதன் பலன்கள் அனைத்தும் அதிகாரத்தில் இருந்தவர்களிடமும், பணபலம் கொண்டிருந்தோரிடமுமே குவிந்தது.
இந்தச் சூழல் தீவிரமடையவும் பொதுவுடமை சித்தாந்தம் தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிச சித்தாந்தத்தின் தாக்கம் பரவலாக இருந்தது. அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் முதலாளித்துவ அரசுகள், செல்வந்தர்கள் மீது அதிகமான வரிகள் விதித்து அரசுச் செலவுகள் மூலம் ஏழை, எளியோர்களுக்கான நலத்திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் மக்கள் நல அரசுகளைக் (welfare state) கட்டமைத்தது. இந்தக் காலகட்டத்தில் தான் மக்களாட்சி முறையும், தொழிற்சங்களின் வளர்ச்சியும் நிகழ்ந்தது. இந்த மாற்றங்கள் ஏற்றத் தாழ்வுகள் பெருகுவதைப் பெருமளவு மட்டுப்படுத்தின.
ஆனால், 1980-க்குப் பின், உலக முதலாளியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக மக்கள் நல அரசுகள் புறந்தள்ளப்பட்டு, நவதாராள மயமாக்கல் (Neo#liberalism) கொள்கைகள் அமலாக்கப்பட்டன. கட்டற்ற சந்தைப் பொருளாதாரம், குறைந்தபட்ச அரசு (minimal state), தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாதல் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டன.
அவை தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தின.
இதனால் உழைப்புச் சந்தையில் தொழிலாளர்களின் பேரத்திறன் குறைந்தது. அதேசமயம், பெருநிறுவனங்களில் உயர்பதவி வகிப்போரின் ஊதியம் பல்கிப் பெருகியது. பொருள் உற்பத்தியின் மூலம் இலாபம் ஈட்டும் மெய்யான பொருளாதாரத்திற்கும் (Real economy), பணத்தை வைத்தே பணம் பெருக்கும் நிதிப்பொருளாதாரத்திற்குமான (financial economy) இடைவெளி மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது. இது ஏற்றத்தாழ்வுகள் பெருகியதற்கான முக்கியமான காரணியாகும்.
புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன
1980-க்குப் பிறகு உலகின் அனைத்துப் பகுதிகளிலுமே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்கிறார் ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்துள்ள பிரெஞ்சுப் பொருளியலர் தாமஸ் பிக்கெட்டி. 1990 முதல் 2015 வரையான காலத்தில் இந்தியா, சீனா உட்பட உலகின் 71 சதவீத மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்தியாவை எடுத்துக் கொண்டால், அதன் மொத்த தேசிய வருமானத் தில் 55 சதவீதம், இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்தினரிடம் சென்றடைகிறது. மீதமுள்ள 45 சதவீத வருமானம் 90 சதவீத மக்களால் பகிர்ந்துகொள்ளப் படுகிறது. உதாரணமாக, இந்தியாவின் மக்கள்தொகை 100 பேர் எனவும் தேசிய வருமானம் 1,000 ரூபாய் என்றும் வைத்ததுக் கொள்வோம். இதை சமமாகப் பங்கிட்டால் ஒரு நபருக்கு 10 ரூபாய் கிடைக்கும்.
ஆனால், தற்போதுள்ள நிலையின்படி, பொருளாதாரக் கட்டமைப்பில் உயர் நிலையில் உள்ள 10 பேருக்கு, நபர் ஒருவருக்கு 55 ரூபாய் வீதம் 550 ரூபாய் கிடைக்கிறது. மீதமுள்ள 90 பேருக்கு நபர் ஒருவருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தமாக 450 ரூபாய் மட்டுமே சென்றடைகிறது.
இந்தியா சுதந்திரமடைந்தபோது, வருமான அடிப்படையில் உச்சத்திலிருந்த 1 சதவீதத்தினரின் மொத்த வருவாய், நாட்டின் மொத்த வருவாயில் 20 சதவீதமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய முப்பதாண்டுக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டுடைமையாக்கல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகரிப்பு போன்ற பொருளாதாரக் கொள்கைகளினால் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தது. இதனால், 1980-களின் தொடக்கத்தில், வருமான அடிப்படையில் உச்சத்திலிருந்த 1 சதவீதத்தினரிடம் குவிந்து கொண்டிருந்த நாட்டின் மொத்த வருவாயின் பங்கு 6 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், 1980-க்குப் பின் பின்பற்றப் பட்ட நவதாராளமயமாக்கல் கொள்கைகளினால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தபோதிலும் அவ்வளர்ச்சியினால் செல்வம் படைத்தவர்களே அதிகம் பலன் பெற்றனர். இதனால், வருமான அடிப்படையில் உச்சத்திலிருந்த1 சதவீதத்தினரிடம் குவிந்து கொண்டிருந்த நாட்டின் மொத்த வருவாயின் பங்கு 22 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகள் வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது என்கிறது உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2018. 1980-க்குப் பிறகு ஏறத்தாழ அனைத்து நாடுகளிலுமே பொது மூலதனம் மிகப்பெருமளவில் தனியார் மூலதனமாக மாற்றப் பட்டுள்ளது தெளிவாகிறது. மொத்தத்தில், பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்திருந்தபோதிலும் பொதுச் செல்வம் தனியார் செல்வமாக மாற்றப்பட்டதால் அரசுகள் ஏழ்மையுற்றன. இதன் காரணமாக அரசுகள், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் மக்கள் நல அரசுகளாகச் செயல்படும் பொருளாதார வலிமையை இழந்து விட்டன என்கிறது அவ்வறிக்கை.
ஏன் கவலைப்பட வேண்டும்
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக் கின்றன. உதாரணமாக, ஏற்றத்தாழ்வுகள் அதிகமுள்ள நாடுகளில் மக்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை குறைந்து விடுவதுண்டு (Trust deficit). இதனால் பரிவர்த்தனைச் செலவுகள் (transaction cost) அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதால் உற்பத்தித்திறனும் அதன் தொடர்ச்சி யாக பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்கிறது 2020-ல் வெளியான உலக வங்கியின் உலக உற்பத்தித்திறன் பற்றிய ஆய்வுநூல். ஏற்றத்தாழ்வுகளினால் சமூகப் பதற்றம் மற்றும் அரசியல் நிலையின்மை அதிகரிப்பதுடன் மனிதவளத் திரட்டல் குறையவும் வாய்ப்புள்ளது. தானியங்கிமயமாதல், கொரோனா நோய்த்தொற்று மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ள தாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தினால், ஏழை நாடுகளின் பொருளாதாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டதன் காரணமாக உலகளாவிய ஏற்றத் தாழ்வு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்குமான இலவசக் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச் சேவைகள், சமூகப் பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள், வரி உயர்வுகள் மூலம் வருவாய் மறுபங்கீடு போன்ற சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள், திட்டங்களால் மட்டுமே ஏற்றத்தாழ்வு களைக் குறைத்து, பரந்துபட்ட வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு சூழல்
கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு அதற்கான சூழல் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக உலகம் வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு, தொழில் முடக்கம் போன்றவற்றை கண்டிருக்கிறது. தற்போது சற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும், வேலையிழந்தவர்கள் வேலைக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.
ஆனால் எதார்த்தத்தில் வேலைவாய்ப்புக் கான சூழல் எதிர்பார்ப்புக்கு மாறாகவே உள்ளது.
நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களை வைத்து வேலைகளை செய்துமுடிக்க பழகி வருகின்றன. வேலையிழப்பிலிருந்து தப்பித்த ஊழியர்களும் சம்பளம் குறைக்கப்பட்டால் என்ன, வேலை போகவில்லையே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.ஏற்கனவே வேலை தேடிக்கொண்டிப்பவர்களும், கொரோனா காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யப் பட்டதால் வேலை தேட வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களும் நிச்சயமற்ற எதிர்காலத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு புறம் இந்தியா அதன் வரலாற்றில் மிக மோசமான வேலையின்மையை எதிர்கொண்டுவருகிறது. மறுபுறம் வேலைவாய்ப்புகள் புதிய பரிணாமம் எடுத்துவருகின்றன. கடந்த பத்தாண்டுகளில், டிஜிட்டல், இணையம், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி உலக அளவில் வேலைவாய்ப்புகளையும், வேலைகளின் தன்மையும் பெரிய மாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. தற்போது கொரோனா அந்த மாற்றங் களை இன்னும் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் முறைசாரா தொழில்களின் வழியே உருவாகும் சூழலில்தான் இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், தனியார் துறைகளின் வழியிலான வேலைவாய்ப்புகள் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. தலைமுறை தலைமுறையான தொழில்கள், வணிகம், சுய தொழில்கள், சில்லரை வியாபாரம் போன்றவையே இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதாக இருந்துவருகிறது. கொரோனா காலத்தில் இந்த முறைசாரா துறைகள் பலத்த அடி வாங்கி யிருக்கின்றன. இந்தச் சூழலில் தற்போது முறைப்படுத்தப்பட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புக் கட்டமைப்பு மாறிவருகிறது.
வேலைவாய்ப்புகளின் புதிய பரிணாமம்
முறைப்படுத்தப்பட்ட துறைகளில், வேலை என்பது ஒரு நிறுவனம், அதன் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், இருதரப்புக்கிடையிலான பரஸ்பர ஒப்பந்தம் என்ற கட்டமைப்பைக்கொண்டதாக இருக்கிறது. ஊழியர்களுக்கான வேலை நேரம், ஊதியம், காப்பீடு, வருங்கால சேமிப்பு என நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அந்த நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்குமான தொழில்சார் உறவு அமையும். நினைத்த நேரத்தில் ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. அதேபோல் ஊழியர்களும் தங்கள் இஷ்டம்போல் பணி விலக முடியாது. அனைத்து செயல்பாடுகளும் விதிகளுக்கு உட்பட்டே நிகழ வேண்டும். இது நாம் இதுவரையில் பார்த்து, பழகி வந்த வழக்கமான வேலைவாய்ப்பு சார்ந்த கட்டமைப்பு.
தற்போது இந்தக் கட்டமைப்பு மாறத் தொடங்கி, புதிய வேலைவாய்ப்புச் சூழல் உருவாகி வருகிறது.
ஒரு நிறுவனத்தின் கீழ் முழு நேர ஊழியராக இல்லாமல், பகுதிநேர அடிப்படையில், குறுகியகால ஒப்பந்த அடிப்படையில், நிறுவனத் துக்கான வேலை செய்து தரும் போக்கு அதிகரித்து இருக்கிறது. இது ஏண்ஞ் ஊஸ்ரீர்ய்ர்ம்ஹ் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போது நிறுவனங்கள் முழு நேர பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
முழு நேரப் பணியாளர்களால் செய்யப் பட்டுவந்த வேலைகள் தற்போது தேவை அடிப்படையிலான பணியாளர்களிடம் (Freelancers) ஒப்படைக்கப்படுகிறது. இதனால் நிறுவனங்களுக்கு பலமடங்கு செலவு மிச்சமாகிறது. சோமேட்டோ, ஸ்விக்கி, ஓலா, ஊபர் ஆகிய வற்றை எடுத்துக்கொள்ளலாம். இந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சேவையை வழங்குகிறது. இந்த நிறுவனங்களின் சேவை களில் ஈடுபடுபவர்கள் அந்நிறுவனங்களின் ஊழியர்கள் அல்ல. அவர்கள் தனி நபர்கள்.
தங்கள் உழைப்பை அந்நிறுவனம் விரும்பும் வேலையை முடித்துத் தர பயன்படுத்து கிறார்கள். அதற்கு ஊதியம் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு தான் அவர்களுக்கும் நிறுவனத்துக்கு மிடையேயான உறவு. தங்களுக்கு எப்போது தேவையோ அப்போது அவர்கள் தங்கள் உழைப்பை வழங்கிக் கொள்ளலாம். நேர நெறிமுறைகள் கிடையாது.
உழைப்புச் சுரண்டலுக்கான சாத்தியங்கள்
இதுபோன்ற ஒப்பந்த மற்றும் தேவை அடிப்படை யிலான வேலைவாய்ப்புகள் குறைந்தபட்சமாக வேனும் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியத்தை வழங்குகின்றன. முழு நேர வேலை கிடைக்கமால் திணறி வருபவர்கள், கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புபவர்கள், அன்றாட பணிச் சூழல் பிடிக்காமல் தங்கள் விருப்பம்போல் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் திணறும் இளைஞர்கள், தங்கள் அன்றாடத்தை சமாளிக்க இது போன்ற வேலைவாய்ப்புகளில் ஒண்டிக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் இது போன்ற பணிகள் சாதகமாக இருக்கின்றன. இந்திய குடும்பக் கட்டமைப்புக் காரணமாக பல பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு அலுவலகம் செல்வதை நிறுத்தி விடுகிறார்கள்.
ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்பு அவர்களுக்கு தங்கள் விருப்ப நேரத்தில் வேலை செய்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. அதன் வழியே அவர்களது பொருளாதாரச் சுதந்திரம் உறுதி செய்யப்படுகிறது. நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் முதல் அழகு நிபுணர், வரைகலைஞர், எலக்ட்ரீசியன், பிளம்பர் என அந்தந்த தொழில்சார் திறன்பெற்றவர்கள் எந்த நிறுவனத்தையும் சாராமல் சுயாதீனமாக தங்களுக்கான வருமானத்தை ஈட்டத் தொடங்கியுள்ளனர். அதேசமயம் இத்தகைய ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளில் வேலை உத்தரவாதம் கிடையாது. மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி என முறை சார் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் எந்தச் சலுகையும் கிடையாது. ஏற்கெனவே தொழிலாளர் விதிகள் பல நிறுவனங்களில் முறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலை யில் ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க உழைப்புச் சுரண்டலும் அதிகரிக்கும்.
சேவைத் துறைகளின் வளர்ச்சி
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த சேவைத் துறைகளின் வளர்ச்சி ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகி வந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை யினால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் உருவாகும் வேலைவாய்ப்புகளில் பெருவாரி யானவை ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளாகவே இருக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்பு களில் 40 சதவீதம் ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளே இடம்பிடிக்கின்றன. உலக அளவில் ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
கிட்டத்தட்ட 1.5 கோடி பேர் சுயாதீன பணியாளர்களாக உள்ளனர். அதன் வழியிலான பொருளாதாரம் 2023-ஆம் ஆண்டில் 450 பில்லியன் டாலராக விரிவடையும் என்று கூறப்படுகிறது. வளர்ந்த நாடுகளில், தங்கள் நேரத்தை முழுவதுமாக வேலைக்குச் செலவிட விரும்பாமல், ஏதுவான நேரத்தில் வேலை செய்வதற்கென்று ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளை தேர்வு செய்பவர்கள் அதிகம். இந்தியாவிலோ, முழு நேர வேலைவாய்ப்பு கிடைக்க வழியின்றி அன்றாடப் பிழைப்புக்காக ப்ரீலான்ஸ் வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்பவர்கள் அதிகம்.
மாற்றமடையும் வேலைச் சூழல்
இது ஒருபுறம் இருக்க தற்போது கொரோனா வின் தாக்கத்தால் வளமையான வேலைச் சூழலும் புதிய பரிணாமம் எடுத்து வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக், டிவிட்டர் எனப் பல பெரிய நிறுவனங்கள் அதன் ஊழியர்களை சில காலங்களுக்கு வீட்டிலிருந்து பணி புரியவே வலியுறுத்தியுள்ளன. தற்போது கொரோனா தொற்று மீதான அச்சம் காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிய வலியுறுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் சில வருடங்களில் வீட்டிலிருந்து பணிபுரிதல் இயல்பான நடைமுறையாக மாறவிடுவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. தற்போது பல நிறுவனங்கள் வாரத்துக்கு சில நாட்கள் மட்டும் அலுவலகம் வந்து வேலை பார்க்கும் முறையை பரிசீலித்து வருகின்றன. மனித வாழ்க்கை பொருள் ஈட்டுவதைமையமாக வைத்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிச்சயமற்ற வேலைவாய்ப்பு சூழலில் ஒரு சராசரி நபர் தன் வாழ்க்கையை நிதானமாக அனுபவித்து வாழ்வது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மாறியுள்ளது. வேலையின் தன்மையும், வேலைச் சூழலும் மனிதனின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமானவை. உலகம் மாறிவிட்டது என்பதை நாம் மனிதனின் வேலையின் தன்மை மாறிவிட்டது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் மாற்றத்துக்கான துவக்கத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.