தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்றார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முயற்சித்து தோல்வியடைந்த பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்காக பயிற்சியாளர் நிகோலா ஜனோடியின் மேற்பார்வையில் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவருடைய பல வருட முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் ஓர் விடிவுகாலம் வந்துள்ளது.
அனந்த சுந்தரராமன் சிஏ ரமணியின் மகளாக 1993 ஆகஸ்ட் 27இல் சென்னையில் பிறந்தவர் பவானி தேவி. சென்னை தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது 2004இல் வாள்வீச்சு விளையாட்டின் மீது ஆர்வம் வந்து, அதில் ஈடுபட ஆரம்பித்தார் பவானி தேவி. 6வது படிக்கும் போது, ஆறு விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்கிற நிலை வந்தபோது வாள்வீச்சை தேர்வு செய்தார். காரணம், மற்ற விளையாட்டுகளை இதர மாணவிகள் தேர்வு செய்துவிட்டதால் இதுதான் அவருக்கு கிடைத்தது. புதிய விளையாட்டு என்பதால் ஆர்வத்துடன் அதைக் கற்றுக்கொண்டார். காலை, மாலை என இருவேளைகளில் சென்னை நேரு மைதானத்தில் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பள்ளிக்கும் சென்று வந்துள்ளார்.
2004 முதலே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார் பவானி தேவி. பத்தாவது முடித்த பிறகு கேரளாவில் அதிக நிதியுதவி கிடைத்ததால் அங்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்து கேரளா சார்பாக தேசிய அளவிலான போட்டி களிலும் பங்கேற்றார். பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பி, சென்னையில் எம்பிஏ படித்து முடித்தார். நிதியுதவி கிடைக்காததால் பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து போட்டிகளில் பங்கேற்றார். அதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் அவரது தாயார்.
2014இல் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2015இல் மங்கோலியாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார்.
காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சு போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பவானி தேவியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளித்துள்ளார். 2015 அக்டோபரில் பெல்ஜியத்தில் நடந்த வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். 2016 ஜனவரி யில் தலைமைச் செயலகத்தில் ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையினை அவர் வழங்கினார்.
வெனிசுலாபிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள வாள்வீச்சு போட்டி களில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்க வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வுக்கு பவானி தேவி கோரிக்கை விடுத் திருந்தார். இதையடுத்து பவானி தேவிக்கு ரூ.3 லட்சத்தை உடனடியாக வழங்கிட ஜெயலலிதா உத்தரவிட்டார்.
2017 மே மாதம், ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்களை எனும் சிறப்பை பெற்றார். 2018 ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். 2019 செப்டம்பரில் பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை பெற இந்த வெற்றி ஊக்கம் தரும் என்று அப்போது பேட்டியளித்தார் பவானி தேவி. இன்று, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்கிற பெருமையை அடைந்து இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சாய்னா நேவால், பிவி. சிந்து, சானியா மிர்சா, தீபா கர்மாகர் என உலக அரங்கில் இருக்கும் இந்திய வீராங்கனைகளில் வரிசையில் பவானி தேவியும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவருடை அடுத்த சாதனைகளுக்கு இது ஓர் தொடக்கமாக இருக்கட்டும்.