70-வது பிரபஞ்ச அழகி போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரான எய்லாட் நகரில் நடைபெற்றது.
உலகம் முழுவதிலும் இருந்து 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் கவுர் சாந்து இதில் பங்கேற்றார். கடந்த ஒரு மாதமாக இஸ்ரே-லில் இந்த போட்டி நடந்து வந்தது.
அவர்களுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அழகிகள் இறுதிச்சுற்றுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த தொடக்க சுற்று போட்டிகளில் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார்.
இதன் காரணமாக டாப்-10 அழகிகள் வரிசையில் ஒருவராக ஹர்னாஸ் கவுர் தேர்வானார்.
இந்த 10 நாட்டு அழகிகளுக்கு இடையே இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன.
அதில் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து, பிராகுவே நாட்டை சேர்ந்த நதியா பெரிரியா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லலிலா ஸ்வானே ஆகிய மூன்று அழகிகளும் இறுதிச்சுற்றுக்கு தேர்வானார்கள்.
இறுதியில் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு 2020-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற மெக்சிகோ நாட்டு அழகி ஆண்ட்ரியா மெஸா பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை இதுவரை 2 இந்திய பெண்கள் மட்டுமே பெற்று உள்ளனர்.
1994-ஆம் ஆண்டு சுஷ்மிதா சென் இந்த பட்டத்தை வென்றார்.
அவரை தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார்.
அவர்களை தொடர்ந்து தற்போது ஹர்னாஸ் கவுர் சாந்து 3-வது இந்திய பெண்ணாக இந்த பட்டத்தை கைப்பற்றி சிறப்பு சேர்த்து உள்ளார்.
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து தற்போது அங்குள்ள கல்லூரியில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
2017-ஆம் ஆண்டு முதல் அழகி போட்டிகளில் ஹர்னாஸ் கவுர் சாந்து பங்கேற்று வருகிறார். 17 வயதில் அவர் முதல்முறையாக அழகி பட்டத்தை வென்றார்.
2019-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில அழகியாக தேர்வான அவர் கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகியாக தேர்வானார்.
அதன் மூலம் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று தற்போது பட்டத்தை வென்றுள்ளார்.