1949-ஆம் ஆண்டு ஜனவரி 15. சுதந்திரத் திற்குப் பின், முன்பு பதவியிலிருந்த பிரிட்டிஷ் அரசின் சர் ஃப்ரான்சிஸ் புட்செரி வெளியேற, இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்ற நாள். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவுக்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டது, வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். அதனால், தங்கள் படைபலத்தைக் காண்பிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள ராணுவ வீரர்களைத் திரட்டி, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15 அன்று ராணுவ அணிவகுப்பை நடத்துகிறது இந்தியா.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/military_1.jpg)
மேலும், நாட்டிற்காகத் தியாகம் செய்த அனைத்து ராணுவ வீரர்களையும் நினைவுகூரும் பொருட்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 1.4 மில்லியன் ராணுவ வீரர்களைக்கொண்டு, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாகத் திகழ்கிறது இந்தியா. அதுமட்டுமன்றி, உலகிலேயே சக்திவாய்ந்த படைபலத்தில் நான்காவது இடத்தை வகிக்கிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என நாட்டின் முப்படைகளுக்கும் தற்போது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், பிபின் ராவத். ராணுவ அணிவகுப்புகள், ராணுவ சாகசங்கள், அதன் தொழில்நுட்பங்கள், சாதனைகள் என இந்த ஆண்டு, 72-வது வருட ராணுவ தினத்தை விமரிசையாகக் கொண்டாடியது மத்திய அரசு. டெல்லியில், பொது அதிகாரி கமாண்டிங் (General officer commanding)தலைமையில் வழிநடத்தப் பட்ட அணிவகுப்பை ராணுவத் தலைவர் வணக்கம் செலுத்தியபின் ஆய்வுசெய்தார். மற்ற இரண்டு சேவைத் தலைவர்களும் (service chiefs) ஒவ்வொரு ஆண்டும்போல இந்த ஆண்டும் அணிவகுப்பில் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.
முப்படைகளின் தலைமைத் தளபதியாக டிசம்பர் 31, 2019-ஆம் தேதியன்று பொறுப்பேற்ற ஜெனரல் பிபின் ராவத்தும் ராணுவ தின அணிவகுப்பில் கலந்துகொண்டு, இந்த ஆண்டு வணக்கம் செலுத்தினார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதலானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
15 வீரர்கள், துணிச்சலுக்கான விருதுகளால் அலங்கரிக்கப்பட்டார்கள். 18 பட்டாலியன்களுக்கு (battalions) அலகு மேற்கோள்கள் (citations) கிடைத்தன. அவை, அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. கேப்டன் டானியா ஷெர்கில் என்பவர் முதல் பெண் ராணுவ வீரராக அனைத்து வீரர்கள் கொண்ட ராணுவ அணிவகுப்பை முன்னின்று வழிநடத்திச்சென்றார். சென்னையில் உள்ள அதிகாரி, பயிற்சி அகாடமியிலிருந்து மார்ச் 2017-இல் நியமிக்கப்பட்ட ஷெர்கில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பட்டதாரி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசத்திற்கு சேவை செய்து வரும் தனது குடும்பத்தின் பாரம்பர்யத்தை டானியா நான்காவது தலைமுறையாகச் சுமந்து செல்கிறார்.
கடந்த ஆண்டு, ராணுவ தின அணிவகுப்பில், முதல்முறையாக 144 ஆண் ராணுவ வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரியாக வரலாற்றை உருவாக்கினார், கேப்டன் பாவ்னா கஸ்தூரி. இந்த ஆண்டு, டானியா ஷெர்கில் வேறொரு வரலாற்றைப் படைத்திருக்கிறார்.
ராணுவ தின அணிவகுப்பில் 18 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை, "தனுஷ்' துப்பாக்கி அமைப்பு மற்றும் ராணுவ விமானப் பாதுகாப்பு ஆகியவற்றின் காலாட்படை போர் வாகனம் பி.எம்.பி -2 கே (BMP-2K) புதுடெல்லி ராஜ்பாத்தில் காட்சிப்படுத்தபட்டன. கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்(corps of signals), சீக்கிய லைட் காலாட்படை (Sikh light infantry), குமாவோன் ரெஜிமென்ட் (Kumaon regiment), கிரெனேடியர்கள் (Grenadiers) மற்றும் பாராசூட் ரெஜிமென்ட்(Parachute regiment) ஆகிய அணிகளும் அணிவகுப்பில் பங்கேற்றன.
இதுவரை, முப்படைகளில் தலைமைத் தளபதிகளாக உள்ளவர்களில் ஒருவர் தலைவராக இருப்பதற்குப் பதிலாக, பாதுகாப்புத் தளபதிகளின் தலைமைத் தளபதியாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், அவரே முப்படைத் தளபதிகள் குழுவுக்கும் தலைவராகச் செயல்படுவார் என்றும் அரசு முடிவெடுத்தது. அந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி, நான்கு ஸ்டார்களுக்கான தகுதி வாய்ந்த ஜெனரல் ஆக இருப்பார்.
தேசிய பாதுகாப்புத் தொடர்புடைய அனைத்து ஆயுதங்கள் கொள்முதல், பயிற்சி உத்திகள், முப்படைகளின் கூட்டு நடவடிக்கை, கேந்திர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும், அரசை நடத்தும் ஆட்சியாளர்களுக்கு முப்படை சேவை குறித்த ஆலோசனைகளை வழங்குவது, முக்கிய ஒப்புதல்களைப் பெற்றுத்தருவது ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கும் ராணுவ ஆலோசகர் பணியையும் புதிய தலைமைத் தளபதி ஆற்றுவார்.
பாதுகாப்பு அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் புதிய தலைமைத் தளபதி, இந்திய பாதுகாப்புத்துறை ஆயுத கொள்முதல் கவுன்சில் மற்றும் பாதுகாப்புத் திட்டமிடல் குழுவின் உறுப்பினராக இருப்பார். இந்தப் பதவிக்காக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, முப்படைகளின் தலைமைத் தளபதியின் முன்னிலையில், இந்த ஆண்டின் ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/military-t.jpg)