உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் மூலவர் பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து கோயில் மீது மலர்கள் தூவப்பட்டன. இந்த கோலாகல விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர். இந்த விழாவிற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அயோத்தி ராமர் கோயில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரதமர் நரேந்திர மோடிக்கு அயோத்தி ராமர் கோயில் வடிவத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
மக்ரானா மார்பிள் கருவறை
ராமரை வழிபடும் கோயில் மட்டும் 57,400 சதுர அடியில் அமைந்துள்ளது. 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகள் கொண்டதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 12 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குள் ராமரின் வாழ்க்கை சம்பவங்களை நினைவுப்படுத்தும் வகையில் கண்கவர் சிற்பங்கள், அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வாசலில் ஹனுமன், கருடபகவான், யானை, சிங்கத்தின் பிரம்மாண்ட சிலைகளை வைக்க உள்ளனர். பிங்க் வடிவில் இந்த சிலைகள் அமைகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விலை உயர்ந்த மக்ரானா எனப்படும் உயர்ரக மார்பிள் கற்களை கொண்டு கருவறை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானது. இந்த வகை கற்கள் உள்கட்டுமானத் திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுமானத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபலமான இளஞ்சிவப்பு மணல்கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 4.70 லட்சம் கன அடி கற்கள் கோயில் முக்கிய தரிசன பகுதியிலும், 17 ஆயிரம் கிரானைட் கற்கள் பீடங் களிலும், வண்ண பளிங்கு கற்கள் பதிக்க பயன்படுத்தப்பட்டுள்ள. வண்ண பளிங்கு கற்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவையெல்லாமே விலை உயர்ந்தவை மட்டுமல்ல, கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யும் போது மனதிற்கு ஒருவிதமான பரவச நிலையை அளிக்கும். அந்த அளவிற்கு பார்த்து பார்த்து கோயில் செதுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலில் 4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட பால ராமர் சிலை 4 அடி பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1949-ஆம் ஆண்டில் ராம ஜென்ம பூமியில் 6 அங்குல உயர வெள்ளியிலான பால ராமர் சிலை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
இதை மனதில் கொண்டே பால ராமர் சிலை இங்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சிற்பிகளான அருண் யோகிராஜ், கணேஷ் பட் ஆகியோர் கருங்கல்லில் ராமர் சிலையை செதுக்கினர். ராஜஸ்தான் சிற்பி ஒருவர் மார்பிள் கல்லில் செதுக்கினார். இறுதியில் கர்நாடக சிற்பிகள் செதுக்கிய சிலையே தேர்வானது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் பால ராமர் சிலை என்றாலும், மறுபுறம் மெகா ராமர் சிலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.250 கோடி மதிப்பீட்டில் சரயு நதிக்கரையையொட்டி, 251 அடி உயர ராமர் சிலையை அமைக்க உள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலின் சிறப்பு அம்சங்கள்
சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கோயிலாக அயோத்தி ராமர் கோயில் புகழ்பெற்றுள்ளது. மொத்தம் 57,400 சதுர அடி பரப்பளவில் 161 அடி உயர கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. பழமையான பாரம்பரியத்துடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கோயில் பிரம்மாண்ட மாக உருவாகியுள்ளது.
ராமர் கோவில் நடன மண்டபம், வண்ண மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்களை கொண்டுள்ளது.
ராமரின் வரலாற்றை விளக்கும் சிற்பங்கள், கோயில் வளாகத்தின் தூண்கள் மற்றும் சுவர்களில் செதுக்கப் பட்டுள்ளன. கோயிலை சுற்றி 732 மீட்டர் நீளம், 14 அடி அகலத்தில் மதில் வளாகம் கட்டப்பட்டுள்ளது.
சூரியன் உதிக்கும் கிழக்கை நோக்கி ராமர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கிலிருந்து சிம்மவாசல் வழியாக 16 அடி நீள 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி ராமர் சந்நதிக்குள் பக்தர்கள் செல்லலாம். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வசதிக்காக சாய்வு தளம், லிப்ட் வசதிகள் கோயிலில் செய்யப்பட்டுள்ளன.
கோயிலின் 4 மூலைகளிலும் நான்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சூரிய கடவுள், சிவன், தாயார் பகவதி, விநாயகருக்கு கோயில்கள் உள்ளன. வடக்குப்புறம் அன்னபூரணி ஆலயமும், தெற்கில் அனுமன் ஆலயமும் இருக்கும். தென்மேற்கு திசையில் குபேல் திலாவில் ஜடாயு சிலை நிறுவப் பட்டுள்ளது.
கோயிலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி 25,000 பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரீகர்கள் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது.
கோயிலின் அடித்தளத்தில் 14 மீட்டர் பருமன் கொண்ட கான்கிரீட் அடுக்கு செயற்கைப் பாறை தோற்றத்தை தருகிறது. செப்புத் தகடுகளைப் பயன்படுத்தி பழங்கால இன்டர்லாக்கிங் முறையில் கற்களை நிலைநிறுத்தி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், 2,500 ஆண்டுகள் வரையிலும் எந்த பூகம்பத்தையும் தாங்கும் வகையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
சோமநாத் கோயில் உட்பட நாட்டின் 100-க்கும் மேற்பட்ட கோயில்களின் வடிவமைப்புகளில் பங்களித்த அகமதாபாத் சோம்புரா குடும்பத்தினர் சார்பில் தலைமை சிற்பி சந்திரகாந்த் பாய் சோம்புரா கடந்த 1988-ஆம் ஆண்டு அயோத்தி ராமர் கோயிலுக்கான வடிவமைப்பை செய்தார்.
பின்னர் 2020-ஆம் ஆண்டு வாஸ்து, சில்ப சாஸ்திரங்களின் அடிப்படையில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் வடிவமைப்பு இறுதி செய்யப் பட்டது. இக்கோயில் நாகரா கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளது.
ரூ.1,800 கோடி செலவு மதிப்பீட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
எல்அன்ட்டி மற்றும் டாடா கட்டுமான நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் சுமார் 1,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
ராமர் கோயில் கட்டுமானத்தில் துளி இரும்பு கூட பயன்படுத்தப்படவில்லை. கோயில் முழுக்க முழுக்க கற்கள் மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, காப்பர், ஒயிட் சிமெண்ட், மர சாமான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த 1000 ஆண்டுக்கு எந்த விதமான சரிபார்ப்பு பணியும் மேற்கொள்ள வேண்டிய எந்த தேவையும் இல்லாத வகையில் கோயில் கட்டமைக்கப் பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் கோயிலை விரிவாக்கம் செய்யும் வகையிலும் கட்டுமானம் செய்யப் பட்டுள்ளது.
ராமர் கோயில் தரைதளம், முதல் தளம், 2-வது தளம் என 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திற்கும் இடையே 20 அடி உயரம் இருக்கும். தரைத்தளத்தின் கருவறையில் 4.5 அடி உயர பால ராமர் (ராம் லல்லா) சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.
முதல் தளத்தில் ஸ்ரீராம தர்பார் அமைகிறது. இங்கு ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
ராமர் கோயிலின் அடித்தளம் 2587 பிராந்தியங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.
ஜான்சி, பிதோரி, யமுனோத்ரி, ஹல்திகாதி, சித்தார்கர், தங்க கோயில் உள்ளிட்ட பல புனித தளங்களில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு அடித்தளம் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 155 புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டு வந்து, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
தாய்லாந்தில் இருந்தும் மண், புனித ஆறுகளின் தண்ணீர் ஆகியவை ராமர் கோயில் கட்ட அனுப்பி வைக்கப் பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேக்கு மரங்கள் வரவழைக்கப்பட்டு 40-க்கும் மேற்பட்ட கதவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தங்க கோயில் போல பிரகாசிக்க வேண்டுமென்பதற்காக தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு, தெலுங்கானாவில் இருந்தும் அனுப்பப்பட்ட கிரானைட் கற்கள், கோயிலை ரம்மியமாக்குகின்றன.
இது முழுக்க முழுக்க இந்திய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட கட்டுமானமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளை தாண்டினாலும், கோயில் பாதிப்படையாத வகையில் பார்த்து பார்த்து கட்டப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பரிசுப் பொருட்களையும், நன்கொடை களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்வாமால் உருவாக்கப்பட்ட 400 கிலோ பூட்டு ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும், 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிகப்பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
கோயில் வளாகத்தில் உள்ள சிறப்பு வசதிகள்
ராமர் பிறந்த இடத்திற்கான வரலாற்று சான்றுகளும், தொல்லியல் ஆதாரங்களையும் காட்சிப்படுத்தும் ஸ்ரீ ராம்லாலா புரகாலிக் தர்ஷன் மண்டல்.
வேதம், புராணம், ராமாயணம், சமஸ்கிருதம் தொடர்பான ஆராய்ச்சிக் கான குரு வசிஷ்டா பீதிகா ஆய்வு மையம்.
ஆழ் தியானத்திற்காக பக்தி தீலா எனும் அமைதியான தியான மண்டபம்.
ராமாயணம் எனும் நவீன ஏசி நூலகம் மற்றும் வாசிப்பு அறை.
மகரிஷி வால்மீகி ஆவண காப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையம்.
ஸ்ரீ ராம் குண்ட் எனும் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. புனித சடங்கு களுக்காக கர்ம் ஷேத்ரா மண்டபம் உள்ளது.
ஹனுமன் கதி எனும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி 360 டிகிரி தியேட்டர் துளசி ராம்லீலா சென்டர்.
‘ராமன்கண்’ எனும் சினிமா, தொலைக்காட்சி, ஆடியோ விஷுவல் அடிப்படையிலான ஷோக்கள் மற்றும் சொற்பொழிவிற்கான தியேட்டர்.
ராமர் கோயிலை கட்ட சிறப்பு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு செங்கல்லிலும் ‘ஸ்ரீராம்’ நாமம் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில செங்கற்கள் 30 ஆண்டுக்கும் மேலான பழமையானவை. இவை ‘ராம்சிலா’ என்றழைக்கப்படுகின்றன.
கோயில் வளாகத்தில் பசுமையான மரங்கள், செடிகள் அமைய உள்ளன. வயதானவர்கள், மாற்றுத்திறனாளி களுக்கன லிப்ட் வசதி, சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் 70 சதவீத பகுதிகள் பசுமைப் பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.