தழியல் துறையில் சமூக மேம்பாட்டிற் காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது நக்கீரன் எனும் புலனாய்வு இதழினை தொடங்கி பல ஆண்டுகளாக பல்வேறு பாராட்டுகளை பெற்று வெற்றிகரமாக இதழினை நடத்தி வரும் நக்கீரன் கோபாலுக்கு வழங்கப் பட்டது.

நக்கீரன் கோபால் பத்திரிகைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இவர் தமிழ் அரசியல் புலனாய்வு இதழான நக்கீரன் இதழை 1988-ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் திகழ்கிறார்.

awards

நக்கீரன் கோபால் தன்னம்பிக்கையும், துணிவும் நிறைந்தவர். தமிழ்நாட்டின் நலன் கருதி, மாநில அரசின் அனுமதியோடு, சிக்கலான பல பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைத்திடப் பாடுபட்டு, பல்வேறு இன்னல்களை ஏற்றவர். தமிழ் இதழியல் மூலம், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் வாசகத்திற்கேற்ப, இடர்பாடுகள் எதிர்வந்த போதும், பல பிரச்சினைகளை மக்களுக்கு வெளிக் கொணர்வதில் துணிகரமாகச் செயல் பட்டவர். உறுதியான மனப்பாங்குடன் சமூக மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் நக்கீரன் கோபால், பல்வேறு நூல்களையும் படைத்துள்ள பெருமைக்குரியவர் ஆவார்.

நக்கீரன் கோபால் ஆற்றியுள்ள இதழியல் துறைச் சாதனைகளையும், தமிழ் எழுத்துப் பணிகளையும் பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டுக்கான, கலைஞர் எழுதுகோல் விருது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

Advertisment

மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையை போற்றும் வகையில் சிறப்பினமாகப் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் 18 ஆண்டுகளாக பணியாற்றி அனுபவம் பெற்ற சுகிதா சாராங்கராஜுக்கும் கலைஞர் எழுதுகோல் விருதினை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.

சுகிதா சாரங்கராஜ் தினமலரில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்ற தொடங்கினார்.

சன் நியூஸ், கலைஞர் செய்திகள் ஆகிய காட்சி ஊடகங்களில் பணிபுரிந்து, பின்னர் நியூஸ்7 தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர், ஒரு காதலும் ஒரு சொம்பு தண்ணீரும் என்ற கவிதைத் தொகுப்பு நூலும் சமூகமும் தேசிய விருப்பமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் எழுதியுள்ளார்.

Advertisment