பொருநை ஆற்றங்கரை நாகரிகம்
இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் நடைபெற்ற அகழாய்வே, முதல் அகழாய்வாகும். இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மிகத் தொன்மை வாய்ந்தவை யாகக் கருதப்படுகின்றன.ஆதிச்சநல்லூர், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டை யிலிருந்து 12 கி.மீ. தொலைவில் தண்பொருநை ஆற்றின் தென்கரையில் உள்ளது. ஆதிச்ச நல்லூரில் பறம்பு என்று கூறப்படும் மண்மேடு பொருநை ஆற்றின் தென்கரையில் தெற்கு வடக்காக நீண்டு கிடக்கின்றது. இந்தப் பறம்பின் மொத்தப்பரப்பளவு வரம்பு 114 ஏக்கர் ஆகும். இதன் வடபகுதி உயர்ந்தும், தென்பகுதி தாழ்ந்தும் உள்ளது. இது பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத பாங்கற்ற நிலமாகக் கருதப்படுவதால் பறம்பு என்றழைக்கின்றனர். இந்த இடத்தைப் பண்டையத் தமிழர்கள் இறந்துபோன மக்களின் உடலைப் புதைக்கும் ஈமக்கடாகப் பயன்படுத்தியுள்ளனர்.
முதல் அகழாய்வு
ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் நகரைச் சார்ந்த முனைவர் ஜாகோர் (Dr. Jagor) என்பவர் 1976-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பறம்பில் உள்ள புதர்களைக் களைந்து நிலத்தை அகழ்ந்து அங்குப்புதையுண்டு கிடந்த பழம் பொருள்களை எடுக்கத் திட்டமிட்டார். பெர்லின் நகரிலிருந்து கப்பலில் பயணித்து இந்தியா வந்தடைந்தார்.
பின்னர், தொடர் வண்டி மற்றும் மாட்டு வண்டியிலும் நீண்டநாள் பயணம் செய்து, இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஆதிச்சநல்லூரை அடைந்தார். இங்கு கிடைக்கப்பெற்ற காண்பதற்கு அரிய தொல்பொருட்களை எடுத்துச் சென்று பெர்லின் அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்துள்ளார்.
இரண்டாவது அகழாய்வு
1903 முதல் 1904-ஆம் ஆண்டு வரை ஆதிச்சநல்லூர்ப் பறம்பில் அலெக்சாண்டர் ரீ அகழாய்வு நடத்தினார். அப்பகுதிகளை கவனமுடன் அகழ்ந்து ஏராளமான தொல்பொருட்களை கண்டெடுத்தார். ஜாகோர் முன்னர் அகழ்ந்து எடுத்த தொல்பொருட்களைப் போன்று பல அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய கருவூலங்களைப் பெற்றுள்ள ஈமக்காடு (Burial grounds) பழைமை வாய்ந்தவை என்று முடிவு செய்யப்பட்டது.
அலெக்சாண்டர் ரீ அகழ்ந்து எடுத்த தொல்பொருட்கள் அனைத்தும் தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொது மக்கள் பார்வைக்கு சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் களிமண்ணால் ஆன மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மேலும் அங்கு இரும்பு ஆயுதங்களான கத்திகள், குட்டையான வெட்டு வாய்ப் பகுதியையுடைய வாள்கள் (Short sword-blades) , கைக்கோடாரிகள் ஆகியவையும் அதிக அளவில் எலும்பு களும், மனித மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரிய மட்பாண்டத்தினுள் இருந்த இரு சிறிய மட்கலயங்களில் ஒன்றில் நெல் உமிகள் வைக்கப்பட்டிருந்தன.
அவர் தம் பணியினின்று ஓய்வு பெறுவதற்கு முன்னர் 1913-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் சேகரித்த தொல்பொருட்களுக்கு ஒரு பட்டியல் உருவாக்கினார். சென்னை அரசு அருங்காட்சி யகத்தின் கண்காணிப்பாளராக இருந்த சே. ஆர். எண்டர்சன் முன்னுரையுடனும் ‘ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும்பேர் ஊர்களிலுள்ள வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொல்பொருட்களின் பட்டியல்’ (Catalogue of the prehistoric antiquities from Adichanallur and Perumbair) என்னும் தலைப்பில் 1915-ஆம் ஆண்டு சென்னை அரசு அருங்காட்சியகத் துறையின் வாயிலாக நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் பறம்பின் மேற்பரப்பில் மூன்று அடி ஆழம் வரை சரளைக் கற்கள் உள்ளன. அதன் அடிப்பகுதியில் தனிக்கூறாகச் சிதைந்த படிகக்கல் பாறை இருக்கிறது. ஈமத்தாழிகளை புதைப்பதற்கென்று பாறைகளில் தனித்தனியாக உட்குடைவு செய்யப் பட்டுள்ளது.
இந்த ஈமக்காட்டில் பெரிய தாழிகள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாழிகள் ஏறத்தாழ 6 அடி ஆழத்தில் புதைக்கப் பட்டிருந்தன. சில தாழிகள் மேல் மட்டத்திலிருந்து 3 அடி முதல் 12 அடி வரை ஆழத்தில் இருந்துள்ளன. சில இடங்களில் ஒன்றின் மீது ஒன்றாகவும் புதைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய ஈமக்காடு பகுதிகளில் இதுதான் மிகப் பரந்ததாகும்.
ஈமத்தாழிகளும் தொல்பொருள்களும்
ஈமத்தாழிகளும் அவற்றினுள்ளே எலும்புகளும், மட்பாண்டங்களும் பொன், உயர்தர வெண்கலம், இரும்பு போன்ற தாதுப்பொருள்களாலான கிண்ணங்களும் வைத்துப் புதைக்கப் பட்டுள்ளன.
தங்கத்தினால் ஆன பட்டங்கள்
இப்பட்டங்கள் மெல்லிய பொன் தகட்டினால் நீள்வட்ட வடிவில் (முட்டை வடிவில்) செய்யப் பட்டுள்ளன. தகட்டின் மீது முக்கோண வடிவில் கடுகுபோன்ற புள்ளிகள் அழகுற பொறிக்கப் பட்டுள்ளன. இப்பட்டங்களின் இறுதியில் இருபுறமும் கயிறு அல்லது கம்பி கட்டுவதற்குச் சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இப்பட்டங்கள் மடித்துச் சுருட்டி வைக்கும் வகையில் உள்ளன.
மேலும் எறிவேல், ஈட்டி, வாள் போன்ற 32 வகையான இரும்பு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விலங்கின உருவங்கள்
தாழிகளில் வைத்துப் புதைக்கப்பட்ட பொருள்கள் இறந்துபோன மக்கள் பயன்படுத்திய பொருள் களும் அவர்களுக்கு விருப்பமானவையும் அவர்களுடன் வைத்துப் புதைக்கப் பட்டிருக்கலாம். தாழிகளில் உள்ள பொருள்களில், உயர்தர வெண்கலக் கிண்ணங்களும் பூக்கிண்ணங்களும் வீட்டு விலங்குகளான, எருமை, ஆடு, மாடு போன்றவற்றின் வெண்கல உருவங்களும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்ற உருவங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் அணியும் வளை, மோதிரம், காப்பு, கடகம், கடுக்கண் போன்றவையும் சேகரிக்கப் பட்டுள்ளன.
மட்பாண்டங்களின் மீது இரும்புக் கருவியால் அழுத்தி வடிக்கப்பட்ட புள்ளி வடிவங்கள் அழகு செய்கின்றன. அடிப்பாகத்தில் நடுவே வட்டங்களும், அரை வட்டங்களும் தீட்டப் பெற்றுள்ளன.
மேலும் பல மனித எலும்புகளும் மண்டை யோடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இத்தாழியில் பெரிய அளவில் எலும்புகளும் சிறிய எலும்புகள் சிதைந்தும் இருந்துள்ளன.
சில மங்கிய செந்நிறம் வாய்ந்த மணிப்பாசிகளும் வெண்கலப்பாசிகளும் கழுத்து மாலைகளுமாகக் கண்டெடுக்கப்பட்டன. புதைகுழிகளுக்கு வெளியே அரவைக்கலும் காணப்பட்டன. பெரும்பாலும் மட்பாண்டங்கள் அனைத்தும் தரமான கணிமண்ணால் வனையப்பட்டு, சூளையில் வைத்து வேகவைக்கப்பட்டுள்ளன. அவை செவ்வண்ணம், கருப்பு வண்ணம் மற்றும் கருப்பு-சிவப்பு, கறுப்பு வண்ணங்களில் கவினுறக் காணப்படுகின்றன.
ஆதிச்சநல்லூர்ப் பறம்பு தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு ஒரு வற்றாத கருவூல ஊற்றாக நிலவுகிறது. விலை மதிப்பற்ற தொல்பொருட்களைத் தன்னகத்தை அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் களஞ்சியமாகத் திகழ்கிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு (2003-05)
நூறாண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஒன்றிய அரசின் தொல்லியல் கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி தலைமையில் 2003 - 2005-ஆம் ஆண்டு களில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இந்த அகழாய்வு பறம்பு என அழைக்கப்படும் இடுகாட்டுப் பகுதியில் மட்டுமே நடத்தப்பட்டன. இங்கு 600 ச.மீ பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சுடுமண்ணாலான பொருட்கள், இரும்புக்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் தாழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு (2019-21)
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் பறம்பு பகுதியில் (burial ground) மட்டும் நடைபெற்றுள்ளதால், முதுமக்கள் தாழிகள் பற்றியும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் பற்றி மட்டுமே அறிய முடிந்தது.
ஆனால் அம்மக்களின் வாழ்விடப்பகுதி, வாழ்வியல் நடைமுறைகள் பற்றி கேள்விக்குறியாக இருந்தது. அதற்கு விடைகாணும் வகையில் தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாழ்விடப்பகுதிகளிலும் அகழாய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரை 847 தொல்பொருட்களும் பல்வேறு வகையான பழங்கால மட்பாண்டங்கள் அதிக அளவிலும் கிடைத்துள்ளன. இத்தொல்பொருட்கள் ஆதிச்சநல்லூரின் வரலாற்றை மறுகட்டமைக்க உதவுகிறது. ஒவ்வொரு தொல்பொருளும் தண்பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த பண்டைய மக்களின் பண்பாட்டினை வெளிப் படுத்துகிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தற்போது மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியின் முக்கிய நோக்கம் இப்பகுதியின் தொடக்ககாலக் குடியேற்றத்தை அறிந்து கொள்வதும், ஈமக்காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள அக்கால மக்களின் வாழ்விடங்களை அடையாளங் காணுவதே ஆகும். தற்போதைய அகழ்வாராய்ச்சியானது நீண்ட காலக் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் ஆதிச்சநல்லூரின் பழங்கால வாழ்விடங்களைத் தொல்லியல் சான்று களின் மூலம் அடையாளப்படுத்தியுள்ளது.
இந்தக் கற்கருவிகள் மண்ணடுக்குகளிலிருந்து வெளிக்கொணரப்பட்ட முதுமக்கள் தாழிக்கு அடியில் காணப்படுகின்றன. செர்ட் வகை கற்களால் செய்யப்பட்ட கத்தி, முனை மற்றும் சுரண்டி போன்ற கருவிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க காலம் என இரண்டு காலகட்ட வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அகழாய்வானது இரும்புக்காலத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்தமக்களின் வரலாற்றை வெளிப்படுத்தி யுள்ளது. கற்காலத்தைச் சார்ந்த நுண்கற்காலக் கற்கருவிகள் கிடைத்திருப் பதன் மூலம் இரும்புக் காலத்திற்கு முற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. இது இப்பகுதியில் தொடக்ககாலக் குடியேற்றத்தைக் குறிக்கிறது. இரும்புக்கால வரலாற்றை அறிவதற்கு முத்தாய்ப்பாக இருப்பது முதுமக்கள் தாழிகளும் அதனோடு கூடிய ஈமப்பொருட்களாகும். இது தற்போதைய அகழாய்வு மற்றும் முந்தைய அகழாய்வுகளின் மூலமாக போதிய அளவு தரவுகளைப் பெற்றிருக்கிறது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி வரலாற்றில் தமிழி எழுத்துக்களைக் கொண்ட பானை ஓடுகள் தற்போதைய அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. மேலும், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கிடைக்கின்றன.
இதன் வாயிலாகத் தொடக்க வரலாற்றுக் கால மக்கள் இங்கு வாழ்ந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது. இம்மக்கள் இரும்புக் காலத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் வாழ்ந்து வந்திருப்பதை அவர்கள் பயன்படுத்திய பல்வேறு மட்பாண்டங்கள், தொல்பொருட்கள், துளையிடப் பட்ட கூரை ஓடுகள் போன்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
ஈமத்தாழிகளில் கிடைத்துள்ள தரமான தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட மட்பாண்ட வகைகள் வாழ்விடப் பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாகக் காலத்தால் முற்பட்ட வெள்ளை வண்ணப் புள்ளிகள் இட்ட கருப்பு-சிவப்பு வண்ண மட்பாண்டங்கள், கிண்ணங்கள் வாழ்விடப்பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை மேம்பட்ட மக்கள் பயன்படுத்தியதற்கு சான்றாகத் திகழ்கின்றன.
தொல்பொருட்களில் வட்டச்சில்லுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேலும், செம்பு மற்றும் இரும்பிலான மோதிரங்கள், கண்ணாடி மணிகள், தந்தத்தினாலான மணிகள், அரிய கல் மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், எலும்பு மணிகள், சுடுமண்ணாலான மணிகள் மற்றும் வளையல்கள் ஆகியவை தண்பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த மேம்பட்ட தமிழ்ச் சமூகத்தின் அணிகலன்களை கண்முன்னே சான்றாக நிறுத்துகின்றன.
வீடுகளின் களிமண் மண் தரையைத் தேய்க்க உதவும் கற்கள், அரவைக் கற்கள் மற்றும் கருவிகளைத் தீட்டும் கற்கள் என வீடுகளில் அன்றாட வாழ்க்கைக்கு பயன்பாட்டுப் பொருட் களும் அகழாய்வில் கிடைத்துள்ளன. பண்டைய மக்களின் கைவினைத் திறனைக் காட்டும் மனித மற்றும் பறவைகளின் சுடுமண்ணால் ஆன உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அன்றைய நீர் மேலாண்மை போன்று 21 எண்ணிக்கை கொண்ட சுடுமண்ணாலான குழாய்கள் கிடைமட்டத்தில் பொருத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கழிவு நீரை வெளியேற்றுவதற்கு வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாழ்விடப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் அகழாய்வுகளின் வாயிலாகக் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள், மட்பாண்டங்கள் மூலம் தண் பொருநை ஆற்றங்கரையில் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல், சமூகப் பொருளாதாரம், கலை, பண்பாடு, சூழலியல், படிப்பறிவு மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றை உலகிற்கு வெளிச்சமிட்டுள்ளது.
சிவகளை அகழாய்வு
சிவகளை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தூத்துக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
கீழடி போன்றே தொன்மை மிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளமாகக் கருதவேண்டியது சிவகளை தொல் மாந்தர் வாழ்விடம். சிவகளை முதற்கட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற ‘ஆதன்’ என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு, நமக்கு கீழடியை நினைவூட்டுகிறது. ஆதிச்சநல்லூரைப் போல செம்பினால் ஆன பொருட்களோ அல்லது தங்கத்தினால் ஆன பொருட்களோ சிவகளையில் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனினும், கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில் வரைப்பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகளை நோக்கும் போது இரும்புக்காலத்தில் சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல்லினை கரிமப் பகுபாய்வு செய்ததில் இதனின் காலம் கி.மு. 1155 கால வரையறை செய்யப்பட்டுள்ளது.
கொற்கை அகழாய்வு
இடைச்சங்க காலத்தின் பழந்தமிழ்ப் பாண்டிய நாட்டின் தலைநகராகவும் துறைமுகப்பட்டின முமாக விளங்கிய கொற்கையில் தமிழக அரசு தொல்லியல் துறை 1968-69-ஆம் ஆண்டு மேற்கொண்ட அகழாய்வு தமிழக வரலாற்றில் சிறப்பு பெற்றது. ஏனெனில், இந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமம் ஒன்றினைக் கரிமப் பகுப்பாய்விற்கு உட்படுத்தியதில் இதனின் காலம் கி.மு. 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் அமையப்பெற்றுள்ள கொற்கையில் மீண்டும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்த ஆண்டு அகழாய்வு செய்து வருகிறது. இங்கு பல்வேறு வகையான தொல்பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. சங்கு வளையல்கள் தயாரிக்கும் தொழில் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றில் முழுமையான சங்குகள், பாதி அறுத்த நிலையில் உள்ள சங்குகள், முழுவதும் உடைந்ததுமான சங்கு வளையல்கள் போன்றவை சான்று பகிர்கின்றன.
(தொடர்ச்சி அடுத்த இதழில்...)