திரைத்துறை எல்லோரும் வசிக்க விரும்புகிற கண்ணாடி மாளிகை. எல்லோருக்கும் ஆசையைத் தூண்டும் கனவு இல்லம். அது நினைத்தால் ஒரு மனிதனை வெற்றிக்குரியவனாக்கி, சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்கும். ஆனால் அது பெரும்பாலானவர்களை பாதியிலேயே வழுக்கிவிழ வைக்கும் மாயச் சிகரமாகவே இருக்கிறது.
அதில், திரைப்படப் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசையில் கோடம்பாக்கம் வருகிறவர்களின் பாடு பெரும் பாடு.
இவர்களின் வலிக்கு நிவாரணம் காணும் நோக்கில் அமைந்ததுதான் திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழிலாளர் கள் என்று ஒவ்வொரு அமைப்புகளும் பெரிய அளவில் சங்கங்கள் அமைத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுனை கின்றனர். அதுபோல் உருவான முயற்சிதான் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்.
இதை உருவாக்க எத்தனை முயற்சிகள் நடந்திருக்கின்றன? எத்தனைபேர் வியர்வை பெருக்கி இருக்கிறார்கள்? என்பது பலரும் அறியாத கதை.
ஒரு பாடலுக்கு இசைதான் மூலம் எனில் அதில் இடம்பெறும் வார்த்தைகளும் வரிகளும்தான் அந்தப் பாடலுக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றன. ஆதலால்தான் ஒளிவட்டத்திற்குள் வந்துவிட்ட பாடலாசிரியர்கள் மட்டும் இறவாப்புகழ் பெற்றவர்களாக, காலம் காலமாக, காலங்கள் கடந்தும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
இந்த திரைப்பட பாடலாசிரியர் சங்கம், எப்படி உருவானது? என்று, தற்போதைய திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான கவிஞர் தமிழமுதன் பதிவு செய்கிறார் இப்படி....
” திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு ஒரு சங்கம் அமைக்கவேண்டும் என்று விரும்பியவர் கவிஞர் வாலி. அதற்கான முன்னெடுப்புகளில்அவர் இறங்கினார். இதற்காக சென்னை தி. நகர் பனகல் பார்க்கில் ஆலங்குடி சோமு, பாண்டியராஜனுடைய மாமனார் அவிநாசி மணி இவர்களை அழைத்து வாலி ஆலோசனை நடத்தினார். எல்லோரும் நல்ல முயற்சி என்று பாராட்டினார்கள். இதுகுறித்து மறுநாள் முடிவு செய்யலாம் என்று கலைந்து போனார்கள். மறுநாள் வாலி தவிர, வேறு யாரும் அங்கு வரவில்லை. அவர்களை வாலி தொடர்புகொண்ட போது, மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் எங்களை மிரட்டுகிறார் கள் என்று அவர்கள் புலம்பினார்கள். ஏனென்றால் இந்த சங்கம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிரானது...
சம்பளப் பிரச்சினையைக் கிளப்புவார்கள் என்று கருதிவிட்டார்களாம். இந்த சம்பவத்தை கவிஞர் ஹிருதயா பதிவுசெய்திருக்கிறார்.
கவிஞர் வாலி அத்தோடு விட்டுவிடவில்லை. மறுபடி கண்ணதாசன், மருதகாசி, வாலி மூவரும் சங்கம் ஆரம்பிக்கலாம் என்று தி. நகரில் ஓட்டலில் அறை போட்டு அங்கே விவாதித்தார்கள். அப்போது கண்ணதாசனை சங்கத்தின் தலைவராக இருக்கச்சொல்கிறார் வாலி. கண்ணதாசனோ, மருதகாசிதான் நமக்கு மூத்தவர். ஆதலால் அவர் தலைவராக இருக்கட்டும். நான் செயலாளராக இருக்கிறேன். நீ பொருளாளராக இரு என்று வாலியிடம் கூறினார்.
அன்று காலையில் தான் அந்த சங்கம் தொடங்கப்பட்டது. சாயங்காலம் வரை இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மகிழ்வோடு இருந்திருக்கிறார் கள். மாலைக்குள் ஏதோ சிறு பிரச்சனை வந்து அப்படியே கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அதன் பின்பு அந்த சங்கத்தைப் பற்றியும் அந்த சம்பவத்தை பற்றி யாரும் பேசிக்கொள்ளவில்லை. வாலி இதன்பிறகு படாதபாடு பட்டும் சங்கத்தைத் தொடங்கி நடத்தமுடியவில்லை. இதுகுறித்து அவர், காலையில் ஆரம்பித்து சாயுங்காலம் கலைந்த ஒரே சங்கம் பாடலாசியர் சங்கம்தான் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
நானும், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா. சுப்பிரமணியம், கவிஞர். சொற்கோ கருணாநிதி மூவரும் எதார்த்தமாக வாலி ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பார்க்கச் சென்றபோது, மா.சு.தான் என்னை வாலியிடம், இவர்தான் பாடலாசிரியர் சங்கத்தின் தலைவர் என்று அறிமுகப் படுத்தினார். என்னய்யா... பாடலாசிரியர் சங்கத் தலைவரா? என்னய்யா சொல்றே.... உன் பேர் என்ன” என்கிறார். என் பெயர் தமிழமுதன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். சங்கம் ஆரம்பித்து எவ்வளவு நாட்கள் ஆகிறது என்றார். ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றேன். உடனே இதிலேயே நீ ஜெயித்துவிட்டாயே என்று கூறினார்.
எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார் கள் என்று கேட்டார் 84 உறுப்பினர்கள் என்று கூறினேன்.
கேட்பதற்கே மிகவும் நன்றாக இருக்கிறதே! எப்படிய்யா இப்படி எல்லாம் நடத்துகிறாய்? என்று வியந்து கேட்டார். இதன்பின் அவருக்கு உடநலம் ஒத்துழைக் காமல் போய்விட்டது. வாலி இறந்த போது, ஒரு பத்திரிகையிலிருந்து என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். ஒரு தயாரிப்பாளர் இறந்துவிட்டால் அன்று முழுவதும் ஷூட்டிங் நிறுத்தி விடுகிறார்கள். ஒரு இயக்குனர் இறந்துவிட்டால் அந்த நாள் முழுவதும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விடுகின்றது. ஆனால் ஒரு மிகப்பெரிய பாடலாசிரியர் இறந்துவிட்டிருக்கிறார். ஷூட்டிங் நடக்கிறதே என்றார்கள். அது என்னை சிந்திக்கவைத்தது.
அதேபோல், அந்த காலகட்டத் தில் பாடலாசிரியர்கள், ஒரு இக்கட்டான சூழல் இருந்தது. ஒரு ஆடியோ வெளியிடுகிறபோது பாடலாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட் டார்கள். அவர்களை மேடையில் ஏற்றுவதும் கிடையாது. அந்த நிகழ்வு எனக்கும் நடந்தது. என்னுடைய அமுதே” படப்பாடல் வெளியிடுகிறபோது யாருமே என்னை மேடைக்கு அழைக்கவில்லை. அப்பொழுது என் நண்பர்கள் அனைவரும் நீங்கள் மேடைக்குச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அப்போது நான் எல்லோரையும் தள்ளிக்கொண்டு சென்று அந்த மேடையில் முன்பு நின்றேன். அப்போது எல்லோருக்குமே என்மீது சிறிது வெறுப்பு ஏற்பட்டது. என்ன இவன் எல்லோரையும் தள்ளிக்கொண்டு வந்து நிற்கிறானே? இவன் என்ன அரசியல் செய்கிறானா? என்று, தயாரிப்பாளர் என்னைக் கேட்டார். அப்போது நான் கூறினேன், நான் ஒரு பாடல் எழுதிவிட்டு வரவில்லை. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எழுதியிருக்கிறேன். நீங்கள்தான் என்னை மேடைக்கு அழைத்து இருக்கவேண்டும். ஆதலால்தான் நானே மேடைக்கு வந்தேன். இது என்னுடைய உரிமை என்று கூறினேன். இதன்பிறகு இந்த நிலையை மாற்றும் முயற்சியில் இறங்கினோம்.
நாங்கள் பாடலாசிரியர்கள் சங்கத்திலிருந்து வந்திருக்கிறோம். இந்த பாடலாசிரியரை கௌரவப்படுத்தப் போகிறோம். அவருக்கு ஒரு சால்வை போட்டு அவருக்கு சிறப்பு செய்யப் போகிறோம்.
அவரை மேடைக்கு கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு அந்த பாடலாசிரியர்களுக்கு சிறப்பு செய்யத் தொடங்கினோம். அப்போது, நிகில்முருகனாக இருக்கட்டும் அண்ணன் மௌனம் ரவியாக இருக்கட்டும், ஆறுமுகம், கோவிந்தராஜ், இதுபோன்று நிறைய பி.ஆர்.ஓ. க்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், எனக்கு ஐ. பி.ஆர்.எஸ் என்கின்ற (Indian performance right society) இந்த அமைப்பிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் வந்திருந்தது. இந்த நிகழ்வு 2008லில் நடந்தது.
நான் “அமுதே” படத்திற்கு பாடல் எழுதிபோது என்னுடன் பயணித்தவர் கள் அனைவரும் இசை வசந்தம். எஸ். ஏ. ராஜ்குமார் அவர்களுடன் பயணித்தவர்கள். அங்கே இருந்தவர்களில் இ. எஸ். மூர்த்தி என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் தெலுங்குப் படங் களுக்கு பாடல் எழுதுவார். அவர் எஸ். ஏ ராஜ்குமார் அவர்களுடன் இணைஇசை அமைப்பாளராக பணியாற்றினார்.
அவர்தான் என்னுடைய “அமுதே” பாடல் வெளிவந்தவுடன் நீங்கள் ஐ.பி.ஆர்.எஸ்.ல் பதிவு செய்யவேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன் பின்புதான் ஐ.பி.ஆர்.எஸ். என்கின்ற அமைப்பு இருப்பதே எனக்கு தெரியும். என்னுடைய இன்னொரு நண்பன் ”ஆசான்” அவருடைய இசையில்” செவ்வேள்” என்கிற படத்தில் நான் பாடல்கள் எழுதி இருக்கிறேன்.
அவர் மூலமாகத்தான் நான் ஐ.பி.ஆர்.எஸ். உறுப்பினராக சேர்ந்தேன். சேர்ந்த முதல் ஒரு வருடத்திற்குள்ளாகவே எனக்கு 20,000 ரூபாய் ஐ. பி. ஆர். எஸ். நிறுவனத் திலிருந்து ராயல்டியாக கிடைக்கப் பெற்றேன்.
நான் திரைத்துறையில் நெருக்கமாக பயணித்த நண்பர். பாலமுரளிவர்மன் அவரிடம் நான் கூறினேன் ஐ. பி. ஆர். எஸ். என்றால் என்னவென்றே தெரியாமல் நிறைய பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள். நாம் ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று பின்புதான் 2012ல் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி என்னுடைய வேலையை விடுகிறேன். முழு நேரமாக திரைத்துறைக்கு வந்து விட்டேன். ஏனென்றால் ”மாயாண்டி குடும்பத்தார்”, “கோரிப்பாளையம்” ,”மிளகாய்” ஆகிய மூன்று படங்களின் பாடல்களும் எனக்கு மிகப்பெரிய வெற்றி ஏற்படுத்திக் கொடுத்தது. மூன்று படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரேடியோ மிர்ச்சி அப்கம்மிங் லிரிஸிஸ்ட் என்று ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அதில் நானும் ஒருவனாக இடம்பெறுகிறேன். இதேபோன்று விஜய் டி.வி.யிலும் என்னை பெருமைப்படுத்துகிறார்கள். பின்பு ஆனந்த விகடனில் பேட்டி எடுக்கிறார்கள். இதுபோன்று எனக்கு சிறப்புகள் கிடைத்த பின்புதான் நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து வெளியில் வருகிறேன். நாங்கள் பேசிக்கொண்டதைப் போன்று 2012 ஜனவரி 25-ஆம் தேதி இசையமைப்பாளர் ”ஆசான்” அவர் களுடைய காவியாசிறீ ஒளிப்பதிவுக் கூடத்தில்தான் சங்கத்தை துவக்கினோம்.
*
தலைவராக வேறு யாரையாவது நியமிக்கலாம் என்று திட்டமிட்டோம். அப்போது என்னுடைய நண்பன் பால முரளிவர்மன் கூறினார் நீதான் இந்த சங்கத்தை தோற்றுவித்திருக்கிறாய், நீ தான் இந்த சங்கத்திற்கு தலைவராக இருப்பது முற்றிலும் பொருந்தும். அப்போதுதான் இந்த சங்கத்தினுடைய நெளிவு சுளிவுகளெல்லாம் தெரிந்துகொண்டு நீ பயணிக்க முடியும் என்றும் என்னிடம் கூறினார். அதன் பின்புதான் சங்கத்திற்கு நான் தலைவராகவும், இளையகம்பன் செயலாளராகவும், கவிஞர் பச்சியப்பன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டோம். பின்னர் சங்கத்தை முறையாக, 2012 ஏப்ரல் மாதம் பதிவுசெய்து பதிவு எண் 206-ஐப் பெற்றோம்.
அப்போது, என் மானசீக குருவும் அறிவுத் தந்தையுமான மகாகவி ஈரோடு தமிழன்பன், “சங்கத்தால் உனக்குத் தொழில் பாதிப்பு ஏற்படும். உனக்கு வாய்ப்பு தரமாட்டார்கள். ஏற்கனவே இதற்கு முன்பே இப்படி எல்லாம் நடந்திருக்கிறது” என்று கவலையைத் தெரிவித்தார். பிறகு நம்பிக்கையூட்டும் வகையில், ”சரி நீ செய். நாங்கள் எல்லாம் இருக்கிறோம்” என்றார்.
சங்கம் தொடங்கிய பின்பு ஒவ்வொரு மாதமும் கூட்டம் போடுவோம். நண்பர் ஆசான் அவர்கள் குடியிருந்த, தசரதபுரம் பெரியார் தெருவில் ஒரு காலிமனையில், மணல் வெளியில் அந்தக் கூட்டம் நடக்கும். 50, 60 பாடலாசிரியர்களை உறுப்பினராகச் சேர்த்த நிலையில், கோட்டைக் குமார் என்கிற மிகப்பெரிய தயாரிப்பாளர், “மாமதுரை” என்கிற ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் கோட்டைக்குமாரும் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.
“மதுரை மதுரைதான் மணக்கும் மதுரைதான்” இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலை இளையராஜாவே பாடியிருப்பார். கோட்டைக்குமாரின் இரண்டாவது படம் ”காதல் பொல்லாதது”. அதில் நான் மூன்று பாடல்கள் எழுதினேன். அப்போது பாட்டெழுத ஒரு மூத்த கவிஞர் வேண்டும் என்று என்னைக் கேட்டார். நான் உடனே புலமைப்பித்தன் அவர்களை அறிமுகப்படுத்தி பாட்டெழுதி வாங்கிக்கொடுத்தேன். அந்த நட்பில் சங்கம் பற்றி அறிந்த கோட்டைக்குமார், என் வீட்டில் முதல் மாடியில் உள்ள இடத்தில், சங்க அலுவலகத்தை நடத்துங்கள் என்று மனமுவந்து கொடுத்தார். இதை எப்போதும் எங்களால் மறக்க முடியாது.
அவரால், வாடகையே இல்லாமல் எங்களுக்கு ஒரு அலுவலகம் கிடைத்தது. அந்த அலுவலகம் சிறப்பாக அமைந்ததனால், புதிதாக வந்தவர்கள் எல்லாம் இந்த அலுவலகத்தைப் பார்த்து உறுப்பினராகச் சேர்ந்தார்கள். அதன் பின்பு ஒவ்வொரு மாதமும் நாங்கள் கூட்டம் போட ஆரம்பித்தோம்.
அதேபோல் புதிய கவிஞர்கள் 80 பேரின் கவிதை நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கிறோம்.
22 தனிப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டு பாடலாசிரியர்களை வெளிச்சப்படுத்தி இருக்கிறோம்.
எங்கள் இயக்கத்தைப் பார்த்த பாடலாசிரியர் ஐயா முத்துலிங்கம் “சங்கம் என்பது கண்ணதாசனுடைய கனவுய்யா. இதை அவராலேயே செய்ய முடியவில்லை. நான் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறேன் என்று பாராட்டினார். இதன்பின் பலரின் ஆதரவும் கிடைத்தது. பாடலாசிரியர் சங்கத்திற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தினுடைய வேந்தர் பாரிவேந்தர், மகாகவி ஈரோடு தமிழன்பன் இவர்கள் இருவரும்தான் மதிப்பியல் தலைவர்களாக இருந்து வருகிறார்கள். ஐயா புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, சொற்கோ. கருணாநிதி, கோட்டைக்குமார், இவர்கள் சங்கத்தின் நெறியாளர்களாக இருந்து, வழி நடத்துகின்றனர்.
சங்கத்தின் சார்பில், புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் முதுபெரும் பாடலாசிரியர் ஆத்மநாதன் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து, அவர்களுக்கு உடைகளுடன் 5000 ரூ வழங்கினோம்.
அதேபோல், 2012-க்கு முன்பு புதிதாக பாடல் எழுதியவர்களின் பட்டியல்களை தயார் செய்து, அவர்களுக்கு ”இளந்தளிர்” என்கின்ற விருதும் கவிஞர். புலமைப்பித்தன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்கின்ற விருதும் கொடுத்தோம். இது மாதிரி ஒவ்வொரு ஆண்டும், சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் புதிய பாடலாசிரியர் அறிமுகம் ஆகி இருந்தால், அவர்களை அழைத்து அவர்களுக்கு இளந்தளிர் என்கின்ற விருது கொடுத்து, அவர்களுக்கு ஒரு சான்றிதழும் கொடுத்து சிறப்பு செய்கிறோம்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரு பாட்டு, இரண்டு பாட்டு எழுதி இருந்தால்கூட அவர்களை ஐ.பி.ஆர்.எஸ். -க்கு அழைத்துச் சென்று அவர்களை உறுப்பினர்கள் ஆக்கிவிடுவோம்.
அவர்களிடம் காசு இல்லாவிட்டால்கூட அந்த உறுப்பினருக்கான பணத்தை நானே போட்டு அவர்களை உறுப்பினராக்கி இருக்கிறேன். ஐ.பி.ஆர்.எஸ். இல் தமிழ்நாட்டில் இருந்து ஆறு நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தது. அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன். இசையமைப்பாளர் தினா, பாடலாசிரியர் விவேகா, இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, ஆடியோ ப்ரடியூசர். தக்ஷிணாமூர்த்தி, போன்றோர் கடந்த ஆண்டிலிருந்து செயற்குழு உறுப்பினர்களாக ஐ.பி.ஆர்.எஸ். ல் பணியாற்றிகொண்டு வருகிறோம்.
இடையில் ஐயா புலமைப்பித்தன் அவர்களுக்கு ஐ.பி.ஆர்.எஸ். ல் இருந்து பணம் வராமல் இருந்தது. எதற்காக நின்றுபோனது என்று தெரியவில்லை. அப்போது புலமைப்பித்தன் அவர்கள் சொன்னார். எனக்கு ஐ.பி.ஆர்.எஸ் - ல் இருந்து பணம் வரவில்லை, நீதான் அந்த வேலைகள் எல்லாம் செய்கிறாயே அதை கொஞ்சம் பார்க்கிறாயா என்று என்னிடம் கேட்டார். அதன் பின்பு நான் ஐ.பி.ஆர்.எஸ். ல் சசிபூஷன் அவர்களை பார்த்து அவர்களுக்கு என்ன ஆவணங்கள் வேண்டுமோ, அதை எல்லாம் புலமைப்பித்தன் அவர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்து, அதை சரி செய்த பின்பு, அவர் வராமல் இருந்த பணம் முழுவதும் கிடைக்கப் பெற்றார். இதேபோன்று கவிஞர். மு. மேத்தா அவர்களுக்கும் வெகுநாட்களாக ஐ.பி.ஆர்.எஸ். ல் பணம் வராமல் இருந்தது. இந்த செய்தி அறிந்து கொரோனா காலகட்டத்தில் கூட, ஏழு முறை நான் அவர் வீட்டுக்கு சென்று, தேவையான ஆவணங்கள் எல்லாம் சேகரித்து, அவருக்கு சேரவேண்டிய பணத்தை வாங்கிக்கொடுத்தேன். இதுபோன்று, முத்துலிங்கம் அவர்களுக்கும் பணம் வரவில்லை என்ற செய்தி கேட்டு, அவருக்கு தேவையான ஆவணங்களை எல்லாம் சேகரித்து, ஐ.பி.ஆர்.எஸ். ல் கொடுத்து அவருக்கும் சேரவேண்டிய தொகையினை பெற்றுக் கொடுத்தேன்.
இதேபோன்று வளரும் பாடலாசிரியர்கள், பாடல் எழுத வருகிறவர்கள் ஒரு முறையான இசை கம்பெனியில் அவருடைய பாடல்கள் வெளிவந்திருக்காது. ஆர்வத்திற்காக அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த பாடலை வைத்துக்கொண்டு என்னிடம் வந்து கேட்கிறபோது, நான் இவர்களுக்காகவே ஐ. மியூசிக். இன்டர்நேஷனல் என்கின்ற ஒரு இசை கம்பெனியை உருவாக்கி அதை முறையாக பதிவுசெய்து வைத்திருக்கிறேன். அதில் இவர்களுடைய பாடல்களை பதிவு செய்து, அதன் மூலம் ஐ.பி.ஆர்.எஸ். ல் அவர்களை சேர்த்து அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைத்தொகையை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். உடல் நலிவுற்ற பாடலாசிரியர்கள் பலருக்கும் பல வகையிலும் சங்கம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.
அப்பொழுதுதான், சுப்பிரமணி என்று ஒரு கவிஞர் கோயம்பேட்டில் பழக்கடையில் வேலை செய்கிறார்.
அவரும் ஒரு பாடலாசிரியர்.
அவருக்கு தேவையான ராயல்டி யையும் ஐ.பி.ஆர்.எஸ். ல் இருந்து வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.
அவர் சொல்லித்தான், இரவு எனக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகிறார். என் பெயர் பரதன். என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள். என்னை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் என்று அவர் அழுதார். “எருக்கஞ் செடி ஓரம் இறுக்கி அணைச்சேன் மாமா” என்ற வெற்றிப் பாடல் என்னுடையதுதான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஒன்றரை வருட காலம், அவருக் குத் தேவையான உணவு, இருப்பிட வசதி என்று செய்துகொடுத்தோம். இவரைத் தங்கவைத்திருந்த அறையில்தான், பாடலாசிரியர் முத்து விஜயனை அவரது கடைசிக்காலத்தில் தங்கவைத்துப் பராமரித்தோம். குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட, நிறைய புகழ்பெற்ற பாடல்களை எழுதிய அவர் மறைந்த பின், நாங்களே அவரது இறுதிச் சடங்கையும் செய்தோம்.
“துள்ளாத மனமும் துள்ளும்” என்ற படத்தில் இயக்குனர் எழில் அவர்கள்தான் அவரை அறிமுகப்படுத்தினார். மேகமாய் வந்து போகிறேன் என்கின்ற பாட்டு முத்துவிஜயன் எழுதியது, இந்த மெட்டிற்கு வைரமுத்து எழுதிய பாடல், நடிகர் விஜய்க்கு பிடிக்கவில்லை. டெமோவில் கேட்ட சுவை எனக்கு இதில் கிடைக்கவில்லை. அதை யார் எழுதினார் என்று கேட்கிறபோது, அதை எழுதியது முத்துவிஜயன் என்பதைத் தெரிந்துகொண்டு, அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் விஜய்தான். முத்துவிஜயனுடைய 16-வது நாளையும் சங்கம் சார்பிலேயே நடத்தினோம். பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
இதேபோன்று நானும், வாசனும் ”இரட்டை ஜடை வயசில்” பாடல்கள் எழுதினோம். எனக்கும் வாசனுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்றால் கூட வாசன் மீது எனக்கு ஒரு நல்ல மரியாதை இருந்தது. அவர் நன்றாக எழுதக்கூடியவர். நல்ல திறமைசாலி. அவர் இறந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகி இருந்தன. நான் சங்கம் ஆரம்பித்த பின்பு, இந்த குடும்பத்திற்கு ராயல்டி வாங்கி கொடுக்கவேண்டும் என்று, வாசன் பிறந்த ஊரான தஞ்சைக்குச் சென்று, அவருடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஐ.பி.ஆர்.எஸ் லில் சேர்த்து, அவர்கள் இப்பொழுதும் அந்த ராயல்டி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நா. காமராசன், கடைசியாக வாங்கிய விருது, பாடலாசிரியர் சங்கத்தில்தான். அதற்கு முந்தைய ஆண்டு மூன்று பேர்களுக்கு விருது கொடுத்தோம். புலவர். புலமைப்பித்தன், கவியரசர் இளந்தேவன், நா. காமராசரை போன்று, இளந்தேவனும் இறுதியாக விருது வாங்கியது பாடலாசிரியர் சங்கத்தில்தான். அது மாதிரியான ஒரு அங்கீகாரத்தை அவர்களுக்கு நாங்கள் தேடித் தேடி கொடுத்தோம். தற்பொழுதும் அதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.
அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர் ஈரோடு தமிழன்பன் தான்.
பாடலாசிரியர் சங்கம் வந்த பிறகு, மூத்த கவிஞர்கள், புதிய பாடலாசிரியர்கள், இளைய பாடலாசிரியர்கள் என்று ஒவ்வொருவராக பிரித்துதான் நாங்கள் விருதுகள் வழங்கினோம். கு. கார்த்திக், அருண் காமராசு, உமாதேவி, விவேக் இவர்கள் எல்லோரும் ரஜினி படத்திற்கு பாடல்கள் எழுதிவிட்டார்கள். இவர்களெல்லாம் முதல் பாடல் எழுதுகிறபோதே அவர்களுக்கு நாங்கள் இளந்தளிர் விருது கொடுத்திருக்கிறோம். கவிஞர் விவேக் 36 வயதினிலே படத்திற்கு எழுதியபோதுதான், நாங்கள் அவருக்கு இளம் தளிர் விருதுகொடுத்தோம். இப்போது அவர் ரஜினி படத்திற்கு பாடல் எழுதி இருக்கிறார். இவர்கள் இப்படி எல்லாம் வருவார்களா என்று எங்களுக்கு தெரியாது. இருந்தபோதிலும் நாங்கள் ஒவ்வொரு புதிய பாடல் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தோம்.
இதில் ஒரு வேடிக்கையான சம்பவம் என்னென்றால் மேதகு பிரபாகரன் மகன் இறந்ததை வைத்து ஒரு படம் எடுத்திருந்தார்கள். அந்தப் படத்தில் எஸ். ஆர். எம். பாரிவேந்தர் அவர்கள் ஒரு பாடல் எழுதி இருந்தார். அவருக்கும் அந்த விழாவிலே இளந்தளிர் விருது கொடுத்து சிறப்பு செய்தோம்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், 65 பேரை நான் ஐ.பி.ஆர்.எஸ். லி ல் உறுப்பினராக சேர்த்திருந்தேன். அவர்கள் அனைவருக்கும் இந்த 2022 தீபாவளிக்கு 7500 தீபாவளி போனஸ் மாதிரி அனைவருக்கும் வழங்கியிருக்கிறது. இதில் குறிப்பாக குமரி கலைப்பித்தன் என்கிற ஒருவர். அவருக்கு வயது 83 ஆகிறது. அவர் 1960 களிலேயே சினிமாவிற்கு பாடல் எழுத வேண்டும், நாடகம் போடவேண்டும் என்று வந்தவர். அவருக்கு 80 வயது இருக்கிறபோதே என்னிடம் வந்திருந்தார். அப்பொழுது அவருடைய குலதெய்வத்திற்கு ஒரு பாடல் எழுத வைத்து, அவரை ஐ.பி.ஆர்.எஸ்.-ல் சேர்த்துவிட்டிருந்தேன். தற்பொழுது அவருக்கும் 7500 ரூபாய் வந்திருக்கிறது. என்னுடைய 83 வது வயதில், என் எழுத்துக்கு, என் பாடலுக்கு முதல் முறையாக இப்போதுதான் நான் காசு வாங்குகிறேன் என்று அவர் கூறினார். அந்த பெருமை சங்கத்தைதான் சாரும் என்று, சங்கத்திற்கு அவர் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பழம் விற்கும் சுப்பிரமணி என்ற ஒருவர், நட்சத்திரன் என்று சைக்கிளில் தேநீர் விற்கும் ஒருவர், இவர்களெல்லாம் பாடல் எழுதுகிறார்கள் என்று அறிந்து, அவர்களுக்கும் தனிப்பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பை உருவாக்கி, அவர்களும் தற்போது ஐ.பி.ஆர்.எஸ் ராயல்டியினை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ”மகிழ்வித்து மகிழ்” என்ற வாசகத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக வகுத்துக்கொண்டு பயணிக்கிறோம்” என்கிறார் கவிஞர் தமிழமுதன்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஈரோடு தமிழன்பன் அவர்களும் அச்சமில்லை அச்ச மில்லை என்கின்ற ஒரு படத்தில் பாடல்கள் எழுதி யிருக்கிறார் அவருக்கும் இந்த 2022 தீபாவளி போனஸ் ஆக ஐ.பி.ஆர்.எஸ். ல் இருந்து 7500 ரூபாய் கிடைக்கப் பெற்றிருக்கிறார்.
வாலியும் கண்ணதாசனும் கண்ட கனவு, நனவாகி இருக்கிறது.