எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும், அவற்றில் ஒரு சில படங்கள் நமக்குள் ஏதோ ஒருவித வேதிவினையை நிகழ்த்தி நம் மனதிற்குள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘தனியாவர்த்தனம்’. எப்போதோ பார்த்த அந்தப்படம், இப்போதும் நினைவை நெருடிக்கொண்டே இருக்கிறது.
சாபங்கள், சர்ப்பங்கள் போன்றவை... அவை யாரை நோக்கி ஏவி விடப்படுகிறதோ, அவர்களைத் தீண்டி நஞ்சைக் கக்கி வாழ்வையே நிர்மூலமாக்குகிறது. நல்லவர்களாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. காந்தாரியின் சாபத்திற்கு கிருஷ்ணர் ஆளானதே இதற்கு உதாரணம். தெய்வத்தையே சாபம் பழி தீர்க்கும் என்றால், தெய்வத்தின் சாபத்தை ஒரு குடும்பமே எதிர் கொள்ள நேர்ந்தால்.. அந்த குடும்பத்தின் கதி என்னவாகும்?
பாலனின் குடும்பம் தெய்வ நிந்தனையால் பகவதியின் சாபத்திற்கு ஆளான குடும்பம்! கடந்த இரண்டு தலைமுறைகளாக அந்த குடும்பத்தின் ஏதேனும் ஒரு ஆண் வாரிசு, மன நோயாளியாகி விடும் சாபம் தொடர்கிறது. இப்போது மூன்றாம் தலைமுறையாக பாலனின் தாய்மாமன் ஸ்ரீதரன் மனநோயாளியாக சங்கிலியால் கட்டப்பட்டு மாடி அறையில் தனிமை சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.
சாபத்தின் கண்ணி ஸ்ரீதரனுடன் முடியுமா? அல்லது பாலன் தலைமுறையிலும் அது தொடருமா? என்கிற கேள்வி, பயமும் பரிதவிப்புமாக அனைவர் மனங்களிலும் வியாப்பித்திருக்கிறது.
பெருமை கொண்ட தரவாட்டின் கௌரவம் இக்கொடும் சாபத்தால் சந்தனம் போல் நாளுக்கு நாள் தேய்ந்துக் கொண்டிருக்கிறது. பாலனின் தங்கை சுமித்ரை, கல்யாண வயது தாண்டியும் சாபத்தின் மிச்சம் போல் முதிர்கன்னியாய் அந்த வீட்டில் வளைய வந்து கொண்டிருக்கிறாள்.
இந்நிலையில் ஒருநாள் பாலன் ஸ்ரீதரனின் மீது பரிதாபப்பட்டு அவரின் கால் சங்கிலியை கழட்டி விடுகிறான். அன்றிரவு ஸ்ரீதரனின் பாட்டும் இசையும் மாடியறையில் இருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மறுநாள் விடியலில் வீட்டு குளத்திற்கு குளிக்க வரும் பாலன், அங்கு ஸ்ரீதரனின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு திகைக் கிறான். சாபம் அந்த தலைமுறை ஆணையும் தின்று செரித்து விட்டது.
இனி பாலனின் தலைமுறை.இதில் பாலனும்,அவன் தம்பி கோபியும்!சாபத்தின் நிழல் இந்த இருவரில் யார் மீது விழ போகிறதோ என்கிற திகில் கலந்த பயத்தில் அவர்களின் குடும்பம் மட்டுமல்லாமல்,மொத்த கிராமமே எதிர் நோக்கிக் காத்திருக்கிறது.
அன்று நள்ளிரவே கொடும் கனவு கண்டு அலறிக் கொண்டு விழித்து எழுகிறான் பாலன்!கனவின் பாதிப்பில் அவன் மிரண்டு உட்கார்ந்திருக்க, மொத்த குடும்பமும் அவனை பார்த்து அழுகிறது. சுதாரித்துக் கொண்டு பாலன், தனக்கு பயப்படும்படியாக ஒன்றும் இல்லை, வெறும் கனவு தான் என்று சமாதானம் சொல்கிறான். இதுபோல் கனவில் இருந்துதான் சாபத்தின் கொடிய கைகள் நீளும், இப்படிதான் ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்திருக்கிறது என்று அவனிடம் சொல்லப்படுகிறது.
மறுநாளில் இருந்து வீட்டார், ஊரார் பார்வையிலும் நடவடிக்கையிலும் நிறைய மாற்றங்கள்! ஆனால் பாலன் மாறிவிட்டதாகவும், நாளுக்கு நாள்அவனுக்கு மனநோய் முற்றிக் கொண்டிருப்பதாக வும் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள். இந்த 'பெரியவர்களிடம் 'இருந்து தப்பித்து குழந்தைகளுடன் குழந்தையாகி விடலாம் என தான் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான்.
அங்கேயும் மிரட்சிப் பார்வைகளை எதிர் கொள்ள நேரிடுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு மாணவி, உங்களுக்கு பைத்தியமாமே என்று கேட்டு வகுப்பில் பயத்தில் அழ, அதிர்ச்சியில் பாலனுக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்து விடும் போலாகிறது!
வீட்டின் கண்ணீர், ஊரின் கிண்டல், பிரசன்னம் பார்ப்பது முதல் பரிகார பூஜை செய்வது வரையிலான சடங்குகள் / சம்பிரதாயங்கள் பாலனுக்குள் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. பொறுக்க முடியாமல் கோபப்பட்டு கத்துகிறான். அதையும் மனநோயின் அறிகுறியாக அனைவரும் எடுத்துக் கொள்கிறார்கள்.
பாலன், தான் பைத்தியம் அல்ல என சொல்ல கூட விரும்பாத விரக்தியின் உச்சநிலையை அடைகிறான்.தங்கையின் திருமண ஏற்பாட்டின் போது அவன் ஒரு அந்நியனாக அடையாளம் காட்டப்படுகி றான். மனைவியும் குழந்தைகளும் அவனிடமிருந்து விலக்கப்படுகி றார்கள். ஸ்ரீதரனின் மாடி அறை இப்போது பாலனுக்கு உரியதாகிறது.
பாலன் தனிமை சிறையில் அடைபடுகிறான். அதில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைத்ததா? சாபத்தின் இரக்கமற்ற கோரப்பிடியில் இருந்து அவன் தப்பித்தானா?
தனி ஆவர்த்தனம் (மலையாளம்) படம் பாருங்கள்! மேற்கண்ட கேள்விகளுக்கு முகத்தில் அறையும் யதார்த்த பதில் கிடைக்கும்.
1987-ல் வெளியான இப்படத்தின் கதை,திரைக்கதையை எழுதியவர் ஏ.கே.லோகிததாஸ். இயக்கம் : சாபு சிரில்.
மம்முட்டி, சரிதா, திலகன், முகேஷ், கவியூர் பொன்னம்மா, பிலோமினா ஆகியோர் அழுத்தமான கதைக்கு ஏற்ற பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். பின்னணி இசை: ஜான்சன், பாடல் இசை: எம்.ஜி.ராதாகிருஷ்ணன். இருவரும் காட்சிகளுக்கு கூடுதல் இறுக்கத்தையும்,நெகிழ்வையும் தேவைக்கு ஏற்ப கொடுத்துள்ளார்கள்.
ஐ.எம்.டி.பி. -தரவரிசையில் 8.7 மதிப்பெண்கள் பெற்றுள்ள இப்படத்திற்கு திலகன், பிலோமினா இருவருக்கும் கேரள அரசின் சிறந்த துணை நடிகர்களுக்கான விருதும், லோகிததாஸ்க்கு சிறந்த கதைக்கான விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இதைதாண்டி கேரள மக்கள் மலையாளத்தின் ஆக சிறந்த படமாக இதை இன்றும் கொண்டாடி வருகிறார்கள்!
பாரம்பரிய நம்பிக்கைகள், அந்த நம்பிக்கையில் இருந்து உருவாகும் அமானுஷ்ய கதைகள், இக்கதைகளில் இருந்து மனம் கற்பித்துக் கொள்ளும் யட்சிகள், மோகினிகள். இவை வந்து ஆட்டம் போடும் கனவுகள், பயங்கள்...பாலனை பொறுத்தவரை இவையே சாபங்கள் ஆகின்றன.
இந்த சாபங்கள் பாலனுடன் முடியாமல் போகலாம், பாலனின் மகன் ஹரிக்குட்டனையும் தொட்டு தொடரலாம்!
ஏனெனில், தனியாவர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!