அவன் அந்த உச்சிப்பொழுதில் ஒரு துணிக் குடைக்குக் கீழே தன்னுடைய முகத்தை மறைத்தவாறு அவளுடைய வீட்டின் வாசலுக்கு வந்தான். குடையை மடக்கியவாறு அவன் சுற்றிலும் கண்களை ஓட்டினான்.
எங்கும் பேரமைதி... நிலத்தில் ஒரேயொரு காகம்கூட இல்லை. தென்னை மரங்களுக்குக் கீழே சிறிய நிழல்கள் விழுந்திருந்தன. மற்ற எல்லா இடங்களிலும் மஞ்சள் வெயில்....
"கொஞ்சம் கதவைத் திற.'' அடைக்கப்பட்டிருந்த கதவைத் தட்டியவாறு அவன் கூறினான். உள்ளே யாரும் பேசவில்லை. அவன் தடிம னான நான்கு மரத் துண்டுகள் மட்டுமே இருந்த சாளரத்திற்கு அருகே போய் நின்று உள்ளே பார்த்தான். ஒரு மூலையில்... வெறும் தரையில் அவள் மல்லார்ந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய வெளிறிப்போன வீங்கிய வயிற்றையும் புடவைக்குக்கீழே தெரிந்த கணுக்கால்களையும் பார்த்தவாறு அவன் ஒரு நிமிடம் வெறுமனே நின்றிருந்தான். பிறகு மீண்டும் அவன் கூறினான்: "கொஞ்சம் கதவைத் திற... சாரதா..''
அவள் கண் விழித்தாள். எழுந்து நின்றாள். அவள் தன் அழகை முற்றிலுமாக இழந்துவிட்டதைப்போல இருந்தாள். உதடுகள் மிகவும் வெளிறிப்போய்க் காணப்பட்டன.
"என் சாரதா... தயவுசெஞ்சு கொஞ்சம் இந்த கதவைத் திற'' அவன் கூறினான்: "யாராவது பார்க்கறதுக்கு முன்னால நான் அங்க வந்திடுறேன்.''
அவள் சாளரத்திற்கருகில் வந்தாள்.
"ஏன் வந்தீங்க?'' அவள் கேட்டாள்.
"நான் சொல்றேன். சீக்கிரமா கதவைத் திற.'' அவன் கூறினான். அவள் தலையை ஆட்டினாள்.
"இங்க வரவேணாம்.'' அவள் முணுமுணுத்தாள்.
அவன் அவளுடைய கையைப்பிடித்து அந்த சாளரத்தின் கதவிற்கு அருகில் வைத்தான்.
"பார் சாரதா... உன்னைப் பார்க்க வர்றதுக்கு எனக்கு உரிமை இல்லியா? நீ இந்த அளவுக்கு மாறிட்டியா? என் முகத்தைப் பார்த்து சொல்லு.''
"கையை விடுங்க'' அவள் கூறினாள்.
அவன் சிரித்தான். அவள் அவனுடைய பற்களின் அழகிற்கு முன்னால் மீண்டும் செயலற்றவளாகி விட்டாள். அவனுடைய முகத்தை தன்னுடைய சுதந்திரமாக இருந்த கையால் தடவியவாறு அவள் மெதுவான குரலில் கூறினாள்: "சரி... நான் கதவைத் திறக்கறேன்.''
அவன் உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை அடைத்து தாழ்ப்பாளைப் போட்டாள். அவன் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.
அவள் அவனுக்கருகில் நகர்ந்து நின்றாள். அவன் தலையைக் குனிந்துகொண்டே கேட்டான்: "சாரதா... இது எத்தனாவது மாதம்?''
"எட்டு...'' அவள் கூறினாள்.
"உனக்கு பயமா இருக்கா?''
"என்ன பயம்?''
"குழந்தை பிறக்கும்போது, சங்கரனுக்குத் தெரிஞ்சிடுமோன்னு... அதுக்கு என் நிறம் இருக்கறதுக்கு வாய்ப்பிருக்கு.''
"அவருக்குத் தெரியும். நான் சொல்லிட்டேன்.''
அவள் கூறினாள்.
"என்ன? நீ என் பெயரைச் சொல்லிட்டியா? சங்கரன் என்ன சொன்னான்?'' அவன் கேட்டான். அவனுடைய குரல் தடுமாறியது.
"எதுவும் சொல்லல.''
"ஒண்ணும் சொல்லலியா?''
"இல்ல...''
அவன் ஒரு முட்டாள் சிரிப்பைச் சிரித்தான். தொடர்ந்து அவளுடைய தோள்களில் கைகளை வைத்தவாறு அவளிடம் கூறினான்:
"சங்கரனுக்கு சுயபுரிதல் உண்டு. மானம்... மானம்னு சொல்லிக்கிட்டு வேலையைவிட்டுப் போற காரியத்தை சங்கரன் செஞ்சதில்ல. இருந்தாலும்... நீ சொல்லியிருக்கவேண்டிய அவசியமில்ல.. சாரதா... நீ ஏன் என் பேரைச் சொன்னே?''
"பிறகு... யாரோட பேரைச் சொல்றது? நான் யாரையும் தொட்டதில்லையே?''அவள் கூறினாள்.
"அது சரிதான். இருந்தாலும்...''
அவன் அவளைக் கட்டிப்பிடித்தான். அவளுடைய சரீரம் உடனடியாக மரத்துப்போனது. தான் ஒரு பொம்மையைக் கட்டிப்பிடித்திருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.
"என்ன சாரதா.. நீ இன்னைக்கு.. இப்படி.?''
அவன் கேட்டான்.
அவன் அவளுடைய முகத்தை உயர்த்தி அந்த கண்களையே பார்த்தான்.
"உனக்கு என்மேல இருந்த பிரியமெல்லாம் போயிடுச்சா?'' அவன் கேட்டான். அப்போதும் அவள் எதுவும் கூறவில்லை.
அவன் அவளுடைய பளபளப்பான சரீரத்தைத் தடவ ஆரம்பித்தான். அவள் திடீரென அவனைத் தள்ளி நகர்த்திவிட்டு, கதவை நோக்கி ஓடினாள்.
"என்னைத் தொடாதீங்க.'' அவள் கெஞ்சினாள்.:
"உன்னைத் தொட்டா என்ன?'' அவன் கேட்டான். அப்போதும் அர்த்தமற்ற ஒரு புன்சிரிப்பு அவனுடைய உதடுகளில் தங்கி நின்றிருந்தது.
"உன்னைத் தொடறதுக்கு எனக்குதானே அதிக உரிமை?'' அவன் கேட்டான்: "இந்த வயித்துல இருக்கறது என் குழந்தையில்லியா?''
"போங்க...'' அவள் கூறினாள்: "கொஞ்சம் போங்க. யாராவது வந்தா...''
"அப்படியெல்லாம் போறவனில்ல நான். சாரதா... உனக்கு என்னைத் தெரியுமே?''
"என்னைக் கெடுத்துட்டீங்க... இனியும் இதெல்லாம் வேணுமா?'' அவள் கேட்டாள்.
"என் வற்புறுத்தல் காரணமா மட்டுமா நீ அதுக்கு தயாரானே?'' அவன் கேட்டான்: "உனக்கும் அது தேவையா இருந்ததில்ல?''
அவள் தன் கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு கூறினாள்: "என் தப்பு... இப்போ கொஞ்சம் போங்க... யாராவது பார்த்தா...''
"சாரதா...'' அவன் கூறினான்: "உன்னை நெருக்கமா பார்த்து எவ்வளவு நாளாச்சு!''
அவன் அவளுக்கு அருகில் சென்று, மீண்டும் அவளைக் கட்டிப்பிடித்தான். அவள் அவனைத் தள்ளி தரையில் வீழ்த்தினாள்.
"நான் ஒரு ஆளோட மனைவி.'' அவள் தாழ்ந்த குரலில் கூறினாள்: "இப்போ நான் ஒரு ஆளோட மனைவி. என்னை இனிமேல யாரும் தொடுறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.''
"சாரதா... என்னை தேவையில்லாம கோபப்பட வைக்காதே.'' அவன் எழுந்து நின்றுகொண்டு கூறினான்:
"மனைவி! அந்த சங்கரனோட மனைவிங்கறதை வச்சிக்கிட்டு, என்கிட்ட இப்படி நடக்குறியா? என் பசுக்களைப் பார்த்துக்கற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணினதுனால நீ பெரிய பத்தினி ஆயிட்டியா?''
"என்னைத் தொடாதீங்க.'' அவள் கூறினாள்.
"பிறகு என்னை எதுக்கு இங்க நுழைய வச்சே?''
"அது என்னோட தப்பு.'' அவள் கூறினாள்.
அவள் உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.
அவளுடைய ரவிக்கைக்குக்கீழே வயிற்றில் ஒரு நீலநிற நரம்பு... ஒரு வேரைப்போல வெளியே தெரிந்தது. அவன் அமைதியற்ற நிலையில் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"கொஞ்சம் போங்க.'' அவள் உரத்த குரலில் கூறினாள்.
"இப்படியா சத்தமா கூப்பாடு போடறது? உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா?'' அவன் கேட்டான்.
அவன் கதவின் தாழ்ப்பாளை உருவிவிட்டு வெளியே ஒரு காலை எடுத்துவைத்தான்.
"இனிமேல நான் இங்க வரக்கூடாதுன்னுதான் உன் எண்ணமா? நீ இவ்வளவு சீக்கிரம் மாறுவேன்னு நான் நினைக்கல. நீயும் நானும் எந்த அளவுக்கு பிரியமா இருந்தவங்க! இருந்தாலும்..''
அவள் தேம்பித் தேம்பி அழுதாள்: "நான் இனிமேலும் கெட்டுப்போக முடியாது.'' அவள் தழுதழுத்த குரலில் கூறினாள். அவன் திடீரென பின்னோக்கித் திரும்பி அவளுக்கு அருகில் வந்தான்.
"சாரதா...'' அவன் அழைத்தான். தொடர்ந்து அவளுடைய முகத்திலும் கழுத்திற்குப் பின்னா லும் தோள்களிலும் அவன் முத்தங்கள் கொடுக்க ஆரம்பித்தான்.
அவள் ஓரிரண்டு நிமிடங்களுக்கு எதுவுமே செய்ய இயலாதவளாகி விட்டாள். பிறகு... அவள் தன் முஷ்டிகளைக் கொண்டு தாக்க ஆரம்பித்தாள்.
"நான் உங்களைக் கொன்னுடுவேன்.'' அவள் கூறினாள். அவள் அவனுடைய நெஞ்சில் பலமாகக் குத்தினாள். அவனுடைய முகத்திலும்... அவனுடைய உதடுகள் கிழிந்து, ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதற்குப் பிறகும் அவள் அவனைத் தாக்கிக் கொண்டேயிருந்தாள்.
"ராட்சசி!'' அவன் கூறினான்: "என்னை விடு.. ராட்சசி!''
அதற்குப்பிறகும் அவள் அவனை அந்தச் சுவரின்மீது சாய்த்து நிறுத்தி தன்னுடைய முஷ்டிகளைக் கொண்டு தாக்கினாள். இறுதியில் அவன் அங்கிருந்து ஓடினான். வாசலில் விழுந்த குடையைக்கூட எடுக்காமல், தன் வீட்டை நோக்கி ஓடினான்.,
வீட்டிற்கு கஞ்சி குடிப்பதற்காக வந்த சங்கரன், வாசலில் விழுந்துகிடந்த துணிக்குடையை எடுத்து ஒரு தூணில் சாய்த்துவைத்தான். தொடர்ந்து உள்ளே நுழைந்தபோது, ஸ்ரீவெறும் தரையில் அவிழ்ந்த தலைமுடியுடனும் கண்ணீர் வழிந்த அடையாளங்கள் படிந்த கன்னங்களுடனும் கவலையுடன் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தான்.
"என்ன நடந்துச்சி?'' அவன் கேட்டான்.
"அந்த ஆளு வந்திருந்தாரு.'' அவள் முணுமுணுத்தாள்.
தொடர்ந்து அவள் கூறினாள்: "என்னைத் தொட முயற்சித்தாரு. நான் வெளியே போகச் சொல்லிட்டேன்.''
அவள் தழுதழுத்த குரலில் கூறினாள்.
"யாரு?''
"அந்த ஆளு... இந்த குழந்தையோட...'' அவள் தன் வயிற்றில் ஒரு கை விரலை வைத்தாள்.
"ம்...''
"ஏன் ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?''
அவள் கேட்டாள்.
"என்ன சொல்றது?'' சங்கரன் கேட்டான்.
அவன் அவளுடைய கையைப் பிடித்தான். இன்னொரு கையால் அந்த அவிழ்ந்த தலைமுடியை வருடினான்.
"உங்களுக்கு ஒண்ணும் தோணலையா? நீங்க ஒரு ஆண்தானே?'' அவள் கேட்டாள்.
அவன் அவளைக் கட்டிப்பிடித்தான்.
அவள் அவனைத் தள்ளி நீக்கியவாறு உரத்த குரலில் கத்தினாள்:
"என்னை தொடக்கூடாது. நாணமோ மானமோ இல்லாதவன்!''