அவரை முதன் முதலில் பார்த்த நொடியிலிலேயே தமிழ் மணக்கும் சொற்களால் கட்டிப்போட்டு விட்டார்.
அகமும் புறமும் தமிழும் அது கற்றுத் தந்த நெறியுமாக அவரது வாழ்க்கை இருந்தது. இன்று அவர் இல்லை.
அவரைப் பற்றி இங்கே தமிழாய்ந்தோர் பதவிட்டிருக்கிறார்கள். என் உணர்வு களையும் பதிவிட விழைகிறேன்.
பத்திரிகையாளர்கள்- தொலைக் காட்சியினரின் "தமிழ்க் கொலை'யை ஓரளவேனும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்- மாணவர் நகலகம் நா.அருணாசலம் அவர்கள் 2005-ஆம் ஆண்டில், குற்றாலத்தில் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் உள்ள தனது சுற்றுலா இல்லத்தில் தமிழ்மொழி-வரலாறு பயிலரங்கத்தை மூன்று நாள்கள் நடத்தினார். அந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த கவிஞர் ஜெயபாஸ்கரன், கொலையாளிகளில் ஒருவனான என்னையும் பயிலரங்கத்தில் இணைத்திருந்தார். சென்னையிலிருந்து காலையில் புறப்பட்டு குற்றாலம் பயணித்தோம்.
“திருச்சியில் இளங்குமரன் நம்முடன் சேர்ந்துக்குவாரு என்றார் நா.அருணாசலம். பெயரைக் கேட்டு ஆவலுடன் எதிர் பார்த்திருந்தோம். 80+ வயதில் அவர் இருந்தார். தலை முதல் கால் வரை சீரான உடல்வாகு. அவரைப் போலவே உடையும் வெள்ளை யாக இருந்தது. மதுரையைக் கடந்து செல்லும்போது, மலை களையும் அதனையொட்டிய பகுதிகளையும் தமிழ் இலக்கியம் எப்படி வர்ணிக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டுவந்தார். பயணத்திலேயே பயிலரங்கம் தொடங்கிவிட்டது.
குற்றாலம் சென்ற பிறகு முறைப்படி தொடங்கிய பயிலரங்கத் தில், தொல்காப்பிய இலக்கணக் குறிப்புகளை சொல்லித் தந்தார். சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்ளச் செய்தார். "பிரசவ வார்டு' என்றும் "மகப்பேறு மருத்துவ மனை' என்றும் இப்போதைய தமிழ் இருக்கிறது.
ஆனால், இலக்கியத்தில் அதற்கு "ஈனில்' (குழந்தையை ஈனுகிற இல்லம்) என்ற சொல் இருக்கிறது. தமிழ் இலக்கிய- இலக்கண அடிப்படையில் இப்படி பல புதிய சொற்களை உருவாக்க முடியும் என்றார்.
பயிலரங்கம் நடந்த கூடத்திலிருந்து பார்த்தால், குற்றால மலைகளும் அதனையொட்டிய நிலமும் தெரியும். அதில் கொக்குகள் பறந்து வந்து ஓய்வெடுத்தன. அப்போது இளங்குமரனார், "இந்தப் பறவை கொக்.. கொக்.. என்று குரல் எழுப்பும். அதனால் கொக்கு என்று அழைத்தார்கள். இந்த கொக்கு போலவே இருக்கும் இரும்பு வளையத்தை "கொக்கி' என்றார்கள். இப்படி யாக சொற்களை எளிமையாகக் கட்ட மைத்த வளமான மொழி நம் தமிழ்மொழி. ஆனால், அதைப் பேசுவதற்கு, படிப்பதற்கு, எழுதுவதற்கு தயங்குகிற ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது'' என்று சொன்னவர் கண்கள் கலங்கி, குரல் தழுதழுக்க சில மணித்துளிகள் அமைதியாகிவிட்டார்.
மூன்று நாள்கள் அவருடன் இருந்த போது, தமிழ் தவிர பிறமொழிச் சொல் ஒன்றுகூட அவரிடமிருந்து வெளிப்பட வில்லை. சில தமிழ்ச் சொற்கள் நமக்குப் புரிய வில்லை என்றால், அதற்கு மட்டும் ஆங்கிலத் தில் வழங்கப்படும் சொற்களைக் குறிப் பிட்டு, தமிழ்ச் சொல்லை விளக்கினார்.
அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொண்டவரை வியப்புடன் பார்த்தோம். அவர் எங்களிடம் "என் உடம்பில் சர்க்கரை நோய் கிடையாது. கொழுப்பு (ஸ்ரீட்ர்ப்ங்ள்ற்ங்ழ்ர்ப்) கிடையாது. குருதி அழுத்தம் (இட) கூடுதலாகவோ குறைவா கவோ இல்லை. அதற்குக் காரணம், தமிழர் வாழ்வியல் குறித்து நம் இலக்கியங்கள் காட்டும் உணவு-உடற்பயிற்சி-சரியான ஓய்வுடன் அதிகாலையில் எழுந்து, ஒரு செம்பு பச்சைத்தண்ணீர் குடிப்பேன். விடியற்காலை 4 மணிவாக்கில் நரம்பு மண்டலம் நல்ல ஓய்வில் இருக்கும். அப்போது தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள உறுப்புகளைத் தூய்மைப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்'' என்றவர், "உங்க வயசுக்கு இப்படி நாள்தோறும் எழுந்திருக்க முடியாது. ஆனால், அதிகாலை 4 அல்லது 4.30 மணிக்கு எழுந்து தண்ணீர் குடித்து விட்டு, சிறிது நேரம் கழித்து படுத்து, வழக்கம் போல எழுந்திருக்கலாம்'' என்றும் சொன்னார்.
அய்யாவின் அறிவுரைப்படி கடந்த 15 ஆண்டுகளாக, பெரும்பாலான நாட்களில் இதனைக் கடைப்பிடித்து வருகிறேன். தொடர்ச்சியான பத்திரிகைப் பணியில் 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இயல் பாகவே உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக, கால்களைத் தொங்க விட்டு பணியாற்றும்போது, நரம்பு களில் பாதிப்பு தெரியும். அந்த பாதிப்புக் கான முதலுதவி அய்யா இளங்குமரனார் சொன்ன அதிகாலை நேர ஒரு செம்புத் தண்ணீர்தான். அது, என் நரம்பு மண்டலத்தை சீர்படுத்தி, அன்றா டப் பணிகளைத் தொய்வின்றி மேற் கொள்ள வைக்கிறது.
வள்ளுவர் தவச் சாலையை நிறுவி, குறள் நெறித் தமிழ்த் திருமணங்களை ஆயிரக்கணக்கில் நடத்திய இளங்குமரனார், ஏறத்தாழ 500 நூல்களை எழுதியிருக்கிறார். ஒரு விளக்கு, திருக்குறள், மங்கல நாண், பெற்றோர்-உறவினர்-நண்பர்கள் வாழ்த்து, விருந்தோம்பல் என்பதே அய்யா காட்டிய தமிழ் மரபுத் திருமண முறை. எளிமையானதாகவும் சுயமரியாதை உணர்வு கொண்டதாகவும் அமைந்த அம் முறையே நம் முறை. நன் முறை. தமிழர் பண்பாட்டை வலியுறுத்தும் இத்தகைய நடைமுறைகளைப் புதுப்பித்து, அதனைப் பரப்புவதில் அயராது பாடுபட்டவர்.
தமிழர்களின் குடும்ப நிகழ்வு களில் ஆதிக்கம் செலுத்தும் வட மொழி மந்திரங்களை அகற்றி, தமிழ் மறை போற்றும் வகையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பதற்காகத் தன் 94 வயது வரை அயராது பாடுபட்டவர் இளங்குமரனார். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்து பெருவாழ்வு-நிறைவாழ்வு-பயன்மிகு வாழ்வு வாழ்ந்த அய்யா இளங்குமரனாரின் மறைவு, இயற்கையின் நிகழ்வு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரங்கல் அறிக்கையும்-அரசு மரியாதையுடனான நல்லடக்கமும் தமிழ் மூதறிஞருக்குத் தரப்பட்ட பெரும் மரியாதை. அய்யா இளங் குமரனார் வழியில் தமிழ் மொழி- இன-பண்பாட்டு முன்னெடுப்புகளைக் காலத்திற்கேற்ற வகையில் தமிழ்நாடு அரசும் தமிழர்களும் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, இளங்குமர னார் அய்யா மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வார்.