ன்று காந்தி சிலை முன்பு பொதுக்கூட்டம். எப்போதும் போல சின்ன மேடை தான். காங்கிரஸ் கட்சி சார்பில் பழம் பெரும் தியாகி. கஜேந்திரவரதன் ஏற்பாடு செய்து அவர் தலைமை யில் நடைபெறப் போகிறது.

தியாகி கஜேந்திரவரதன் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். பழுத்த பழம்போல இருப்பார். கதர்சட்டை, கதர் வேட்டி, தோளில் வெள்ளை கதர் துண்டு என்று காந்தியாய் அமரந்திருப்பார். அவர் அருகில் வரிசையாக சுடலைமுத்து அடவியார் என பெரியவர்களாய் அமர்ந்திருக்க நடுவில் ஒருவர் சிறிய வயதில் பையனைப்போல அமர்ந்திருக்கிறார். நாங்கள் எப்போதும் போல தரையில் அமர்ந்து கொண்டிருக்கிறோம். அண்ணாந்து பார்க்கிற மேடைகள் அப்போது கிடையாது. சாதாரணமாக உடல் நேராக்கி பார்த்தால் போதும். கூட்டமும் அதிகமாக இருக்கிறது.

dd

Advertisment

அநேகமாக 50 வருடங்களுக்கு முன்பு அரசியல் பேச்சை கேட்க வந்திருக்கிறோம். நாங்கள் திராவிட கட்சி எனினும் அப்போது கூட்டம் கேட்க எந்தப் பாகுபாடும் இல்லை. இப்போது அந்த நல்ல எண்ணங்கள் எல்லாம் அழிந்துபோனது வேறு கதை.

தியாகி தனது கரகரத்த குரலில் பேச்சாளரை அறிமுகப்படுத்துகிறார். ஆமாம். ”இந்தத் தம்பி நம்ம நெல்லை டவுனைச் சேர்ந்தவர். இப்போதுதான் படித்து முடித்து விட்டு காங்கிரஸ் கட்சிக்காக உழைக்க வந்திருக்கிறார். சொல்லாற்றலும் பேச்சாற்றலும் மிக்க தம்பி. பள்ளி கல்லூரி மேடைகளில் பேசி பல பரிசுகள் பெற்றவர். அவர் உங்கள் முன் இப்போது பேசுவார்.”

இன்று பெரிய பேச்சாளர் பேசப் போவதாகச் சொன்னதால் நேரத்தோடு வந்தமர்ந்த எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பேச்சாளர்கள், திராவிட இயக்க பேச்சாளர்கள் போல அடுக்கு மொழியோ, கலவையான நகைச்சுவை பேச்சோ பேசாமல் எல்லாம் புள்ளிவிவரங்களில் பேசி கேட்பவர்களைக் கிளப்பிவிடுவார்கள். இன்று என்ன நிலைமையோ என்று பயந்தபடி இருந்தோம்.

பேச ஆரம்பித்தார். அவவளவுதான். சின்ன வயதுபோல பேச்சில்லை. செந்தமிழ் நர்த்தனத்திற்கு சிறிதும் குறைவில்லை. பாரதி, கவிமணி, நாமக்கல்லார் என அனைவரது கவிதைகளும் கலந்து கட்டி பேசினார்.

அதைவிடவும் இந்திய பாகிஸ்தான் போரின்போது அமெரிக்கா தனது போர்க்கப்பலை இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பி வைத்திருப்பதாக சொன்ன போது, ரஷ்யா 11 வது போர்க்கப்பலை அனுப்பி தக்க பதிலடி கொடுப்போம் என்று இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரிய உதவியாக இருந்தது என்றும் அணிசேரா நாடுகளின் செயல்பாட்டில் இந்தியா எப்படி தலைமை தாங்குகிறது என்றெல்லாம் பேசியதும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் காலத்தில் எத்தனை தொழிற் சாலைகள் வந்தது என்றெல்லாம் பேசினார். இடை யிடையே கவிதைகளும் பாடல்களும் கலந்தோடி வந்தன.

இன்றைக்கும் அன்று, நெல்லை கண்ணன் அடுக்கு மொழியோடு சொடுக்கு தமிழில் பேசியது மனக்கண் முன்னே விரிகிறது. ஏன் இவர் திராவிட கட்சிக்கு வரவில்லை என்று தோன்றியது. பின்னால் போகப் போக அவர் தீவிர காங்கிரஸ், காமராசர்வாதி என்பதை அறிய முடிந்தது.

அதன் பிறகு, அடுத்த வருடம் அவர் எங்கள் ஊர் பெருமைமிகு வாசகர் வட்டத்தில் பேச வருகிறார் என்று பேச்சைக் கேட்கப் போனோம். சங்கப் பாடல்கள், பன்னிரு திருமுறைப் பாடல்கள் என்று முழங்கிக்கொண்டே போனார். எனக்கு இப்போதும் ஒரு பாட்டுக்கு அவர் கொடுத்த விளக்கம் அப்படியே நினைவில் இருக்கிறது.

விவேகசிந்தாமணி நூலில் இருக்கும் ஒரு பாடலுக்கு விளக்கம் சொன்னார். அவர் இப்படி ஆரம்பித்தார்.

தலைவி மீது காதல் வயப்பட்ட தலைவன் அவளைப் பார்க்க வருகிறான். அப்படியே வயல்கள் மலை மீது இருக்கும் அழகான கோவில். ஊரையே ஒரு சுற்றில் பார்த்துவிடலாம். தலைவி கோயிலுக்கு வருவாள் அவளோடு இன்று பேசலாம் என்று வருகிறான்.

தலைவனோ பொய்யான காதல் இளவரசன் அல்ல. (அப்போது கமலஹாசன் பேர் சொல்லும் படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்தார்). அவன் உண்மையான இளவரசன். அவன் அந்தஸ்திற்கு சரியான பெண்ணாக இருந்தால்தான் நாட்டின் ராணி, அவளை இளவரசியாக ஏற்றுக் கொள்வாள். எனவே அதற்கான பெண்ணா என்று பார்க்கவும் வந்திருந்தான் தலைவன். அதன் பிறகு தலைவன் தலைவி விளக்கம்.

dd

Advertisment

உலகத்திலேயே தலைவன் தலைவி என்று சங்க இலக்கியங்கள்தான் பேசுகின்றன. எல்லாரும் ஓர் நிறை ஓர் எடை என்பதுதான் சங்ககால வாழ்வு. எல்லோரும் தலைவன் என்று சொன்னவன் தமிழன். எல்லோரும் தலைவி என்று பெண்களையும் சமமாக மதித்தவன் தமிழன் என்று பேசிவிட்டு பாடல் விளக்கத்தை தொடர்ந்தார்.

தலைவி படிகளில் மேலேறி வருகிறாள். கால்மெட்டியிலிருந்து நெற்றிச் சுட்டி வரை தங்க ஆபரணங்கள் அணிந்திருக் கிறாள். அழகான ஆபரணப் பொலிவுடன் மாந்தளிர்போல மேலேறி வருகிறாள். பக்கத்தில் வந்த போதுதான் தெரிகிறது, அவள் மூக்கில் பில்லாக்காக குன்றிமணியை சூடி இருக்கிறாள் என்று.. மஞ்சள் மலராய் நெற்றிநிலா, கார் குழல் கூந்தல், கருங்குவளை போன்ற கண்கள். செம்பஞ்சு குழம்பென உதடுகள் கொண்ட இவள் ஏன் இந்தக் குன்றிமணியைப் போய் சூடியிருக்கிறாள்.?

கொல்லன் உலையில் செய்யப்பட்ட கூர்மையான வேலைப் போன்ற கருங்கண்களை உடையவள் தலைவி. அதைப் போலவே கோவைப் பழமும் பவளமும் சேர்ந்த உதடுகள் கொண்டவள். எல்லா அணி ஆபரணங் களையும் சூடிவிட்டு இப்படி மூக்கின் பில்லாக்காக குன்றிமணி சூடியது ஏனெனத் தோன்ற, அதை ஏதும் அறியாது, அவளிடமே கேள்வியாகவும் கேட்டுவிட்டான். தலைவி பதில் சொல்ல நாணுபவள். அவள் தலைவனுக்கு எப்படி பதில் சொல்ல என்று சிறிது நேரம் திணறினாள். ஏதாவது பதில் சொன்னால் அவனை மீறிப் பேசுவது ஆகிவிடாதா? இல்லை அவனுக்கு இதுகூடத் தெரியவில்லையா என்று தலைவனைக் குறைத்து மதிப்பிடுவதாய் அமைந்துவிடாதா என்று திகைத்தவள் அவனுக்கு இப்படி பதில் சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

தனது இரு கைகளால் வாயையும் கண்ணையும் பொத்திக் கொண்டாள். அதுவே அவனுக்கு பதிலும் ஆயிற்று. எப்படித் தெரியுமா? அவள் செம்பவள இதழ்களை மூடிக்கொண்டதால் குன்றிமணியின் சிவப்பு காணாமல் போனது. கண்ணை மறைத் ததில் கரும்புள்ளியும் இல்லை. இப்போது வானவில் நிறங்கள் ஒளிர நல்முத்தாக மாறியது பில்லாக்கு. தலைவனின் சிறுமையை எண்ணிய தலைவி ஆதுரமான பார்வையால் அவனைக் குளிர வைத்தாள். அப்படியான கவிதையை சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு பாடலைச் சொன்னார்.

’ கொல்லுலை வேற் கயற்கண் கொவ்வையங் கனிவாய் மாதே

நல்லணி மெய்யில் பூண்டு நாசிகாபரண மீதில்

சொல்லதில் குன்றி தேடி சூடியதென்னே

மெல்லிய கண்ணும் வாயும் புதைத்து நல்முத்தென்றாள்.’

-இப்படி அழகான வர்ணனையுடன் கூடிய ஒரு பாடல் அல்ல, பல பாடல்கள் விவேகசிந்தாமணியில் இருக்கின்றன என்று சொன்னார்.

அதன் பிறகுதான் விவேகசிந்தாமணியை படிக்க ஆரம்பித்தேன். நெல்லை கண்ணன் அப்படி ஒரு ரசனையான இலக்கியத்திலும் வெளுத்து வாங்குகிற பேச்சாளராக தெரிந்தார். அவர் அரசியல் பேச்சையும் மிகைத்து இலக்கியப் பேச்சு நின்றது.

பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தில் சைவத் திருமுறைகளைக் கற்றுத் தோய்ந்த.ந.சு.சுப்பையா பிள்ளையின் மகனாகப் பிறந்தவர். பிறக்கும் காலத்தில் இருந்து நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் தெருவிலிருந்தே நேர்பார்வையில் பார்த்து வளர்ந்தவர். பாரதியும் கம்பனும் திருமூலரும் சேக்கிழாரும் பட்டினத் தாரும் படித்து வளர்ந்தவர். கல்லூரிப் படிப்பில் பெரிய நாட்டம் இல்லை. பாதியில் விட்டுவிட்டு அரசியல், இலக்கியம் என்று வாழக்கையை மாற்றிக் கொண்டவர்.

முன்மடை தண்ணீர் போல பீறிட்டுக் கொட்டும் வகைப் பேச்சாளர். ஏற்ற இறக்கம் முழுப்பாடலையும் சொல்லுதல், விவரணை எல்லாம் கலந்த முழுப் பேச்சில் எல்லோரையும் கவர்ந்துவிடுவார். எந்தக் குறிப்பும் இல்லாமல் பேசும் நினைவாற்றல் மிக்கவர். எங்கு பேச்சு எதைச் சொல்ல வந்தோமோ அதைச் சரியாக சொல்லிமுடிப்பவர். எப்போதும் நகைச்சுவையும், எள்ளலும், கேலியும் கலந்துகட்டி அடிப்பவர். எப்போதும் நீரிடை தாமரை இலைபோல தன்னை தனி நிறுத்திக் கொள்பவர். தன்னருகில் இருப்பவனை கேலி செய்யும் திருநெல்வேலிக் குசும்பு நாவோடு கலந்திருக்கும்.

பலர் பேசும்போது நெளிந்தாலும் நேரில் பேசும்போது அன்பில் நெகிழ்ந்து போவார்கள்.

என்னைப் போன்று பலருக்கும் ஒரு ஆதங்கம் உண்டு. அவர் மரபிலோ புதுக்கவிதையிலோ அல்லது தனக்கு கைவந்த கலையான எழுத்தை நிலையாகக் கொண்டு நிறைய எழுதி இருக்கலாம். அவர் தந்த "வடிவுடை காந்திமதி" என்ற மரபுக் கவிதை நூலே அதற்கு சாட்சி. சந்தங்கள் கொட்டும், சிந்தை இனிக்கும் சொற்சித்திரங்கள், செவ்வியல் பார்வை, தேர்ந்த கற்பனை என அத்தனையும் இழைத்து பட்டுத்தமிழில் நெய்த பாட்டுத்தமிழ்.. காந்திமதி அம்மையை தனது தாயாக நினைந்து போற்றும் தனித்துவப் பார்வை அது.

"குறுக்குத்துறை ரகசியங்கள்" எனும் நாடகப் பாணியில் எழுதும் நகைச்சுவை சித்திரங்கள் அதியற்புத ரகசிய சிறு சிறு நையாண்டி புதையல்கள் எனலாம்.. ஆங்கிலத்தில் அடிசனும், ஸ்டீலும் செய்த சமகாலத்தை கேலி செய்யும் கூரிய பார்வைபோல இருக்கும்.

தமிழில் அல்லது இந்தியாவில் சமகால அரசியலை இலக்கியத்தை நாகரீகத்தை கேள்வி கேட்கும் எழுத்துக்கள் குறைவு. அதற்கு நேர்மையும் நக்கீரத்தனமும் கூர்பார்வையும் அவசியம். அது இருந்தது நெல்லை கண்ணன் அவர்களிடம். இன்னும் அவரது மகன் சுகாவிடம் கொடுத்து சென்ற ஒரே சொத்தும் அதுதான். "வா மீத முலை ஏறி" எனும் ஓலைச் சுவடி வடிவிலான அவரது புதுக்கவிதை நூல் அரசியல் கோபப்பார்வையில் தெரிப்பவை.

அதைப் படிக்கும் அனைவர்க்கும் சிம்மமென பிடரி சிலிர்க்கும். சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம் என்ற ஆதங்கம் ஏறிக்கொண்டே போகும்.

அவரோடு இருந்த அனைவருக்கும் (எனக்கு இல்லை என்பது வேறு ) அவரைக் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எல்லோரையும் நேசித்தார். அவர் நேரத்திற்கு நேரம் சில மாறுபாடான நிலை எடுத்திருக்கலாம். ஆனால் இந்திய அரசியலில் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, நேரிய அரசியல் எனும் கொள்கையில் என்று நிலைத்து இருந்தவர். எடுத்தெறிந்து பேசி இருக்கலாம். ஆயினும் அன்பினால் அன்பர்களை பூப்போல தொடுத்துக் கொள்பவர் அவர்.

அவர் குறுக்குத்துறை மட்டுமல்ல அதைத் தாண்டி இருக்கும் சுடுகாடான கருப்பந்துறையையும் அவர் நேசித்தார். கடைசி நாட்களில் சித்தர்களைப் போல இறப்பை உணர்ந்தார். அவர் இறந்து போனது எல்லா தமிழ் அன்பர்களுக்கும் துயரத்தைக் கொடுத்தாலும் ஒருசிலரே அவரது உடலைப் பார்க்க வந்தார்கள். மாநில அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கே.கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருமாவளவன், பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால், எழுத்தாளர் வண்ணதாசன், அப்துல் வஹாப் போன்றவர்களும் வந்திருந்தனர். அதுவும் சுடுகாட்டுக்கு வந்தவர்கள் குறைவுதான். தமிழுக்காக வாழ்ந்தவனுக்கு தமிழ் என்ன செய்தது என்ற கேள்வி முன்நின்றது.

அவரின் ஆற்றொழுக்கு தமிழ் ஓடி வரும் தாமிரபரணி நின்று மறுகிச் செல்லும் குறுக்குத்துறை கொடுத்ததாக இருக்கலாம். எந்நாளும் தமிழாய் வாழும் அம்மா காந்திமதியின் தமிழாய் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

அவரைப் பற்றி அவரது மகன் சுகா எழுதி இருக்கும் கவிதையே நெல்லை கண்ணனின் மாறும் குணத்தை, சீறும் மனத்தை, ஆறும் நிலையை, நல்தமிழ் நடையை, அடுக்குச் சொல்லை நமக்கு பேசித் தீர்க்கிறது. அந்தக் கவிதை நீங்களும் படியுங்கள்.

ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்

ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;

தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்

தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;

நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு

நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.

பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல

பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான்.’

-தமிழ்க் கடல் அவர் ஆசைப்பட்டபடி குறுக்குத் துறை ஆற்றில் கலந்து தாமிரபரணியாய் என்றும் ஓடிக்கொண்டு இருக்கிறார். ஜீவநதியாக என்றும் இருப்பார்.

நெல்லை தமிழ் மணக்கும் போதெல்லாம் அவர், நினைவெனும் இனிப்பை மனதில் தூவுவார். என்றுமுள தென்தமிழைப் பாடியவன் மடிவானோ? தமிழ் மேடையின் மன்னர் மன்னனாக என்றும் இனித்திருப்பார். இதயக்கனியாய் என்றும் நிறைந் திருப்பார்.