ஒரு பேட் செர்ரி மரம், தானியச் செடிகள் இருந்த இடத்தில் வளர்ந்து, அவற்றை மூச்சுவிட முடியாமல் செய்தது. அந்த மரத்தை வெட்டி நீக்குவதா... வேண்டாமா என நான் நீண்ட நாட்களாகவே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
பேட் செர்ரி சிறிய செடியாக இல்லை... மாறாக ஒரு மரமாக வளர்ந்தது. அதற்கு ஆறு அங்குல சுற்றளவும் முப்பதடி உயரமும் இருந்தது. அதன் அனைத்து கிளைகளும் இலைகளைக் கொண்டு நிறைந்திருந்தன.
அவற்றிற்கிடையே பிரகாசமான, வெண்ணிற நிறத்தைக் கொண்டவையும் நறுமணம் உள்ளவையுமான மலர்களும் இருந்தன.
தூரத்திலிருந்தவாறு அதன் வாசனையை சந்தோஷமாக முகரலாம். அதை வெட்டி நீக்கவேண்டிய தேவை எனக்கு சிறிதும் இல்லாமலிருந்தது. செர்ரி மரத்தை வெட்டி விடும்படி நான் கூறியிருந்த ஒரு தொழிலாளி, நான் இல்லாத நேரத்தில் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். நான் அங்கு சென்றபோது, கிட்டத்தட்ட மூன்று அங்குல ஆழத்தில் அது வெட்டப்பட்டிருந்தது.ஒரே இடத்தில் கோடரியைப் பதியச் செய்யும்போது, மர நீர் தெறித்தது.
"அதற்கு உதவ முடியவில்லை. உண்மையிலேயே அதுதான் விதி''- நான் சிந்தித்தேன்.
தொடர்ந்து ஒரு கோடரியை எடுத்துக்கொண்டு தொழிலாளியுடன் சேர்ந்து நானும் மரத்தை வெட்ட ஆரம்பித்தேன். எந்த பணியைச் செய்வதும் சுவாரசியம் நிறைந்ததுதான். மரம் வெட்டுவதும்...
கோடரியைச் சாய்த்து வைத்து ஆழமாக வெட்டிய பிறகு, வெட்டப்பட்ட பகுதியை நீக்குவதற்காக நேராக ஒரு வெட்டு... பிறகு...
மீண்டும் மரத்தின்மீது ஆழமாக வெட்டு...
நான் அந்தச் செர்ரி மரத்தை மறந்து விட்டேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு சீக்கிரம் அதை வெட்டி வீழ்த்தவேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருந்தது. களைப்பு உண்டானபோது, தொழிலாளியுடன் சேர்ந்து மரத்தைத் தள்ளி விழச் செய்ய முயற்சித்தேன்.
நாங்கள் அதை அசைத்தோம்.
அப்போது இலைகளுடன் அந்த மரம் குலுங்கியது.
எங்களின் மீது பனித்துளிகள் விழுந்தன. தொடர்ந்து நறுமணம் நிறைந்த மலர்களின் வெண்ணிற இதழ்களும் விழுந்தன.
அப்போது ஏதோ அழுவதைப் போல காதில் விழுந்தது. மரத்தின் மத்திய பகுதியில் ஒரு முனகல் சத்தம் கேட்டது. நாங்கள் மரத்தைத் தள்ளினோம். யாரோ உரத்து அழுவதைப் போன்ற ஒரு சத்தம் உண்டானது.
தொடர்ந்து மரத்தின் நடுப்பகுதியில் ஒடிவதைப்போன்ற ஒரு சத்தம் எழுந்தது. அது நிலத்தில் விழுந்தது.
வெட்டப்பட்ட இடத்தில் அது முறிந்து ஆடி.. நிலைகுலைந்த நிலையில்...
கிளைகளுடனும் பூக்களுடனும் புற்களின்மீது தரையில் சாய்ந்தது. மரத்தின் கிளைகளும் மலர்களும் வீழ்ச்சிக்குப் பிறகு சிறிது நேரம் நடுங்கிக் கொண்டிருந்தன.
பிறகு... அதுவும் நின்று விட்டது.
"அது ஒரு நல்ல மரமாக இருந்தது.
எனக்கு மிகவும் அதிகமான கவலை இருக்கிறது.''- பணியாள் கூறினார். எனக்கும் மிகவும் அதிகமான கவலை உண்டானது. அதனால் நான் மற்ற பணியாட்களை நோக்கி வேகமாக சென்றேன்.