சில எழுத்துகளின் உயிரோட்டம் நம்முள் உறைந்திருக்கும் உயிரையும் தொடுகிற அனுபவத்தைத் தருகிறது கவிஞர் வெண்ணிலாவின் சாலாம்புரி புதினம்.

நூலைப் புரட்டியவரின் மனம் வேறொன்றாய் மாறித்தான் போகிறது. இதுதான் என்று இந்நாள் வரை ஏற்றிருந்த கற்பிதங்களின் மேல் நின்று அவற்றைக் கேள்விக்குள்ளாக்கு கிறது.

இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்றாலும் நாவல்களை வாசிக்கையில் ஒரு நீண்ட சுகானுபவத்தைத் தந்து செல்கிறது. எத்தனை எத்தனை கதாபாத்திரங்களைக் கண்முன் உலாவ விடுகிறது.

ஒரு நீண்ட வாழ்க்கையை இந்தக் கதாபாத்திரங்களோடு நானும் வாழ்வதான அனுபவத்தைக் கொடுத்துச் செல்கின்றன நாவல்கள்.

Advertisment

அப்படியாய் எனது அனுபவப் பக்கங்களில் சேர என்னை வந்தடைந்த நாவல் கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய சாலாம்புரி.

சற்று கனத்த புத்தகம்தான், ஆனால் இறுதியில் மனதை லேசாக்கிப் பறக்கச் செய்வது உறுதி. புத்தகத்தின் அட்டைப் படமும், பெயரும் மனதிற்குள் ஏற்படுத்தும் ஒருவிதமான தூண்டுதலை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. அட்டைப் படத்தில் உள்ள வண்ணமேற்றிய தறிநூல்கள் ஆயத்தமாய் இருக்கின்றன பயன்தரும் அழகிய வஸ்து வாய் மாற. அப்படியாய் தறிக்குள் சிக்கிய நூலாய் எனது மனதின் எண்ணங்களும், சிந்தனைகளும் இந்த எழுத்திற்குள் ஊடாடித் திரிந்து, புதுச் சாயமேற்றிய ஒன்றாய் பளபளத்து வாழ்வை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்துகிறது ‘சாலாம்புரி’ என்று உறுதியாய்ச் சொல்வேன்.

நாவலின் ஆரம்பமே துயரச் சம்பவத்தோடுதான் ஆரம்பிக்கிறது. நமக்குத்தான் துயரச் சம்பவம். வாழ்க்கைக்கு இன்பமும் துன்பமும் இரட்டைக் குழந்தைகள். நன்மையும், தீமையும் என இவை இரண்டுமே ஏதோ ஒன்றை உரக்கச் சொல்லித்தான் போகிறது.

Advertisment

நன்மையை கையாளத் தெரிந்த மனம் தீமையைக் கையாளத் தடுமாறுகிறது. இந்நாள்வரை குடும்பத்தை நடத்தி வந்த தகப்பன் சின்னுவின் இழப்பு, அப்பொறுப்பை அவரது தலைச்சன் மகன் நடராஜனின் கரத்தில் கொடுக்கிறது. தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டு, தன் விருப்பத்தின் போக்கில் சென்று கொண்டிருக்கும் நடராஜனின் வாழ்வில் காலம் வம்படியாக சில விஷயங்களை மாற்றுகிறது. தேர்க்காலில் வைக்கும் சப்பரம் போல், வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கையில், அதன் போக்கைச் சீராக்க, சிலநேரங்களில் அதன் கால்களிலும் இப்படியான சப்பரங்கள் வந்து விழுகின்றன. அவற்றைத் தடைகளெனக் கருதி சுழல்வதை நிறுத்தாமல், அவற்றைக் கடந்து வர எத்தனிப்பவர்கள் சிலரே.

அப்படியாய் கதாநாயகன் நடராஜனின் வாழ்விலும் நிறைய தடைகள். ஆனால் அதைக் கடக்கும் பக்குவத்தையும் சேர்த்து தருகிறது வாழ்க்கை. வாழ்க்கை விசித்திரமானதுதான் என்பதை மீண்டும் என் மனதில் ஆழப் பதிக்கிறது. நடராஜனின் வாழ்க்கை. பல நேரங்களில் வாழ்வின் ரகசியங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டு கிடக்கின்றன.

சுயநலமே கதி என மாறிப் போயிருக்கும் இயந்திர கதியான இந்தக் காலகட்டத்திலிருந்து ஒரு ஊருக்கான பொது மனிதனும், திராவிட இயக்கங்களின் சித்தாந்தத்தை தன் உயிர் நாடியென ஓட விட்டவனும், கொள்கையில் பிடிப்பே தவிர அரசியல் கட்சிகளின் பதவிகளுக்காக ஒருநாளும் பறக்காத மனம் கொண்டவனும், குடும்ப உறவுகளையும், ஊரார்களையும், வாயில்லா ஜீவன்களையும் அன்பின் கரங்களால் தழுவியவனுமான நடராஜன், தன் வாழ்வின் படிநிலைகளில் பல சிக்கல் களைச் சந்திக்கிறான். வாழ்வின் ரகசிய முடிச்சுகளால் திணறுகிறான்.

எல்லா ஆயத்தங்களோடும், முயற்சிகளோடும் வாழ்வில் பயணித்தா லும், பல வேளைகளில் தோல்வியே பலனாய் கிடைக்கிறது. இங்கு இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி என்ற மனித பார்வையைத் தான் மாற்றவேண்டும் என்ற பெரும் ரகசியம் ஒன்று மனதின் ஆழத்தில் துளிர்க்கிறது. நடராஜ னின் தீவிரமான கட்சி செயல்பாடுகளும், அதைச் சார்ந்த விடயங்களைக் கற்க எடுக்கும் அவனது மெனக்கெடல்களும், பத்திரிகை வாசிப்பும், ஊரைக் காக்க எடுக்கும் முயற்சிகளும் என நடராஜன் கதாபாத்திரம் மனதில் ஆழமாய் பதிவதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

குடும்பங்களிலும் ஊர்களிலும் ஆழப் பதிந்துள்ள கடவுள் எனும் கற்பிதங்களுக்கும், சடங்குகள் சம்பிரதாயங்கள் என மனிதர் களிடம் வேரோடிக் கிடக்கும் விடயங்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் நடராஜனின் மனப் போராட்டங்களை வாசிக்கையில் அதே போராட்டங்கள் நம் மனதிலும் புகுந்துவிடுகின்றன. சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் மனதில் பதித்த கொள்கையோடு அதேநேரத்தில் மூடநம்பிக்கைகளற்ற தேவைகளை ஊருக்குச் செய்ய முடிவெடுக்கும் நடராஜனின் நிலைப்பாடு, மனதைக் கவர்கிறது.

உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஊறிக்கிடக்கும் திருவிழாக்களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், கடவுள்களையும் முழுதாய் வேரறுத்து விட முடியாது என்றும், அவர்களிடம் இருக்கும் அதீத மூடநம்பிக்கைகளையும் அதன்பால் ஏற்படும் ஆபத்துகளையும் களைய முற்பட வேண்டும் என்ற கற்பிதத்தையும் நடராஜன் மூலம் ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.

சுபானுவின் மனைவி தனக்கோடி மூட நம்பிக்கையால் கொலை செய்யப்பட்ட விடயம், மனதை உலுக்கி மக்களின் அறியாமையை நினைத்து கவலை கொள்ளச் செய்தது, அதை களைய முற்படவும் பணிக்கிறது.

ஊரே வெறுக்கும் கைலாச மாமாவை பரிவுடன் அணுகும் நடராஜனின் பக்குவம் மிகவும் நுணுக்கமாய் பார்க்க வேண்டிய விடயம். தன் மனைவி தேவி மேல் அவன் வைத்தி ருந்த அன்பும் அவளின் உடல் நிலை சரியில்லாதபோதும், அவள் இல்லாத வாழ்க்கையை நினைத்தும், தன் வாழ்வில் அவளது இருப்பின் நிலையை எண்ணிப் பார்க்கும் விதமும் நெகிழச் செய்கின்றன. 'அண்ணே எப்ப சாவான் திண்ண எப்ப காலியாகும்' என்று சொத்துக்களுக்கும், பதவிகளுக்கும் காத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், தான் நழுவ விட்ட சொசைட்டி தலைவருக்குப் போட்டியி டும் வாய்ப்பை, தன் நண்பன் சுபானுவை எந்த தயக்கமுமின்றி ஏற்கச் சொல்லும் நடராஜனின் பொதுநல குணம் நின்று நிதானித்து உணரவேண்டிய விடயம். திராவிட கட்சித் தலைவரான அண்ணாதுரையின் கொள்கை களையும் அவரின் விசாலமான குணத்தையும் வெறும் பேச்சில் மட்டுமல்லாது செயல்களிலும் கொண்ட நற்தொண்டனுக்கான அத்தனை தகுதியும் நடராஜனிற்கு இருந்தது.

இந்த கதையின் இன்னொரு கதாபாத்திரமான வடிவேல் பெரியப்பா நிறைய கற்றுத் தருகிறார். எக்காரணத்தைக் கொண்டும் கொள்கைப்பிடிப்பில் இருந்து விலகாமல், குடும்ப சடங்கு சம்பிரதாயங்களில் தன்னை இழக்காமல் பிடியாய் நிற்கிறார்.

நடராஜுக்கும் அவருக்குமான உறவு வார்த்தைகளில் அடங்காதது.

பெற்றோர், ஆசிரியர், நண்பர் என்று நம் வாழ்வில் நிறைய வழி காட்டிகளைக் கடந்திருப்போம். இங்கு நடராஜனின் வழிகாட்டி யான அவனது பெரியப்பா வடிவேல், நம்மையும் சேர்த்தே வழி நடத்துகிறார். தான் இழந்த அப்பாவை அனேக வேளைகளில் வடிவேல் பெரியப்பாவின் வழிகாட்டுதலில் காண்கிறான். இறுதி யில் அவரை அப்பா என்றே அழைக்கிறான். நாம் உறவுகளை இழந்துவிட்டோம் என்று கருதுகிறோம். ஆனால் வாழ்க்கை அந்த வெற்றிடங்களை வேறொருவர் மூலம் ஈடுசெய்கிறது.

அன்பு என்பது நெருங்கிய ரத்த உறவுகளையும் தாண்டி விஸ்தாரமாய் நிற்பது. 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?'. நாவலின் இறுதியில் ஓர் இரவில் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலால் இருள் சூழ்ந்த இரவின் ஈரக் காற்றின் இதத்தோடு, நம் மனதின் ஈரத்தையும் தோண்டிய நிமிடங்களைக் கலங்கிய கண்களோடு கடக்கையில், வலிகளையும் தாண்டி ஆறுதலால் மனம் நிறைந்து ததும்பியது.

கதையில் அநேகமுறை வந்துபோன ஆலமரம், இறுதியில் ஆழமான கருத்தைப் பதித்து போகும் என நினைத்தும் பார்க்கவில்லை. வடிவேல் பெரியப்பா கூறிய முத்தான வரிகள்... "கோவத்திலே மரம் மாதிரி நிக்கிறீயேன்னு திட்டுறோம்.

ஆனால் மரம் மாதிரி நிற்கிறது எவ்வளோ கஷ்டமில்ல. எல்லா நல்லதையும் செஞ்சுட்டு, எல்லா கெடுதலையும் தாங்குகிறதுன்னா சும்மாவா, உண்மையில் மரம் ஒரு ஞானி தான். மரத்தடியில் ஞானம் வந்துச்சுன்றானுங்க மடையனுங்க, மரமே ஒரு ஞானி என்று புரியாம..." இந்த வரிகளைக் கடக்க முடியாமல் மனம் குத்தி நின்றது. இந்த நாவலின் ஒட்டுமொத்த சாரமே இந்த வரிகளில் அடக்கம் என கருதுகிறேன். நாவல் முடிந்தாலும் வடிவேல் பெரியப்பாவின் அன்பின் நிறைவால் புத்தகத்தை மூட முடியாமல் மனம் அலைமோதுகிறது.

dd

அம்மையப்ப நல்லூரின் மலைகளும், நதிகளும், கோயில்களும், தோப்புகளும், காலனியும், காதுகளில் ஒலிக்கும் தறிச் சத்தமும், கூத்து மேடையும், அகண்ட ஆலமரமும் என் கால்கள் நடமாடிய இடங்களாகவே மாறிப்போயின. என் மனதின் கற்பனையால் என்னுள் உருவான அம்மையப்ப நல்லூர், என் மனத்திரையில் நிரந்தர காட்சியாய் என்றும் நிற்கும். நெசவின் ஒவ்வொரு கட்டத்தையும் கதையோடு விளக்கியது, அவை பற்றிய அறிவைத் தந்தது.

அம்மக்களின் வாழ்வை அணுஅணுவாய் உணரச் செய்தது நாவல். தறிச் சத்தத்தையும் தாண்டிவரும் அவர்களின் மனக் குமுறலைக் கேட்க முடிந்தது. தெருக்களில் கஞ்சி போட்டு, பாவை இழுத்துக் கொண்டிருக்கும் வேலைகளுக்கிடையே வரும் அவர்களின் கிண்டல்களும், சண்டைகளும் என அனைத் தும் முற்றிலும் மாறுபட்டதொரு வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளச் செய்தது.

ஊர்த் திண்ணைகளையும், தினமும் குழந்தைகளுக்கு அன்னம் கேட்டு வைக்கும் கிண்ணத்தை நிரப்பும் கண்ணியம் மாக்களையும், பயமின்றிக் கதவுகளைத் திறந்து வைக்கும் வீடுகளையும், துக்க வீடுகளில் ஆறுதலாய் நிற்கும் ஏகாம்பரி பாட்டிகளையும், திருமணமான வீட்டிற்கு புதுப்பெண்ணோடு செல்லும் மாமிகளையும், திருவத்திபுரம் தாத்தாக்களையும் நவீனம் என்ற பெயரில் இழந்து, தோப்புகளாய் இருந்த நாம் தனிமரமாய் நிற்கிறோமே என்ற குற்ற உணர்வால் குலை நடுங்குகிறது. இந்த மனிதர்கள் எல்லாம் சாதாரணமாய்த் தோன்றலாம். இந்த விடயங்கள் எல்லாம் பொருட்டற்று தெரியலாம். ஆனால் இவர்கள்தான் அக்கால வாழ்க்கையை அழகுபடுத்தியவர்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. கல்வி என்பது ஒரு மனிதனை உயர்த்தும் தான்.

ஆனால் எந்த உறவுகளோடும் தொடர்பற்ற உயரத்திற்குச் சென்று விடக் காரணமாய் போனதோ என்ற குழப்பம் என்னுள் எழுகிறது.

நாத்திகம் பேசும் வடிவேல் பெரியப்பாவிடம் பொது நலமும், ஊர் முன்னேற்றமும், தன்மையான சுபாவமும் வெளிப்படுவது போல ஆத்திகம் பேசும் ராஜி மாமாவிடமும் குறைவில்லாமல் தென்படுவது நின்று நிதானிக்கச் செய்தது. நம்பிக்கைகள் வேறாக இருந்தாலும் முரணான கருத்துக்களால் எதிரெதிராய் நின்றாலும், இருவரும் அநேக விடயங்களில் கைகோத்து செல்வது மனதின் புரிதல்களைச் சற்று திசை திருப்புகிறது.

ஆத்திகர்கள் அனைவரும் தீயவர்களுமல்ல அல்ல, நாத்திகர் கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல. அன்பை வெளிப்படுத்தும் நல்மனமே மனிதனின் தன்மையை வெளிப்படுத்துகிறது. நடராஜனுக்கும், ராஜி மாமாவிற்கும் உள்ள உறவின் பக்கங்கள் வாசிப்பதற்கு இதமான பகுதிகள்.

இரண்டு பரம்பரையாக பார்த்து வந்த தொழிலைக் காலச் சூழலால் விட்டொழித்து, வேறு தொழிலை கையில் எடுப்பது எவ்வளவு வலியும், சவாலும் நிறைந்தது. அப்படியான சூழலில் சிக்கிய நடராஜனும், தேவியும் ஹோட்டல் தொழிலைவிட்டு நெசவுத் தொழிலிற்கு வருவது கதையின் முக்கியமான பகுதி என்றே கூற வேண்டும். நடராஜனின் விருப்பமின்மையும் இந்நிலைக்கு நகர்த்தியிருக்கலாம்.

பொதுவாழ்வில் ஈடுபடும்போது குடும்ப வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். நடராஜனுக்கும் ஏற்பட்டது. இருப்பினும் அவனைப் புரிந்துகொண்ட தேவி, அவனின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கிறாள். அவன் எல்லா இடங்களிலும் துணையாய் நின்று, அவன் குடும்பத்தைத் தன் குடும்பம் போல் காத்து, தான் ஓடாய்த் தேய்ந்து, பொறுமை காத்து நிற்கும் தேவியைப் போன்ற பெண்களால்தான் பல குடும்பங்களும் சிதையாமல் இருக்கிறது. வறுமையின் பிடியில் சிக்குண்ட குடும்பங்களும் அன்றாடங்களைக் கடந்துதான் வாழ்கின்றன. தேவி காசநோயில் கொடூரமாய் சிக்கியபோதும் தன்னலத்தை விட தன் இணையரின் நலத்திற்காகப் பிழைத்து வரவேண்டும் என்று அவள் பிரயத்தனப்படுவது அருமை. இருவரின் இணக்கத்தைக் கண்டு இனம்புரியாத உணர்வு என்னுள் எழுகிறது.

குடும்பத்திற்காக ஒருத்தரையொருத்தர் புரிந்து, விட்டுக்கொடுத்து போகும் போக்கு இன்று நவீனம் என்ற பெயரில் நாசமானதின் விளைவுதான் குடும்பங்களின் கட்டமைப்பு சிதைந்து, அந்நிய கலாச்சாரங்கள் உள்ளே புகுந்து, முதியோர் இல்லங்க ளும், விவாகரத்து வழக்குகளும் பல்கிப் பெருகிவிட்டதோ என்ற கிலி என்னைப் பீடிக்கிறது. பழமைகள் அத்தனையும் வேண்டாதது மில்லை, புதுமைகள் அத்தனையும் வேண்டியதுமில்லை.

உறவுகளுக்கு இடையே இணக்கம் மிகவும் குறைந்து காணப்படுவது மனதைப் பாரமாக்குகிறது. அன்பு எனும் ஒற்றை வார்த்தைக்குள் அண்டமும் அடக்கம் என்ற சூட்சுமத்தைப் புரிந்திருந்தால் அனைத்துமே நலம்தான். நாவலாசிரியர் கூறியதைப்போல், "பகிர்வதற்கு அன்பைப் போல் உயரிய வஸ்து வேறொன்றுமில்லை".

குறைந்த அரசியல் ஞானம் கொண்ட எனக்கு நிறைந்த ஞானத்தைப் பெற்று தருகிறது நாவலின் அரசியல் பகுதிகள் . சுயமரியாதை இயக்கம், அதிலிருந்து பிரிந்து வந்த தி.மு.க., காங்கிரஸ், நீதிக்கட்சி கட்சிகளின் வரலாறு. பெரியாரின் கொள்கை அரசியலுக்கும், அண்ணாவின் இயக்க அரசியலுக்கும் இணையான வேறுபாட்டைத் தெளிவாய் உணர முடிகிறது. கட்சியில் எல்லோரும் தன்னை முன்னிறுத்திக்கனும் என்கிற ஆர்வமும், சுயநலமும் இருப்பதை வெளிப்படையாய்ப் பேசுகிறது நாவல்.

முதலாளிகளாய் திரிந்து உழைக்கும் வர்க்கத்தை வதைப்பவர்கள் அரசியல் பின்புலத்தோடு உழைக்கும் வர்க்கத்தை அதிகாரத்திற்கு வர விடாதிருக்க,எத்தனை மெனக்கெடல்களைச் செய்கிறார்கள். சாதி ஒழிப்பால் காலனிகளுக்குள் சென்று, அவர்களுக்கு அனைத்திலும் உரிமை கொடுக்க வேண்டும் என்னும் சுயமரியாதைக் கொள்கையைப் பின்பற்றும் தி.மு.க. மாற்றத்தை உருவாக்குகிறது.

மாற்றத்தைக் கொண்டுவர எண்ணினாலும் அவர் களுக்குள்ளிருக்கும் அதன் வலியை முழுதாய் மாற்ற முடியவில்லை. அவர்களுக்கு அளித்த உரிமையிலும் ஒரு அளவுகோலோடு ஊரார் நிற்பது மனதை வேதனைக் குள்ளாக்குகிறது. ஊர் மக்கள் சிலர் காலனி மக்களுக்கு உரிமைகளைக் கொடுத்துவிட்டு, அதனால் கொள்ளும் பெருமிதம் சொல்லவே வேண்டாம். யாருக்கு யார் உரிமை அளிப்பது? அனைவருக்கும் பொதுவல்லவா ஊர்? பார்ப்பனர் கள் இவர்களிடம் காண்பிக்கும் அதிகாரத்தை வெறுக்கும் இவர்கள், அதே வெறுப்பை காலனி மக்கள் மீது மட்டும் காண்பிப்பது என்ன நியாயம்? ஊர்க் குளத்தை நாசமாக்கியது தவறு என்றாலும், அவர்களின் வலியை எங்கு சென்று கொட்டுவார்கள். மனிதநேயம் குறைந்ததன் விளைவுதான் இது.

இந்த நெடு நாவல் ஒரு அழகிய பயணமாக அமைந்தது. இதில் வந்துபோகும் சிறுசிறு கதாபாத்திரங்களும் கூட மனதிற்கு நெருக்கமாகிப் போனார்கள்.

சுசிலாவின் சேட்டைகளும், ருக்குவின் பொறுப்புணர்வும், அண்ணியான தேவியோடு இணக்கமான சிறுவன் சுப்பிரமணிய மும், நடராஜனுக்கு உயிரான வெள்ளச்சி, சிவப்பி, கருப்பி என பெயரிட்டுக்கொண்டே போகலாம் அத்தனை கதாபாத்திரங்கள்.

நாவலாசிரியர் அ.வெண்ணிலா முன்னுரையில் கூறிய, "நாம் எவ்வளவு தூரம் மனிதர்களின் உணர்வுகளோடுப் பின்னோக் கிச் செல்கிறோமோ, அவ்வளவு ஆழமாக நிகழ்காலத்தில் காலூன்றி நிற்கமுடியும்". அப்படி ஐம்பதுகளில் நெசவையே தொழிலாகக்கொண்ட நல்லூர் கிராமத்தின் இந்தக் கதை, நிகழ்காலத்தில் ஆழமாகக் கால் பதித்திட வைத்தது. அதே நேரத்தில் அக்காலக்கட்டத்தின் மக்கள் பகுத்தறிவால் மாறினார் களா? அவர்களின் மாற்றம் நிலையானதா? ஊரின் மாற்றம் நிலை யானதா? என்பதற்கு சாட்சியாய் நம்மை காண்பிக்கிறார் எழுத்தாளர்.

மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் நிலைபெறவில்லையோ என்ற சந்தேகத்தைதான் இன்றைய மக்களின் நிலை ஏற்படுத்து கிறது.

இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் காலகட்டத்தில் அதை நிலைப்படுத்தவேண்டிய கடமை நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதற்கான மெனக்கெடல்களைச் செய்யவும் நம்மைத் தூண்டுகிறது.

நிச்சயமாக சாலாம்புரியை கடக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாவல் புரிதல்களின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அமையும். சிறு புரிதலுள்ளவர்களை ஆழமான புரிதலை நோக்கி நகர வழிசெய்யும். இந்த நாவலின் அழகியலும், அதன் மெல்லிய போக்கும், கரம் பிடித்துச் செல்லும் நடையும், வட்டார வழக்கு மொழிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லாடல்களும், கனவிலும் நீங்கா கதாபாத்திரங்களும், அரசியல் அறிவும் சுயதேடலோடு இருக்கும் ஒவ்வொருவரின் அகச்சுடரின் வெளிச்சத்தைக் கண்டடையச் செய்யும்.

‘சாலாம்புரி’யை தமிழ்ச் சமூகத்தின் முன்னே படைத்திருக் கும் கவிஞர் அ.வெண்ணிலா, இந்த நாவலின் மூலமாக சமூக அக்கறையைத் தூண்டும் வீர்யமிக்க நாவலாசிரியராகவும் பரிணமித்துள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நாவல் லி சாலாம்புரி, எழுத்தாளர் - அ.வெண்ணிலா, பக்கம் - 448 விலை: ரூ.400/- வெளியீடு - அகநி பதிப்பகம், வந்தவாசி. செல்: 94443 60421