"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்'
என்றார் வள்ளுவர் .
இதன் பொருள், அடக்கத்தோடும் பணிவோடும் வாழ்கிறவன் இறைவனைப் போல் மக்களால் மதிக்கப்படுவான். இவை இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் இருளில் மூழ்கியதுபோல், காணாமல் போய்விடுவார்கள் என்பதாகும்.
வள்ளுவர் சொன்னபடி, தனது அடக்கம் மிகுந்த பண்பாலும், அளவு கடந்த பணிவாலும், ஒவ்வொருவர் இதயத்திலும் அன்புமிகுந்த ஒரு தேவதூதனைப் போல் பாடகர் எஸ்.பி.பி. வாழ்ந்திருக்கிறார். அதையே அவரது இழப்பும், மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கும் பெரும் சோகமும் எடுத்துக்காட்டுகிறது.
படைப்பாளிகளில் சிலர், தங்கள் திமிரை ’வித்யா கர்வம்’ என்ற பெயரால், தங்களுக் குத் தாங்களே தலையில் தூக்கிகொண்டு அலைவார்கள். தாங்களே அதை அங்கீகரித்துக் கொள்வார்கள். ஆனால் மக்கள் அப்படிப் பட்டவர்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.
எஸ்.பி.பி. உலகம் போற்றும் இசைக் கலைஞர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்போல், தான் பாடிய ஒவ்வொரு பாடலையும் உணர்ந்து உணர்வுப்பூர்வ மாகப் பாடியவர்.
நம் வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், கவலை, காதல், ஏக்கம், பிரிவு, நேசம், நெகிழ்ச்சி, என அத்தனையிலும் நம் மனம் உணரும் அத்தனை உணர்ச்சிகளையும் தன் குரலால் எதிரொலித்த தால்தான், நம் அனைவரின் இதயத்துக்கும் நெருக்கமானவரானார் எஸ்.பி.பி. இப்படி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என இந்தியாவில் வழங்கும் 16 மொழிகளிலும், அந்தந்த மொழியின் உச்சரிப்பையும் உணர்வையும் உள்வாங்கிக் கொண்டு பாடியவர். அதனால் உலகம் எங்கும் இருக்கும் இந்திய மக்கள் அத்தனை பேருக்கும் நெருக்கமானவராகத் திகழ்ந்தார்.
அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. இதுவரை ஏறத்தாழ 42 ஆயிரம் பாடல்களை அவர் பாடி, எவராலும் முறியடிக்க முடியாத கின்னஸ் சாதனை படைத்திருகிறார். இதுவரை அவர் ஆறு தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார்.
இதுதவிர பல்வேறு பட்டங்கள், பரிசுகள், விருதுகள், பாராட்டுக்கள் என அனைத்தையும் பெற்றிருக்கிறார். இவ்வளவு விருதுகளையும் சிறப்புக்களையும் பெற்றும்கூட, எஸ்.பி.பி. பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. கடைசிவரை, தன்னை சராசரிகளை விடவும் சராசரியாகவே வைத்துக்கொண்டார்.
தான் சந்திக்கிற ஒவ்வொருவர் மீதும் உண்மையான அன்பை வாரி இறைந்து, இதயங்களைக் கொண்டாடி அத்தனை பேரையும் அவர் நெகிழ வைத்திருக்கிறார். அதுதான் அவருக்கு இவ்வளவு பெரிய புகழையும், பெருமைகளையும், உறவுகளையும் பெற்றுத்தந்திருக்கிறது.
அவருடைய தலை எந்தவித வித்தியாசமும் இல்லாமல், தகுதி வேறுபாடுகள் பார்க்காமல் எல்லோருக்கும் தாழ்ந்திருக்கிறது. இப்படி அவர் தண்ணீரைப் போல் மிகவும் எளிமையாக வாழ்ந்ததால், அவர் தன்னம்பிக்கை இல்லாதவர் என்றோ, நிமிரத் தெரியாதவர் என்றோ கருதிவிட முடியாது.
அவர் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். தன் இசையாற்றல் மீது நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் முறையாக சங்கீதம் படிக்காமலே பலகோடி இதயங்களை அவரால் கவரமுடிந்தது. சங்கீத மேதைகள் பலர் கூடியிருக்கும் சபைகளிலும் கூட, அவர்களே வியக்கும்படி பாடி, தன் திறமையால் அவர் நிமிர்ந்திருந்தார். இதுவரை தன் வாழ்நாளில் அவர் ஒரு கர்நாடக இசைக் கச்சேரியைக்கூட நடத்தியதில்லை. ஆனாலும் அவர் பாடலை சங்கீத வித்வான்கள் பலரும் ரசித்துப் பாடியிருக்கிறார்கள். குறிப்பாக சங்கராபரணம் படத்தில் அவர் பாடிய சங்கீதப் பாடல்கள், கர்நாடக மேடைகளில் எல்லாம் எதிரொலித்தது. பிரபல கர்நாடக சங்கீத வித்வான்கள் எல்லாம் எஸ்.பி.பி.யின் பாடலைப் பாடியே ஆகவேண்டிய நிர்பந்தமும் ரசிகர்களால் ஏற்பட்டது.
இப்படியாக, 60-களுக்குப் பிறந்த எவரும் எஸ்.பி.பி.யின் குரலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது. மூன்று தலைமுறைக்கும் பாடிய கலைஞர் அவர்.
காதுள்ள அத்தனை பேரையும் தன் மிருதுவான குரலால் கவர்ந்திழுத்த மகா மேதை எஸ்.பி.பி. அவர் எந்த நிகழ்ச்சிக்குப் பாடச் சென்றாலும், தன்னைச் சிறப்பு விருந்தினராகக் கருதிக்கொண்டதில்லை. கூடுகிற கூட்டம் தனக்காகக் கூடுகிற கூட்டம்தான் என்று எண்ணியும் அவர் தற்பெருமை கொண்டதில்லை.
எந்த மேடையனாலும், அங்கே பக்கவாத்தியம் வாசிக்கும் கலைஞர்கள் தொடங்கி, தன்னோடு பாடும் சின்னச் சின்ன பாடகர்கள் வரை, அனைவருக்கும் அவர் அன்போடு நன்றி சொல்லிவிட்டுத்தான் பாடத்தொடங்குவார். முடிக்கும்போதும் இந்த நன்றி உணர்வை உணர்த்திவிட்டுதான் விடைபெறுவார். இது எவ்வளவு பெரிய பண்பாடு.
இன்று அவரது இழப்புக்காக இங்குள்ள ஒவ்வொருவரும் நெகிழ்வோடு கண்ணீ ரைச் சிந்தும் போது... அந்தக் கண்ணீர்த் துளிகளில் தெரிகிறது எஸ்.பி.பி.யின் மேன்மை. அவரது மென்மையான இதயமும் அவரது நெகிழ்வான குணமும் அவரது குரலில், செயலில் கடைசிவரை ததும்பியது பெரும் வியப்பு. ஏனெனில், வயது ஏற ஏற பெரும்பாலானோர் தங்களது அலுப்பையும் விரக்தியையும் அடுத்தவர்மேல் எரிச்சலாக வெளிப்படுத்துவதைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், தொடக்க காலத்திலேயே கனிந்த கனிபோல் இருந்த எஸ்.பி.பி., கடைசிவரை தனது கனிவை அதிகமாக்கிக் கொண்டாரே தவிர, அவர் எவரிடமும் கடுஞ்சொல் பேசியதாக தகவலே இல்லை.
தான் இசையமைத்த பாடல்களைப் பாடக் கூடாது என இசைஞானி இளையராஜா, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கடுமையாக எச்சரித்தபோது கூட எஸ்.பி.பி.யின் புன்னகை நிறம் மாறவில்லை. அப்போதும் அமைதியாகத் தன் புன்னகையை மட்டுமே அவருக்கு பதிலாக்கினர். அப்படிப்பட்ட எஸ்.பி.பி.யின் பேருள்ளம்தான், இன்று அனைவரையும் அவருக்காகத் தேம்ப வைத்திருக்கிறது. எஸ்.பி.பி. தன் இசையை மட்டுமல்லாமல் தன் இதயத்தையும் மக்களிடம் முழுதாக அர்ப்பணித்திருக்கிறார்.
கொடிய நோயான கொரோனா பரவத் தொடங்கிய போது அவர், பாடுவது மட்டும்தான் நம் வேலை என்று முடங்கவில்லை. கொரோனா தீவிரம் காட்டத் தொடங்கிய உடனேயே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னுடைய “எஸ்.பி.பி. ஃபேன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட்’ மூலம் நிதி திரட்டி உதவத்தொடங்கினார்.
அதற்காக, தன் முகநூலில், யார் வேண்டுமானாலும் தன்னிடம் எந்தப் பாடலை வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதியை அறக்கட்டளைக்குக் கொடுக்கவேண்டும் என்று அறிவித்து, எங்கோ இருக்கும் குப்பனும் சுப்பனும் கேட்ட பாடலைக் கூடப் பாடினார். அப்படி மக்களிடம் இறங்கிச் சென்று, கொரோனா வால் பாதிக்கப்பட்டோருக்காக உதவிவந்த அன்பாளர் அவர்.
அதோடு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்குக் கொண்டுபோகவேண்டும் என்றும், அவர்கள் கொரோனா வின் பிடியில் சிக்கிக்கொண்டு உயிரை இழந்துவிடக் கூடாது என்றும் பரிதவித்தார் எஸ்.பி.பி.
அதற்காகவே கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பாடல்களைக் கேட்டு வாங்கிப் பாடினார். எந்தக் கொரோனா விலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்பினாரோ, அந்தக் கொரோனா விடமே அவர் தன் இன்னுயிரை கொடுத் திருப்பதுதான் பெரும் சோகம்.
அவரது கடைசி ஆன்லைன் நிகழ்ச்சியில் கூட அவருடைய அருள் உள்ளம்தான் அவரிடம் இருந்து பெருகி வழிந்தது.
மருத்துவமனையில் அவர் அட்மிட் ஆவதற்கு முன்பாக, ஆன்லைனில் ஒரு நிகழ்ச்சியை அவர் நடத்தினார். அது ’டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின்’ நூறாவது ஆன்லைன் நிகழ்ச்சி. மௌனராகம் முரளி குழுவினரோடு இணைந்துதான் இந்த நிகழ்ச்சியை அவர் ஜூலை வாக்கில் வழங்கினார்.
அப்போதுகூட, அந்த இசை நிகழ்ச்சியை நடத்திய மௌனராகம் முரளி, அவரிடம் ‘நீங்கள் நேரில் வந்து பாடத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி, ஒரு ஆடியோ கொடுங்கள். போதும் என்று சொல்லியிருக்கிறார். இருந்தும் பேருள்ளம் கொண்ட எஸ்.பி.பி. ’சென்னையில் இருந்துதானே ஆன்லைனில் நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். அதனால் நானும் உங்கள் இடத்துகே வந்து பாடுகிறேன்’ என்று தாமாகவே அங்கு சென்று பாடியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் வழங்கிய அந்த சிறு உரை, மனித குலத்துக்காக ஒரு பேருரையாக அமைந்திருந்தது என்பது நம்மை வியக்க வைக்கிறது.
அந்த நிகழ்ச்சியில், கொடுமைகளைச் செய்யும் அந்தக் கொரோனா கிருமியைக் கூட, அவர் வன்மத்தோடு திட்டாமல், அதனிடமும் பெருந்தன்மை காட்டியபடிதான் பேசினார்.
கொரோனாவப் பத்தி ரொம்பத் தப்பா பேசத் தேவையில்லை. கொரோனாவை... அது ஒரு கொடுமையான ராட்சசன்னு சொல்லவேண்டாம்.... நமக்கு அது சாபம். நாம செஞ்ச தப்புக்கு அது சாபம்.’’
-என்று பெருந்தன்மையாகப் பேசித் திகைப்பூட்டிய எஸ்.பி.பி, ஏன் கொரோனா மீது பழி போடக்கூடாது என்பதற் கான காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தார். (அந்தப் பேச்சு முழுதாக இதழின் உள்ளே இடம்பெறுகிறது) இயற்கைக்கு, நாம ரொம்ப வஞ்சனை பண்ணிட்டோம். நான் எல்லா நிகழ்ச்சியிலும் சொல்லிக்கிட்டே இருப்பேன்.
அதுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதைய நாம கொடுக்கலை. இயற்கைத் தாய். நம்ம பெரியவங்க எல்லாம் நமக்கு அழகான பூமி, அழகான காற்று, அழகான தண்ணின்னு எல்லாம் கொடுத்தாங்க. நாம எல்லாம், அதைப் பாழாக்கிட்டு. வி ஆர் கிவ்விங் எ... மசானம் மாதிரி... எடத்தை வந்து..ஒரு சுடுகாடு மாதிரி... அடுத்த ஜெனரேசனுக்குக் கொடுக்குறோம்.
என்ன ஞாயம் இது? அதனால நடக்கும் பலன் என்னவோ... நாம் அதை அனுபவிச்சே ஆகனும்.’’
என்று அதற்கான நியாயத்தையும் சொன்னார். உண்மைதானே, இன்று நீர் நிலைகள் தொடங்கி, மலைகள், ஆறுகள், வனங்கள் என்று எல்லா வற்றையும் மனிதர்கள் சுரண்டி விழுங்கத் தொடங்கிவிட்டார்கள். இயற்கையை மனிதர்களான நாம் வஞ்சிப்பதால்தான், இயற்கை நம்மை பதிலுக்கு இப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்ற பேருண்மையை இதன் மூலம் உணர்த்திய எஸ்.பி.பி., இப்படி இயற்கையைக் கெடுத்ததற்கான பலனைத்தான் நாம் அனுபவிக்கிறோம் என்று... வாழ்வின் ரகசியக் கோட்பாட்டை உணர்த்தினார்.
அதுமட்டுமல்லாது, இங்கே சாதி, மதங்களின் பேரால் நடக்கும் கொடுமைகளுக்கும் தன் வருத்தத்தைத் தெரிவித்த, உலக சமன்மையை உணர்த்தத்தான் அந்த இசைநிகழ்ச்சிக்கு...’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் தலைப்பைக் கொடுத்ததாகச் சொன்னார். அவரின் வருத்தம் இதுதான்....
“இவன் என் ஆளு,.. என் ஜாதி.. என் கேஸ்ட்.. என் கலர்.. என் ஊரு...என் தேசம்...ம்ம்ம்.. மற்றவங்கள்லாம் யார்? இது ரொம்ப சாதாரணமானவங்க பேசுற பேச்சு.
புத்திசாலியா இருக்கறவங்களுக்கு நாம எல்லாரும் ஒன்னுதான். நம்மகிட்ட ஜாஸ்திய இருந்தா பகிர்ந்துக்கலாம். பகிர்ந்துக்க முடிலைன்னா. யாருக்கும் தீமை செய்யாம. இருந்தாலே போதும். நவ், திஸ் ஈஸ் ஹேப்பனிங். பீப்புள்ஸ் ஆர் காண்ட்ரிபியூட்டிங் ஃபார் அதர் பீப்புள் பெனிபிட்ஸ்.’’
-என சதிம் மத நிற வேறுபாடுகளை மட்டுமல்லாது, நாம் தேச எல்லை கடந்து மனிதனாக வாழவேண்டும் என்ற தன் விசால மனதைக் காட்டியிருக்கிறார். அதேபோல் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கடைசி நபருக்கும் தன் நன்றியைச் சொன்ன எஸ்.பி.பி., அங்கே கூடியிருந்த ஆடியன்ஸைப் பார்த்து கடைசியாக...
’’நீங்க வளர்த்த பசங்க நாங்க. உங்களுடைய ஆதரவு இல்லாம நாங்க ஒன்னுமே செய்யமுடியாது.’ என்று முத்தாய்ப் பாய்ச் சொல்லி, தன் பண்பை வெளிப்படுத்தினார். இதுதான் எஸ்.பி.பி. அவருடைய இந்தப் பண்புதான், இசையோடு சேர்ந்து வந்து நம்மைக் கரைத்துக்கொண்டே இருக்கிறது.
எஸ்.பி.பி. என்ற அந்த மகா கலைஞனுக்கு அன்பான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இழப்பின் கனத்தோடு,
நக்கீரன்கோபால்