வானம்பாடிக் கவிஞர் புவியரசு செப்டம்பர் 19ஆம் நாள் தொண்ணூறு அகவையில் அடிஎடுத்து வைத்து அதே ராஜநடை நடந்து அந்தக் கூட்டத்திற்கு வந்தார்.
இந்தக் கொரோனா காலகட்டத்தில் எதற்காக நடந்தது கூட்டம்? கோவை ஈப்பன் இல்லத்தில் கோவை கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்கள், பவானி ரமணி தலைமையில் கவிஞரின் பிறந்தநாளைக் கொண்டாடிய நிகழ்வு அது. அளவாக அமைந்த நண்பர்களுக்கிடையில் வழக்கமான கலகலப்பையும் அதிர்ச்சியையும் மூட்டினார் கவிஞர். தொண்ணூறு அகவையைத் தொடுகிறாரா இவர் என்று எவரும் சொல்லிவிட முடியாதபடி அதே கம்பீரமான குரல், கறாரான பேச்சு. இன்றைய சூழல் எப்படியிருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிறிது நேரம் உரையாற்றினார். செல்லிடப்பேசிகளில் தொலைந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை எப்படி மீட்டெடுப்பது என்பதற்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது ரோபோக்களின் காலம் என்றார். கோவை அவினாசி சாலையில் உணவு விடுதி ஒன்றில் ரோபோக்கள் உணவு வழங்குவதைச் சொல்லிவிட்டு இந்தக் கூட்டத்தில் ரோபோக்கள் இருக்கும் கூடும் ஏன் நானே கூட ரோபாவாக இருக்கலாம் என்று கூட்டத்தைக் கலகலப்பாக்கினார். தான் எழுதிய கண்மணி சோபியா புதினத்தில் ரோபோவை மையப்படுத்தி எழுதியதைச் சொல்லிவிட்டு, எந்தப் பத்திரிக்கையுமே கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் வெளியிட்டார். ஆனால் நம் “இனிய உதயம்’’ அந்த நூலைக் குறித்து விரிவான மதிப்புரையை ஜீன் 2019 இதழில் வெளியிட்டுள்ளதும் அதை அவரே மனந்திறந்து பாராட்டியதும் ஏனோ அவருடைய நினைவுக்கு வரவில்லை போலும். இருந்தாலும் அவருடைய கவிதை ஒன்று சட்டென்று என் நினைவிற்குள் பளிச்சிட்டது.
பொட்டல்வெளி
ஒற்றைப்பனை
இரவெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கும்
ஒரு பேச்சுத்துணைக்கு ஆளின்றி’’
என்கிற கவிதைதான் அது. சென்ற ஆண்டு 15.9.2019 அன்று வெளியிடப்பட்ட புவி“88 என்ற நூலில் “பயம்’’ என்கிற கவிதைதான் எனக்குள் மின்னல் அடித்துவிட்டுப் போனது. ஆனால் கவிஞர் எப்போதும் எவரோடாவது பேசிக்கொண்டே இருப்பவர். நாள்தவறாமல் படித்துக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பவர். அவருடைய அசாத்தியமான வாசிப்பு அனுபவம் அவர் பேசுகிற மேடைப் பேச்சுகளில் வெளிப்படும். அப்படித்தான் அன்றைக்கும், பொள்ளாச்சி எதிர்வெளியீடு வெளியிட்ட “டாவின்சி கோடு’’ நூலைப்பற்றியும் வேறு சில நூல்களைப் பற்றியும் விதந்துரைத்தார்.
கோவை மாவட்டம் உடுமலை வட்டம் லிங்கவநாயக்கன் புதூர் என்ற கிராமத்தில் 19.9.1931 ல் சுப்பையா, தாயம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்த சு.சகன்னாதன் தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் புவியரசாகத் தனித்த தடம் பதித்த நிகழ்வுகளை மனம் அசைபோட்டது. கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளால் தமிழ்க்கல்லூரியில் 1957ல் தமிழ் வித்துவான் பட்டம் பெற்ற கவிஞர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் நற்புலமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மொழிபெயர்க்க வழிகாட்டிய அஞ்சலக அதிகாரியை இன்றும் நினைவில் வைத்துப் போற்றுகிறார். அன்று பெற்ற ஆழமான பயிற்சி வாழ்நாள் முழுவதும் ஏராளமான பிற மொழி நூல்களை மொழிபெயர்க்க வழிவகுத்தது. ஓஷோவின் நூல்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு நம் கவிஞருடையதுதான். அவரின் அழகான மொழிபெயர்ப்பில் “மிர்தாதின் புத்தகம்’’ “அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்’’ “கர்மசோவ் சகோதரர்கள்’’ உட்பட பல அருமையான நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
கோவையில் பல்வேறு பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். என்றாலும் பட்டி தொட்டியெங்கும் ஒரு காலத்தில் பக்திச் சொற்பொழிவுகளிலும், பட்டி மன்றப் பேச்சுகளிலும், கவியரங்கப் பொழிவுகளிலும் பங்கேற்று முழங்கியவர் 1952ஆம் ஆண்டு “நவஇந்தியா’’ நாளிதழில் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1968-69ல் “தேனீ’’ இதழ் ஆசிரியராக, 1970-77ல் “வானம்பாடி’’ இதழில் பொறுப்பாளராக வலம்வந்த கவிஞர் “வான்மதி’’ “பூ’’ “இளவரசி’’ போன்ற சிற்றிதழ்களின் துணை ஆசிரியராகவும் நவீன கலை இலக்கிய இதழாக மலர்ந்த “காற்று’’ இதழில் ஆசிரியராகவும் பூத்துச் சிரித்தார்.
கல்லூரிப் பருவத்தில் சர்வோதயச் சிந்தனைகளில் மனம் பறிகொடுத்த கவிஞர் வினோபா பாவே கோவை வருகையி்ல் அவரோடு நடைப்பயணம் மேற்கொண்டு “பகவத்கீதை’’ பேருரை நூலைப் பெற்றார். பின் சிலம்புச் செல்வரின் “தமிழரசு இயக்கத்தில் இணைந்து நகரச் செயலாளர் பொறுப்பேற்று பல மாநாடுகளை நடத்தினார். திருத்தணி இலக்கிய மாநாட்டில் இவர்தான் தலைமை வகித்தார். தமிழ்ப்பாதுகாப்பு, தமிழக வழக்கெல்லை, தெற்கெல்லை மீட்பு, பயிற்சிமொழி, ஆட்சிமொழிப் போராட்டங்களில் பல முறை சிறை சென்றார். ஒரு காலத்தில் பகவத்கீதை தொடர்சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர் இன்று நடக்கிற பாதையோ வேறு திசை நோக்கி.
மரபுக் கவிதையில் முகிழ்த்தவர் புதுக்கவிதைப் புயலாக எழுந்த போது அவர் கவிதைகளின் முழக்கம் எல்லாத் திசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தியது. காஜி நஸ்ரூல் இஸ்லாம் எழுதிய நூலைப் “புரட்சிக்காரன்’’ என்று மொழிபெயர்த்தார். அந்நூலுக்கு சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது கிடைத்தது. அதே போல் கையொப்பம் என்ற அவருடைய மூல நூலுக்கும் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து “கவிதைக்கென்ன வேலி?’’ “எட்டுத்திசைக் காற்று’’ என்று வெளியிட்டார். சங்க இலக்கியக் கதைகளில் இருந்து சமகால உலக இலக்கியம் வரை ஆழ்ந்து கற்ற கவிஞர் ஓயாமல் படைப்புலகில் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.
நாடகத் துறையிலும் கால்பதித்த கவிஞர் “நீதிக்காக’’ (1969) “சலங்கை (1970) பிரார்த்தனை (1970) சத்திய சோதனை (1971) நம்பிக்கை (1972) மூடிய கதவு , ராகமாலிகை (1972) ஓடம் (1973) பாலூட்டி வளர்த்த கிளி (1974) என்று பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இதில் நீதிக்காக என்கிற நாடகம் 11 முதல் பரிசுகளையும் சலங்கை என்ற நாடகம் 6 முதல் பரிசுகளையும் வென்றெடுத்தது. கவிஞரின் “மனிதன்’’ நாடகத்தை அகில இந்திய நாடக வரிசையில் 22.10.1992 அன்று இரவு 9.30 மணிக்கு நாட்டின் அனைத்து வானொலி நிலையங்களும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பின. தொலைக்காட்சி, வானொலி என்று தொடர்ந்து இயங்கிய கவிஞர் திரைத்துறையிலும் பயணம் மேற்கொண்டார். “பிரியமுடன் பிரபு’’ திரைப்படத்தின் கதை, வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும், நடிப்புப் பயிற்சியாளராகவும் பங்காற்றிய கவிஞர் “ஹவுஸ்புல்’’ திரைப்படத்தின் இணை இயக்குநராகவும் விளங்கினார்.
கருணை இல்லம், பூங்குழலி, பொறாமை, விழிகள் பேசும் மொழி, பிரியமுடன் பிரபு ஆகிய படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
அதோடு நடிகர் கமல்ஹாசனின் பல திரைப்படங்களின் கதை விவாதங்களில் பங்கேற்றுப் பணியாற்றியர். கவிஞரின் நெருங்கிய நண்பர் கமல். 2006ஆம் ஆண்டு கவிஞரின்“முக்கூடல்’’ கவிதைத் தொகுப்பு தமிழக அரசின் முதல்பரிசைப் பெற்றது. அதேபோல் 2016ல் அவர் மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் கரம்சேவ் சகோதரர்கள் என்ற நூலுக்கும் தமிழக அரசு பரிசு வழங்கியது. இவற்றைத்தவிர ஏராளமான விருதுகளைத் தன் படைப்புகளுக்காகக் கவிஞர் பெற்றிருக்கிறார் கவிஞர் 1990-1992 முடிய சென்னையில் உள்ள கேரள அரசு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் தொடர்பு அலுவலர் பணியில் இருந்தார். அப்போது ஆறு தமிழ்ப்படங்களும் பல மலையாளப் படங்களும் அவரது மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டன. கவிஞரின் படைப்புகள் ஆங்கிலம், சிங்களம், அங்கேரியம், மலையாளம், ரஷ்ய மொழிகள்,கன்னடம் என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நவீன நாடகங்களில் பெரும் ஈடுபாடு கொண்ட கவிஞர், “காற்று’’ இதழில் பலவற்றை அரங்கேற்றினார்.
பேராசிரியர் திலீப்குமார், அரவிந்தன், ராம்ராஜ் போன்றவர்களோடு இணைந்து நவீன நாடகப் பயிற்சி அளிப்பவராகவும் விளங்குவதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.
அதே நேரத்தில் வீதி நாடகங்கள் நடத்துவதிலும் விருப்பம் கொண்டவர். கல்கத்தா போன்ற நகரங்களில் நடத்தப்படுகிற வீதி நாடகங்களில் வெகு இயல்பாக மிகப் பெரிய நடிகர்கள் கலந்து கொண்டு இயங்குவதையும் நம் நடிகர்கள் தயங்குவதையும் அவ்வப்போது சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.
கலைஇலக்கியப் பெருமன்றம் நடத்திய இந்த விழாவிலும் இதைச் சொல்ல அவர் தயங்கவில்லை. 1957ல் திருமணப்பரிசு என்ற பெயரில் வெளிவந்த இலக்கியக் கட்டுரைத் தொகுதி தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கான படைப்புகளைத் தந்திருக்கிறார்.
அதோடு “சப்னா’’ புத்தக நிறுவனத்தின் பதிப்பாசிரி யராக இருந்து 170க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார். ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிற கவிஞர்
“நான்
எப்போதும்
ஒளிந்து கொண்டுதான்
இருக்கிறேன்,
எனக்குள் இருக்கும்
என் நாளைப் போல…’’ (புவி“88 பக் 77)
என்கிறார். ஆனால் அவர் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. வானம்பாடிக் காலத்திலேயே “ஓ . அஜிதா’’ என்ற கவிதைக்காகக் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டவர் என்பதால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதே சரி என்று தோன்றுகிறது. கவிஞரின் “ஏலி ஏலி லாமா சகப்தானி’’ ( தேவனே…தேவனே.. ஏன் என்னைக் கைவிட்டீர்?’’ என்ற புகழ்பெற்ற கவிதை இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது.
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை எத்தனையோ முறை கண்ட கவிஞர் சலிக்காமல் சாதனைகளைப் புரிந்து வருகிறார். சென்ற ஆண்டு வெளிவந்த புவி’’88 கவிதை நூல் வழக்கமான அவருடைய மொழிநடை, கருத்தாழம், நோக்கு இவற்றிலிருந்து பெரிதும் வேறு பட்டதாக உள்ளதையும் சொல்லியாக வேண்டும். “வெளியிடப்படாத வாக்குமூலம்’’ என்ற கவிதை
“ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது
ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
இரகசியமாய்.
கனத்த மொழிச் சுவருக்குப்
பின்னால்.
சகிக்க முடியாத தருணத்தில்
எப்போதாவது அது
தடைதகர்த்து
வெளியே வந்து
விழும்போது
அதற்குக் கிடைக்கப் போவது
முத்தமா?
செருப்படியா?’’
என்று எள்ளல் ஒலிக்க விழுகிறது. அதே நேரத்தில்
“திட்டமிட்டு
என் தலை உச்சியில்
எச்சமிட்ட காக்கை
எவர்வீட்டுக் காக்கை?’’
என்ற கேள்விக்குள் புதைந்துள்ள உண்மைகளை யாரால் வெளிப்படுத்த முடியும்? எங்கெங்கும் இப்படித்தான் நடக்கிறது. ஆனால் யாரென்று தெரிந்தும் எதுவும் செய்துவிட முடியாத நிலை.
அதுதான் இன்றைய வாழ்நிலை. எங்கிருந்தோ வருகின்றவை நம் மீது எச்சிமிடுகின்றன.. நம்மால் என்ன செய்ய முடிகிறது? இயந்திரமயமாய் விட்ட மனித வாழ்வை
“எங்கிருந்தோ வந்து
நெற்றிப் பொட்டாய்
மாறிச் சுட்டபோது
தடவிப் பார்த்ததில்
அது ஒரு தோட்டா
என்று தெரிந்தது.
விரல்விட்டுத் தோண்டி
எடுத்துச் சாப்பிட்டதில்
நன்றாகவே இருந்தது
கோவைக்காய் போல…’’ (புவி ’’88 பக் 18)
என்பதை விட வேறெப்படிச் சொல்ல முடியும்? இவர் வாழ்க்கையை எப்படிக் கழித்திருக்கிறார் என்பதை
“நூறு ரூபாய்த் தாளை
கசக்கி எறிந்துவிட்டு
ஒரு துண்டுக் காகிதத்தை
பத்திரப்படுத்தி வைக்கிறேன்
சமயத்திற்கு
உதவுமென்று’’ (புவி ’’88 பக் 26)
என்கிற சிறுகவிதை வெளிப்படுத்துகிறது. உண்மைதான். கவிதை எந்த நேரத்திலும் வெடித்து வரலாம். அதைக் காகிதத்தில்தான் இறக்கி வைக்கமுடியும். பணத்தாள்களின் மேல் இறக்கி வைத்தால் கவிதை, கவிதையாக இருக்காது என்கிற தெளிவு கொண்ட நெஞ்சம் புவியரசுக்கு இருப்பதால் தான் இன்றும் தொடர்ந்து இயங்க முடிகிறது. இந்த உலகின் இயல்பு எப்படி இருக்கிறது என்பதை
“ஒரு புன்னகையை
இலவசமாகக் கொடுத்துவிட்டுத்
திரும்பினேன்.
சற்று தூரம் சென்று
திரும்பிப் பார்த்தபோது
அவன் அதைவைத்து
வியாபாரம் செய்து
கொண்டிருந்தான்’’ (புவி ’’88 பக் 30)
என்ற குறுங்கவிதையில் குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறார். அகப்பட்டால் எவரை வேண்டுமானா லும் எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராயிருக்கிற மனிதர்களிடம் எந்த அறத்தை எதிர்பார்க்க முடியும்? சமூகப் பொறுப்புணர்வோடு முழங்கிக் கொண்டே இருக்கிற கவிஞர் முணுமுணுப்பதில்லை. அதைக் கவிதையாகவும் கருதுவதில்லை. இன்னும் இரு கவிதைகளைச் சொல்லித்தான் தீர வேண்டும். “பாராட்டா? குற்றச்சாட்டா?’’ என்கிற கவிதைதான் அது.
“காந்தியிடம்
ஒரு தடி இருந்தது
அதை அவர்
பயன்படுத்தவே இல்லை’’ ( புவி “88 பக்58)
இந்தக் கவிதை நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் நாடு போகிற போக்கிற்குச் சரியான தீர்வு காண வழிபிறக்கக் கூடுமோ? இல்லையென்றால் அவரே பாடுவதுபோல
“கைகூப்பி நின்று
தலைகுனிந்து வணங்கி
மண்டியிட்டுத் தாழ்ந்து
நெடுஞ்சாண் கிடையாய்
முழுதுடல் வணங்கி எழு!
வாழ்க்கைச் சகடம்
மேடு பள்ளங்களில்லாமல்
குலுங்கிக் குடைசாயாமல்
நிம்மதியாய் ஓடிக் கொண்டிருக்கும்!
ததாஸ்து!’’ (புவி ’’88 பக் 83)
என்று இருந்துவிட்டுப் போய்விடலாமோ?. இதுதான் இன்றைய நிலையாக இருக்கிறது. நம் சிந்தனைகளை எதை நோக்கித் திருப்ப வேண்டும் என்கிற தெளிவு இல்லையென்றால் எதிர்காலம் இல்லை என்பதைக் கவிஞர் புவியரசு தெளிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.
பேராசிரியர் திலீப்குமார் குழுவினர். கவிஞரின் கவிதை வரிகளைக் கொண்டே “வெட்கமில்லை’’ என்ற குறுநாடகத்தை அரங்கேற்றினர். மிக அழகாக நடந்தேறிய விழாவின் காணொலிக் காட்சிகள் உலாவருகின்றன. கவிஞர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து அறச்சீற்றக் கவிதைகளை முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். திறவாக் காதுகள் கிழிபட வேண்டும். வானம்பாடியே! இன்னும் பாடு.. பாடு...