ன் தோட்டத்தில் பழமையான மல்பெரி மரங்கள் கொஞ்சம் இருந்தன.என் தாத்தா நட்டு வளர்த்தவை அவை. குளிர் காலத்தில் ஒரு கிராம் எடை கொண்ட பட்டு நூல் புழு முட்டைகள் எனக்குக் கிடைத்தன. அவற்றை விரியச்செய்து, பட்டு நூல் புழுக்களை வளர்ப்பதற்கான அறிவுரையும் எனக்குக் கிடைத்தது.

முட்டைகள் சாம்பல் நிறம் உள்ளவையாகவும், சிறியவையாகவும் இருந்தன.ஒரு கிராம் எடையில் 5,835 முட்டைகள் இருந்தன. மிகவும் சிறிய குண்டூசியின் தலைப்பகுதியை விட அவை சிறியவையாக இருந்தன. கிட்டத்தட்ட மரணித்து விட்டதைப்போல அவை இருந்தன. பலமாக அழுத்தினால் மட்டுமே அவை உடையும்.

முட்டைகள் என் மேஜையின் மீதுதான் கிடந்தன. அவற்றை நான் மறந்தே விட்டேன்.

ss1

Advertisment

வசந்த காலத்தின் ஒரு நாளன்று நான் தோட்டத்திற்குச் சென்றபோது, மல்பெரி மரங்களில் மொட்டுகள் அரும்புவதைப் பார்த்தேன். சூரிய வெளிச்சம் விழும் இடங்களில் புதிய இலைகள் வளர்வதையும் பார்த்தேன். அப்போது நான் பட்டு நூல் புழுக்களைப் பற்றி சிந்தித்தேன்.

திரும்பவும் வீட்டிற்கு வந்தவுடன் நான் முட்டைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து, மேலும் சற்று அதிக இடத்தை அவற்றிற்கு அளித்தேன்.

பெரும்பாலான முட்டைகளுக்கும் அடர்த்தியான சாம்பல் நிறம் இல்லாமற் போயிருந்தது. சில முட்டைகள் இளம் சாம்பல் நிறத்திலும், வேறு சில முட்டைகள் மேலும் அதிகமான இளம் சாம்பல் நிறம் கொண்டவையாகவும் மத்தியில் பா-ன் நிறத்தைக் கொண்டவையாகவும் இருந்தன.

Advertisment

மறுநாள் காலையில் நான் முட்டைகளைக் கூர்ந்து பார்த்தபோது, அவற்றில் சில முட்டைகள் விரிந்து, புழுக்கள் வெளியே வருவதைப் பார்த்தேன்.

ஓடுகளுக்குள் இருக்கும்போதே, அவற்றிற்குத் தேவைப்படும் உணவு வெளியே தயாராகிறது என்ற விஷயத்தை அவை அறிந்திருந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது.

புழுக்கள் கறுப்பு நிறத்தில் இருப்பனவாகவும், ரோமங்கள் நிறைந்தனவாகவும் இருந்தன. அவை மிகவும் சிறியதாக இருந்ததால், அவற்றைப் பார்ப்பது என்பதே கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. நான் ஒரு நுண்கண்ணாடியின் வழியாகப் பார்த்தபோது, முட்டைகளுக்குள் அவை சுருண்டு கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

முட்டையி-ருந்து வெளியே வந்ததும், அவை நேராகி விட்டன.

கொஞ்சம் மல்பெரி இலைகளை எடுப்பதற்காக நான் தோட்டத்திற்குச் சென்றேன். மூன்று கைப்பிடி இலைகளுடன் நான் திரும்பிவந்து, மேஜையின்மீது வைத்தேன். பிறகு புழுக்களுக்காக ஒரு தனி இடத்தை உண்டாக்க ஆரம்பித்தேன்.

எனக்கு கற்றுத் தந்திருப்பதைப் போல...

நான் தாளைச் சரி பண்ணுவதற்கு மத்தியில் புழுக்கள் மல்பெரி இலைகளை வாசனை பிடித்து, இலைகளை நோக்கி ஊர்ந்து வர ஆரம்பித்தன. நான் அவற்றைத் தள்ளி விலக்கினேன்.

தொடர்ந்து ஒரேயொரு இலைக்கு அவற்றைக் கவர்ந்து இழுக்க முயற்சித்தேன். அவை அதற்கருகில் வந்து சேரவும் செய்தன. நாய்கள் மாமிசத் துண்டுகளை நோக்கி வருவதைப் போல... அவை இலைக்குப் பின்னால்... மேஜை விரிப்பின்மீது... பென்சில்கள், கத்திரிகள், தாள்கள் ஆகியவற்றின்மீது ஊர்ந்தன. பிறகு...

நான் ஒரு தாள் துண்டை எடுத்து, அதில் பேனா கத்தியைக்கொண்டு துவாரங்கள் உண்டாக்கி, இலையை அதற்குமேலே வைத்தேன்.

தொடர்ந்து இலையுடன் சேர்த்து புழுக்களின்மீது வைத்தேன்.

புழுக்கள் துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து இலையின்மீது ஏறி, இலையைத் தின்ன ஆரம்பித்தது.

மற்ற புழுக்கள் முட்டையை விரித்து வெளியே வந்தபோதும் ஒரு துண்டுத் தாளின்மீது ஒரு இலையை வைத்து புழுக்களின்மீது வைக்க, முன்பு நடந்ததைப்போலவே அவை துவாரங்களின் வழியாக வெளியே வந்து இலையைத் தின்ன ஆரம்பித்தன.

புழுக்கள் இலையில் வந்து சேர்ந்து, இலையின் நுனியி-ருந்து கடித்துத் தின்ன ஆரம்பித்தன. இலை முழுவதையும் கடித்துத் தின்று முடித்தவுடன், அவை தாளை நோக்கி ஊர்ந்து ஏறி மீண்டும் உணவிற்காக தேடின. மீண்டும் நான் துவாரங்கள் அமைத்த தாள்களில் மல்பெரி இலைகளை இட்டு, அவற்றின்மீது வைத்தேன். அவை புதிய உணவை நோக்கி ஊர்ந்து வந்து சேரவும் செய்தன.

அவை என் அலமாரியில் இருந்தன. இலைகள் இல்லாதபோது, அவை அலமாரியின் பக்கவாட்டுகளில் ஊர்ந்து கொண்டிருந்தன.

அதன் எல்லையை அடைந்த பிறகு, அவை தரையில் விழவில்லை... அவை பார்வை சக்தி இல்லாதவையாக இருந்தாலும், ஒரு புழு அலமாரியின் எல்லையை அடையும்போது, அதன் வாய்க்குள்ளிருந்து ஒரு வகையான பசையைப் போன்ற நூல் வெளியே வருகிறது. புழு அதை இறுகப் பற்றியவாறு மெதுவாக கீழ் நோக்கி இறங்குகிறது. சிறிது நேரம் காற்றில் இருந்தவாறு அது கூர்ந்து கவனிக்கிறது.

தொடர்ந்து மீண்டும் கீழ்நோக்கிப் போவதாக இருந்தால், அது அதே காரியத்தைச் செய்கிறது. மேலே செல்வதாக இருந்தால், நூ-ன் வழியாக பிடித்து ஏறுகிறது.

நாட்கணக்கில் அவை தின்றுகொண்டேயிருந்தன. அவற்றிற்கு மேலும் இலைகளை நான் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தேன்.

புதிய இலையைக் கொண்டு போய் கொடுக்கும் போது, அவை அவற்றிற்கு மாறி விடும். இலைகளில் மழை பெய்யும்போது உண்டாவதைப்போல ஒரு சத்தம் உண்டாகும். புதிய இலையைத் தின்ன ஆரம்பிக்கும்போது, அது நடந்தது.

அந்த வகையில் பழைய புழுக்கள் ஐந்து நாட்கள் வாழ்ந்தன. அவை மிகவும் பெரியதாக ஆகி, முன்பு தின்றதைவிட இரு மடங்கு தின்ன ஆரம்பித்தன.

ஐந்தாவது நாளன்று அவை தூக்கத்தில் மூழ்கிவிடும் என்ற விஷயத்தை நான் அறிந்திருந்தேன்.

நான் அதற்காகக் காத்திருந்தேன்.

சாயங்கால வேளை வந்தபோது, ஐந்தாவது நாளன்று... பழைய புழுக்களில் ஒன்று தின்று கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தாளை இறுகப் பற்றியவாறு சுற்ற ஆரம்பித்தது.

மறுநாள் முழுவதும் நீண்ட நேரம் நான் அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

புழுக்கள் பலமுறை அவற்றின் உட-ன் மேற்பகுதியை உதிர்த்து மாற்றிக்கொள்ளும் என்ற விஷயம் எனக்குத் தெரியும். அவை வளர்ந்து விட்டதால், மூடியிருக்கும் பழைய பகுதி சிறியதாக இருப்பதை உணர்ந்து, புதியதாக ஒன்றை உண்டாக்கியது.

நானும் என் நண்பனும் அவ்வப்போது இதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

சாயங்காலம் என் நண்பன் அழைத்துக் கூறினான்:

"அது தன் மேற்பகுதியை உதிர்க்க ஆரம்பித்து விட்டது. வா...''

நான் அவனுக்கருகில் சென்றேன். அப்போது புழு தன்னுடைய உட-ன் மேற்பகுதியின் ஒரு பக்கத்தை தாளில் இறுக்கமாக இருக்கும்படி செய்தவாறு, அதன் ஒரு நுனியில் துவாரத்தை ஏற்படுத்தி, தலைப் பகுதியை அதன்வழியாக வெளியே நீட்டி, நெளிந்த வாறு வெளியே வர முயற்சிப்பதைப் பார்த்தேன். ஆனால், அதன் கவசம் அதன்மீது இறுகப்பிடித்திருந்தது. நான் அதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அது நெளிந்து கொண்டிருப்பதையும் அதனால் வெளியேவர இயலாமல் இருப்பதையும் பார்த்தபோது, அதற்கு உதவ வேண்டுமென எனக்குத் தோன்றியது.

நான் அதை நகத்தைக்கொண்டு தொடச்சென்றபோது, ஏதோ முட்டாள்தனமாக செய்வதைப்போல தோன்றியது. என் நகத்திற்குக்கீழே ஒரு வகையான திரவம் ஒட்டிக்கொள்ள, புழு மரணத்தைத் தழுவியது. அதை குருதி என்று முத-ல் நினைத்தேன். பிறகு எனக்கு புரிந்தது- புழுவின் தோலுக்கடியில் ஒருவகையான திரவம் இருக்கிறது என்ற விஷயம்.

அதன்மேல் கவசம் வேகமாக கழன்று வருவதற்குத்தான் அது... என் நகத்தைக்கொண்டு அதன் புதிய ஆடையை அசிங்கமாக்கிவிட்டேன் என்று சந்தேகமின்றி கூறலாம். அதனால் அது வெளியே வந்தவுடன் இறந்துவிட்டது.

மற்ற புழுக்களை நான் தொடவேயில்லை.

அனைத்து புழுக்களும் இதேபோல அவற்றின் கவசங்களி-ருந்து வெளியே வந்தன. குறைந்த அளவு புழுக்கள் மட்டுமே மரணத்தைச் சந்தித்தன.

பெரும்பாலானவை பாதுகாப்பாக வெளியே வந்தன. வெளியே வருவதற்காக அவை சிறிது நேரம் முயற்சித்துக்கொண்டிருந்தன.

மேல் கவசத்தை விட்ட பிறகு, புழுக்கள் முன்பிருந்ததைவிட அதிக பலத்துடன் சாப்பிட ஆரம்பித்தன..

அதனால் நான் அவற்றிற்கு அதிகமான இலைகளைக் கொடுத்தேன். நான்கு நாட்களுக்குப்பிறகு, அவை மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தன. தொடர்ந்து மீண்டும் அவற்றின் தோ--ருந்து வெளியே வந்தன. பிறகு முன்பைவிட அதிகமான இலைகளை அவை உட்கொண்டன.

அப்போது அவற்றின் அளவு ஒரு அங்குலத்தின் கால் பகுதியாக இருந்தது.ஆறு நாட்களுக்குப் பிறகு, அவை மீண்டும் நித்திரையில் மூழ்கின. தொடர்ந்து மீண்டும் தோ--ருந்து வெளியே வந்தன. அப்போது அவை மிகவும் பெரியதாகவும் பருமன் அதிகரித்தும் காணப்பட்டன.

அவற்றிற்காக இலைகளைத் தயார் பண்ணுவதற்கு எங்களுக்கு நேரமே கிடைக்கவில்லை.

ஒன்பதாவது நாளன்று மிகவும் வயதான புழுக்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, அலமாரியில் ஏறின. நான் அவற்றை ஒன்று சேர்த்து புதிய இலைகளை அளித்தாலும், அவற்றைச் சாப்பிடாமல் அவை தலையைத் திருப்பிக்கொண்டு மீண்டும் அலமாரியில் ஏற ஆரம்பித்தன.

அப்போதுதான் நான் நினைத்துப் பார்த்தேன்...

"லார்வா'வாக மாறத் தொடங்கும்போது, அவை உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு, மேலே ஏறும் என்ற விஷயத்தை..

நான் அவற்றை அவற்றின் போக்கில் விட்டுவிட்டு, அவை என்ன செய்யப் போகின்றன என்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

மிகவும் வயதான புழுக்கள் மேற்கூரையை அடைந்து, சிதறி அனைத்து திசைகளுக்கும் சென்றன. அதற்குப்பிறகு அவை நூல்களை உண்டாக்க ஆரம்பித்தன. நான் அவற்றில் ஒரு புழுவைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். அது ஒரு மூலைக்குச் சென்று இரண்டு அங்குல நீளத்தைக்கொண்ட ஆறு நூல்களை உண்டாக்கியது.

தொடர்ந்து அதில் தொங்கியது... ஒரு குதிரை லாடத்தின் தோற்றத்தில்.

அதற்குப் பிறகு தலையைத் திருப்பியவாறு, பட்டு நூல் வலையைப் படைத்து உடல் முழுவதும் சுற்ற ஆரம்பித்தது. மாலை வேளை வந்தபோது, அதன் முழு உட-லும் மூடுபனியைப்போல வலை மூடியிருந்தது.

புழுவைச் சிறிதுகூட பார்க்க முடியவில்லை.

மறுநாள் காலையில் புழுவை முழுமையாக பட்டு நூல் மூடியிருந்தது. அது தொடர்ந்து மேலும் நூலை உண்டாக்கி சுற்றிக்கொண்டிருந்தது.

மூன்று நாட்கள் கடந்ததும், அது நெய்வதை நிறுத்திவிட்டு, அமைதியாக இருந்தது. அதற்குப் பிறகுதான் மூன்று நாட்களில் அது எவ்வளவு வலைகளை நெய்திருக்கிறது என்பதையே நான் அறிந்தேன்.

அந்த வலை முழுவதையும் அவிழ்த்தெடுத்தால், அரை மைல் தூரத்திற்கு வரும். எந்தக் காலத்திலும் அதில் குறையாது.

இவ்வளவு நீளமான வலையை நெய்வதற்கு அந்தப் புழு எத்தனை முறைகள் தலையைச் சுற்றியிருக்க வேண்டும்! அது மூன்று லட்சம் முறைகள் சுற்றியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

மூன்று நாட்களில்... ஒரு நொடியில் ஒரு முறை அதன் தலை சுற்றுகிறது. சிறிதும் நிற்காமல் அது தொடர்கிறது. சில கூடுகளை எடுத்து திறந்து பார்த்தபோது, அதி-ருந்த புழுக்களெல்லாம் வறண்டு, வெளுத்த நிறத்தில் மெழுகைப்போல காணப்பட்டன.

இந்த லார்வாவி-ருந்தும், நாங்கள் பார்த்த வெளுத்த, மெழுகு சரீரங்களி-ருந்தும் பட்டுப்பூச்சிகள் உண்டாகும் என்ற விஷயம் எனக்குத்தெரியும்.

ஆனால், நான் அவற்றைப் பார்த்தபோது, என்னால் அதை நம்ப முடியவில்லை.எது எப்படியிருந்தாலும், இருபதாவது நாள் நான் அவற்றைப் பார்ப்பதற்காகச் சென்றேன்...

அவற்றிற்கு என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக...

இருபதாவது நாளன்று ஒரு மாற்றம் உண்டாகும் என்று எனக்குத் தெரியும்.எதையுமே பார்க்க முடியவில்லை. ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று நான் சிந்திக்க ஆரம்பித்தேன்.

அப்போது திடீரென ஒரு கூட்டின் இறுதிப்பகுதி இருண்டதாகவும் ஈரமுள்ளதாகவும் மாறுவதை நான் பார்த்தேன்.

அது பாழாகிவிட்டது என்றுதான் எனக்கு இதுவரை தோன்றியது. அதை விட்டெறிய வேண்டுமென நினைத்தேன்.

ஆனால், அது இப்படி மாறியதால், அதற்கு என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

ஈரமான நுனிப் பகுதியில் என்னவோ அசைய ஆரம்பித்தது.

நீண்ட நேரத்திற்கு அது என்ன என்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.

தொடர்ந்து ஒரு தலையும், அதில் நீளமான ரோமங்களும் நிறைந்த ஏதோவொன்று வெளியே வந்தது. நீளமான ரோமங்கள் அசைந்து கொண்டிருந்தன.

பிறகு அந்த துவாரத்தி-ருந்து ஒரு கால் வெளியே வருவதைப் பார்த்தேன்.

தொடர்ந்து வேறொன்றும்...

கால்கள் கூட்டிற்குள்ளிருந்து வெளியே வருவதற்காக முயற்சித்தன. பிறகு அதன் பெரும் பாலான பகுதி வெளியேவர ஆரம்பித்தது.

அப்போது நான் ஒரு நனைந்த கம்பளிப்பூச்சியைப் பார்த்தேன். ஆறு கால்களும், தொடர்ந்து அதன் பின் பகுதியும் வெளியே வந்தன. அது உலர்ந்து முடிந்தபோது, வெளுத்த நிறத்தில் இருந்தது. அதன் சிறகுகள் நேராக, பறந்து, சுற்றித் திரிந்து சாளரத்தில் இடம் பிடித்தது.

இரண்டு நாட்கள் கடந்த பிறகு, சாளரத்தில் வரிசையாக அந்த கம்பளிப்பூச்சி முட்டைகள் இட்டன. அவை உடனடியாக ஒட்டிப் பற்றிக் கொள்ளவும் செய்தன. முட்டைகள் மஞ்சள் நிறத்தில் இருந்தன.

இருபத்தைந்து கம்பளிப்பூச்சிகள் முட்டையிட்டன.

அய்யாயிரம் முட்டைகளை நான் சேகரித்தேன்.

அடுத்த வருடம் நான் இன்னும் அதிகமான புழுக்களை வளர்க்க, மேலும் அதிகமான பட்டு நூல் கிடைத்தது.