வத்தலகுண்டுவில் ஓவியா பதிப்பகம் வெளியிட்ட, அபுதாபியில் வசிக்கும் சிவமணி எழுதிய ""மௌன ஒத்திகைகள்"" நூல் வெளியீட்டு அரங்கேற்ற விழா சீருற நடந்தது. ராம்லீலா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். முன்னதாக ஓவியா பதிப்பகம் வெளியீட்டாளர் வதிலைபிரபா இனிதாக வரவேற்றார்.
விழாவில் திரைப்பட இயக்குநர் ’காதல்கோட்டை’ அகத்தியன் நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
நூலின் முதல் பிரதியை தொழிலதிபர்கள் துரை. சிங்காரம், தேவாரம் முருகன், மோகன் பெற்றுக்கொண்டனர். கவிதாயினி அம்பிகா வர்ஷினி நூலாய்வு செய்ய, நூலாசிரியர் சிவமணி ஏற்புரை வழங்கினார், பின்னர் நகர்வாங்கி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
நிகழ்வினை முத்துபாண்டியராஜன், நாக நந்தினி தொகுத்து வழங்கினர். சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கொடைக்கானல், திண்டுக்கல், காரியாபட்டி, தேனி, பெரியகுளம், மதுரை என மாநிலத்தின் பல பகுதிகளிலுமிருந்தும் வந்திருந்த இலக்கிய முகங்களால் விழா களைகட்டியது. விழாவில் சிறப்புரையாற்றிய இயக்குநர் அகத்தியன் “வதிலைபிரபா என்ற சிறந்த கவிஞன் தனது பதிப்பகத்தில் புத்தகம் போடுவதால்தான் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதினேன். ஒரு கவிஞனால் தான் இன்னொரு கவிஞனை அடையாளம் காணமுடியும். அப்படித்தான் இருவரையும் பார்க்கிறேன். மௌன ஒத்திகைகள் என்ற தலைப்பு மனசுக்குள் செய்து கொள்ளும் ஒத்திகைகள். மனசுக்குள் பேசிடும் வார்த்தைகளின் ஓட்டம். இதைப் புரிந்து கொண்டு படித்தால், இந்த கவிதைகளையும் பிடிக்கும். காதலை இவர் மிக வித்தியாசமாக சொல்லி இருக்கிறார். இப்போது என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. ""வானச் சுவரில் சூரிய மூட்டைப் பூச்சியை நசுக்கியது யார்?""- இதுதான் சாமான்யனிடமிருந்து வேறுபட்ட கவிஞனின் பார்வை. அதேபோல் வதிலைபிரபா எழுதிய 'மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்' என்ற நூலில் எனக் குப் பிடித்த கவிதை இது. ""ஒரு சருகு உதிர்கிறது ஒரு தோட்டமே அதிர்கிறது "" இந்த கவிதையை உணர்ந்தால், சிவமணியின் கவிதையை உணரமுடியும். ‘இருபேர் ஆண்மை செய்த பூசல்’ என்று குறுந்தொகை அவ்வையாரின் வரிகளோடு ஒப்பிடத்தக்க ஒருகவிதையை சிவமணி எழுதியிருக்கிறார். ""பெண்மைக்குள் ஆண்மையும் ஆண்மைக்குள் பெண்மையும் பார்த்தால் காதல் வாய்ப்பு அல்ல; வரம்"" என்கிறார் சிவமணி. ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை தான் துணிச்சல், செல்லத் திமிர். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்மை தான் அரவணைப்பு, கெஞ்சல், கொஞ்சல். இது தான் காதல். அந்தக் காதலை சிவமணி மிகமிக மென்மையாய்ச் சொல்லியிருக்கிறார். அதேபோல்... ""நீ அலங்காரம் இல்லாமல் வா உன்னை அழ காக்குகிறேன்"" என்கிறார். இந்த கவிதையில் இங்கே அழகாக்குகிறேன் என்பது உன் மனதை வெற்றிடமாய் வைத்துக் கொண்டு, நிம்மதி கிடைக்குமா என்று யோசிக்காமல் வா. உன்னை சிரிக்க வைக்கிறேன், சந்தோசமாக வைத்துக் கொள்கிறேன் என்ற அழகான, ஆழமான பொருள் பொதிந்த உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பெண்ணை சந்தோசமாக வைத்து கொண்டால் மட்டும் போதும், அவள் வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டாள். அதேபோல், ""கரை புரண்டோடும் கவிதைகளை அணை போட்டே தடுக்கிறாய் நிரம்பி வழியும் கவிதைகளை நிறுத்தி வைக்கும் அளவிற்கு கல் நெஞ்சக்காரன் அல்ல நான்"" என்று அவரது இந்தக் கவிதை தர்க்கம் பேசுகிறது.
கவிதைக்குரிய பாத்திரமாக இருப்பவனின் போராட்டம், காதலைச் சொல்லாமல் இருப்பது என்றாலும், அந்த வலியோடு அவனின் மெல்லிய புலம்பலில் இருக்கும் சுகத்தை இந்த கவிதை சொல்கிறது. ""கண் போர் தரும் சுகம்.. .வெற்றியா? தோல்வியா?"" -என்றும் சிவமணி கேட்கிறார். கண் போர் செய்கின்ற அவஸ்த்தை அதை அனுபவிக்கிறவர்களுக்கே புரியும். பார்த்துப் போனால் சுகமா? காதலை சொல்லாமல் போனதால் தோல்வியா? என்று கவிஞர் சுரதாவின் கவிதையை இது நினைவுபடுத்துகிறது. இப்படிப்பட்ட சிவமணியின் கவிதைகள் அவரை உயரங்களுக்கு அழைத்துச்செல்லும்’’ என்றார் உற்சாகமாக. பாராட்டுரை வழங்கிய இயக்குநர் பிருந்தாசாரதி தன் உரையில் “ முதன்முதலில் கவிஞர் என்ற பட்டம் எனக்குக் கிடைத்தபோது உள்ள அதே மனநிலையில் சிவமணியும் இருப்பார் என்று நினைக் கிறேன். ஒரு படைப்பாளன் தன் கடமைகளை முடித்து விட்டு, தனக்கான ஆசையை தீர்த்துக் கொள்ளும் இயல்பு அரிது. நூலாசிரியர் சிவமணி கடமைகளை நிறைவு செய்து முதல் நூலை தனது 40வது வயதில் வெளியிட்டு உள்ளார். ""கடலோரக் கவிதைகள்"" என்ற திரைப்படத்தில் வரும் ""ஆத்தாடி இள மனசொன்னு"" என்ற பாடலில் வரும் ""கட்டுத்தறி காளை நானும் கன்னுக்குட்டி ஆனேனே"" என்ற வரிகளுக்கு இணையானவை சிவமணியின் இந்தக் கவிதை. ’வாடிவாசல் காளையாய் திமிறி வரும் என்னை அடக்கி இழுத்துச் செல்கிறாய். பிடியை சிறிது விட்டுப் பிடி மூச்சு முட்டுகிறது காளைக்கும் அடி சறுக்கும்’ உண்மைதானே. சிவமணி யின் கவிதைகள், எளிமைத் தேரேறி அர்த்த கனத் தோடு வலம் வருவது பாராட்டுக்குரியது’’என்றார் மகிழ்வோடு. இவ்விழாவில் புலவர் பண்ணை கோமகன், தேனி தமிழ்ச் சங்க தலைவர் மு. சுப்பிரமணி, நீலபாண்டியன், ஆசிரியர்கள் மகாராஜன், மூ. அய்யப்பன், முன்னாள் மாவட்ட நீதிபதி ஆ றுமுகம், பழையவத்தலகுண்டு ஊராட்சி மன்றத் தலைவர் மு. யசோதை வாழ்த்துரை வழங்க, கோவை தீபா மோகன்ராஜ், கோவை ராஜாசெரீப், கோவை தமிழ்ச் செல்வன், சென்னை ரஞ்சிதா குன்னியா, சென்னை சுந்தரி, விஜயகுமார் காரியா பட்டி, விக்னேஷ் மதுரை, ஆகியோர் சாதனை புரிந்தமைக்காக சிறப் பிக்கப்பட்டனர். இப்படி மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வில் ஏராளமானவர்கள் திரளாகத் திண்டிருந்து இலக்கிய மழையில் நனைந்து மகிழ்ந்தனர்.