ஸ்.பி.பி. என்பது இசை ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். இருக்கும்போது அவர் இருந்ததைவிட கம்பீரம். அசைவற்றுப் படுத்திருந்த போதிலும் அவர் குறுஞ் செடிகளுக்கு நடுவே வீழ்ந்து கிடந்த ஒரு மாபெரும் ஆலமரமாகத்தான் காட்சியளித்தார்.

அவர் இசை வழியும் குரலாக காற்றின் திசை யெங்கும், இப்போதும் இதமாக இழைந்துகொண்டே இருக்கிறார்.

spb

அவர் ஒரு சிறந்த பாடகராக, சிறந்த நடிகராக, பின்னணிக் கலைஞராக, இசையமைப்பாளராக இன்னும் பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட அபூர்வ மனிதராக இருந்தார். ஒருவரிடம் இப்படியாகப் பன்முக ஆற்றல்கள் ஒருங்கிணைவது அபூர்வமே. அப்படியான ஒரு அதிசய ஆளுமையே எஸ்.பி.பி.

‘ஆயிரம் நிலவே வா’, ’இயற்கை எனும் இளைய கன்னி’, ‘பாடும்போது நான் தென்றல் காற்று’, ‘அவள் ஒரு நவசர நாடகம்’ -இப்படிப்பட்ட பாடல்களின் வழியாக வானொலி மூலம் எனக்கு ஆரம்பத்தில் அறிமுகம் ஆனதுதான் அவரின் கந்தர்வக் குரல்.

அடுத்து கமல்ஹாசனின் ரசிகனாக பரிணாமம் அடைந்தபோது, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘நிழல் நிஜமாகிறது’ படப் பாடல்கள் வழியே ஆகர்ஷித்தார்.

நான் உதவி இயக்குநராக இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரிடம் பணிபுரிந்த முதல் படத்திலேயே, பூஜை பாடல் பதிவில் அவருடன் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எம்.ரங்காராவ் என்னும் கன்னட இசையமைப்பாளர் இசையில், புதுமைப்பித்தனின் ‘மன்மதன் கோயில் மணி ஒலி கேட்டது’ என்ற பாடலை என் கையெழுத்தில் நகலெடுத்தேன். அதைப் பார்த்துதான் எஸ்.பி.பி.யும் சித்ராவும் பாடினார்கள். அந்த சந்தோஷம் இன்னும் கோயில்மணியாக ஒலிக்கிறது மனசுக்குள்.

அவர் பாடுவதை, குரல் அறையின் கண்ணாடிக்கு வெளியே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு சிறிய பாக்கெட் டேப்ரெக்கார்டரில், ட்யூனை பதிவு செய்துகொண்டு, அதை ஓடவிட்டு பாடல் வரிகளை இருமுறை பாடிப் பார்த்துவிட்டு ஒலிப் பதிவுக்குத் தயாராகி, குரல் பதிவு அறைக்குள் போய் விடுவார்.

அங்கு அவர் ஒரு நடிகராகவே மாறிவிடுவார். வார்த்தைகளின் அர்த்தங்களை தெளிவுற உள்வாங்கிக் கொண்டு, அவர் பாடும்போது ஏற்படும் முக பாவங் களும் கை அசைவுகளும் உடலின் மொழியும் அவர் ஒரு தேர்ந்த நடிகர் என்பதைப் பறைசாற்றும். வார்த்தைகளுக்கிடையே அழகான சங்கதிகளும் சிறு சிறு சிரிப்பு, குறும்பு போன்ற எபெஃக்ட்டுகளும் பாடலை பன்மடங்கு மேன்மை பெற்ற கலைப் படைப்பாக்கும் மாயாஜாலம்... அவர் பாடும் குரல் அறைகளில் நிகழும். அங்கேயே அவர் மகா நடிகன் என்பதைப் பலரும் உணர்ந்தார்கள்.

குரல் வழி அவர் நிகழ்த்திய பாவனைக் கூத்தே, அவருக்குள் இருந்த ஒரு சிறந்த நடிப்புக் கலைஞரை வெளிப்படுத்திற்று.

இயக்குநர் வசந்தின் முதல் படமான கேளடி கண்மணியில்... பின்னாட்களில் இயக்குநர்களாக மாறிய ராஜ்கபூர், (தாலாட்டுக் கேட்குதம்மா) அன்வர் (ஊட்டி), சசி (சொல்லாமலே) ஆகியோரு டன் நானும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். ராஜ்கபூர், அன்வர் இருவரும் இணை இயக்குநர்கள். நானும் வரதராஜன் என்பவரும் முதல்நிலை உதவி இயக்குநர்கள். சசி கிளாப் அசிஸ்டெண்ட் டைரக்டர். இன்னொரு உதவி இயக்குநர் சரவணன். அந்தப் படத்தில் நடித்த நாய்க்குட்டியின் பராமரிப்பு அவர் பொறுப்பு.

அந்தப் படத்தில் எஸ்.பி.பி. கதாநாயகன். ராதிகா கதாநாயகி. வசந்தின் முதல் படத்தில் எஸ்.பி.பி. கதாநாயகனா.. இது சரிப்படுமா? என பலரும் அவரை எச்சரித்தனர். எஸ்.பி.பி.யே முதலில் தயங்கினார்.

ஆனால் அந்தக் கதாபாத்திரம் எஸ்.பி.பி.க்கு அவ்வளவு பொருந்திப் போயிற்று. மனைவியை இழந்த ஒரு பெண் குழந்தையின் தந்தை என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருந்தார்.

கொஞ்சம் திரைக்கதையில் அசந்தாலும் நிச்சயம் தோல்வியைத் தழுவும் ஆபத்தான மாறுபட்ட கதை. குண்டான உருவத் தோற்றம் கொண்ட எஸ்.பி.பி.யின் நாயக நடிப்பில் அந்தப் படம். தேறுமா? என்று படம் முடிந்த பின்னரும் பலரும் சந்தேகம் கொண்டனர்.

ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியடைந்தது. இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் இணைந்த எஸ்.பி.பி. + ராதிகா இருவரின் இயல்பான நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமானது. கதாநாயகன் என்று சொல்வதைவிட எஸ்.பி.பி. சிறந்த குணச்சித்திர நடிகராக பரிணமிக்கத் தொடங்கியது அதற்குப் பிறகுதான்.

மணிரத்தினத்தின் ‘திருடா திருடா’ படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக வந்து கலகலப்பான நகைச்சுவை யால் அதிரவைப்பார் எஸ்.பி.பி.

அடுத்து வெளிவந்த ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவின் தந்தையாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவின் வழமையான தந்தை பிம்பத்தை மாற்றி யமைத்த படம் என்றும் சொல்லலாம். நெருங்கிய நண்பனைப் போன்று வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பிரவுதேவாவுடன் எஸ்.பி.பி. தன் அசாத்திய நடிப்பால் அசத்தியிருப்பார்.

1987-இல் கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் கலகல டாக்டர் வேடத் தில் நடிக்கத் தொடங்கிய எஸ்.பி.பி.… இந்தப் படங் களைத் தொடர்ந்து ‘உல்லாசம்’, ‘அவ்வை சண்முகி’, ‘பாட்டுப் பாடவா’ போன்ற திரைப்படங்களில் கொடுத்த வேடங்களில் குறை வைக்காமல் நடித் திருப்பார்.

‘சிகரம்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து, இசையமைப்பாளராகவும் பொறுப்பேற்று சிறப்பு செய்தார்.

தெலுங்கில் வெளிவந்த ‘மிதுனம்’ என்னும் படத்தில் நடிகை லட்சுமியுடன் அவரின் கணவர் கேரக்டரில் மிக இயல்பாக நடித்தார். மொழி அறியாதவர்களும் ரசிக்கத் தக்க வகையில் இருவரின் நடிப்பும் உன்னதமாக அமைந்திருந்தது.

இவை மட்டுமின்றி ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘குணா’, ‘ப்ரியமானவளே’, ‘தலைவாசல்’, ‘காதல் தேசம்’, ‘கண்டேன் சீதையை’, ‘ரட்சகன்’, ‘மின்சாரக் கனவு’, ‘நந்தினி’, ‘ஜாலி’, ‘நாணயம்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் மட்டுமல்லாது பல தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஏறத்தாழ 70 படங்களுக்கு மேல் நடிகனாகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்.

பல இந்திய மொழிகளிலும் 42,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்கள், பல்வேறு பாடலாசிரியர்கள், பல்வேறு நடிகர்கள், பல்வேறு இயக்குநர்கள் என சாதனையின் சிகரங்களை சர்வசாதாரணமாக அடைந்தாலும் இறுதிவரை எளிமையாகவும், பணிவாகவும் பேரன்புமிக்க மனிதனாகவுமே வாழ்ந்து மறைந்த மாமனிதன் எஸ்.பி.பி.

அவர் நடித்த ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளேன். அவர் பாடிய பல படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளேன். பத்து ஆண்டுகளுக்கு முன் ‘பரிகாரத் திருத்தலங்கள்’ என்னும் தொலைக்காட்சித் தொடருக்கு நான் எழுதிய டைட்டில் பாடலை அவர் பாடியுள்ளார். அண்மையில் ‘அகிலா’ என்னும் தொலைக்காட்சித் தொடருக்கு ஸ்ருதிராஜ் என்ற இசையமைப்பாளரின் இசையில் ’வானம் கூட எல்லை இல்லை.. வாழ்ந்து பார்ப்போம் பெண்ணே! பூமிப்பந்தை கையில் ஏந்தி ஆடிப் பார்ப்போம் பெண்ணே’- என்ற டைட்டில் பாடலை எழுதினேன். மிகுந்த ஈடுபாட்டுடன் அந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடிக் கொடுத்தார். தொலைக் காட்சித் தொடர்களில் அவர் பாடிய கடைசிப் பாடல் அதுவே.

மனிதர்களுக்கு மரணம் உண்டு. கலைஞர்களுக்கு அவர்களின் படைப்பு இருக்கும் காலம்வரை மரண மேது? காற்று இருக்கும் காலம்வரை எஸ்.பி.பி.யின் குரல் எட்டுத் திசைகளிலும் விண்ணதிர ஒலித்துக் கொண்டேயிருக்கும், ஓயாத கடல் அலைகளைப் போல்!