சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

-என்கிறார் வள்ளுவர்.

இதன் பொருள்... "பிறருக்கு கேடு செய்தால் பொருட்செல்வத் தைப் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டாலும் கூட, மாசற்றவர்கள் அப்படி கேடு செய்யமுன்வரமாட்டார்கள்' என்பதாகும்.

Advertisment

ஆனால் இந்தக் குறளுக்கு நேர்மாறாக, கோடி கோடியாய் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காகவே, அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவைப் பகடைக்காயாக வைத்து, தமிழக அரசியலில் ஒரு மோசமான சதுரங்க ஆட்டத்தை ஆடியவர்தான் சசிகலா. எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் இதை, வரலாறு மறக்கவே செய்யாது.

sasi-jaya

Advertisment

அப்படிப்பட்ட சசிகலா, தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் தலையெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

அவரது முயற்சி பலிக்குமா? என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது.

நாம் ஒன்றை மறந்துவிடக்கூடாது.

எத்தனையோ திறமைசாலிகளை நாடு பார்த்திருக்கிறது. ஆனால் சசிகலாவைப் போன்ற சாமர்த்தியசாலியை இதுவரை தமிழகம் கண்டதில்லை.

அவரைப் போல் தந்திரமாகத் திட்டமிட்டுச் செயல்பட்ட வர்கள் இதுவரை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு அவர் சாமர்த்தியசாலி.

இல்லை என்றால் ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே 30 ஆண்டுகளுக்கும் மேலாய் அவரால் கையில் வைத்தி ருக்க முடியுமா? முரட்டு சுபாவம் கொண்ட அவரை, ஒரு பதுமை போல் ஆக்கி, விருப்பம்போல் கையாண்டிருக்க முடியுமா?

நமக்கும் சசிகலாவுக்கும் எவ்வளவோ முரண்பாடுகள் உண்டு. நானும் நக்கீரனும் ஜெயலலிதா மூலம் சந்தித்த சோதனைகள் பலவற்றுக்கும் சூத்ரதாரியாக இருந்த பெண்மணி அவர்தான். என்றாலும், அவரது திறமையையும் வல்லாண்மையையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

eps

சசிகலாவைப் பத்தோடு பதினொன்றாய் யாராலும் கடந்துவிட்டுப் போய்விட முடியாது. ஏனென்றால், ஜெயலலிதாவை முன்னால் நிறுத்தி,

அவருக்குப் பின்னால் திரைமறைவில் இருந்தபடி, அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க. அரசையும் ஆட்டிப் படைத்தவர் அவர்.

திருத்துறைப்பூண்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சசிகலா- தன் கணவர் நடராஜனுடன் 84-ல் ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டத் தெருவில் வினோத் வீடியோ விஷன் என்கிற கடையை நடத்திவந்த சசிகலா-

ஜெயலலிதாவுக்கு உதவிகள் செய்ய ஒரு எடுபிடியாக அதே ஆண்டு போயஸ்கார்டனுக்குள் நுழைந்த சசிகலா- 88-ல் இருந்து போயஸ்கார்டனி லேயே தங்கும் அளவிற்கு ஜெ.வின் மனதில் இடம்பிடித்த சசிகலா- 91-ல் ஜெ. ஆட்சியில் அமர்ந்தபோது, தன் சாமர்த்தியத்தால், தன்னை பவர்ஃபுல் பெண்மணியாக ஆக்கிக்கொண்டார்.

அதோடு, கொஞ்சம் கொஞ்சமாய் ஜெயலலிதாவைத் தன் ரிமோட்டுக் குத் தக்கபடி ஆட்டிவைக்கவும் ஆரம்பித்தார். அதிகம் படிக்காத, வெறும் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையே அதிகார தோரணையோடு கட்டிமேய்த்தார் என்றால், அது சாதாரண காரியமா? ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களையும் அவரது உறவினர்களையும் ஓரம்கட்டி விட்டு, தான் இல்லை என்றால், இந்த உலகமே இல்லை என்று நினைக்கும்படி, ஜெயலலிதாவை மாற்றியவர் அவர்.

அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவை முழுக்க முழுக்கப் பணம்காய்ச்சி மரமாகப் பயன்படுத்திக் கொண்டவர் அவர். ஜெயலலிதா மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பாயும் அளவிற்கு, அவரைக் காட்டி கஜானாவை நிரப்பியவர் அந்த அம்மணிதான். எந்த வருமானமும் சம்பளமும் இல்லாத சசிகலா, ஜெயலலிதா இருந்தபோதே சந்தடி சாக்கில் தன் பெயரிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.

ss

அதுமட்டுமா? அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்தினார்கள். இன்றும் மன்னார்குடி வகையறா என்று சொல்லும்படி ஒரு பெரிய கூட்டமே அவரால் வசதியில் கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.

தன்னை இனம் கண்டு, தன் முகத்திரை கிழிக்கப் பட்டு, ஜெயலலிதாவால் பலமுறை கார்டனில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டபோதும், தன்னிடம் அவரை சரணடைய வைத்து, மீண்டும் மீண்டும் கார்டனுக்கே அவர் அழைத்துக்கொள் ளும் அளவிற்கு, வினோத சக்தி வாய்ந்தவராக சசிகலா இருந்தார்.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா வசமாக சிக்குவார் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே கருதினார்கள். வெளிப்படையாகப் பேசினார்கள். அவர் படம் போட்ட பேனரை எல்லாம் கிழித்தெறிந்தார்கள். காரணம்- 2016, செப்.21-ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெயலலிதா, மறுநாள் இரவு, ரகசியமாக அப்பல்லோவில் கொண்டுபோய் அட்மிட் செய்யப்பட்டார்.

ஆயினும், அவருக்கு என்ன ஆனது என்று தெளிவாகச் சொல்லப்படவில்லை. அப்பல்லோவோ வழக்கமான நீர்ச்சத்துக் குறைபாடு என்று ஜெ. அட்மிட் ஆனதும் அறிக்கை வாசித்தது. இதன் பின்னர் அப்பல்லோ நிர்வாக இயக்குநரான டாக்டர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா நார்மல் நிலைக்கு வந்துவிட்டார். அவர் எப்போது விரும்பினாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தார். அவர் இட்லி சாப்பிடுகிற கதைகள் எல்லாம் பிறந்து வந்தன. ஆனால், அதே பிரதாப் ரெட்டி, ஜெ. மறைந்தபோது, "அப்பல்லோவுக்கு வரும்போதே நினைவிழந்த நிலையில் ஆபத்தான கண்டிஷனில்தான் ஜெயலலிதா இருந்தார்'' என்று உண்மையைப் போட்டுடைத்தார். இது குறித்தெல்லாம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த 72 நாட்களும் அவருக்கு என்ன பிரச்சினை? அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை தரப்படுகிறது? என்று அவருடன் இருந்த, அதிலும் அதிகாரத்தில் இருந்த ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி உள்ளிட்டவர்களுக்கே தெரியாதபடி, அப்பல்லோவையே இரும்புத் திரைக்குள் வைத்திருந்த சாமர்த்தியமான இரும்புப் பெண்மணியாக இருந்தார் சசிகலா. அப்போது அங்கிருந்த டாக்டர்கள் தொடங்கி துப்புரவுத் தொழிலாளிகள் வரை அனைவரின் வாயிலும் பூட்டைத் தொங்கவிட்டிருந்தார் அவர். இது எவ்வளவு பெரிய உலகமகா சாமர்த்தியம்!

அன்றைய கவர்னர் வித்யாசாகர் ராவ் தொடங்கி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த, இன்றைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரை அப்பல்லோவுக்குப் போயும் அவர்களிடமும் ஜெயலலிதாவை கண்ணில் காட்டாமல் "தண்ணி' காட்டினார் சசிகலா.

ஜெ.வின் மர்ம மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷனின், சந்தேகப் பார்வையைக் கூட, தன் பக்கம் திரும்பாதபடி பார்த்துக்கொண்டார் ஜெகஜ்ஜாலக் கில்லாடி சசிகலா.

ஜெ. அப்பல்லோவில் இருந்த நாட்களில், அந்த மருத்துவமனையில் இருந்த 27 சி.சி.டி.வி. கேமராக்கள் என்ன ஆனது? அவை எங்கே போனது? என்பதைக்கூட எவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதைக் கூட அந்த ஆணையத்தால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியொரு "கூர்மை'யான ஆணையம் அது.

ஆனால் நம் நக்கீரனோ, அப்பல்லோவில் ஜெ. அட்மிட் ஆன நிமிடம் தொடங்கி, அவருக்கு என்னவெல்லாம் சிகிச்சை நடக்கிறது? அவர் என்ன நிலையில் இருக்கிறார்? என்றெல்லாம் இஞ்ச் பை இஞ்ச்சாக கவனித்து, அவர் மரணத் தைத் தழுவிய வரை, உரிய ஆதாரங் களோடும் மருத்துவ ரிப்போர்ட்டு களோடும் வெளிப்படுத்தியபடியே இருந்தது. இதைக்கூட விசாரணை ஆணையம் கண் திறந்து பார்க்க வில்லை.

அதுமட்டுமா? அவர்களுடன் இருந்த ஓ.பி.எஸ்.சே, ஜெ.வின் மரணத்தை விசாரிக்கவேண்டும் என்று அப்போதே கொடி பிடித்தார். அதே ஓ.பி.எஸ், " "ஜெ'வை சசிகலா கொன்றுவிட்டார் என்று, மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்பியது. அந்த சந்தேகத்திற்கு தெளிவு காணத்தான், நான் விசாரணை வேண்டும் என்று கேட்டேன்என்றார்.

ss

இவர்களுக்கெல்லாம் வந்த சந்தேகம் கூட விசாரணை ஆணையத்துக்கு வரவில்லை.

ஜெ. கொல்லப்பட்டாரா? அல்லது மரணத்தை நோக்கி அனுப்பி வைக்கப் பட்டாரா? என்பது இயற்கைக்குத்தான் வெளிச்சம்.

2017 செப்டம்பர் 25-ல் இந்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப் பட்டது. அது 2017 நவம்பர் 22-ல் தன் விசாரணையைத் தொடங்கியது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள் தொடங்கி, அன்றைய சுகாதார அமைச்சர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் என்று பலரையும் விசாரித் தது. அடுத்து அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் எல்லாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அதனால் அப்பல்லோ, உச்சநீதிமன்றத்துக்குப் போய், 2019 ஏப்ரல் 26-ல் தடை வாங்கியது. அதனால், 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெறமுடியாத சூழல் நிலவியது. இதன் பின்னர் இந்த மார்ச்சில் தான் தடை நீங்கி விசாரணை தொடங்கியது. ஒரு மாதம் நடந்த விசாரணைக்குப் பின், இம்மாதம் 26 ஆம் தேதியுடன் விசாரணை முற்றுப் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, ஆறுமுகம் கமிஷனுக்கு ஆன செலவு பற்றி கேள்வி எழுப்பியபோது, 2 ஆண்டு காலமாக விசாரணை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 ரூபாய் ஆனதாக, 2021 அக்டோபரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஆன செலவுகள் இன்னும் ஒரு கோடிக்கு மேல் ஆகியிருக்கலாம். இவ்வளவு செலவு செய்து அமைக்கப்பட்ட அந்த விசாரணை ஆணையம், தன் விசாரணை அறிக்கையில் என்ன சொல்லப் போகிறது? அது எதைக் கண்டுபிடித்திருக்கிறது? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

இந்த விசாரணை ஆணையத்திடம் சசிகலா பிடிபடுவார் என்று ஆரம்பத்தில் கணக்குப் போட்ட எடப்பாடி, சசிகலாவை அலட்சியப்படுத்தினார். அவரைக் கட்சிக் குள் நுழைய முடியாதபடி பிரேக் போட்டபடியே இருந்தார். சசிகலாவும் எடப்பாடிக்கு செக் வைக்க, சரியான தருணம் வரும் என்று அமைதியாக இருந்தார். அவருக்கு வாகாக கொடநாடு வழக்கு இப்போது கிடைத்திருக்கிறது. உடனே, கொடநாடு வழக்கை விசாரிக்கும் குழுவிடம் அண்மையில் 10 மணி நேரத்துக்கும் மேல் சசிகலா வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அதில், அந்தக் கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு, எடப்பாடி மீதே சந்தேகம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருப்பதோடு, அதே வேகத்தில் சுடச்சுட ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார் சசிகலா. அந்த அறிக்கையில்...

"கொடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் (ஏப்ரல்- 21, 22 தேதிகளில்) என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து இருக்கிறேன். கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம். எங்களைப் பொருத்தவரையில் கொடநாடு பங்களாவை ஒரு கோவிலாகத் தான் பார்த்தோம்.'' -என்று பங்களா பற்றிக் குறிப்பிட்டு விட்டு....

"இந்த சம்பவத்தில் எங்களிடம் விசுவாசமாகப் பணியாற்றிய காவலாளி ஓம். பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடந்துள்ளது.

அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொரு வராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள். இதில் எந்த பாவமும் அறியாத சின்னக் குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர். (சயானின் மனைவி, குழந்தை). எனவே காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்''என்று சென்டிமெண்ட் கலந்து, குற்றத்தின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறார்.

கொடநாட்டு விவகாரத்தில், அப்போது முதல்வராக இருந்த எடப்பாடிதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று பலரிடமும் சொல்லி வரும் சசிகலா, இந்த வழக்கில் எடப்பாடி சிறைக்குப் போவார் என்று கணக்குப் போடுகிறார்.

காரணம், கொடநாட்டில் அரங்கேற்றப்பட்ட க்ரைம் சாதாரணமானதல்ல. பஞ்சமா பாதகத்தைவிடவும் கொடூரமான செயல்.

சசிகலாவுக்கு எதிராக முண்டா தட்டிக்கொண்டிருந்த எடப்பாடியோ, அவர் வாக்குமூலம் கொடுத்ததையும், அவர் அறிக்கையையும் பார்த்து அடங்கி ஒடுங்கி, மிரண்டுபோய் இருக்கிறார்.

எடப்பாடியோடு சேர்ந்துகொண்டு தனக்கு எதிராக வாள் சுழற்றிய ஓ.பி.எஸ்.சை, தன் பக்கம் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டார் சசிகலா. அ.தி.மு.க.வில் இருக்கும் மற்றவர்கள் சசிகலாவுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவருக்கு ஒரே எதிரியாக இருப்பவர் எடப்பாடிதான்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் போக்கால், ஜெ. தொடர்பான சிக்கலில் இருந்து மீண்டிருக்கும் சசிகலா, கொடநாடு விவகாரத்தில் தனது ஒரே எதிரியான எடப்பாடியை சிறைக்கு அனுப்பி, அவரது அரசியல் வாழ்க் கையை துவம்சம் செய்ய நினைக் கிறார். அவர் நினைப்பது நடக்குமா னால், அ.தி.மு.க.வின் லகானை அவர் கைப்பற்றும் நாள், வெகு துரத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

-ஒரு பார்வையாளனாக,

நக்கீரன்கோபால்