நான் உங்கள திருமணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க அப்படின்னு கேட்டேன். அதுக்கு அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க.
திருமணம் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இல்லை. எனக்கும் உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க. சாதி பாப்பாங்க. அதைவிட எங்க சவுராஷ்டிரா தாண்டி பொண்ணு கொடுக்கமாட்டாங்க. சௌராஷ்டிரானா சௌராஷ்ட்ரா இருந்தா மட்டும்தான் குடுப்பாங்கன்னு கலா சொன்னாங்க.
இப்ப வந்து இவங்கள ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுட்டேன். போகும்போது ஆறுதலா ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனாங்க. என்ன சொன்னாங்கன்னா, எதுக்கும் டைம் கொடுங்க, சும்மா அப்பா அம்மா கிட்ட லைட்டா வேற மாதிரி நான் சொல்லிப் பார்க்கிறேன்.
அவங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட் டேன்.
ஆனா ஊருக்குப் போனவங்க போனே பண்ணல. ஒருவேளை கல்யாணத்துக்கு ஒத்துக்கலபோல அப்படின்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன். என்னை அவங்க அப்பா அம்மாவுக்கு முன்னாடியே தெரியும். எப்படின்னா என்னுடைய போன்ல இருந்துதான் தினந் தோறும் அவங்க அம்மா அப்பாவுக்கு பேசுவாங்க.
நான் ”அப்துல் கலாம்” ஐயாகிட்ட இருந்து வாழ்த்து வாங்கினது எல்லாம் அவங்களுக்கும் தெரியும். ஆனா நம்ம கம்யூனிட்டி வேற அவங்க கம்யூனிட்டி வேற அதனால எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும் அப்படின்னு அவங்க சொல்லிட்டாங்களோ என்னமோ அப்படின்னு எனக்கு தோணுச்சு.
அப்பதான் நான் "சாதகப் பறவை” ஆர்கெஸ்ட்ராவுல பாடிட்டு இருக்கேன். இப்ப ஊட்டியில நீடில் கம்பெனிக்காக கச்சேரி. நைட் திடீர்னு லேண்ட் லைன்ல இருந்து போன் வருது. கலா பேசுது. இது மாதிரி அப்பா அம்மாகிட்ட நான் பாட்டுக்கு தெரியாம வந்து கேட்டுட்டேன். காலையில நீ காலேஜுக்கு போகவேண்டாம் அப்படின்னு சொல்லிட் டாங்க. இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னாங்க.
நான் உடனே அவங்க லேண்ட் லைன்ல அவங்களுக்கு அடிக்கிறேன். அவங்க அப்பாதான் போன் எடுக்குறாரு. உடனே ஐயா நான்தான் வேல்முருகன் பேசுறேன். ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க.
அவங்க ஏதோ தெரியாம சொல்லி இருக்காங்க. நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதீங்க. இப்போ கல்யாணத்தை பத்தி எல்லாம் ஒன்னும் அவசரம் இல்ல ஏதாவது ஒரு சூழ்நிலையில் நல்லா படிச்சு உயர்ந்த இடத்துக்கு போனதுக்கு அப்புறம், பொண்ணு கேட்டா கொடுப்பாங்களா அப்படின்னுதான் கேட்டேன். நீங்க தவறா நினைச் சுக்காதீங்க. பாவம் மூணு வருஷம் படிச்சு பைனல் எக்ஸாம் இன்னும் கொஞ்ச நாள்ல எழுதப் போறாங்க. எக்ஸாம் எழுதி முடிச்சிட்டாங்கன்னா அதுக்கப்புறம் ஒரு நல்லது நடந்தா நடக்கட்டும்.
இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு செலவு பண்ணி படிக்க வச்சுட்டு பாதியில நிறுத்தினா நல்லாவா இருக்கும். அதுவும் ஃபர்ஸ்ட் இயரா இருந்தாகூட பரவாயில்லை. பைனல் இயர் இப்ப எக்ஸாம் எழுதி முடிக்கப் போற நேரத்துல எதுக்கு தேவையில்லாம பரீட்சை எழுதாம நிறுத்துறீங்க. நீங்க பாட்டுக்கு உங்க பொண்ண அனுப்புங்க அப்படின்னு சொன்னேன்.
அதே மாதிரி நான் சொன்ன ஒரு வாரம் கழிச்சு கொண்டுட்டு வந்து விட்டுட்டுப் போனாங்க அப்புறம் நான் என்ன பண்ணினேன்னா நைசா ஒரு போன் ஒன்னு வாங்கி நீ ஹாஸ்டல்ல வச்சிக்கம்மா அப்படின்னு சொல்லிக் கொடுத்தேன். இப்போ அவங்களுடைய ஃப்ரெண்ட் ஒருத்தவங்க... மொரிசியஸ் ஃப்ரண்ட். அவங்க பேரு நவிஷா.
அவங்க மந்தவெளியில் ரூம் எடுத்து தங்கி இருந்தாங்க.
ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். அவங்க ரெண்டு பேரும் பரதநாட்டியம் ஒரே கிளாஸ். நான் நவிஷாகிட்ட போய் இப்ப எக்ஸாமுக்கு 10 நாள் லீவு விட்டுடுவாங்க. பத்து நாள் வெளியில படிச்சிட்டு, அப்புறம் உள்ள வந்து எக்ஸாம் எழுதிட்டு ஊருக்குப் போகனும். நீங்க கலா வீட்டுக்கு போன் போட்டு எக்ஸாம் வந்து இந்த மாசம் பத்தாம் தேதி நடக்கிறதா இருந்துச்சு. ஆனா இருபதாம் தேதிதான் நடக்குது நீங்க 25ஆம் தேதி வந்தீங்கன்னா கலாவை கூட்டிட்டுப் போகலாம் அப்படின்னு சொல்லிடுங்க அப்படின்னு சொல்லிட்டேன்.
அதே மாதிரி நவிஷா கலா வீட்டுக்கு போன் போட்டுச் சொல்லிட்டாங்க. உடனே கலா ஹாஸ்டல காலி பண்ணிட்டு நவிஷா ரூமுக்கு வந்துட்டாங்க. பத்து நாளும் அவங்க கூடதான் தங்கி இருந்தாங்க. ஒருவழியா பத்தாம் தேதி எக்ஸாம் முடிஞ்சுச்சு. ஆனா எக்ஸாம் வந்து இருபதாம் தேதிதான் ஆரம்பிக்குது அப்படின்னு சொல்லிட்டோம். இந்த பத்து நாள் கேப்புல நாங்க என்ன பண்ணிட்டோம், ஒரு ஆயிரம் ரூபாய்க்கு வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு ரிஜிஸ்டர் மேரேஜுக்கு ரெடி பண்ணுறோம்.
அப்ப குமார்கிட்ட நான் கேட்டேன். ரிஜிஸ்டர் மேரேஜ் எப்படி பண்ணனும் அப்படின்னு. அவர் சொன்னார் பாரீஸில் ஹைகோர்ட்லதான் இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் பதிவு திருமணம் பண்ற அலுவலகம் இருக்கு அப்படின்னு சொன்னாரு. உடனே ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டு ஹைகோர்ட்ல
போய்தான் நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்தோம். எனக்கு குமாருதான் சாட்சிக் கையெழுத்து போட்டார். அவங்களுக்கு நவிஷாதான் சாட்சிக் கையெழுத்து போடுறாங்க.
இப்போ எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்ச உடனே நவிஷா மொரிஷியஸ் கிளம்புறாங்க. அப்போ அவங்க யூஸ் பண்ணுன சிலிண்டர், கட்டில், மெத்தை வேற பாத்திரம் பொருள், இருந்த எல்லாத்தையும் இவுங்ககிட்ட கொடுத்துட்டு கிளம்பிட்டாங்க. இப்ப இருபதாம் தேதி முடிஞ்சிச்சு. நாலு நெருங்க நெருங்க வயத்துல புளியைக் கரைக்கிது. 25லிஆம் தேதி அவங்க வரணும். வந்து ஹாஸ்டல்ல ஆள் இல்லனா அவங்க என்ன பண்ணுவாங்களோ அப்படின்னு, நான் என்ன பண்ணினேன் கலாவ கூப்பிட்டு, நீ இப்ப என்ன பண்ற அந்த விஜிங்கிற பொண்ணுகிட்ட போன போட்டு இது மாதிரி நான் "கவிதையை” கல்யாணம் பண்ணிட்டேன் அப்படின்னு சொல்லிடு அப்படின்னு சொன்னேன். நான் அப்துல்கலாம்கிட்ட கவிதை எழுதி அனுப்பி வாழ்த்து பெற்றதனால என்ன எல்லாரும் கவிதை கவிதைன்னு கூப்பிடுவாங்க.
அதேபோல கலாவும் விஜிக்கு போன் போட்டு எனக்கும் கவிதைக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அப்படின்னு சொல்றாங்க. இப்படி சொன்ன உடனே விஜிக்கு ஷாக் ஆயிடுச்சு. அவன் நல்லா இருக்கமாட்டானே கருப்பா. ஒரு இது வேணாமா உனக்கு அப்படின்னு நினைச்சி இருக்கும்போல. அது அவங்க அப்பா அம்மாகிட்ட போன் போட்டு பேசுது. அப்பா ஏதும் தப்பா எடுத்துக்காதீங்.க கலா வந்து கவிதையை கல்யாணம் பண்ணிட்டா அப்படின்னு சொல்லுது. உடனே அவங்க அப்பா வுக்கும் ஷாக்.
உடனே அடுத்த நாளே அவங்க அப்பா அம்மா எல்லாரும் காலேஜுக்கு போயி பாக்குறாங்க.
அவங்க எக்ஸாம் எல்லாம் முடிஞ்சி பத்து நாளைக்கு முன்னாடியே போயிட்டாங்களே அப்படின்னு சொல்றாங்க. உடனே இங்க வேல்முருகன் எங்க இருக்காருன்னு தெரியுமா அப்படின்னு கேக்குறாங்க. அவர் இங்கதான் "குட்டி கிராமணி” தெருவுல தங்கி இருக்கிறாரு அப்படின்னு சொல்றாங்க. உடனே அவங்க ஒரு பெட்டிக்கடையில வந்து வேல்முருகன் வீடு எங்கன்னு கேக்குறாங்க. இப்ப கலா வந்து பரதநாட்டியம் கிளாஸ் எடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணி அவங்க போகணும். ஏன்னா அவங்க கிளாஸ் எடுத்து, நான் பாட்டு பாடினா தான் மாசம் ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கமுடியும். அதனால ரெண்டு பேரும் கிளம்பிகிட்டு இருக்கோம். திடீர்னு கதவு தட்டுற சத்தம் கேக்குது. தொறந்தா ஷாக். அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்து நிக்கிறாங்க.
அவங்க உள்ள வந்த உடனே, நான் பாட்டுக்கு வெளியில போய் கடையில பால் பாக்கெட் வாங்கிட்டு வரலாம்னு போயிட்டேன். அவங்க கலாவ அடிச்சிட்டாங்க போல. நீ எப்படி எங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணின கிளம்பு ஊருக்கு அப்படின்னு சொல்றாங்க.
என்னத்த நீங்க கல்யாணம் பண்ணுனீங்க. கழுத்துல தாலிய கீலியை காணோம். சும்மா சொல்லிக் கிட்டு அலையுறீங்க அப்படின்னு அவங்க அப்பா அம்மா சொல்லி பிரச்சனை பண்றாங்க அப்படின்னு நான் வந்த உடனே கலா என்கிட்ட சொல்லுச்சி.
இப்ப நான் அவங்க அப்பா அம்மாகிட்ட என்ன சொன்னேன்.
ஒரு கிளாஸ் ஒன்னு இருக்கு திடீர்னு வரலைன்னா அவங்க காத்துக்கிட்டு இருப்பாங்க. பசங்க வெயிட் பண்ணுவாங்க.
அதுக்கப்புறம் தப்பா ஆயிடும். அதனால இவங்க போன்ல அவங்களை கூப்பிட்டு சொல்லணும். அதனால அந்த பெட்டிக் கடையில லேண்ட்லைன் இருக்கு போய் சொல்லிட்டு வந்துடுறோம் அப்படின்னு நைசா வெளியில் கூட்டிட்டு அப்படியே நீ போன் எடுத்து பேசுற மாதிரி பேசுமா அப்படின்னு சொன்னேன்.
அப்படியே நான் டூவீலர நைசா தள்ளிக்கிட்டு போயி வண்டிய ஸ்டார்ட் பண்ணி அவங்கள உட்காரச் சொல்லி நாங்க பாட்டுக்க கச்சேரிக்கு போயிட்டோம். அவங்க அப்பாவும் அம்மாவும் உக்காந்து உக்காந்து பார்த்துட்டு கதவைச் சாத்திட்டு ஊருக்குக் கிளம்பிட்டாங்க. நாங்க நைட்டு பூரா அங்கங்க வெளியிலேயே இருந்துட்டு அடுத்த நாள் காலைல வந்து வீட்ட பார்த்தா அங்க யாரையுமே காணோம்.
அதனால நாங்க என்ன பண்ணினோம். இவங்கள விட்டா அடுத்தடுத்து நம்மள தொந்தரவு பண்ணிட்டு இருப்பாங்கன்னு சொல்லிட்டு கைப்பட ஒரு லெட்டர் எழுதி, இது மாதிரி எனக்கு மெச்சூரிட்டி வயசு வந்துடுச்சு. எனக்குப் பிடிச்ச மாதிரிதான் நான் கல்யாணம் பண்ணிகிட்டேன். எனக்கு வேற எந்த தொந்தரவையும் அவர் கொடுக்கல. அதனால எனக்கோ, என் கணவருக்கோ எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அப்படின்னு ஒரு கடிதம் எழுதி அந்த லெட்டரை ஒரு காப்பி எடுத்து அவங்க அப்பா அம்மாவுக்கு நாங்க அனுப்பி வெச்சிட்டோம்.
இப்ப என்ன ஆயிப்போச்சுன்னா அவங்க அப்பா அம்மா லெட்டரைப் படிச்சு பாத்துட்டு ஐயோ சென்னைக்குப் போனா உடனே கேசு கீசு கொடுத்து வச்சிருந்தாங்கன்னா அசிங்கமாயிடும். அப்புறம் ஊரு பூரா விசயம் தெரிஞ்சிரும் அப்படின்னு ஆறு வருஷம் யாருமே இந்த பக்கம் தலை வச்சு படுக்கல.
இப்ப நாங்க ஒரு வருஷம் வெயிட் பண்ணி பாத்துட்டு, நமக்கும் அப்பா அம்மா இல்ல. அதனால அவங்க அப்பா அம்மாவை வீட்டுக்கு வரவழைச்சு, நம்ம அண்ணன்கிட்ட சொல்லி, ரெண்டு குடும்பத்தையும் சேத்து ஊர் அறிய ஒரு கல்யாணம் பண்ணிடுவோம் அப்படின்னு பத்திரிகை எல்லாம் அடிச்சு, மே 13, 2007லதான் எங்களுக்கு கல்யாணம் நடக்குது. ரெஜிஸ்டர் மேரேஜ் வந்து 2006. அதான் கணக்கு. இருந்தாலும் வெளிப்படையா தாலி கட்டுனது மே 13, 2007. விருதாச்சலத்தில கல்யாணத்தை முடிச்சுட்டு ஈவினிங் ரிசப்ஷன். மண்டபமே நிரம்பி வழியுது. பத்திரிகைகாரங்க எல்லாருமே வந்திருந்தாங்க. இப்ப நான் யார் யார் கூட எல்லாம் முன்னாடி போட்டோ எடுத்திருந்தேனோ, கலைஞர் சார், வைரம் சாரு, ஜானகி அம்மா, எம்.எஸ். ஐயா, பாரதிராஜா சாரு, கங்கை அமரன் சாரு, மலேசியா வாசுதேவன் சாரு, இவங்க போட்டோ எல்லாத் தையும் சுத்திவரையும் டிஜிட்டலில் போட்டு நிக்க வச்சுட்டேன்.
அதாவது எங்களை வாழ்த்த வர்றதுல இவங்களும் போட்டோ மூலமாக வாழ்த்துறாங்க அப்படிங் கறதுதான் கான்செப்ட்.
இப்பதான பொண்ணு மாப்பிள்ளை எல்லாம் மேடையில ஆடுறாங்க. நாங்க அப்பவே மணமகன் பாட, மணமகள் ஆட, இந்த திருமணம் வினோதமான திருமணம் அப்படின்னு சொல்லிட்டு முந்தின நாளே எல்லா பத்திரிகையிலயும் விளம்பரம் கொடுத்துட்டோம்.
அடுத்த நாள் ஃபுல்லா பேப்பர்ல, டிவில எல்லாத்துல யும் நியூஸ் வந்துகிட்டே இருக்கு.
அதுக்கு முன்னாடியே கலா கிளாஸ் எடுக்குற இடத்துல அவங்க சம்பளம் கொடுக்கிற பில் மாதிரி ஒன்னு வாங்கி அந்த பில்லு, நான் தூர்தர்ஷன்ல வேலைக்குப் போனப்ப அவங்க கொடுத்த பில்லு இதையெல்லாம் வச்சு ஒரு டி.வி.எஸ். கம்பெனியில போய் ஒரு லோன் போட்டு ஒரு 2000, 3000 கட்டி லோன் வாங்கி புது "ஸ்கூட்டி பெப் ப்ளஸ்” வாங்கிட் டோம். அந்த வண்டியிலேயே கல்யாணத்துக்கு இங்கே இருந்து எனக்கு துணிமணி, அவளுக்கு துணிமணி எல்லாம் எடுத்துக்கிட்டு நாங்க கல்யாணம் பொண்ணு மாப்ள ”ஸ்கூட்டி பெப் ப்ளஸ்”லயே போறோம்.
விருத்தாச்சலத்துக்கு போயி அங்க கல்யாணத்தை முடிச்சுட்டு அதுக்கப்பறம் ஒரு வாரம் கழிச்சு வரும்போதுதான் ஊரிலிருந்து ஒரு நாலஞ்சு பேரு வந்து சென்னையில் விடுவதற்காக வராங்க. நாங்க ஏற்கனவே இருந்த வீட்டுக்கு 1000 ரூபாய் வாடகை. அதுல ஒரு ஹால் மட்டும் தான் இருக்கும். அந்த ஹால்லயேதான் கிச்சனும் இருந்துச்சு. ஆனா அதுல ஒரு நாலு பேரு கூட உட்காரமுடியல. பாதி பேர் வெளியிலயே நிக்கிறாங்க.
இப்போ இந்த கல்யாணத்துக்கு வி.கே.டி. பாலன் எல்லாரும் வந்திருந்தாங்க. இப்ப ஹரிதாஸ் சார் என்ன பண்ணிட்டாரு, பெனுசிலா ஹோட்டல குமார்னு ஒருத்தர் இருக்காரு. அவங்கள அப்பப்ப எனக்கு அறிமுகப்படுத்துவாரு. சார் எங்க இருக்கீங்க பெனுசிலா ஓட்டல்ல இருக்கேன் வா வேலான்னு சொல்லுவாரு. போனா பாட்டு கீட்டு பாட சொல்லு வாரு. பாடுவேன். இப்ப அறிவுமதி அண்ணனும் அப்ப பழக்கம். அதாவது அறிவுமதி அண்ணன் நம்ம ஊரா இருந்தாகூட பழக்கம் அங்கதான்.
இப்ப ஹரிதாஸ் சார் என்ன பண்றாரு, பெனுசிலா ஓட்டல் ஓனரும் இவரும் கலந்து பேசி வேல்முருகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நம்ம வீட்டிலேயே மேல பார்டிக்கு அரேஞ்ச் பண்ணலாம் அப்படின்னு பேசி முடிவு பண்றாங்க. முடிவு பண்ணி சார் ஆபீஸ்ல உள்ளவங்க, மத்தபடி பெரிய பெரிய ஆளுங்க ஒரு 150 பேர் வரவழைச்சு அவன வாழ்த்துற துக்கு நீங்க எல்லாம் வரணும் அப்படின்னு சொல்லி, அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் போட்டு, ரிசப்ஷன் நடத்துறாங்க. ஹரிதாஸ் சாரு, பெனிசிலா ஓட்டல் ஓனர் குமாரு, அறிவுமதி அண்ணன், அப்புறம் லயோலா காலேஜோட வில்சன் அப்படின்னு ஒரு அறிவியல் விஞ்ஞானி இவங்க எல்லாம் சேர்ந்துதான் இந்த ரிசப்ஷன் நடத்துறாங்க. ஹரிதாஸ் ஆபீஸ்ல வேலை பாக்கும்போது ஹரிதாஸ் சார் என்ன எல்லார்கிட்டயும் விளம்பரப்படுத்த ஆரம்பிச்சுட்டாரு.
அடிக்கடி ஓவியக் கல்லூரியில எல்லாரும் பிரண்ட்ஸ்களோட வந்து அங்க ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குவாங்க. அது இன்டர் காலேஜ் ப்ரோக்ராம்.
அந்த இன்டர் காலேஜ் காம்பெட்டிஷன்ல கலந்துகிறதுக்கு மியூசிக் காலேஜ் மூலமா நாங்க நாலஞ்சு பேர் போறோம். ஆனா அங்க நடக்குற காம்படிசன பாத்துட்டு ஏங்கூட வந்த நாலு பேரும் ஓடிட்டாங்க. இப்ப நான் மட்டும்தான் இருக்கிறேன். அந்த புரோகிராமுல எல்லாரும் பயங்கரமா பண்றாங்க. நமக்கு அங்க ஒன்னும் கிடைக்காது நம்ம என்னத்த பண்றதுன்னுதான் அந்த நாலு பேரும் ஓடிட்டாங்க. நான் அந்த காலேஜ் நடத்துற சேர்மன்கிட்ட போய், "சார் என் டீமில் உள்ள எல்லாரும் போய்ட்டாங்க. நான் இப்ப எப்படி, என்ன பண்றதுன்னு தெரியல. ஒரு மாதிரி இருக்கு சார் நானும் கிளம்புறேன். என்னுடைய பேரு நாலாவதா போட்டிருக்கீங்க.
அதை அடிச்சுருங்க சார்" அப்படின்னு சொல்றேன். அப்போ அவர் சொல்றாரு, "என்ன பிரதர் ஒரு நிமிஷம் இருங்க. இங்க ஜட்ஜா ஏ.ஆர். ரகுமான் அக்கா வந்திருக்காங்க. அப்புறம் உன்னிகிருஷ்ணன் சார் வந்திருக்காரு. இவங்க எல்லாரையும் நீ போய் நேர்ல பாக்க முடியுமா? ஆனா இன்னைக்கு பாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. அதே மாதிரி நீங்க பாடும் போது அவங்க சேர்ல உக்காந்து உங்கள பாப்பாங்க. அது எவ்வளவு பெரிய விஷயம். அது மாதிரி சிறப்பு விருந்தினர் யாருன்னா ராதிகாவும், சரத்குமாரும்தான் வராங்க. அதனால அவங்கதான் உங்களுக்கு பிரைஸ் குடுப்பாங்க. அது மாதிரி ஒருவேளை எதனாலும் நடக்க லாம்ல எதுக்கு அவசரப்படுறீங்க."
"இல்ல சார், நான் ஒரு ஆளா இருக்குறே னேன்னு சொல்றேன் அதான் வேற ஒன்னும் இல்ல சார். என்ன ஆயிடப் போகுது. நீ தனியா பாடிட்டுட்க் போ. அதுக்கும் தனியா மார்க் இருக்கு அப்படின்னு சொல்றாரு. இது இன்டர் காலேஜ் ப்ரோக்ராம். இந்தியா ஃபுல்லா இருந்து வருவாங்க" அப்டின்னாரு.
ப்ரோக்ராம் நடந்துக்கிட்டு இருக்கு. எஸ்.ஆர்.எம் காலேஜ் எல்லாம் பின்னி எடுக்கிறான். லயோலா காலேஜ் பின்னி எடுக்கிறான். அந்த காலேஜ் இந்த காலேஜ்னு எல்லாருமே வெளுத்து வாங்குறாங்க.
இப்ப நான் மேடை ஏறுறேன். ஏறுறப்ப நான் என்ன சொல்றேன்னா, "இங்க எல்லாரும் இசைக்கருவி வச்சு ஆரம்பிச்சு பாடுறாங்க. இது ரொம்ப பயங்கரமா இருக்குது. ஆனா நான் இசைக்கருவியுடன் வரல அப்படிங்கறதுக்கு எனக்கு வெட்கமா இருக்கு.
என்னன்னா என்கூட வந்தவங்க எல்லாரும் அங்க நடக்கிறத பாத்துட்டு அவங்க அப்படியே பின்னங் கால் பிடறில அடிக்கிற மாதிரி ஓடிப் போயிட்டாங்க. இருந்தாலும் இப்ப நான் மட்டும் தனியா வரேன். என்கிட்ட இசைக் கருவி ஏதும் இல்லை. இங்க பார்வை யாளரா உட்கார்ந்து இருக்க எல்லாருமே ஒரு இசைக் கருவி வச்சிருக்கீங்க. நீங்க உங்க கையை இரண்டையும் எடுத்து தட்னீங்கன்னா அந்த ஓசையை வச்சே நான் பாடல் பாடிடுறேன்" அப்படின்னு சொல்லிட்டு நான் பாட ஆரம்பிக்கிறேன். அதாவது தூள் படத்தில் வர்ற ’சிங்கம் போல” அப்படிங்கற பாட்டு பாட ஆரம்பிக்கிறேன்.
ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
என்னுடைய ஃபோக் வாய்ஸ், என்னுடைய ஷார்ப் வாய்ஸ் அதுக்கும் மேட்ச் ஆகி அந்த ட்ரெண்டிங் சாங் பாடப் பாட எல்லாம் உற்சாகமாக கைதட்ட ஆரம்பிச் சிட்டாங்க. கைதட்டி கைதட்டி அந்த பிச்சில பாடின உடனே யார்ரா அவன் அப்படின்னு எல்லாம் திரும்பித் திரும்பி பார்க்குறாங்க.
(வண்டி ஓடும்)