நிச்சயம் அனைவருமே ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிராகரிப்பை அனுபவித்திருப்பீர்கள். ஆனால் அது வெற்றியை நோக்கிய ஒரு மைல்கல் என்பதை மட்டும் பெரும்பாலும் பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். உண்மையில் நிராகரிப்பை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு வரம்.

ஓர்லாண்டோவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் ஆசிரியை அன்று வகுப்பிற்கு வரும்போது கை நிறைய பரிசுப் பொருட்களுடன் வருகிறார். ஆவலாகப் பார்க்கும் சிறுவர்களைப் பார்த்து அவர்கள் ஒவ்வொருவராக முன்னால் வந்து யாராவது ஒரு சிறுவனைப் பற்றி அவனிடம் உள்ள சிறந்த குணங்களைப் புகழ்ந்து கூற வேண்டும் என்று சொல்கிறார். முன்னால் வரும் சிறுவன் யாரைப் புகழ்ந்து சொல்கிறானோ அந்த சிறுவனை அழைத்து ஒரு பரிசை அவனுக்கு கொடுக்கிறார்.

இப்படி ஒவ்வொருவராக வந்து மற்ற சிறுவர்களைப் பற்றி புகழ்ந்து பேசப்பேச புகழப்பட்ட சிறுவர்களை அழைத்து ஒன்றொன்றாக தான் கொண்டு வந்த பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். மகிழ்ச்சியும் சிரிப்புமாக கடந்து கொண்டிருந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. அப்போது மூன்று சிறுவர்களைப் பற்றி மட்டும் யாருமே எதுவும் புகழ்ந்து கூறாமல் ஏனைய மாணவர்களால் அந்த மூவர் மட்டும் நிராகரிக்கப்பட்டு நிற்கிறார்கள்.

நிராகரிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவனுக்கு அது மிகவும் வலி மிக்க நிகழ்வாக ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. சிறுவனுக்கு அப்போது ஆறுவயது தான் இருக்கும் பள்ளியில் நடத்தப்பட்ட அந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் தான் மொத்தமாக நிராகரிக்கப்பட்டதாக உணர்கிறான்.

Advertisment

ss

ஆனால் பின்னாட்களில் அவன் எந்த புதிய செயல்களைச் செய்ய முனைந்தாலும் அவனால் அதைச் செய்ய முடியாமல் தடுமாறும்போதுதான் அவனுக்கு ஒன்று புரிகிறது. சிறுவயதில் தான் நிராகரிக்கப்பட்ட வடு தன்னுள் மிக ஆழமாக புதைந்து கிடக்கிறது. நீ நிராகரிக்கப்பட்டு விடுவாய் கவனமாக இரு என அது தன்னை இரகசியமாக மிரட்டிக் கொண்டே இருக்கிறது என்பது அவனுக்கு பிடிபடுகிறது.

உடனே அவனுக்குள் ஒரு பொறிதட்டுகிறது. நிராகரிப்புகள் தரும் வலிகளை நிராகரிக்கப் பழகிக் கொண்டால் நிச்சயம் தன்னால் அதிகம் சாதிக்க முடியும் என எண்ணியவனாக தன்னையே rejection 100 days என ஒரு ஆய்வுக்கு உட்படுத்துகிறான். அதன்படி ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரிடம் ஏதோ ஒன்றை கேட்கிறான்.

Advertisment

முதல் நாள் தான் நிராகரிக்கப்படுவதை அவமானமாக கருதும் மனம் நாளடைவில் அதை சாதரணமாக, தன் முயற்சியின் வெவ்வேறு கட்டமாக எடுத்துக் கொள்ள அவன் அடுத்த முயற்சிகளைத் தொடர்கிறான். அது அவனுக்கு பல புதிய முயற்சிகளுக்கு வழி வகுக்கிறது. பல வெற்றிக் கதவுகளை திறக்கிறது.

அதாவது முதலில் நிராகரிப்பை மிக அவமானமாக கருதும் மனது அதை வலியில்லாமல் ஏற்றுக் கொண்டு நிராகரிப்பவர்களை எப்படி கையாள்வது என அடுத்த கட்டத்தைபற்றி உணர்கிறது. நிராகரிப்பை எமோஷனலாக இல்லாமல் தன் முயற்சியின் ஒரு கட்டமாகவும் தன் திறமைக்கான சவாலாகவும் எடுத்துக் கொள்கிறது. நிராகரிக்கப்பட்டவுடன் பெரும் அவமானத்தோடு அத்தனையையும் விட்டு விட்டு ஓட எத்தனிக்காமல் நின்று இது எனக்கானது இதை அடைய வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என லாஜிக்கலாக மனம் முயற்சிக்கிறது என்பதை தன் ஆய்வின்படி அவன் அறிகிறான்.

அந்த ஆய்வின் முடிவில் நிராகரிக்கப்பட்டவுடன் தான் முட்டாளாக நடந்ததாக தன்னைத் தானே நினைக்காமல் தன்னுடைய ஈகோ அடிபட்டதாக சுருண்டு போகாமல் உணர்ச்சி வசப்படாமல் தன் முயற்சியைத் தொடரும் போது அங்கு நீங்கள் நினைப்பதை சாதிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகின்றன. நீங்கள் கேட்கக் கூடிய இடத்தில் கிடைக்கா விட்டால் கூட எங்கு கிடைக்கும் அல்லது வேறு எது கிடைக்கக் கூடும் என கூடுதல் தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று அறிந்து கொண்ட அவன் டாக்டர் டேவிட் போவன், இன்று உலகின் முண்ணனி நிராகரிப்பு ஆலோசகராகத் தன் வாழ்க்கையையே உதாரணமாக்கி நிராகரிப்பை நிராகரிக்க பலருக்கும் கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என எண்ணும் மனதால் எந்த புதிய முயற்சியையும் எடுக்க முடியாது. நிராகரிப்பை நிராகரித்து விட்டு தன் முயற்சியை தொடரும் மனமே பல புதிய சாதனைகளுக்கு வழி வகுக்கும்.

நிராகரிப்பை நிராகரியுங்கள்!