ப்புக்குட்டனுக்கு பத்து வயது ஆனபோது, அவனுடைய தந்தையும் தாயும் அரசாங்க பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பில் சேர்த்தார்கள்.

"நல்ல பள்ளிக்கூடம். மகனே...

நீ படிச்சு... பெரிய ஆளாக வரணும்.''- அப்புக்குட்டனிடம் தாய் கூறினாள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்றே அவனைப் பார்ப்பதற்காக எஸ்.எஃப்.ஐ. தலைவரும், காங்கிரஸ் தலைவரும் வந்தார்கள்.

"இரண்டில் ஒன்றை முடிவு செய்யணும். ஒன்று- எஸ்.எஃப்.ஐ. இல்லாவிட்டால்... காங்கிரஸ்.''- வகுப்பறையில் அப்புக்குட்டனிடம் வகுப்புத் தலைவன் கூறினான்.

Advertisment

ss

அப்புக்குட்டனுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால், பிடித்து நிறுத்தி கேள்விகளால் தொல்லைப்படுத்த, அவன் காங்கிரஸில் சேருவதற்குச் சம்மதித்தான்.

அவனுக்கு சிறுநீர் கழிப்பதில் விருப்பம் இருந்தது.

"உன்னை எடுக்குறேன்.''- எஸ்.எஃப்.ஐ. தலைவர் உரத்த குரலில் கூறினார். வீட்டை அடைந்தவுடன் அப்புக்குட்டனிடம் பாட்டி கேட்டாள்:

"பள்ளிக்கூடத்தில் நல்ல முறையில் படிச்சியா?''

"நான் காங்கிரஸில் சேர்ந்து விட்டேன். இனி என்னை எஸ்.எஃப்.ஐ. காரர்கள் தாக்குவார்கள்.''

கதையைக் கேட்டதும், பாட்டி கேட்டாள்: "இரண்டிலும் சேராமல் இருக்க முடியாதா?''

"என் வகுப்பிலிருக்கும் விஜயன் இரண்டிலும் சேர மாட்டேன்னு சொன்னான்.

இரண்டு கூட்டத்திலும் உள்ளவர்கள்

அவனை நிலத்தில் போட்டு அடித்தார்கள். அந்த பையன் அழுதான். எலும்பு உடைஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்.''- அப்புக்குட்டன் கூறினான்.

"நான் இப்போ என்ன கேட்கிறேன்? பள்ளிக்கூடத்திற்குப் போனால், தரையில போட்டு அடிக்கறாங்களா? போலீஸ்ல சொல்லணும்.

இரண்டு கூட்டத்தினரையும் பிடிச்சு சிறைக்குள் போட்டு அடைக்கணும்.''-பாட்டி கூறினாள்.

‌"போலீஸா? போலீஸுக்கு இவர்களைத் தொடுவதற்கான தைரியம் இல்லை."- அப்புக்குட்டன் சிரித்துக்கொண்டே கூறினான்.

"பார்கவி அம்மாவோட பள்ளிக்கூடத்துலயே சேர்த்திருக்க லாம்.''-பாட்டி கூறினாள்.

"பார்கவி டீச்சரின் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பே இல்லையே!'' -அப்புக்குட்டன் கூறினான்.

மறுநாள் அப்புக்குட்டனை எஸ்.எஃப்.ஐ.காரர்கள் மிரட்டினார்கள்.

நரசிம்ம ராவின் ஆட்சி ஊழல் ஆட்சி என்று பள்ளிக்கூட தலைவர் உரத்த குரலில் கூறினார்.

அப்புக்குட்டன் திரும்பி வரும் வழியில் ஒரு அரசியல்வாதி அவனுடைய ட்ரவுசரை இழுத்து இறக்கி பின்பகுதியில் கிள்ளி வேதனை உண்டாக்கினார்.

"அப்போ அழுறதுக்கு நீ என்ன சிறுமியா?''- தலைவர் கேட்டார்.

சிறுமிகள் கூட்டமாக கூடி நின்று தேம்பினார்கள்.

பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற அரசியல் சம்பவங்களை அப்புக்குட்டன் தன் தந்தையிடம் விளக்கிக் கூறினான்.

செவ்வாய்கிழமை பள்ளிக்கூடத்தில் போராட்டம் நடைபெற்றது.

அப்புக்குட்டனுக்கு காய்ச்சலும் நடுக்கமும் உண்டாயின.

அதனால் போராட்டத்தில் பங்கெடுக்காமல் வீட்டிற்கு ஓடினான். வழியில் அரசியல் தலைவர்களான சிறுவர்கள் அவனைத் தடுத்து, வலது கையைத் திருப்பி எலும்பை ஒடித்தார்கள்.

தந்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவனுடைய கையைப் ப்ளாஸ்டருக்குள் இருக்கும்படி செய்தார். அதற்குப்பிறகு வேதனை சற்று குறைந்தது.

"நான் இனி பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன்.''- அப்புக்குட்டன் கூறினான்.

"மகனே... நீ பெரிய ஆளாக வர வேண்டாமா?பள்ளிக்கூடத்திற்குப் போய் படிக்காமல், தேர்வு எழுத முடியாது.''- அம்மா கூறினாள்.

மாணவர் அரசியல் ஆபத்தானது என்று கூறும் சத்தியவான் மாஸ்டர் அப்புக்குட்டனைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார்.

"பள்ளிக்கூடத்தில் அரசியல் படித்து வளர்ந்தவர்கள்தானே தலைவர்கள் அனைவரும்?''- அப்பா கேட்டார்.

"எலும்பை ஒடித்துத்தான் அரசியல் படிக்கணுமா?''- பாட்டி கேட்டாள்.

அப்புக்குட்டன் தேம்பி அழுதான்.

பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் செல்வதற்கு தனக்கு தைரியம் இல்லை என்று கூறுவதற்கு அவன் தயங்கினான்.

"நீ எதற்குமே லாயக்கு இல்லையே!'' -அப்பா கூறினார்: "நீ இந்த அளவிற்கு கோழையா? அடிக்க வந்தால், திரும்ப அடிக்கணும். கை உள்ளவன் காரியக்காரன் என்ற சொல்லை நீ கேட்டதில்லையா?'' "அப்புக்குட்டன்.... நீ படிக்க வேண்டாம். உயிருடன் இரு. விவசாயத்தைக் கற்றுக் கொண்டால் போதும். இல்லாவிட்டால்... கொஞ்சம்... தையல்.''- பாட்டி தன் கருத்தைக் கூறினாள்.

"அம்மா... நீங்க அவனுடைய எதிர்காலத்தை நாசமாக்கிடுவீங்க.''- அப்பா கூறினார்.

எதிர்காலத்தைப் பற்றி அப்புக்குட்டனுக்குத் தெளிவில்லாமல் இருந்தது.தான் காங்கிரஸ் தலைவராக ஆகி... முதலமைச்சராக ஆகி... கேரள மாநிலத்தை ஆட்சி செய்வோமா? இல்லாவிட்டால்...

எலும்பு ஒடிந்து உடல் ஊனமுற்றவனமாக வீட்டில் அனைவருக்கும் சுமையாக வாழ்வோமா?

"நான் தையல் படிக்கிறேன்.''- அப்புக்குட்டன் முணுமுணுத்தான்.

‌"நீ படிச்சு பெரிய ஆளாக வரணும். பெரிய அதிகாரியாக வந்து எங்களுடைய கஷ்டங்களைத் தீர்க்கணும். ஆணாகவும் பெண்ணாகவும் எங்களுக்கு நீ மட்டுமே இருக்கிறாய். அதை நீ மறந்துவிடக் கூடாது''- அம்மா அவனை அணைத்தவாறு கூறினாள்.

‌"வேதனை குறைந்த பிறகு, நான் பள்ளிக்கூடத்திற்குப் போறேன்.''- அப்புக்குட்டன் கூறினான்.

‌அதற்குப் பிறகும் பாட்டி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

"ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாத பிள்ளைகள்... அடிக்குறப்போ, மர்ம உறுப்பில் பட்டால்... என்ன ஆகும்? போராட்டம் இல்லாத பள்ளிக்கூடத்தில் சேர்க்கக் கூடாதா? நமக்கு பிள்ளையோட உயிர்தானே பெரிசு?'' "போராட்டம் இல்லாத பள்ளிக்கூடமெனில், தாங்க முடியாத ஃபீஸ் கட்ட வேண்டியதிருக்கும்'' என்று அப்பா கூறினார்:

‌"அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்கள் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கே...

அமைச்சர்களின் பிள்ளைகள் படிப்பது அந்த பள்ளிக் கூடங்களில்தான். அங்கு அரசியல் இருக்காது.

போராட்டமும் இல்லை.'' -அப்பா கூறினார்.

அப்புக்குட்டனைத் தழுவியவாறு அம்மா கண்ணீர் வடித்தாள்.

கை சரியான பிறகு, அப்புக்குட்டன் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பி வந்தான்.

அவனுடைய கையை ஒடித்த தலைவனை இருட்டில் தலையில் அடித்து மயக்கமடைய வைத்ததாக அப்புக்குட்டனிடம் இன்னொரு கூட்டத்தின் தலைவன் கூறினான்.

"மருத்துவமனையில் இருக்கிறான்.'' -அவன் தொடர்ந்து கூறினான்.

குறிப்பிட்டுக்கூறும் வகையில் அப்புக்குட்டனிடம் எந்தவொரு உணர்ச்சியும் உண்டாகவில்லை.

மதிய உணவு வேளையில் பெயரும் புகழும் உள்ள ஒரு அரசியல் தலைவர் பள்ளிக்கூடத்தின் கேட்டிற்கு வந்து அப்புக்குட்டனிடம் பேசுவார் என்று இன்னொரு ஆள் அவனிடம் கூறினான்.

உணவு சாப்பிடாமலே, அப்புக்குட்டன் கேட்டிற்குச் சென்றான். தலைவர் பாச உணர்வுடன் அவனிடம் கூறினார்:

"எதிர்காலத்தில் நீதான் அமைச்சராக வரப் போகிறவன்.

எஸ்கார்ட் காருடனும் போலீஸுடனும் நீ குருவாயூருக்குச் செல்வாய்.மக்கள் உனக்கு மாலை அணிவிப்பார்கள். மைக்கின் மூலம் நீ பேசுவாய்.''

பாட்டியிடம் தலைவர் கூறிய விஷயங்களை அப்புக்குட்டன் கூறினான். பாட்டியின் முகம் பிரகாசமானது.

‌"மகன் முதலமைச்சராக வந்து, சொற்பொழிவு ஆற்றுவதைக் கேட்பதற்கான அதிர்ஷ்டம் இந்த பாட்டிக்கு இருக்குமா?"-பாட்டி தெய்வத்திடம் கேட்டாள்.

அப்புக்குட்டன் சிரித்தான்.

பதினாறாவது வயதில் அப்புக்குட்டன் கொல்லப்பட்டான்.

அறிவியல் ப்ராஜெக்ட் செய்து முடித்துவிட்டு, பள்ளிக்கூடத்திலிருந்து ஏழு மணிக்கு திரும்பி வந்தான். வழியில் அரசியல்வாதிகள் அவனைக் கத்தியைக் கொண்டு குத்தி கொலை செய்தார்கள்.மறுநாள் செய்தித்தாள்கள் முதல் பக்கத்திலேயே அவனுடைய படத்தை இடம்பெறச் செய்திருந்தன.

சுருண்ட முடியும் மலர்ந்த கண்களும் அழகனாக ஆக்கிய அந்தச் சிறுவனின் படத்தைப் பார்த்த அனைவரும் கூறினார்கள்:

"மாணவர் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சத்யவான் மாஸ்டர் கூறுவது சரிதான்.''