பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்
என்பது வள்ளுவன் வாக்கு. இதன் பொருள்,
பொய் பேசாமல் வாழ்கிற வாழ்வே புகழ்மிக்க வாழ்வு. அதுதான் அறவழியில் எல்லா சிறப்பையும் தரும் என்பதாகும். ஆனால் இதற்கு நேர்மாறாய், பொய்யே வாழ்க்கை என்று ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரால் அவர் வகிக்கும் பதவி, அழுக்காகிக் கொண்டே இருக்கிறது. அந்த பெரிய மனிதர் வேறு யாருமல்ல; ’சௌகிதார்’ என்ற அடைமொழியின் மூலம், தன்னை நாட்டின் பாதுகாவலராகப் பிரகடனப் படுத்திக்கொண்ட நம் இந்தியப் பிரதமர் ’சௌகிதார்’ நரேந்திர மோடிதான் அவர்.
ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, தன்னை நோக்கி வெற்றிச் செய்திகள் வரத் தொடங்கியதுமே, தன் டிவிட்டரில் இருந்த ’சௌகிதார்’ என்ற அடைமொழியை உடனடியாக நீக்கி, மீண்டும் தன் மோசடிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறார் மோடி. இது எவ்வளவு பெரிய ஏமாற்று. இந்திய வரலாறு இவரைப் போன்ற ஒரு பொய்யரைப் பார்த்ததில்லை.
அரிச்சந்திரன் கதைகளைச் சொல்லிச் சொல்லி உண்மையின் மேன்மையைப் புகட்டும் பாரதத்திற்கு, மகா பொய்யரான மோடி பிரதமராக இருப்பது வரலாற்று இழுக்காகும்.
மோடியின் மோடி வித்தைகளைப் பட்டியல் போட்டால், நம் தலையே கிறுகிறுக்கும்.
மோசடித் தனத்துக்கும் ஏமாற்றுக்கும் பொய்க்கும் சிலை வைக்க வேண்டுமானால் நாம் நேராக மோடி சிலையை வைக்கலாம். அந்த அளவுக்குத் தில்லாலங்கடி ஆசாமியாக, பொய் சொல்லக் கூச்சநாச்சம் இல்லாத பேர்வழியாக மோடி திகழ்கிறார்.
அவரை இந்த விசயத்தில் உலக அளவில் அடித்துக்கொள்ள எவரும் இல்லை.
குஜராத் அரசியலில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த மோடி, அந்த மாநிலத்தையே ஹைடெக் மாநிலமாக ஆக்கிவிட்டதாக உலகத்தை நம்பவைத்தார். அங்கே அவர் மூன்றுமுறை ஆண்டும்கூட இன்னும் குஜராத்தில் பசி பஞ்சம் தீரவில்லை என்பதுதான் உண்மை.
2014-ல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, பயிற்சி யாளர்கள் மூலம் தன் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார். பொய்யும் புரட்டுமாகத் தேர்தல் அறிக்கையையும் வாக்குறுதிகளையும் தயாரித்துக்கொண்டார். "நான் ஆட்சிக்கு வந்தால், முதல் வேலையாக, வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாயைப் போடுவேன்'’ என்று கூசாமல் வாக்குறுதி கொடுத்தார். அதை நம்பிய வாக்காளர்கள், தாமரையை அழுத்து அழுத்து என்று அழுத்தி மோடியைப் பிரதமராக்கினார்கள். பதவி வந்தபின், அந்த 15 லட்சம் பற்றி மோடி வாயையே திறக்கவில்லை. அவரது ஐந்தாண்டு கால ஆட்சியில், சகல விதத்திலும் இந்தியா சீரழிந்ததுதான் மிச்சம்.
மீண்டும் 2019 தேர்தலைக் குறி வைத்தார் மோடி.
மீண்டும் பிரதமர் ஆகியே தீரவேண்டும் என்று விதவிதமாய்ப் பொய் மூட்டைகளை அவிழ்க்கத் தொடங்கியதோடு, நாடகக் காட்சிகளையும் அரங்கேற்றத் தொடங்கினார். தேர்தல் நெருங்கிய நேரத்தில், நம் இந்தியா தீவிரவாத அச்சுறுத்தலில் இருப்பதாக அவர் தரப்பால் கதை கட்டப்பட்டது. இதை நம்பவைக்கும் விதமாக கொடூரமான காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் (துணைக் காவல்படை) வீரர்கள் சென்ற வாகனம் மீது, 350 கிலோ வெடிமருந்தைச் சுமந்துவந்த தற்கொலைப்படை வாகனம் மோதியது. இந்தக் கொடூரமான தாக்குதலில் ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நம் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பங்கள் கதறியழுதன. இந்தியாவே துடிதுடித்தது.
மோடியோ, "இது பாகிஸ்தானின் சதிவேலை. இதற்கு பதிலடி கொடுப்போம்' என்று கொக்கரித்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ "புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அரசியல் லாபத்திற்காக வீண் பழிபோட்டு, எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் உரிய பதிலடி கொடுப்போம்'’என்றார்.
எனினும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவித்தனர். பிப்ரவரி 26-ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில், காஷ்மீர் எல்லை அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தினர் என்றும், வெடிகுண்டு வீசித் தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்தனர் என்றும், 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் மோடி அரசு அறிவித்தது. ஆனால் பாகிஸ்தானிலோ சின்ன அதிர்வுகூட இல்லை. சர்வதேச ஊடகங்களோ, ஏதோ வயல்வெளியில் இந்திய விமானங்கள் குண்டு வீசியதாகச் சொல்லி, கருகிய இடத்தைக் காட்டின.
தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க இபப்டி ஒரு நாடகமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, "இந்தியாவின் பாதுகாப்புக்காக எங்களை ஆதரியுங்கள்' என்று மோடி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
இந்த சூழலில், மே 11-ஆம் தேதி "நியூஸ் நேசன்' என்ற தனியார் தொலைக்காட்சிக்கு மோடி பேட்டியளிக்க முன்வந்தபோது, "பாகிஸ்தான் எல்லைக்குள் நம் இந்திய விமானங்கள் நுழையும் வரை, அந்த நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா? அது ரேடார்கள் மூலம் கண்காணித்திருக்குமே?' என எல்லோர் மனதிலும் எழுந்த சந்தேகக் கேள்வியை மோடியிடம் வைத்தார் பேட்டியாளர்.
மோடியோ, கொஞ்சம்கூட யோசிக்காமல் "அன்று வானிலை மிக மோசமாக இருந்தது. என்ன செய்வது என்று அதிகாரிகளோடு யோசித்தேன். மழை மேகத்துக்குள் நம் விமானங்கள் நுழைந்து சென்றால் அவர்களின் ரேடாரால் கண்டுபிடிக்க முடியாது என்பதால், தயங்காமல் தாக்குதல் நடத்தும்படி உத்தரவிட்டேன்' என்றார் மோடி. ரேடார் என்பது ரேடியோ கதிர்வீச்சால் செயல்படக்கூடியது. மேகக் கூட்டங்களால் ரேடியோ கதிர்வீச்சை ஒருபோதும் தடுக்க முடியாது. இதுகூடத் தெரியாமல் நாட்டின் பிரதமரான மோடி பொய்க்கு மேல் பொய்யாக விளக்கம் தந்ததைப் பார்த்து, நம் ராணுவ அதிகாரிகளே திகைத்திருப்பார்கள். அந்தப் பேட்டியில் மேலும் மேலும் அடுக்கடுக்கான பொய்களை அள்ளிவிட ஆரம்பித்தார் மோடி.
""1987-88-லேயே நான் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி வந்தேன். 1990-ல் குஜராத்தில் வீரம்கம் என்ற பகுதியில் அத்வானி ஒரு பேரணியை நடத்தினார்.
அப்போது அவரை டிஜிட்டல் கேமராவால் படம்பிடித்து, அதை டெல்லியில் இருக்கும் பத்திரிகைகளுக்கு ஈமெயிலில் அனுப்பி வைத்தேன். மறுநாள் பத்திரிகைகளில் பிரசுரமான தன் கலர் படத்தைப் பார்த்து அத்வானி ஆச்சரியப்பட்டார்'' என்றார் மோடி. இதைக் கேட்டு எல்லோரும் திகைத்துப் போனார்கள். காரணம், டிஜிட்டல் கேமரா 2000-ல் தான் பயன்பாட்டுக்கே வந்தது. அது பயன்பாட்டுக்கு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே அதில் படம் எடுத்தேன் என்று மோடி சொன்னால் திகைக்கமாட்டார்களா? அதிலும் ஈமெயில் சேவையை 1995 ஆகஸ்ட் 15-ல்தான் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. மோடியோ அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே 88-ல் பத்திரிகைகளுக்கு ஈமெயில் மூலம் படம் அனுப்பினேன் என்றார். இப்படி தைரியமாகக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொய் சொல்லும் திறன் மோடியைத் தவிர வேறு யாருக்கு இருக்கமுடியும்?
அதேபோல், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதிலும் மோடிக்கு நிகர் மோடிதான். கேரள அரசு, சபரிமலை பக்தர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது' என்று போகிற போக்கில் மோடி கொளுத்திப்போட்டார். உடனே, "ஏன் இப்படி அபாண்டமாகப் பொய் புளுகுகிறீர்கள் மோடி? இது தொடர்பாக நாங்கள் யாரையும் கைது செய்யவில்லையே'’ என்று பகிரங்கமாக இதற்கு பதிலடி கொடுத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் மே 14-ந் தேதி அமித்ஷா நடத்திய பேரணியில் கலவரம் மூண்டது. பா.ஜ.க. தொண்டர்களும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் மோதிக்கொண்டனர். அப்போது பா.ஜ.க. தொண்டர்கள் அங்கிருந்த சமூக சீர்திருத்தப் போராளி வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தினார்கள். இதுகுறித்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, பழியை மம்தா தரப்பின் மீது போட்டார். மேற்கு வங்க முதல்வரான மம்தாவோ, "’எங்கள் ஆட்கள் கலவரம் செய்தார்களா? சிலையை சிதைத்தார்களா? மோடியே, ஏன் இப்படிப்பட்ட பொய்யை பேசுகிறீர்? இப்படித் தொடர்ந்து பொய்களைச் சொன்னால் மக்கள் முன்னால் முட்டிபோட்டு மன்னிப்புக் கேட்டு நீங்கள் தோப்புக்கரணம் போடவேண்டியிருக்கும்'’ என்று பகிரங்கமாகவே எச்சரித்தார். இதைவிட மோடிக்கு வேறு அசிங்கம் வேண்டுமா?
இந்த நிலையில்தான். மே 19-ஆம் தேதி, மோடி களமிறங்கிய வாரணாசி தொகுதி உட்பட, பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், உ.பி ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடக்கவிருந்த நிலையில்... வாக்காளர்களை ஏமாற்ற ’ஹைடெக் தியான நாடகத்தை’ மோடி அரங்கேற்றினார். எப்படி?
இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரமுள்ள கேதர்நாத் மலைமீது, ஒரு குகையை வெட்டச் செய்தார் மோடி. அதற்கு குடி தண்ணீர் வசதி, மின்சார வசதியை ஏற்படுத்த வைத்தார். மோடி உத்தரவுப்படி, கண்காணிப்புக் கேமராக்களையும் பொருத்தினார் கள். குகைக்குள் அழகான படுக்கையையும், காஸ்ட்லியான மெத்தையையும், நவீன கழிவறையையும் உருவக்கினார்கள். குகைக்குள் மோடி, கோட்டுகளையும் உடைகளையும் கழற்றி மாட்ட ஹேங்கர்களையும் அமைத்தார்கள். இப்படி வெகு நவீன ஸ்டார் ஓட்டல் அறையைப் போல், அந்தக் குகையை மோடிக்காக உருவாக்கினார்கள். அங்குள்ள கோயிலுக்கு அவர் நடந்து செல்ல சிவப்புக் கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது.
அங்கே சென்ற மோடி, காஸ்ட்லியான பாரம்பரிய பஹாரி உடையையும், கைத்தடியையும், தொப்பியையும் அணிந்து கொண்டு, ஆடம்பரக் கோலத்தில் கோயிலுக்குப் போனார். அதன்பின், குகைக்கு வந்து அங்கே 17 மணி நேரம் தியானம் செய்வதாகச் சொல்லி, போஸ் கொடுத்து உட்கார்ந்தார். உள்ளே தான் அணிந்திருந்த மாடர்ன் டிரஸ்சை மறைத்து, காவிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு, முதுகிற்கு தலையணையை வைத்துக்கொண்டு, மூக்குக் கண்ணாடியைக்கூட கழற்றாமல்... அவர் தியானம் செய்வதுபோல் போஸ் கொடுத்தார். அதைச் சுடச்சுடப் படம்பிடித்து ஊடகங்களில் வெளியிட்டார்கள் அவரது பரிவாரங்கள். அதைப் பார்த்ததும்... வாக்களிக்க இருந்த ஆன்மீக நம்பிக்கையாளர்கள் எல்லோரும் பரவசப்பட்டுப் போனார்கள். அவர்கள் மோடியின் ஆன்மீக டிராமாவை நம்பி, அவருக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்தார்கள்.
அந்த ஹைடெக் தியானம் மூலம் கடவுளையும் தைரியமாக ஏமாற்றத் துணிந்திருக்கிறார் மோடி. இவை மட்டும்தானா மோடியின் லீலைகள்? இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்..
குஜராத் மாநிலத்துக்கு 1985-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்த முயற்சியால், நர்மதா நதி நீர் கிடைத்தது. ஆனால் 2013 ரேவரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மைக் பிடித்த மோடியோ, குஜராத்துக்கு பாகிஸ்தான் எல்லையையும் தாண்டி 700 கி.மீ.தூரத்துக்கு குழாய் பதித்து, நான்தான் நர்மதா நீரைக் கொண்டுவந்தேன்' என்று கூசாமல் பொய் சொன்னார். அதைக் கேட்ட குஜராத் அதிகாரிகள், வாய்விட்டுச் சிரித்தார்கள்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் தன்னை பேச்சிலராகக் காட்டிகொண்ட மோடி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், அவருக்குத் திருமணமான தகவல் கசிந்ததால், இனியும் அதை மறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், தன் மனைவி பெயர் யசோதா பென் என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டார். தனக்குத் திருமணம் ஆனதையே ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் மறைத்த மகா புண்ணியவான்தான் மோடி.
மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில், குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் நான்தான் என்று தமுக்கடித்துக் கொண்டார். ஆனால் உண்மை என்ன என்றால், அவருக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கி றார் என்பதுதான். குஜராத் மக்களின் அனுதாபத்தைப் பெறவே இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கூசாமல் செய்தார் மோடி.
கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த மோடி, "நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு தலித் உட்கார்ந்ததை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. அதனால் அவருக்கு வாழ்த்து கூடச் சொல்லவில்லை' என்று குற்றம் சாட்டினார். ஆனால் உண்மை என்ன என்றால், ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற நாளிலேயே, அவருக்கு சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் உற்சாகமாக வாழ்த்துக்களைச் சொன்னார்கள். அதேபோல் பிரதமராகத் தான் ஆனபோதும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வாழ்த்தவில்லை என்றார் மோடி. அதுவும் பொய்தான். காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை நேரிலேயே சொன்னார்கள். இந்த விசயத்திலும் அற்பத்தனமாக மோடி புளுகினார்.
இதேபோல் சுதந்திரப் போராட்ட காலத்தில், சிறையில் அடைக்கப்பட்ட பகத்சிங்கை காங்கிரஸ் கைவிட்டு விட்டது என்றும், அவரை காங்கிரஸ் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை என்றும் பல மேடைகளில் புகார் வாசித்தார் மோடி. ஆனால் உண்மை என்னவென்றால் ஜவஹர்லால் நேருவே, சக காங்கிரஸ் தலைவர்களோடு சிறைக்குப் போய் பகத்சிங்கை சந்தித்திருக்கிறார். அதோடு அவருக்கு கடிதங்களையும் எழுதிக்கொண்டே இருந்தார். பகத்சிங்கிற்கும் தனக்கும் நடந்த உரையாடலைக்கூட நேரு தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இதையெல்லாம் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் மறைக்கப் பார்த்தார் மோடி.
சென்ற 2016 நவம்பர் 20-ஆம் தேதி, உ.பி. மாநில கான்பூரில் ரயில் ஒன்று தடம் புரண்ட விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். இதை விசாரித்த அதிகாரிகள் தண்டவாள விரிசல் இருந்ததை மது போதையில் இருந்த ரயில் ஓட்டுநர்கள் கவனிக்கவில்லை. அதனால் தான் விபத்து ஏற்பட்டது என்று கண்டுபிடித்தனர். இந்த நேரத்தில்தான் உ.பி. சட்டசபைத் தேர்தல் வந்தது. அப்போது, நேபாள எல்லையில் இருக்கும் ஹோடா பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடியோ, உண்மையை மறைத்து... "கான்பூர் ரயில் விபத்து ஒரு சதிச்செயல். எல்லை தாண்டிய சதிகாரர்களின் பயங்கர செயல். இதுபோன்ற தீவிரவாதச் செயல்களைத் தடுக்க எங்களைத் தேர்ந்தெடுங்கள்' என்று ஓட்டுக்களைக் குறிவைத்து பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டார்.
அசாம் மாநிலத்துக்கு 1.8 லட்சம் கோடி ரூபாயை நாங்கள் நிதியாகக் கொடுத்தோம். ஆனால் அதற்கான செலவுக் கணக்கை அசாம் மாநில அரசு, தேசிய தணிக்கை ஆணையத்திடம் கொடுக்கவே இல்லை' என்று ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் குற்றச்சாட்டை எழுப்பிவிட்டுக் கிளம்பினார் மோடி. இதையறிந்த அசாம் முதல்வராக இருந்த தருண் கோகாய், "மத்திய அரசு அப்படி ஒரு நிதியை ஒதுக்கவே இல்லையே. ஒதுக்காத நிதிக்கு எப்படி நாங்கள் கணக்குக் கொடுக்க முடியும்? மோடிக்கு ஏன் வாயைத் திறந்தாலே பொய் பொய்யாக வருகிறது'’என்று பதிலடி கொடுத்தார்.
இவை எல்லாவற்றையும்விட 2018 ஜனவரியில் சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த உலகின் 48-ஆவது சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, "நான் இந்தியாவின் 600 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்' என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார். அவரோடு சென்ற அதிகாரிகளோ, "இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடியைத் தாண்டவில்லையே... அப்படி இருக்க 600 கோடி மக்கள் எப்படி இவருக்கு வாக்களித்தார்கள்'’ என்று தலையில் அடித்துகொண்டார்கள்.
இப்படியாக லோக்கல் லெவல் தொடங்கி, சர்வதேச லெவல் வரை பொய் மூட்டைகளை சளைக்காமல் அவிழ்த்துவிடும் மோடியை உலக நாடுகளே இளக்காரமாகப் பார்க்கின்றன.
அதனால்தான் இங்கே நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில், கடந்த 20-ஆம் தேதி வெளியான, உலகின் பிரபல பத்திரிகையான டைம் இதழில், ’"இந்தியாவைப் பிளவுபடுத்துகிறவர்களின் தலைவன்'’ என்ற தலைப்பில், பிரபல கட்டுரையாளரான ஆடிஸ் தஸீர், மோடியைப் பற்றி ஒரு அட்டைப் படக் கட்டுரையை அதிரடியாக எழுதியிருக்கிறார். அதில்...
"உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியா, இதுவரை இல்லாத அளவிற்கு இன்று பிளவுபட்டிருக்கிறது. காரணம், இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத அளவிற்கு மோடி, மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளைச் செய்திருக்கி றார்'’ என்று குறிப்பிட்டிருப்பதோடு, கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் "பசு' குண்டர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களும், உ.பி. முதல்வராக யோகி ஆதித்யா உட்காரவைக்கப்பட்டதும், மத்தியப் பிரதேச போபாலில் பா.ஜ.க. வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் நிறுத்தப்பட்டதும், நாட்டிற்கு மோடி இழைத்த பெருந்தீங்காகும்’ என்று அழுத்த மாகச் சொல்லியிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்படி எல்லோரும் விமர்சிக்கும் அளவிற்கு, எல்லா வகையிலும் பொய், பித்தலாட்டம், பழிதூற்றல், கபட நாடகம் என சித்து வேலைகளைச் செய்யும் மோடிதான், தான் நினைத்தபடி இந்தியாவின் பிரதமராக மீண்டும் அமர்ந்திருக்கிறார். இது இந்தியாவின் சாபக்கேடு. மோடி இருட்டில் இந்தியாவும் அதன் எதிர்காலமும் மீண்டும் உருளத் தொடங்கியிருக்கிறது. விடியலுக்காகக் காத்திருப்போம்.
ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்