தயனின் தோள் சதை களிலும், வைரம்பாய்ந்த நெஞ்சிலும் வியர்வை அரும்பி வழிந்தது.

அவனுடைய வியர்வை நிறைந்த கால்களில் ரோமங்கள் ஒட்டிக்கிடந்தன. வெயிலிலும் வியர்வையிலும் நனைந்த... பெரும்பாலும் நிர்வாணமாக இருந்த அவனுடைய உடலில் உயிரணுக்களான தாதுக்களும் உப்பு ரசங்களும் பிரகாசித்துக்கொண்டிருந்தன. அவனுடைய மூச்சுக் காற்றில் கோதுமை வயலின் வாசனை கலந்திருந்தது. ஆமாம்... கோதுமை வயலின் வாசனை கலந்திருந்தது.

சுண்ணாம்புப் பொடியைக்கொண்டு வரையப்பட்ட நேர்க்கோடுகளுக்கு நடுவில் ஓட ஆரம்பித்தபோது, அவனுடைய கால்களில் குதிரைசக்தி வந்து சேர்வதைப் போல பார்வையாளர்களுக்குத் தோன்றியது. பல இடங்களிலிருக்கும் பல மைதானங்களிலும் கரகோஷம் உயர்ந்து ஒலித்தது. அவனைப் பொருத்த வரையில் அவையனைத்தும் சாதனையின் அபூர்வத் தருணங்களாக இருந்தன. ஆனால்...

"இனி எந்தக் காலத்திலும் நான் உனக்காக கைகளைத் தட்டமாட்டேன்.'' அவள் கூறினாள். தந்தமும் வெள்ளியும் சேர்த்து உண்டாக்கப்பட்ட வளையல்களை அணிந்திருந்த அவளுடைய கைகள் அவளது மடியில் அசையாமல் கிடந்தன. "இல்லை... இனி எந்தக் காலத்திலும் உன் வெற்றிகளில் என்னால் சந்தோஷப்பட முடியாது...''

Advertisment

அவள் இப்போது அவளுடைய பேராசிரியரின் அறைக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கிறாள்- எல்லாரும் புகழக்கூடிய அவளுடைய கண்களில் கவலையுடன்...

"வா... குழந்தை...'' வாயிலிருந்து குழாயை எடுக்காமல் அவர் கூறினார்: "உட்காரு...''

கனமான கண்ணாடி அணிந்த... சவரம் செய்யப்பட்டு நீலநிறம் படர்ந்திருக்கும் அவருடைய முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே நிறம் குறைந்து விட்டிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள். அவருக் குப் பின்னால் உடைந்த கண்ணாடியைக் கொண்ட அலமாரியில் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அங்கு புத்தகங்களின்... புகையிலையின் வாசனை பரவி நின்றிருந்தது.

Advertisment

"ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றதுக்காகதான் உன்னை நான் கூப்பிட்டேன்.''

அவர் நாற்காலியில் முன்னோக்கி நகர்ந்து

அமர்ந்து அவளைப் பார்த்தார்.

"உன்னோட ஆராய்ச்சிக் கட்டுரைங்க...''

அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவர் வாயிலிருந்து குழாயை எடுத்து, புகையிலைக் கறை அடர்த்தியாகப் படிந்திருந்த சாம்பல் தட்டில் வைத்தார். அதிலிருந்து வாசனை நிறைந்த புகை மேஜையின்மீது இறங்கிப் பரவியது. மேலே காற்றாடி சுழன்றுகொண்டிருந்தது.

"உன்னோட ஆராய்ச்சிக் கட்டுரை கொஞ்சங்கூட முன்னோக்கிப் போனதா தெரியல...''

அதைத்தான் அவர் கூறப்போகிறார் என்னும் விஷயம் அவளுக்கு நன்றாகத் தெரியும்.

"போன ஜனவரியில எழுதி முடிச்சிருக்கணும். அப்படி செய்றதா எங்கிட்ட நீ உறுதியா சொல்லியிருந்த. இல்லியா?''

"ஆமா... சார்.''

அவர் தனக்கு முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த இளம்பெண்ணையே கூர்ந்து பார்த்தார்.

"இந்த வருஷம் நீ ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடிக்கணும்.'' அவர் கூறினார்: "இல்லன்னா... உனக்கு அது எந்தக் காலத்திலும் முடியாம போயிடும்.''

அவளுடைய விரல்கள் மேஜையின்மீது கோடுகள் போட்டுக்கொண்டிருந்தன. கைகளின் நகங்களில் சாயம் உதிர்ந்து, மிகவும் மோசமாக இருந்தது. ரவிக்கையின் இடது தோளில் தையல் பிரிந்து, ஒரு இடைவெளி தெரிந்தது.

"உனக்கு என்ன ஆச்சு குழந்தை? நீ ஏதோ பிரச்சினையில இருக்கே...''

"நான் வரட்டுமா சார்?''

அவள் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்து, நீண்ட கூடத்தின் வழியாக நடக்க ஆரம்பித்தாள்.

அவர் கண்ணாடியைக் கழற்றி கையில் பிடித்தவாறு அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

மைதானத்தின் படிகளில் கம்பளி ஆடைகள் அணிந்த மனிதர்கள் கூடியிருந்தனர். கோட்டிற்கு வெளியே சாய்த்துவைக்கப்பட்டிருக்கும் தொலைக் காட்சி கேமராக்கள்...

அவனுடைய உறுதியான தோளின் தசைகளில் வெயில் உருகி விழுந்துகொண்டிருந்தது. பாய்வதற் குத் தயாராக இருக்கும் ஒரு காட்டெருமையைப்போல அவன் தரையைக் கால்களால் உதைத்துக்கொண்டி ருந்தான்.

அவள் காவி நிறம் பூசப்பட்ட கூடத்தின் வழியாக நடந்தாள்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு வளைவுகளும் உருளை வடிவத்தில் தூண்களும் இருந்தன. அவள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்த சமயத்தில் அதற்கு வெள்ளை நிறம் இருந்தது. ஒருமுறை விடுமுறைக் காலம் முடிந்து திரும்பி வந்தபோது, கட்டடம் காவி நிறம் பூசப்பட்டிருப்பதைப் பார்த்தாள். உதிர்ந்து விழுந்த பழுத்த வேப்பிலைகளின்மீது பல்கலைக்கழகத்தின் பெயர் எழுதிவைக்கப்பட்டிருந்தலி வளைந்து காணப்பட்ட பலகைக்குக்கீழே நடந்து, அவள் பாதைக்கு வந்தாள். இருபக்கங்களிலும் அடர்த்தியான மரங்கள் இருந்தன. உதிர்ந்து விழுந்த இலைகள் குவியலாகக் கிடந்தன. குளிர்காலத்தின் வருகை... இனி மரங்கள் நிர்வாணமாகும்.

ss

வலப்பக்க சுவருக்கு அப்பால் உயர்ந்துகொண்டும் தாழ்ந்துகொண்டும் இருக்கும் பந்து... உரத்த குரலில் சத்தம்... இடையே அவ்வப்போது கைகளின் தட்டல்... அவர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிதவறிய பந்து சுவருக்குமேலே பறந்துவந்து, அவளது புடவையில் உரசிவிட்டு பாதையில் உருண்டுசென்றது.

"மிஸ்... தயவுசெஞ்சு அந்த பந்தை...''

சதைகள் திரண்டு காணப்பட்ட ஒரு வியர்வை அரும்பிய முகம் சுவருக்குமேலே உயர்ந்து வந்தது. "ப்ளீஸ்...''

அது காதில் விழுந்ததைப்போல காட்டிக்கொள்ளா மல் அவள் வெறுப்புடன் அந்த பந்தை சற்று பார்த்தாள்.

முரட்டுத்தனமான கைகளின் நிரந்தரமான ஆக்கிரமிப்பும் வியர்வையும் பட்டு அதன்மீருந்த எழுத்துகள் அழிந்திருந்தன. சுவருக்கு அப்பால் நின்றுகொண்டிருந்த விளையாட்டு வீரன் பொறுமை யற்று என்னவோ கூறினான். அவள் அதை கவனிக்காமல் நேராக நடக்க ஆரம்பித்தாள்.

விளையாட்டு வீரன் ஒரு வித்தை காட்டுபவனைப் போல சுவரைத் தாவிக் கடந்துவந்து பாதையிலிருந்த பந்தைக் கையிலெடுத்தான். அவன் கைகள் இல்லாத ஒரு நீல பனியனையும், சிவப்பு வண்ண அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்தான்.

அவனுடைய கையிடுக்கிலிருந்த ரோமங்கள் செம்பு நிறத்தில் இருந்தன. அவனுடைய சிறிய கண்களில் எதிர்ப்புணர்வு நிழலாடியது. அவள் திடீரென அவனுடைய கையிலிருந்து பந்தைத் தட்டிப்பறித்து தூரத்திலிருந்த கால்வாயில் வீசியெறிந்தாள்.

"நான் உங்களை வெறுக்கறேன்.''

அறிமுகமற்ற அந்த விளையாட்டு வீரன் பதைபதைப்புடன் அவளது முகத்தையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். சுவருக்கப்பால் மற்ற விளையாட்டு வீரர்களின் வியர்வை அரும்பிய முகங்கள் ஒவ்வொன்றாக உயர்ந்து வந்தன.

"நான் உங்களை முழுமையா வெறுக்கறேன். ஹெல் வித் யூ...''

நீலநிற பனியன் அணிந்திருந்த விளையாட்டு வீரன் ஆச்சரியத்துடன் அவளையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக சுவரைத் தாவித் தாண்டி அவளுக் கருகில் வந்தார்கள். அவர்கள் பல நிறங்களைக்கொண்ட அரைக்கால் சட்டைகளை அணிந்திருந்தார்கள்.

அவர்கள் அருகில்வந்து நின்றபோது, சதைகள் நிறைந்திருந்த அவர்களுடைய சரீரத்திலிருந்து வியர்வையின், மண்ணின் வாசனை வந்தது. அவர்கள் அவளைச் சுற்றி நின்றார்கள்.

"உங்களுக்கு என்ன வேணும்?''

"நீ எதுக்கு எங்களோட பந்தை கால்வாய்ல எறிஞ்சே?''

"மனப்பூர்வமாதான்.''

அவள் அவர்களுடைய வளையத்தை விலக்கிக் கொண்டு முன்னோக்கி நடந்தாள். அவர்கள் அவளைப் பின்தொடர்ந்தார்கள். நெற்றியில் சிவப்புநிறத் துணியைக் கட்டியிருந்த ஒரு விளையாட்டு வீரன் அவளுக்கு முன்னால் வேகமாக வந்துநின்று வழியை மறித்தான்.

"நீ உதயனோட தோழிதானே?''

"ஆமா... அதனால உங்களுக்கென்ன?'' அவளுடைய கண்கள் சிவந்தன.

"உதயனை காமன்வெல்த் போட்டிக்கு தேர்ந்தெடுத் திருக்கறதா கேள்விப்பட்டோம். உண்மையா?''

"உதயன்கிட்ட போய்க் கேளுங்க.''

"இந்த முறை ஓடுறது நாநூறு ஹர்டிஸிலா?''

"காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு ஓட்டத்தை நிறுத்திட்டு, பாட்யாலாவுல இன்ஸ்ட்ரக்டரா சேரப் போறதா கேள்விப்பட்டோம். உண்மையா?''

பத்திரிகையாளர்களைபோல அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கேள்வியைக் கேட்டதும் அவளுடைய கண்களில் நீர் அரும்பியது. அவள்கூட விரும்புவதும் வேண்டிக்கொள்வதும் அதைத்தான்... "போதும்... உதயா... போதும்...'

விளையாட்டு வீரர்கள் பாதையைத் தடுத்து அவளுக்கு முன்னால் வரிசையாக நின்றார்கள். விளையாட்டு ஆரம்பமாவதற்கு முன்னால் சிறப்பு விருந்தாளிக்கு அறிமுகம் செய்துவைப்பதற்காக நிற்பதைப்போன்ற ஒரு நிற்றல்...

"வழியை விடுங்க.''

அவர்கள் அசையவில்லை.

"நான் போலீஸை கூப்பிடுவேன்.''

"நாங்க உதயனோட ரசிகர்கள். எங்கமேல ஏன் இப்படி கோபப்படணும்?''

விளையாட்டு வீரர்களின் வரிசையில் ஒரு இடைவெளி உண்டானது. அவள் அதன்வழியாக முன்னோக்கி நடந்தாள். சிறிது தூரம் நடந்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அவர்கள் வித்தை காட்டு பவர்களைப்போல மீண்டும் சுவரைத் தாவிக்கடந்து மறைவதைப் பார்த்தாள். அவர்களில் ஒருவனின் கையில் வாய்க்காலிலிருந்து எடுத்த சேறுபடிந்த பந்து இருந்தது.

'உனக்கு என்ன ஆச்சு பார்வதி?' அவள் தனக் குத்தானே கேட்டுக்கொண்டாள்: "நீ ஏன் அவங்ககூட சண்டை போட்டே? அவங்க உன்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க?' அவள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்த்தாள்... தூரத்தில் சுவருக்கு அப்பால் உயர்ந்துகொண்டும் தாழ்ந்துகொண்டும் இருக்கும் பந்தை... இடையில் அவ்வப்போது உரத்து ஒலித்த கைத்தட்டல்... அவர்கள் விளையாட்டைத் தொடர்கி றார்கள்...

"அவங்களுக்கு நான் யார்? என் கவலையை யார் அறிவாங்க?'

அவள் நடந்து... நடந்து ஹாஸ்டலுக்கு முன்னால் வந்துசேர்ந்தாள். கம்பிகள் இல்லாத... பச்சைநிற சாயம் பூசப்பட்ட... கண்ணாடி பதிக்கப்பட்ட சாளரங்களைக் கொண்ட ஒரு பழைய கட்டடமது. சுவரிலும் தரையிலும் சிமென்ட் உதிர்ந்துபோயிருந்த காரணத்தால் குளியலறையில் ஈரம் நீங்காமல் இருந்தது. எல்லா நேரங்களிலும் மிகவும் பழமையான காற்றாடிகள் முனகக்கூடிய ஓசையைக் கேட்கலாம். அறையின் கூட்டாளி அங்கு இல்லாமலிருந்தாள். சிறிய மங்கோலியன் கண்களையும், ஆப்பிள் நிறத் தையும்கொண்ட ஒரு மிஸோராம் பெண் அவள். அவளுடைய கட்டிலும் மேஜையும் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன.

தன் கட்டிலும் மேஜையும்... கட்டிலின் விரிப்பு அழுக்கடைந்து காணப்பட்டது. மேஜை விரிப்பில் நிறைய மைத்துளிகள் விழுந்திருந்தன. அள்ளிப் போடப்பட்ட ஆடைகளும் புத்தகங்களும்... ஒரு செருப்பு எழுதும் மேஜையின் கால் பகுதியிலும், இன்னொன்று சுவர் அலமாரிக்கு அடியிலும் கிடக்கின்றன.

"அலங்கோலமான உன்னோட அறை, அலங்கோலமா இருக்கும் உன் மனசைக் காட்டுது.''

உதயனின் கரகரப்பான குரலில் எதிர்ப்புணர்வு கலந்திருந்தது. அவள் பேசாமல் இருந்தாள். நீண்ட நாட்களுக்குப்பிறகு அவன் அவளுடைய அறைக்கு வந்திருக்கிறான். மிஸோராம்காரி அவளுடைய நண்பனுடன் வெளியே போயிருக்கிறாள்.

"நீ எங்க போறே?'' படுக்கையில் அமர்ந்திருந்த அவள் எழுவதைப் பார்த்து அவன் கேட்டான்.

"நான் கதவை அடைக்கட்டுமா?''

அவளுடைய கண்களின் ஓரங்களில் வெளிச்சம் விழுந்தது.

"வேணாம்.'' அவன் எழுந்தான். "எனக்கு நேரமில்ல...''

அவன் ஒரு சாம்பல்நிற பேன்ட்டையும், டிலிசட்டையையும் அணிந்திருந்தான். அவனுடைய தடித்து உறுதியாக இருந்த கைகள் இரும்பைப்போல இருந்தன. அவன் அறையைவிட்டு வெளியேவந்து நீண்ட வராந்தாவின் வழியாக ஒரு இயந்திர மனிதனைப்போல நடந்துசென்றான்.

"நீ ஒரு நீண்ட பெருமூச்சுடன் தலையை குனிந்த வாறு உன் அழுக்கடைந்த படுக்கையில் அமர்ந்தாய். குளிர் நிறைந்த அதிகாலை வேளைகளில் புடவையின் தலைப்புப் பகுதியைத் தோள்மீது இழுத்துவிட்டவாறு நீ தூரத்திலிருக்கும் மைதானம்வரை நடப்பதற்காகச் செல்வாய்.'

பாதையில் ஆட்களின் நடமாட்டம் ஆரம்பிக்க வில்லை.

சைக்கிளின் இரு பக்கங்களிலும் தொங்கவிடப்பட்ட பெரிய பாத்திரங்களில் பாலுடன் வரக்கூடிய பால்காரர்களை மட்டுமே வழியில் பார்ப்பாள். தூரத்திலிருக்கும் கிராமப் பகுதிகளிலிருந்து வரும் அவர்கள் கடந்துசெல்லும் வழியில் பால் ததும்பி விழுந்திருக்கும்... அறிமுகமுள்ள சில பால்காரர்கள் அவளிடம் கைவீசி மரியாதையை வெளிப்படுத்துவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக... பனிவிழுந்து ஈரமான அடர்ந்த மரங்களின் கிளைகளில் அசைவுண்டாகும்.

பால்காரர்கள் சென்றவழியே பறவைகள் பறந்து செல்லும். அவை கொத்தித்தின்ற நாவல் பழங்களின் கொட்டைகள் மரங்களுக்கு அடியில் சிதறிக் கிடக்கும்.

மைதானத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து விழுந்திருந்தது. பகல் வேளைகளில் அந்த இடைவெளியின் வழியாக கால்நடைகள் மைதானத்திற்குள் நுழையும். தூரத்திலிருக்கும் பாதையோரத்தில் வசித்துக்கொண்டு, கண்ணாடியாலான அலங்கார விளக்குகளைத் தயாரிக்கும் நாடோடிகளின் பிள்ளைகளும் பகல்பொழுதில் அங்கு நுழைந்து வருவார்கள். அவர்கள் விளையாடிக்கொண்டோ புல்வெளியில் படுத்து உறங்கிக்கொண்டோ இருப்பார்கள்.

"புலர்காலைப் பொழுதில் மைதானத்தில் நடக்கக்கூடிய பெண் நீ மட்டும்தான். காலியாகக் கிடக்கும் மைதானங்களையும், ஆட்களின் நடமாட்டமில்லாத பாதைகளையும் நீ விரும்ப ஆரம்பித்துவிட்டாய். அமைதி நிறைந்த அதிகாலைகளின் புனிதத்தை நீ அறிய ஆரம்பித்துவிட்டாய்...'

இப்போது அவர்கள் இருவரும் பல்கலைக் கழகத்தின் கஃப்டேரியில் ஒரே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். அவனுடைய ஒரு கையில் ஆவி பறக்கக்கூடிய தேநீர் கப் இருக்கிறது. இன்னொரு கையில் அவளுடைய தந்தத்தாலான வளையலை அணிந்திருக்கும் கை... உதயன் கூறினான்:

"என்னோட அப்பா சத்தர்பூர்ல இருக்குற தேவி கோயில்ல அர்ச்சகரா இருந்தாரு. பூஜையை ஒரு தொழிலாக்கி சொத்தும் பணமும் சம்பாதிக்கிற அர்ச்சகர்களை இப்ப காசியிலயும் அலஹாபாத்லயும் மட்டுமில்ல... எல்லா இடங்கள்லயும் பார்க்கலாம். ஆனா என்னோட அப்பா அப்படிப்பட்ட ஒரு ஆளில்ல. நகரத்துலயிருந்து வரக்கூடிய பக்தர்களான தொழிலதிபருங்களும் தலைவருங்களும் உண்டியல்ல போடக்கூடிய பணம் எல்லாதையும் அவர் எண்ணி சரிபார்த்து ஆலயத்தோட பொறுப்பாளர்கள்கிட்ட ஒப்படைச்சிடுவாரு. அவங்க அந்தப் பணத்தை வச்சு விவசாய நிலங்களை வாங்கியும் கட்டடங்களைக் கட்டியும் பெரிய பணக்காரங்களானாங்க. பணத்தைப் பார்த்தா பதைபதைச்சு பின்னோக்கி நகரக்கூடிய ஒரு அப்பாவி அர்ச்சகரா மட்டுமே என் அப்பா இருந்தாரு. சாகறவரை அவர் ஓரம் கிழிஞ்சிருக்கற வேட்டியோடயும், சேறு படிஞ்ச பூணூலோடயும், கடுகெண்ணெய் தேய்ச்சு செம்பு நிறத்திலிருந்த தலையோடயும் முடங்காம பூஜை செய்தாரு.

அதைத்தவிர வேறெதையும் செய்றதுக்கு என் அப்பாவுக்குத் தெரியாது.''

"அதனாலதான் நீ ஒரு ஓட்டப்பந்தய வீரனானியா... உதயன்?''

போட்டி மனப்பான்மை கொண்ட அவன் சிறு வயதிலிருந்தே எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுத்திருந்தான்.

"என்னோட அப்பா ஒரு தொழிலதிபரா இருந்தாரு.'' அவள் கூறினாள்: "அவரு ஒரு சிமென்ட் தொழிற்சாலையோட உரிமையாளரா இருந்தாரு.

அந்த தொழிற்சாலையைச் சுற்றி ஒரு நகரம் வளர்ந்து வந்துச்சி. அங்க எப்பவும் காய்ஞ்ச சிமென்ட் பொடி தங்கி நின்னிருக்கும்.

தொழிற்சாலையில வேலைசெய்றவங்கதான் அங்க வசிச்சாங்க. சிமென்ட்டையும் சுண்ணாம்பையும் சுவாசிச்சு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்பு வந்து அவங்க வேகமா இறந்துகிட்டிருந்தாங்க. என்னோட அப்பா எந்த சமயத்திலயும் தன் தொழிற்சாலைக்குப் போனதில்ல. காரணம்... அவருக்கு தூசி அலர்ஜியா இருந்தது.

தொழிற்சாலையில இருக்கற பகுதி எதுக்காவது போனா அன்னைக்கு ராத்திரி இருமல்வந்து தூங்கமுடியாம இருப்பாரு. ஆனா தான் ஒருமுறைகூட பார்த்திராத தன்னோட தொழிற்சாலையிலயிருந்து வரக்கூடிய லாபம் நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே வந்துச்சி. இறுதியில ஒரு கோடீஸ்வரனா அப்பா மரணத்தைத் தழுவினாரு.''

அவர்கள் முன்னோக்கி நடக்க, மர நிழல்களின் அளவு அதிகரித்துக்கொண்டு வந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் பழமையான வசிப்பிடங்களின் சாயம் பூசியிராத சுவர்களில், சாம்பல் நிறத்தில் பாசி வளர்ந்திருந்தது. பாதையின் இருபக்கங்களிலும் தார் உருகி வழிந்திருந்தது. நகரத்தின் பிற பல பகுதிகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்கள் அங்கு இப்படியும் அப்படியுமாக நகர்ந்து போய்க்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். வெய்யில் அதிகமாகும்போது நாவல் மரங்களுக்கடியில் ரிக்ஷாக்களை நிறுத்திவிட்டு, ரிக்ஷாக்காரர்கள் ஓய்வெடுப்பார்கள். ஒரு வளைவில் திரும்பியவுடன், நூற்றாண்டுகளைக் கடந்த ஒரு பெரிய மரத்திற்கு முன்னால் அவள் போய் நின்றாள். அதன் பொந்திற்குள் ஒரு ஒற்றைத் திரிகொண்ட தீபம் எரிந்துகொண்டிருந்தது.

மரத்தின்மேல் குங்கும நிறத்தில் ஒரு கொடி இருந்தது.

இணைக்கப்பட்டிருந்த துருப்பிடித்த ஒரு திரிசூலமும்... அவள் தீபத்திற்கு முன்னால் சென்று நின்று கைகளைக் கூப்பினாள்.

"ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. நாங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ள ஆரம்பித்து... ஆனால் தேவீ...'

அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்த காலத்தில் அவனுடைய சரீரத்திற்கு கடுகெண்ணெய்யின் வாசனை இருந்தது. சத்தர்பூர் தேவி ஆலயத்தின் அர்ச்சகரின் குடிசைக்கு முன்னால், சரீரம் முழுவதும் கடுகெண்ணெய் தேய்த்து... முக்கால் நிர்வாணகோலத்தில் நின்று உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் அவனைப் பார்ப்பதற்காக மட்டும் பன்னிரண்டு நாழிகை தூரம் காரை ஓட்டியபடி அவள் தினமும் காலையில் அங்கு வருவாள்.

இப்போது உதயனின் சரீரத்திற்கு ஆலிவ் எண்ணெய் வாசனை... அவனுக்காக அவள் இத்தாலியிலிருந்து அந்த விலை அதிகம்கொண்ட எண்ணெய்யை வரவழைத்தாள். கடுமையான கடுகெண்ணெய்யின் வாசனையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"உதயா... தங்கத்தைப் பிழிஞ்சா எண்ணெய் வருமா? அப்படின்னா... உடம்புல தேய்ச்சு உடற்பயிற்சி செய்றதுக்கு நான் உனக்கு அதைக்கூட வாங்கித் தருவேன்.'

"தேவீ... அவளோட அப்பா பெரிய பணக்காரர்.'

"உதயன்...''

அவனுடைய விரல்கள் அவளுடைய மென்மையான முடியில் பயணித்தன. அந்த விரல்களுக்கு இரும்பின் குளிர்ச்சியும் முரட்டுத்தன்மையும் இருந்தன.

"நாம எப்போ...''

ஆலிவ் எண்ணெய் தேய்த்து, உடற்பயிற்சி செய்து, உறுதியாக இருந்த அவனுடைய திறந்துகிடந்த நெஞ்சில் அவள் கன்னத்தைச் சேர்த்து வைத்துப் படுத்திருந்தாள்.

"இனிமேலும் தாமதிக்கக்கூடாது உதயன்.''

"இல்ல...'' அவன் கூறினான். "நேரமில்ல... வர்ற தேசிய அளவு விளையாட்டுல எனக்கு ரெண்டு தங்கப் பதக்கங்கள் உறுதி. நான் பயிற்சியைத் தொடர்ந்து செய்யணும்.''

அவனைப் பொருத்தவரையில் மேலும்... மேலும்... போட்டியிட்டு ஓடவேண்டும். சத்தர்பூரின் ஏழை அர்ச்சகரின் மகன் கழுத்தில் தங்கப் பதக்கங்கள் அணிந்து தொலைக்காட்சி கேமராவிற்கு முன்னால் நிற்கவேண்டும்.

"நீ ஏன் அழறே பார்வதி?'' அவன் சிரித்தான்.

"மரப்பொந்தின் இருட்டில் இருக்கக்கூடிய தேவியை மேலுமொரு முறை வணங்கிவிட்டு, கீழ்க் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த வெண்கல மணியை மூன்றுமுறை தட்டிவிட்டு நீ மீண்டும் நடந்தாய்.'

டிசம்பரின் குளிர்ந்த இரவுகள் எவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தன! அதிகாலையில் மூடுபனி வந்து நகரத்தை மூடியது. பகல்களின் நீளம் குறைந்து வந்தது.

"எங்க மாநிலத்தைச் சேர்ந்த முப்பத்துரெண்டு விளையாட்டு வீரருங்க ஒண்ணுசேர்ந்து போறோம்.''

"நானும் வர்றேன்.''

"வேணாம்.''

"மைதானத்தில விளையாட அறியாத என்னை, உன் வாழ்க்கையில ஒரு விளையாட்டு வீராங்கனைன்னாவது நினைச்சு...''

"வேணாம்... நீ வரவேணாம்.''

அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் கூறுவதுண்டு: "நீ அருகிலயிருந்தா நான் என்னோட நிலைத்தன்மையை இழந்துடுவேன்.'

இப்போது அவள் தன் படுக்கைக் கருகில் நின்றுகொண்டு, தன் தோல்பெட்டியில் ஆடைகளை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்.

இப்போது அவள் புகைவண்டியின் காலியான முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருக்கிறாள். நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்- குளிர்ச்சியில் மரத்துப்போன வெளிக்காட்சிகளைப் பார்த்தவாறு...

"வேணாம்... நீ வரவேணாம்...'

எனினும், அவள் சென்றாள். குளிர் காரணமாக அவளுடைய உதடுகள் வெடித்துக் காணப்பட்டன. இப்போது அவள் பல்வேறு வண்ணங்களைக்கொண்ட கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டேடியத்திற்கு முன்னால் தனியாக நின்றுகொண்டிருக்கிறாள்.

அப்போது வந்துநின்ற ஒரு பச்சைவண்ணப் பேருந்திலிருந்து சில இளைஞர்கள் இறங்கி, ஆரவாரம் செய்தவாறு ஸ்டேடியத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் பேருந்தின் அதே நிறத்தில் கோட் அணிந்திருந்தார்கள். பாக்கெட்டின்மீது சிங்கத்தின் முகமும், அதற்குக்கீழே குறுக்காக இரு வாள்களும் தைத்து சேர்க்கப்பட்டிருந்தன.

பின்னால் வந்த ஒரு ட்ரக்கிலிருந்து தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த சில இளைஞர்கள் குதித்து இறங்கினார்கள். அவர்கள் பட்டாளக்காரர்கள்.

அவர்களும் ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார்கள்.

அவள் ஸ்டேடியத்திற்கு வெளியே, இலைகள் கரிந்த ஒரு பனைமரத்திற்குக்கீழே விலகிநின்றாள். ஸ்டேடியத்தில் பேண்ட் இசை உயர ஆரம்பித்தது.

நீலவண்ண அரைக்கால் சட்டை அணிந்து, தலைமுடி கண்ணில் விழாமலிருப்பதற்காக நெற்றியில் ஒரு துணியைக் கட்டி, ஒரு காலை மடக்கி குனிந்து, மற்ற ஓட்ட வீரர்களுக்கு மத்தியில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் உதயன்... ஸ்டேடியத்தில் ஆர்வம் நிறைந்த ஒரு மௌனம்... தொடர்ந்து துப்பாக்கி குண்டின் ஓசையும் பார்வையாளர்களின் ஆரவாரமும்...

நாளை பத்திரிகைகளில், கழுத்தில் தங்க முத்திரைகள் அணிந்து நின்றுகொண்டிருக்கும் அவனுடைய படங்கள் பிரசுரமாகி வரும். ஒன்றாகப் படுத்து, இறுதியில் தளர்ந்து தூங்க ஆரம்பிக்கும்போதுகூட பார்க்கமுடியாத நிறைவின் ஒரு வெளிச்சம் அப்போது அவனுடைய உதடுகளில் தெரியும்.

"தேவீ...'

"விளையாட்டு வீரர்களின் காலமிது என்பதை நீ புரிந்துகொள்ளணும்... மகளே...'

மீண்டும் சந்திக்கும்போது, ஆலிவ் எண்ணெய்யின் மெல்லிய வாசனையுள்ள நெஞ்சில் சாய்ந்து சேர முயற்சிக்கும்போது, அவளை வலிய விலக்கியவாறு அவன் கூறுவான்:

"காமன்வெல்த் போட்டிக்கு மூணு மாசங்கள்கூட இல்ல... நான் நிறைய உழைக்கணும்.'

ஸ்டேடியத்திலிருந்து மீண்டும் ஆரவாரம்... அந்தப் பகுதி முழுவதுமே கரகோஷங்களால் அதிர்ந்துகொண்டிருந்தது.

ஸ்டேடியத்தைச் சுற்றி இருந்த வண்ணக்கொடிகள் அதிகபட்ச காற்றில் பறந்து விளையாடின.

"விளையாட்டு வீரர்களின் ஊரில், விளையாட்டு அறியாத உனக்கு என்ன வேலை? உனக்கு சந்தோஷம் விதிக்கப்படவில்லை... பெண்ணே...'

காலியாகக் கிடந்த புல்வெளியில்... தலை கரிந்த பனைமரத்திற்குக் கீழே.. குளிரின் காரணமாக வெடித்துப் பிளந்த உதடுகளுடன் தனியாக நின்றுகொண்டிருக்கும் அவள்...

"தேவீ... இதோ போகிறேன்... மரப்பொந்தில் தீபம்... இதோ... திரி கரிந்து எரிந்து கொண்டிருக்கிறது.'