வியப்பாக இருக்கிறது...

ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன... நான் எழுதத் துவங்கி!

’பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று மனம் தனக்குள் பாடுகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் மர்மக்கதை மன்னர் கின்னஸ் சாதனையாளர் ராஜேஷ்குமார் என்னிடம் தொலைபேசியில் பேசியபோது....

Advertisment

"ஜவஹர்... நான் மட்டுமல்ல நீங்களும் 50 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம் ஜவஹர்" என்றார். சந்தோஷமாக இருந்தது.

"வாழ்க்கை என்பது ரோஜா படுக்கையல்ல" என்பார்கள் ஆங்கிலத்தில்.அதைப்போல என் எழுத்து வாழ்க்கையும் ரோஜா படுக்கையல்ல.

"அவனுக்கு என்னப்பா! பெரிய எழுத்தாளன். எங்க பார்த்தாலும் அவன் போட்டோவும் கதைகளும்தான்" என்பார்கள். ஆனால் அதை அடைவதற்கு அவன் படும் பாடு அவனுக்குத்தான் வெளிச்சம்.

Advertisment

ஒரு கட்டுரையோ கதையோ எழுதி பத்திரிகையில் வந்தால் அதன் பின்னே இருக்கும் பெரும் கதை, அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே தெரியும்.

நான் விதிவிலக்காகி விடுவேனா என்ன.

ஆரம்பகாலத்தில் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றெல் லாம் இல்லை. காரணம் நான் படித்துக்கொண்டு இருந்தேன்.

படிக்கிறத கவனிக்காம என்ன கதை கட்டுரை வேண்டி இருக்கு? என்று என் வீட்டிலே எனக்கு கருப்புக் கொடி.

பிறகு எப்படி எழுத! அப்படியும் ஆர்வம் தாங்காமல் கதை அதுவும் காதல் கதை எழுதி அந்தக் கதையில் ஹீரோயின் அப்பாவிடம் வாங்கிய அடியை நானும் வாங்கினேன்!

"ராஸ்கல்... பிராஸ்க்ரஸ் கார்டுல எல்லாம் சிவப்பு மை. கதையா எழுதற கதை" என்றபோது அடுத்த வீட்டுக்காரர் வந்தார். வந்தவர் அப்பா வைத் தடுப்பார் என்று பார்த்தால், குதிரை கீழே தள்ளி குழியும் பறித்தது மாதிரி...

" பையன் கதைல்லாம் எழுதறானாமே. என் பையன் சொன்னான். அவன் எழுதுன கதையும் சொன்னான். பிஞ்சுல பழுத்துட்டன்" என்றார். இது போதாதா?

அடியுடன் எனக்கு குட்டும் காம்போ ஆஃபர் ஆகக் கிடைத்தது.

பள்ளிப் படிப்பு முடியும் வரை தற்காலிகமாக என் எழுத்து நின்றாலும் நீறு பூத்த நெருப்பாகவே என் எழுத்து ஆசை இருந்தது.

கல்லூரி இதழ்களில் எழுதினேன். ஒரு படைப்பே வருவது கஷ்டம் என்றிருந்த நிலையில் என் இரு படைப்புகள் வந்தன!

பிறகு டெல்லி சென்று ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டரில் சேர்ந்தேன். அப் போது டெல்லியில்தான் இருந்தது.

அந்த சமயத் தில்தான் நான் பத்திரிகையாளனாக மாறினேன்!

*

ஒரு நாள், டெல்லி பூஜா பார்க் என நினைக்கிறேன்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் வருகிறார் என கேள்விப்பட்டு அங்கு சென்றேன். அவரைப் பார்த்து ஒரு பேட்டி எடுக்கலாம் என்று.

ஆனால் அங்கு போனால் பிரபல சர்ச்சைகளால் புகழ் பெற்ற இசை விமர்சகர் சுப்புடு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்!

'ஆஹா.. இதுவல்லவா மேட்டர்' என்று நினைத்து அவரைப் பேட்டி கண்டு குமுதம் இதழில் எழுத, மிகப் பெரிய ஆச்சரியமாய் அது பிரசுரம் ஆனது.

என் எழுத்துப் பாதையும் ஆரம்பம் ஆனது!

அதன்பின், பிரபலங்கள் பலரும் என் எழுதுகோலுக்குத் தீனி ஆனார்கள்.அதனால் என் பெயரும் செழித்து வளர்ந்தது.

ss

எழுத விரும்பும் ஒருவன் ' என்ன மேட்டர் எழுதினால் கிளிக் ஆகும்' என்று கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டும் என்பது மிக முக்கியம் இங்கு வாரியார் சுவாமிகள் பற்றி பல பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் இசை விமர்சகர் சுப்புடு ஆர்மோனியம் வாசித்தார் என்பது ஒரு நியூஸ் என்று நான் கண்டுபிடித்து எழுதியதால் அது வெற்றி பெற்றது!

எந்தப் பின்னணியோ அனுபவமோ, அடையாள அட்டையோ இல்லாமல் வெற்றி பெறுவது... அதுவும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை யாளராக இல்லாமல் வெற்றி பெறுவது என்பது மிகச்சிரமம்.

நான் சாதித்துக் காட்டினேன்.

இதை நான் பெருமைக் காகச் சொல்ல வில்லை. எழுத்தில் சாதிக்க நினைத்து ஒரு மேட்டர் ரிஜெக்ட் ஆனாலே துவண்டு விழுகின்ற, பத்திரிகை ஆசிரியர்களைக் குறை சொல்கின்ற புதிய இளம் எழுத்தாளர்களுக்காகச் சொல்கிறேன்!

விடா முயற்சி தைரியம், கடமையைச் செய் பலனை எதிர் பாராதே’ கொள்கை... இவையெல்லாம் நிச்சயம் வேண்டும்.

நான் எல்லாவற்றையும் கடைப்பிடித்தேன்.

அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி எர்ணாகுளம் வந்தபோது திடீரென அவரைச் சந்தித்தேன்.

எல்லோரும் வியந்தார்கள். 'எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறாய் ' என்று திட்டினார்கள். என் நோக்கம் ஒரு நல்ல நோக்கம் என்று நான் அன்று நினைத்ததால் எனக்குப் பயம் வரவில்லை!

சாவிக்கு அதை எழுதி அனுப்பினேன். பிரசுரமாயிற்று.

நான் ஃப்ரீலான்ஸ் ரைட்டர் என்பதால் எனக்கு எந்தவித சட்ட ஆதரவுகளும் கிடைக்காது! ஆயினும் பத்திரிகை நிருபர்களே தயங்கும் விஷயத்தை நான் கையாண்டதால் ஆசிரியர்களுக்கு என் மீது அபிமானம் கூடியது.

மேலும் நான் பேட்டி காணும் பிரபலங்களிடம் பேட்டி காண்பதோடு சரி. அதன் பிறகு அவர்களை எந்த உதவிக்காகவும் சந்திப்பதே இல்லை!

இதுவும் பத்திரிகை ஆசிரியர்களிடம் பெயர் பெற்றுத் தந்தது!

அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு ஊர்வலத்தில் தலைமை ஏற்று செல்கிறார்...

நான் அவர் அருகே சென்று சில நிமிட நட்பாகி அவருடன் நானும் நடந்துகொண்டே பேட்டி எடுத்தேன்!

சாவியில் " துரத்தித் துரத்தி ஒரு பேட்டி" என்ற தலைப்பில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது!

தைரியம் தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு. என் எழுத்து ப் பாதையில் அவை நிறையவே இருந்தன.

காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசில் மொரார்ஜி தேசாய் பிரதமராக அமர்கிறார்.

விடுமா என் எழுத்தாசை? அவர் மிகவும் கண்டிப்பானவர். சிறுநீர் வைத்தியம், கடுமையான சட்ட திட்டங்கள் முதலியவற்றால் மக்களிடம் அவர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.

"அவரை சந்திக்கப் போகிறாயா? இருக்கு உனக்கு" என்று நண்பர்கள் எச்சரிக்கை. பாதுகாவலர்களின் தடுப்பு... இதையெல்லாம் மீறி அவரைச் சந்தித்தே விட்டேன்! ஆனால் அவர் பேட்டிக்கு ஒத்துக் கொள்ளவில்லை! அதனால் என்ன.. அந்த அனுபவமே பாராட்டுகளைப் பெற்ற கட்டுரையாக வந்தது!

அதைப் போல மிகக் குறுகிய காலமே பிரதமராக இருந்த சரண்சிங் டெல்லி அருகே சூரஜ்குண்ட் என்ற வனத்தில் ஓய்வுக்காகச் செல்கிறார் என்று கேள்விப்பட்டு, நான் அங்கு சென்றுவிட்டேன்.

ஆனால் காவலர்களிடம் சிக்கிக்கொண்டேன்!

என் விவரங்கள் எல்லாம் கேட்டுவிட்டு " இனிமே இப்படில்லாம் பண்ணாதீங்க " என்று எச்சரித்து அனுப்பினார்கள்! ஆனால் " மெட்ராஸ்" என்றதும் ரொம்ப மரியாதை தந்தார்கள்!

சுப்புடுவுடன் இணைந்து "இதயம் பேசுகிறது" இதழில் எழுதித்தள்ளிவிட்டேன். சுப்புடுவே என்னைப் பார்த்து ஆச்சரியப்படுவார்.

"கோடு போடச் சொன்னால் ரோடே போடறியே" என்பார்.

*

இதயம் பேசுகிறது மணியன் எனக்கு தனிப்பட கடிதம் எழுதுவார். அப்போதெல்லாம் மகிழ்ச்சியின் உச்சிக்கே செல்வேன்.

ஒரு முறை டெல்லியில் அலம்ஜீத் சௌஹான் என்ற கல்லூரி மாணவி, மிஸ் டெல்லியாகப் பட்டம் பெற்றார். அவரைப் பேட்டி கண்டு முடித்தவுடன்,' நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றவுடன் முதலில் முறைத்தார். பயப்படாமல் நான் தொடர்ந்தேன்:

"யெஸ். நீங்க அழகா இருக்கீங்க. நீங்க "மிஸ் இந்தியா" போட்டிக்குப் போனா உங்களுக்குத்தான் கிரீடம்" என்றதும் "அப்படியா சொல்றீங்க" என்று என் கைகளைப் பிடித்து குலுக்கினார்!

என்ன ஆச்சரியம்!

பம்பாயில் (மும்பை) நடந்த அழகிப் போட்டியில் அவர் மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

அவர் அடைந்த மகிழ்ச்சியைவிட, நான் அடைந்த மகிழ்ச்சி அதிகம்.

நல்ல நண்பராக மாறிவிட்டார்.

ஆனாலும் என் கொள்கைப் படி நான் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாததால் தொடர்பு அறுந்துவிட்டது. ஒருவேளை அவர் உலக அழகிப் போட்டிக்குப் போய் பட்டம் வாங்கியிருந்தால் சந்தித்திருப்பேனோ என்னவோ!

அதேபோல் கல்கத்தாவில் இருந்த போது ஒரு குடும்பத்தில் அக்காவும் தங்கையும் எப்படியோ என் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஒரு நாள் அவர்களிடம் "நீங்க இரண்டு பேருமே அழகா இருக்கீங்க. நீங்க மிஸ் கல்கத்தா போட்டியில் கலந்துக்கோங்க" என்றதும் அவர்கள் சண்டைக்கே வந்துவிட்டார் கள்,

" வாட் டு யூ மீன்" என்று.

"இதோ பாருங்க. நான் சும்மா சொல்லல. ஐசும் வைக்கல. நான் பத்திரிகைல எழுதறவன்."

"பேங்குல வேலை பார்க்கிறதா சொன்னீங்க?"

என்றார்கள் அந்த அழகிகள். ( அப்போது மேலும் அழகு கூடியது!)

"ஆமா. பேங்குலதான் வேலை. இது பொழுது போக்கு எழுத்து"

அவர்களுக்கு என் மேல் நம்பிக்கை வந்தது.

ஆனால் நான் சொன்னதை மறக்காமல் மிஸ் கல்கத்தா போட்டியில் கலந்துகொண்டார்கள். என்ன?ஆச்சரியம்!

இருவருமே வெற்றிவாகை சூடினார்கள்.

அக்கா முதல் பரிசு. மிஸ் கல்கத்தா. தங்கை இரண்டாம் பரிசு.

தங்கள் பெற்றோருடன் அவர்கள் எனக்கு அளித்த பார்ட்டியை மறக்கமுடியாது.!

இதயம் பேசுகிறது இதழில் கட்டுரை வந்தது!

*

நேர்மை, நிதானம் நேரம் தவறாமை ஒரு பத்திரிகையாளனுக்கு முக்கியம். மேலும் ஒரு வி.ஐ.பி. நண்பராகிவிட்டால் உடனே அவரிடம் ரொம்ப நெருக்கமான செயல்களைக் காட்டிவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையைத் தருவேன். போன் பண்ணாமல் போகவே மாட்டேன்.

தோளில் கைபோட மாட்டேன்.

ஒரு வி.ஐ.பி. நண்பரை ஒருவருக்கு அறிமுகம் செய்ய சில நாட்கள் கழித்து அந்த இளம் பிரமுகரிடம் இருந்து போன்.

"ஜவஹர் சார்... அவர் உங்கள மாதிரி இல்ல சார். காரணமில்லாமல் போன் பண்றார். என்ன தலைவா.. எப்படி இருக்கீங்க? " என்றெல்லாம் பேசறார். பிடிக்கல" அடப்பாவி.

பிறகு நான் என் நண்பரைக் கடிந்து கொண்டேன்.

"என்னப்பா பண்றே.எல்லாரும் உங்கிட்டே அப்படி பாசமா இருக்காங்க" என்று பலர் வியப்பார்கள்.

"ஆச்சி மனோரமா எப்படிப்பா உனக்கு ஆயிரம் கேள்விகள் கேட்க நேரம் ஒதுக்குனாங்க?"

"எப்படி ஜவஹர், நடிகர் திலகம் உங்கள மட்டும் சாப்பிடக் கூப்பிட்டாரு?"

" எப்படி ஜவஹர் சார், எம்ஜிஆர் சம்சாரம் அது மின்சாரம் வெற்றிவிழாவில் மேடையில் இருந்து கொண்டே, லேட்டா வந்த உங்கள உள்ளே வரச்சொன்னாரு?"

என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில், "நான் தரும் மதிப்பு மரியாதை, எக்காலத்திலும் நட்பின் வரம்பை மீறாதது"

*

சமீபத்தில் கூட ஒரு பிரபல இயக்குநரைச் சந்தித்துப் பேசிக்?கொண்டு இருந்தேன். அருகில் இன்னொரு எழுத்தாளர் அவரும் என் நண்பர்தான்... இருந்தார். நான் விடைபெற்று வந்தபின்னர் இயக்குநர் சொன்னாராம்...

"ஜவஹர் எழுத்து பிரமாதம். அவர் நடந்துகொள்ளும் விதமும் அருமை " என்றாராம்.

இதைச் சொன்ன நண்பர், ஒரு மனிதர் அந்த இடத்தை விட்டுச் சென்ற பிறகு அவர் செய்த குற்றம் குறைகளே பேசப்படும். ஆனால் உங்களைப் பற்றி பெருமையாக பேசினார்.

எனக்குப் பெருமையாக இருந்தது " என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது!

*

என் எழுத்திற்கு ஆதரவாக இருந்தது என் மனைவி.

ஒரு எழுத்தாளனுக்கு பேரும் புகழும் கிடைக்கும். ஆனால் பணம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

அருமையாக ஒரு கதையையோ கட்டுரையோ எழுதி முடித்துவிட்டு திருப்தியுடன் எழும்போது மனைவியாகப்பட்டவள் " என்னா? பெரிசா எழுதிட்டீங்க .பணமா வரப்போவுது" என்று சொன்னால் புஸ் என்று உற்சாகம் வடிந்து விடும்.

2005-ல் மறைந்த என் மனைவி ராணி ஜவஹர் என் முதல் வாசகி.புரூஃப் ரீடர். என் கோணல்மாணல் எழுத்தைத் திருத்துபவர். இரவு இரண்டு மணிக்கு எழுதும்போதும் இடையே எழுந்து எனக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு செல்பவர்.

சினிமாவிலும் நான் இருந்ததால், டேபிளில் இருக்கும் நட்சத்திரங்கள் கவர்ச்சிப் படம் பார்த்து திட்டாதவர். என் மீது முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்து, என் எழுத்துப் பாதையில் சிவப்புக்கம்பளம் விரித்தவர். அவர் பிறந்த நாளை வருடாவருடம் என் இல்லத்திலேயே நடத்தி, ஆதரவற்ற ஒரு சில குழந்தைகளுக்கு உதவுகிறேன்.

என் எழுத்தைப்போல் அந்தப் பழக்கமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.