பட்டாம்பியில் அவர்கள் வண்டியில் ஏறினார்கள். மொத்தத்தில் அவர்கள் ஏழு பேர் இருந்தார்கள்.
மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள். அனைவரும் குருவாயூரில் வழிபாட்டை முடித்துவிட்டு வருகிறார்கள் என்பதை அவர்களின் நெற்றியிலிருந்த சந்தனக் குறிகள் அழைத்து கூறின. அவர்களிடம் பார்க்கும்போதே விலை மதிப்புள்ளவை என்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் தோன்றக்கூடிய கொஞ்சம் சூட்கேஸ்களும் இருந்தன. பிறகு...
அவர்களின்... குறிப்பாக... பெண்களின் ஆடைகளும், நகைகளும்... மூத்த பெண்ணின் மற்றும் அவளின் மகள் என்று தோன்றக்கூடிய இளம்பெண்ணின் புடவையும் ரவிக்கையும் பொன்நிறத்தில் இருந்தன. விலை அதிகம் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் பட்டு. பிறகு... அவர்கள் அணிந்திருந்த தங்கம் மற்றும் வைரத்தாலான நகைகள்... கைக் கடிகாரங்கள்...
தாயும் மகளும் வெள்ளை நிறத்தில் இருந்தார்கள். மகள் தன் முடியைத் தோள்பகுதியில் புதிய நாகரீகத்திற் கேற்றபடி வெட்டியிருந்தாள்.
மூன்றாவது பெண்ணுக்கு இவர்களின் பகட்டு எதுவுமில்லை. அவளுக்கு இவர் களின் நிறமும் இல்லை. அவளும் மாலை யையும் வளையலையும் அணிந்திருந்தாள். ஆனால் மிகவும் கொஞ்சமாக மட்டும்...
அவளுடைய கைக் கடிகாரமோ ஸ்டீலால் செய்யப்பட்டதாக இருந்தது. ஜரிகை போட்ட ஒரு கைத்தறிப் புடவையை அவள் அணிந்திருந்தாள். அதுவோ சற்று பழைய தாக இருந்தது.
ஆண்களைப் பற்றிக் கூறவில்லையே! மூத்த ஆளுக்கு ஒரு... அறுபத்தைந்து வயதாவது இருக்கும். அதிக பருமனில்லை. நிறம் பிங்க் கலந்த வெளுப்பு. நல்ல உயரம். நல்ல ஸ்லாக் சட்டையையும் பேன்ட்டையும் அணிந்திருந்தார்.
நான் நினைத்தேன்... இந்த ஆள் வயதான பெண்ணின் கணவராக இருக்கும். முடியை "பாப்' செய்திருக்கும் அழகியின் தந்தை.
இனி இருப்பது... அழகியின் கணவர். முப்பது... முப்பத்தைந்து வயதிற்குமேல் இருக்காது. நிறம் மற்றவர்களுக்கு இருப்பதைப்போல அந்த அளவுக்கு சிறப் பாக இல்லை. எனினும், நல்ல பலசாலி. நல்ல உயரமும் இருந்தது.
வட்டக் கழுத்தைக்கொண்ட பனியனை யும் பேன்ட்டையும் இந்த ஆள் அணிந்திருந் தார். அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் ஸாலிட் கோல்டாலான ரோலக்ஸ்.
அவர் சுற்றிலும் பார்த்துவிட்டு, ஓரு வெற்றியாளரைப்போல கூறினார்:
"இங்க வேண்டிய அளவுக்கு இடமிருக்கு...''
கோயம்புத்தூரில் புறப்பட்டதிலிருந்து மங்களா புரம்வரை ஊர்ந்து ஊர்ந்து செல்லும் ஒரு பாஸஞ்சர் வண்டி அது. அதில் என் கம்பார்ட்மென்டில் ஒத்தப் பாலத்தில் ஏறிய, பார்க்கும்போதே மரியாதைக்குரிய மனிதரென்று தோன்றக்கூடிய, ஒரு நடுத்தர வயது கொண்ட மனிதர் மட்டுமே என்னைத் தவிர இருந்தார். அவர் வெளியே பார்த்தவாறு சாளரத்திற்கருகில் அமர்ந்திருந்தார்.
பட்டாம்பியை அடைவதுவரை அவர் என்னிடம் எதுவுமே பேசவில்லை. ஒருமுறை மட்டும் சற்று புன்னகைக்கச் செய்தார்.
வட்டக் கழுத்துள்ள பனியன் அணிந்த இளைஞர் ஒரு உடற்பயிற்சி செய்யும் மனிதர் செய்வதைப்போல தன் இரண்டு பிள்ளைகளையும்- அவர்களுக்கு ஒரு ஆறும், எட்டும் வயதிருக்கும்- எனக்கும் சாளரத்திற்கருகில் அமர்ந்திருந்த மரியாதைக்குரிய மனிதருக்கும் நடுவில் டெப்பாஸிட் செய்தார். பிறகு... அவரும் அமர்ந்தார்.
இவற்றையெல்லாம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த இளம்பெண் அப்போது கூறினாள்:
"ஓ... எவ்வளவு நல்ல குழந்தைங்க!''
அப்போது இளைஞர் கூறினார்:
"அதுல இந்த அளவுக்கு ஆச்சரியப்படுறதுக்கு என்ன இருக்கு? அவங்க என் குழந்தைகளாச்சே?''
தொடர்ந்து குழந்தைகளிடம் கேட்டார்:
"அப்படித்தானேடா பிள்ளைகளே?''
பிள்ளைகள் தலைகளை ஆட்டினார்கள். "ய...''
உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தது. இளம்பெண் வருத்தப்படுவதைப்போல நடித்தவாறு கூறினாள்:
"அவங்க எவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுட்டாங்க! இப்போ அவங்களுக்கு அவங்களோட டாடி மட்டும் போதும்.!''
பாட்டியும் தாத்தாவும் சிரித்தார்கள்.
ஜரிகை போட்ட பழைய புடவையை அணிந்திருந்த பெண் பெரிய ஒரு தமாஷை ரசிப்பதைப்போல குலுங்கிச் சிரித்தாள்.
இளம்பெண் பரிதாபப்படுகிற குரலில் கூறினாள்:
"ஆனா... அவர்களுக்கு பிஸ்கட் கொடுக்குறது நான் தானே? சாக்லேட் கொடுக்குறது நான்தானே?''
சாக்லேட் என்று கேட்டதும் குழந்தைகள் உரத்த குரலில் கூறினார்கள்:
"சாக்லேட் வேணும்... எங்களுக்கு காட்பரி சாக்லேட் வேணும்!''
இளைஞர் கூறினார்:
"தர்றேன் தர்றேன். ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது.''
பாட்டி கூறினாள்:
"சாக்லேட் சாப்பிட்டு அதிக நேரமொண்ணும் ஆகலையே? இப்படி சாப்பிட்டா..?''
இளைஞர் கூறினார்:
"அது பரவாயில்லை. இதெல்லாம் அவங்களுக்கு நல்லா பழகிடுச்சு...''
பேக்கின் பக்கவாட்டு பாக்கெட்டைத் திறந்து, அவர் பெரிய சாக்லேட் பாராக எடுத்து ஆளுக் கொன்றைக் கையில் கொடுத்தார்.
குழந்தைகள் சாக்லேட்டில் மூழ்கியிருந்தபோது, அவர்களின் தாய் ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினாள்:
"எவ்வளவு வேகமா நாள் கடந்துசெல்லுது! ஷார்ஜா
விலிருந்து நேத்து வந்ததைப்போல தோணுது.''
யாரும் எதுவும் கூறவில்லை. அப்போது அவள் தனக்குத் தானே கூறிக் கொள்வதைப்போல தொடர்ந்து கூறினாள்:
"குருவாயூருக்குப் போகாமலிருக்க முடியாது. ஆனா... அதைப்போலவா இருக்கு இந்த உறவினர் களோட வீடுங்க? போனா மட்டும் போதாது... ஏதாவது கொடுக்கவும் வேணும். ஆனா... என்ன கொடுத்தாலும் திருப்தி உண்டாகுமா? அதுவுமில்ல. வெறுப்பா இருக்கு. சில நேரங்கள்ல நினைப்பேன்... வளைகுடாவிலயே இனி இருக்கக்கூடிய காலம் முழுசும்...''
அவளுடைய தாய் அப்போது "சொல்லாதே' என்று தலையை ஆட்டிக் காட்டினாள். தொடர்ந்து என்னை ஓரக் கண்களால் பார்க்கவும் செய்தாள். இவற்றையெல்லாம் கேட்டு, நான் என்ன நினைப்பேனென்று அவள் சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், நான் அப்போது குறிப்பாக எதைப் பற்றியும் சிந்திக்காமல், ஜரிகைபோட்ட புடவையை அணிந்திருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
அவளின் முகம் இருள்வதை நான் பார்த்தேன். அதற்குப் பிறகும் இளம்பெண் வெறுப்புடன் கூறிக்கொண்டிருந்தாள்.
"இது ஒரு நாசம்பிடிச்ச வண்டி. எல்லா ஸ்டேஷன் கள்லயும் நின்னு... எல்லாரையும் ஏத்திக்கிட்டு... இனி எப்போ தலசேரிக்குப் போய் சேரும்னே தெரியல. பிறகு... ஏ.ஸி. கம்பார்ட்மென்ட் இல்ல. முதல் வகுப்புகூட இல்ல. எல்லாம் ஒரே மாதிரி. அழுக்கு... நாத்தம்...''
இளைஞர் அப்போது கூறினார்:
"இந்த வண்டி இப்படித்தான்னு நான் ஆரம்பத் திலேயே சொன்னேன்ல..? அப்போ நீதானே...''
இளம்பெண் கூறினாள்:
"சீக்கிரம் போய்ச் சேருமேன்னு நினைச்சேன். ஏறியபிறகுதானே...''
இளைஞர் அப்போது கூறினார்:
"போகட்டும். பரவாயில்ல. சில மணி நேரம் சம்பந் தப்பட்ட விஷயம்தானே? இனி எந்த சமயத்திலும்...''
ஆனால், இதனாலெல்லாம் அந்த ஆளின் மனைவியின் வெறுப்பு தீரவில்லை. யாரும் எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தார்கள். மனைவியின் தந்தையின் தலை அவருடைய நெஞ்சில் இருந்தது. திறந்திருந்த வாயின் ஓரத்திலிருந்து எச்சில் வழிந்துகொண்டிருந்தது. வண்டியின் குதிப்பிற்கேற்றபடி தலை அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தது.
குழந்தைகள் திடீரென தந்தையிடம் கூறினார்கள்:
"நாங்க மேலே ஏறணும்...''
சிறிது நேரம் கேள்வி கேட்பதைப்போல அவர் களைப் பார்த்தவாறு இருந்துவிட்டு, அவர் அவர் களை லக்கேஜ் வைக்கக்கூடிய பலகையில் தூக்கி யெடுத்து அமரவைத்தார். தொடர்ந்து அவர்களின் கால் களிலிருந்து செருப்புகளைக் கழற்ற முற்பட்டபோது, குழந்தைகள் ஒரே குரலில் கூறினார்கள்:
"எங்களுக்கு செருப்பு வேணும்.''
அவர் அப்போது கூறினார்:
"சரி சரி...''
மேலே இருக்க முடிந்ததில் குழந்தைகளுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது. அவர்கள் பொருட்கள் வைக்கப்படும் லக்கேஜ் பலகையின் விளிம்பில் அமர்ந்து, கால்களை ஆட்டி விளையாட ஆரம்பித்தார்கள்.
வட்டத்தில்...
நீளத்தில்...
குறுக்காக...
அப்போது... உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்... குழந்தைகளைவிட அதிக சந்தோஷத் தையும், பெருமையையும் அடைந்தது அந்த மூன்று பெண்கள்தான். எந்த அளவுக்கு அனாயாசமாக இவர்கள்.... குழந்தைகளின் செருப்புகள்- அவை மிகவும் விலைமதிப்பு கொண்டவை-
இடையே கால்களிலிருந்து கழன்று கீழே விழுந்தன.
அப்போதெல்லாம் அவர்களின் தந்தை சிரித்துக் கொண்டே அவற்றையெடுத்து மேலே கொடுத்தார்.
செருப்புகள் சில நேரங்களில் ஒத்தப்பாலத்தில் ஏறிய மரியாதைக்குரிய பயணியின் மடியில் விழுந்தன. செருப்பு மட்டுமல்ல... மண்ணும் தூசியும்கூட விழுந்தன. ஆரம்பத்தில் அவர் செயலற்ற நிலையில்... எதையும் பார்க்கவில்லை; கேட்கவில்லை என்பதைப்போல இருந்தார். ஆனால் பிறகு... ஏதோவொரு சபிக்கப்பட்ட நிமிடத்தில் அது நடந்தது.
"நான்ஸென்ஸ்..!'' என்று கூறியவாறு அவர் செருப்பை எடுத்து தூரத்தில் எறிந்தார். அப்போது குழந்தைகளின் தந்தை, "யூ ப்ளடி பாஸ்டேர்ட்...'' என்று கூறியவாறு வேகமாக எழுந்தார். பயம் காரணமாக என் கண்கள் சுருங்கிவிட்டன.
அடி விழுந்துவிட்டதென்று நினைத்தேன். அதுவரை நெஞ்சில் தலையைத் தாழ்த்தியவாறு தூங்கிக் கொண்டிருந்த வயதான மனிதர் அப்போது அதிர்ந்து எழுந்து பதைபதைப்புடன், "என்ன... என்ன..?'' என்று கேட்டார். தன் மருமகனை யாராவது ஏதாவது செய்துவிட்டார்களோ என்ற பயம் அவருக்கு. தனக் குத் தெரிந்திருக்கும் ஆங்கிலத்தின் அனைத்து திட்டும் சொற்களையும் கெட்ட வார்த்தைகளையும் அவர் ஒத்தப்பாலத்தில் ஏறிய அந்த பயணியின் தலையில் மழையென பொழிந்துகொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவர் மௌனமாக அமர்ந்திருந்தார்.
மழையின் சக்தி சற்று குறைந்திருக்கிறதென்று தோன்றியபோது நான் கூறினேன்:
"இருந்தாலும் நீங்க அவரை "பாஸ்டேர்ட்'னு சொன்னது சரியில்ல.''
அடி வாங்கிய பாம்பினைப்போல இளைஞர் கோபத்துடன் திரும்பி நின்றார்.
"சொன்னா..?''
எது எப்படியோ... தொடங்கியாகிவிட்டது அல்லவா? இனி முடித்துவிடுவோம் என்று நினைத்து நான் கூறினேன்:
"அந்த அளவுக்கு அவர் என்ன தவறு செஞ்சிட் டாரு? செருப்பை எடுத்து எறிஞ்சதா? எவ்வளவு நேரமாச்சு அவர் இந்த வெறுப்பை உண்டாக்கும் செயலைப் பொறுத்துக்க ஆரம்பிச்சு..!''
அப்போது வயதானவர் கூறினார்:
"அவங்க குழந்தைங்கதானே? குழந்தைகள்னா சில வேளைகள்ல...''
நான் எதுவும் கூறவில்லை. கூறிப் பயனில்லை யென்று தோன்றியது. ஏதோ ஒரு ஸ்டேஷன் நெருங்கிக்கொண்டிருந்தது.
ஒத்தப்பாலத்தில் ஏறிய பயணி தன் ப்ரீஃப்கேஸை எடுத்துக்கொண்டு கதவைநோக்கி நடந்தார். என்னைக் கடந்து செல்லும்போது நன்றிக்கு அடையாளமாக அவருடைய முகத்தில் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது.
பிறகு... நானும் அங்கு அமரவில்லை. அந்த கம்பார்ட் மென்டில் வேறெங்காவது ஒரு இருக்கை இருக்குமா என்று தேடியவாறு நான் காரிடாரின் வழியாக நடந்தேன்.