ந்த வீட்டை நான் வாடகைக்கு எடுத்ததற்கு முக்கிய காரணம்... தனிமையின்மீது எனக்கிருக்கும் ஈடுபாடு. எல்லா நாட்களிலும் எல்லா நேரத்திலும் மற்ற மனிதப் பிறவிகளுடன் தொடர்புவைத்துக்கொண்டு, அவர் களுடன் தோளை உரசிக்கொண்டு வாழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை.

முன்பு நான் வசித்த வீட்டிற்கு படிகளோ மேல் மாடியோ கிடையாது. நான் எழுதும்போதும், எழுது வதற்கு மத்தியில் ஓய்வெடுப்பதற்காகப் படுக்கையில் மல்லாந்து படுத்திருக்கும் வேளையிலும் யாராவது எனக் கருகில் வந்து உரத்த குரலில் கேட்பதுண்டு: "நாங்க தொல்லை குடுக்கறமா?''

பிறகு... அவர்கள் விடைபெறுவது நான்கைந்து மணி நேரங்களுக்குப் பின்னால்தான். ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் ஓரு பெண் கால்தடுமாறி விழுந்து அவளுடைய கர்ப்பம் கலையும்போது, முழுமையடையாத கருவைப் பார்த்து நீண்ட பெருமூச்சு விடுவதைப்போல முழுமையாகாத கதையையோ கவிதையையோ பார்த்து நான் பெருமூச்சு விடுவேன். என் படைப்புகளை எதையாவது எழுதி முழுமைசெய்ய எனக்குத் தெரியாது.

இந்த வீட்டில் எனக்குத் தனிமை கிடைத்தது. காரணம்-

Advertisment

நான் மேலே... மேஜைக்கருகில் அமர்ந்திருக்கிறேன் என்ற விஷயம்கூட கீழே வந்திருக்கும் நபர்களுக்குத் தெரியாது. இது என்னுடைய ரகசிய இடம். நான் மேஜையைவிட்டு குளியலறைக்குள் சென்று முகத்தைக் கழுவும்போதும் படுக்கையில் சென்று விழும்போதும் கீழே இருப்பவர்களுக்கு என்னுடைய அசைவுகளின் சத்தத்தைக் கேட்க இயலாது. என் தலைக்குள்ளிருக்கும் சிந்தனையின் எந்திரத்தனமான சலனங்களுக்கும் சத்தத்தை எழுப்பக்கூடிய சக்தியில்லை. சத்தத்தை எழுப்பக்கூடிய ஆற்றல் என் மூளைக்கு இருந்திருந்தால், கீழே இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள்: "இங்க... பக்கத்துல... ஏதாவது தொழிற்சாலை இருக்கா? எந்திரங்களோட கர்ஜனை கேட்குதே?''

மேலே உள்ள மாடி என்னுடைய சொந்த சாம்ராஜ் யம். அங்கு வேறு யாரும் உள்ளே வரமுடியாது. படிகள் முடிவடையும் இடத்தில் நான் ஒரு அறிவிப்புப் பலகை யைத் தொங்கவிட்டிருக்கிறேன். "நுழைய அனுமதி இல்லை' என்ற வார்த்தைகள் அதில் வெண்ணிற சாயத்தில் எழுதப்பட்டிருக்கும்.

வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் அலைந்து திரியும் பூனைகள் மட்டும் அந்த அறிவிப்பைமீறி ஏறி வருவதுண்டு. பூனைகளுக்கு ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாதே! அதனால் நான் அவற்றைத் திட்டுவதில்லை.

Advertisment

இந்த வளாகத்தில் மூன்று பூனைகள் இருக்கின்றன. ஒருத்தியின் நிறம் முழு கருப்பு. மற்றொருத்தி... நரியின் உருவத்தையும் நிறத்தையும் கொண்டவள். மூன்றாவது பூனை ஆண். அவனுடையது மங்கலான காவி நிறம்.

சந்நியாசி பூனையென்று அவனை நான் அழைக்கிறேன்.

ஆனால், அவன் லௌகீக சுகங்களைத் தேடிக்கொண்டி ருப்பவன்.

மற்ற இரு பூனைகளும் ஆறு மாதங்கள் ஆகும்போது, படிக்கட்டுகளுக்குக் கீழே பிரசவிப்பதுண்டு. அந்த குட்டிகளின் தந்தை சந்நியாசி பூனையாகத்தான் இருக்க வேண்டும். காரணம்- குட்டிகளைப் பார்ப்பதற்காக நான் படிகளில் இறங்கி குனியும்போது, அமைதியற்ற கண்கள் என் கண்களில் பட, அவன் தரையில் நின்று கொண்டிருப்பான். நான் எந்த சமயத்திலும் அந்த பூனைக் குட்டிகளைத் தொந்தரவு செய்யமாட்டேன் என்று அந்த பூனைக்கும் அவனுடைய மனைவிகளுக்கும் தெரிவிப் பதற்கு என் பாசம் ஊறிய பார்வையாலும் முடியவில்லை.

அந்தப் பூனைக்கு பெண்களின்மீது நம்பிக்கை இல்லையென்று நான் சந்தேகப்படுகிறேன். தன்னுடைய இளம்வயதில் அந்த பூனையை ஒரு மனிதப் பெண் தொந்தரவு செய்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்... இந்த அளவுக்கு வெளிப்படையான ஒரு வர்க்க வெறுப்பை அதன் கண்களிலும் உதட்டை உயர்த்தி வெளிக்காட்டும் சிறிய அரிசிப் பற்களிலும் நான் பார்த்திருக்கமாட்டேன்.

மேலே இருக்கக்கூடிய மாடியில்... என் சாம்ராஜ்யத்தில் மனித உறவைத் தவிர, மற்ற அனைத்து தேவைப்படும் பொருட்களும் இருக்கும். முன்பு எப்போதோ நான் இரண்டாவது மகனுக்குப் பரிசாகக் கொடுத்த ரெஃப்ரிஜிரேட்டரை அவன் ஆயிரம் ரூபாய்க்கு பக்கத்து வீட்டுக்காரனுக்கு விற்கப்போகிறான் என்பதை அவனுடைய சமையல்காரன் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தான். அப்போது அவனை அழைத்து ஆயிரம் கொடுத்து அதை நான் திரும்பப்பெற்றேன். அந்த ஃப்ரிட்ஜில் பருகுவதற்காக மூன்று புட்டி நீரையும், ஆரஞ்சையும், பாதாம், முந்திரிப் பருப்பு ஆகியவை ஒட்டப்பட்டிருக்கும் சாக்லேட்களையும், அல்வா துண்டுகளையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்.

ss

இடையே அதில் பழுத்த மாம்பழமும் நெல்லிக் காயும் இருக்கும். ஒன்றோ இரண்டோ நாட்களுக்கு சமையல்காரியும் என் கணவரும் தாயும் என்னை முற்றிலுமாக மறந்துவிட்டாலும், நான் பட்டினி கிடந்து சாகமாட்டேன். மின்சாரம் நின்றால், நான் வாசலில் சாய்வு நாற்காலியில் படுக்கலாம். சாளரங்களைத் திறந்தால் வாசல் கடல் பரப்பில் மிதந்து செல்லும் ஒரு படகாக மாறிவிடும்.

சாளரத்திற்குப் பின்னால் என்னால் பார்க்கவியலாத ஒரு இடத்தில் வண்டு கூடுகட்டி வைத்திருக்கும் விஷயம் எனக்குத் தெரியும். காரணம்- இடையே கோபித்துக் கொண்டு, ஒரு இரைச்சலுடன் அவன் இங்குவந்து என்னைச்சுற்றிப் பறப்பதுண்டு. நான் அதை கவனிக்காவிட்டால், அது என்னை குத்தி வேதனைப்பட வைக்காது என்று நான் நம்புகிறேன்.

அதனால், அதை கவனிக்கவில்லை என்பதைப்போல காட்டிக்கொண்டு நான் என்னுடைய வாசிப்பையோ பகல் கனவு காண்பதையோ தொடர்வேன். அங்கு மிங்குமாக பறந்துகொண்டும் கோபத்தைக் காட்டிக் கொண்டும் பலமுறை சுவரில் சென்று முட்டியும், தடுமாறிப்போய் இறுதியில் அது தரையில் விழும். இவையனைத்தும் சாதாரண நிகழ்வுகள் மட்டுமே என்றாகிவிட்டன.

வாசலில் அமர்ந்திருக்கும் வேளையில் அருகிலிருக்கும் டாக்டரின் க்ளினிக்கிற்கு வந்திருக்கும் குழந்தைகளின் அழுகைச் சத்தத்தைக் கேட்கக்கூடிய சூழல் எனக்கு உண்டாகும். நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற குழந்தைகள் மருத்துவர் அவர். குழந்தைகளின் அழுகை சத்தத்தைக்கேட்டு சில நேரங்களில் நான் சாளரத்தின் வழியாக வெளியே பார்ப்பேன்.

அப்போது க்ளினிக்கிற்கு வெளியே... வாசலில் தாங்கள் உள்ளே செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தாய்களும் தந்தைகளும் என்னையும் பார்ப்பார்கள்.

குழந்தைகளின் தாய்மார்கள் பல வண்ணங்களைக் கொண்ட புடவைகளை அணிந்திருப்பார்கள். சிலருடைய கூந்தலில் பூச்சரங்கள் இருக்கும். அதைப் பார்க்கும் போது எனக்கு நிம்மதியாக இருக்கும். அவர்களின் குழந்தை களுக்கு பெரிய அளவில் காய்ச்சல் இல்லையென்று நினைத்துக் கொள்வேன். பெரிய அளவில் நோயின் பாதிப்பிருந்தால், எந்தவொரு தாயும் புதிய ஆடைகளை அணிவதோ கூந்தலில் முல்லைச் சரத்தைச் சூடுவதோ நடக்காதென்று எனக்குத் தெரியும்.

மேலே யாருக்கும் தெரியாமல் இருக்கும்போதும் எனக்கு தனிமையென்பது ஓரு கவலையைத் தரும் விஷய மாகத் தோன்றவில்லை. வாசலிலுள்ள பெரிய சாளரத் திற்கு மேலே, முன்பு சாதாரணமாகப் பார்த்திருந்த ஒன்பது வண்ணக் கண்ணாடிகள் இருந்தன. எட்டு கண்ணாடிகள் பச்சை நிறம். ஒன்று சிவப்பு. அவற்றின் வழியாக நண்பகல் வேளையில் சூரியனின் கீற்றுகள் உள்ளே வரும். அந்த நேரத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் என் கைத்தண்டின்மீது பச்சை வெளிச்சம் வந்து விழும்.

நேற்று நான் வாசலில் தனியாக அமர்ந்திருந்த சமயத்தில் என் படுக்கை அறையிலிருந்து யாரோ ஒரு கனமான பொருளை மெதுவாக நகர்த்தும் சத்தம் காதில் விழுந்தது.

பேரமைதியைப் பெரிய பனிக்கட்டிகளாக நான் மனதில் நினைப்பதுண்டு. பிணத்தைக் குளிர்ச்சியில் வைப்பதற்காக உறவினர்கள் வரவழைக்கும் பனிக் கட்டிகள்... அவற்றை ஒரு கட்டிலின் அளவில் அடுக்கி வைத்து, அந்த கட்டிலின் மீதுதான் மரணமடைந்த நபரை படுக்கவைப்பார்கள். தூரத்து நகரங்களிலிருந்து பிள்ளைகள் வந்து சேர்ந்தபிறகுதான் பிணத்தை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் தயாராவார்கள். பனிக்கட்டி இல்லாமல் வெறும் தரையில் படுக்கவைத்தால், நான்கைந்து மணி நேரங்கள் தாண்டும்போது பிணம் நாற ஆரம்பிக்கும். எலி இறந்து உண்டாக்கக்கூடிய நாற்றம்தான் மனிதப் பிணத்தின் நாற்றமும். ‌

"யாரங்க?'' நான் சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டே உரத்த குரலில் கேட்டேன்.

"இது... நான்தான்...'' ஒரு ஆண் குரல் கூறியது.

"நான்னு சொன்னா... யாரு? உங்களுக்கு பேரு இல்லியா?'' நான் பதைபதைப்புடன் கேட்டேன். என் சரீரத்தில் அணிந்திருக்கக்கூடிய நகைகளை அபகரிப் பதற்காக அந்த ஆள் சத்தமே உண்டாக்காமல் படிகளில் ஏறி வந்திருக்க வேண்டுமென்று பயந்தேன். நான் படுக்கையறைக்குள் நுழைந்தேன்.

வந்திருந்த ஆள் காக்கி சீருடை அணிந்திருந்தான். தோற்றத்தில் ஒரு பட்டாளக்காரனைப்போல இருந்தான். முகத்தில் கருத்த கண்ணாடி அணிந்திருந்தான்.

"நான் இந்த டி.வியை இங்க கொண்டுவந்து வைக்கறதுக்காக வந்தேன்.'' அவன் கூறினான்.

படுக்கையறையிலிருந்த ஒரே மேஜையின்மீது ஒரு பெரிய டி.வி. செட்டை நான் பார்த்தேன்.

"யார் இந்த டி.வி. செட்டை ஆர்டர் செய்தது? எங்களுக்கு வேறொரு டி.வி. இருக்குதே?'' நான் கூறினேன்.

அந்த நிமிடத்தில் நான் ஆச்சரியப்பட்டேன்- இந்த மனிதன் யாருடைய உதவியுமே இல்லாமல் இந்த அளவிற் குப் பெரிய டி.வியை எப்படி மேலே கொண்டுவந்தான்? "மகன் ஃபோன் செய்து சொன்னார்.'' அந்த ஆள் கூறினான்.

எந்த மகன் என்று நான் கேட்டிருக்கவேண்டும். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்களே! பெரிய நகரங்களில்... செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். தன் தாய்க்கு இந்த அளவுக்கு அதிக விலைகொண்ட ஒரு பரிசை வழங்கியது அவர்களில் யாராக இருக்கும்?

"இங்க கையெழுத்து போடணும்.'' அவன் ஒரு தாளை நீட்டியவாறு கூறினான். நான் கையெழுத்தைப் போட்டுக்கொடுக்க, திரும்பிக்கூட பார்க்காமல் வந்திருந்த ஆள் சென்றான். படிகளில் அவனுடைய காலடிகள் உண்டாக்கக் கூடிய சத்தத்தைக்கூட நான் கேட்கவில்லை. காற்றின் வேகத்தில் அவன் சென்றுவிட்டான். அவனை அழைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் கையில் பத்து ரூபாய் கொடுத்திருக்கலாமென்று நான் நினைத்தேன். என் நன்றியில்லா குணம் அவனை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கலாம். நான் டி.வியை செயல்பட வைத்தபோது, திரையில் குளக் கோழிகளின் உருவங்கள் தோன்றின.

புதர்களுக்கு மத்தியிலிருந்து குளக் கோழிகள் மெதுவாக... மெதுவாக நடந்துவந்தன. நான் எங்களின் பூர்வீக "நாலப்பாட்டெ' இல்லத்தின் குளத்தை நினைத் தேன்.

கருங்காலி மரங்களையும், வாகையையும், மஞ்சள் அரளிப் பூக்களையும், ஆரஞ்சு வண்ணத்திலிருந்த தும்பிகளையும், நீரை முத்தமிட்டுப் பறந்துயரும் மீன்கொத்திகளையும் நான் டி.வி. திரையில் பார்த்தேன்.

காலத்தின் ஓட்டத்தில் பாதுகாத்து வைத்த ஒரு அழகான காட்சி... திடீரென என் அம்மாவின் தாயாரின் தளர்வடைந்த முகம் திரையில் தெரிந்தது. 1953-ல் இறந்து விட்ட பாட்டியா?

"பாட்டி?'' நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.

பாட்டி தலையை ஆட்டினாள். நான் கேட்டது அவளின் காதில் விழுந்துவிட்டதென்று எனக்குத் தோன்றியது.

பாட்டியாக இருக்க வாய்ப்பில்லை. நான் எனக்குள் கூறிக்கொண்டேன்.

பாட்டியின் முகச் சாயலில் இருக்கக்கூடிய ஒரு நடிகையை இயக்குநர் கண்டு பிடித்திருக்கவேண்டும். என் இளமைக்கால நினைவுகளைத் திரைப்படமாக்க சிலர் நினைத்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். பலரும் இங்குவந்து அதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் செய்தார்கள். எனக்கே தெரியாமல் அதை டி.வி. சீரியலாக தூர்தர்ஷன்காரர்கள் மாற்றியிருக்கலாம். இது என்னவொரு ஆச்சரியமான சம்பவம்!

நான் உதட்டில் வந்த சிரிப்பை மறைக்காமலே திரையின் பக்கம் திரும்பினேன். பாட்டியின் முகச் சாயலைக் கொண்டிருந்த பெண்ணின் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. அவள் கூறும் வார்த்தைகளை என்னால் கேட்க முடியவில்லை. இந்த டி.வி. செட்டுக்கு கேடு உண்டாகிவிட்டதோ? உடனடியாக என் மகனிடம் தொலைபேசியில் இதற்கு உண்டாகியிருக்கும் கோளாறு குறித்துத் தெரிவிப்பதற்கு விரும்பினேன். எனக்கு இந்த செட் முற்றிலும் பழக்கமற்றதாக இருந்தது. எனினும், நான் அதன் பல இடங்களிலும் விரலால் அழுத்தினேன்.

பேசாத டி.வி. இருந்து என்ன பயன்? உச்சி வெயில் டி.வி. திரையில் தெரிந்தது. என் பாட்டி குளித்துவிட்டு வந்துகொண்டிருக்கிறாள்.

என் விரல் தொடக்கூடாத ஏதோ பொத்தானை அழுத்தியது காரணமாக இருக்கவேண்டும். திரையில் எதுவுமே இல்லை.

பிறகு, எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தும், எந்தவொரு காட்சியும் திரையில் தெரியவில்லை. நான் வேகமாக படிகளில் இறங்கி, தாஸ் அத்தானும் அம்மாவும் இருந்த சாப்பிடும் அறைக்குச் சென்றேன்.

"இப்போ கொண்டுவந்த டி.வி. செட் பழுதாகிட்டது. உடனடியா அதை சரிபண்ணி தருமாறு தொலைபேசி மூலம் சொல்லணும்.'' நான் கூறினேன்.

"எந்த டி.வி. செட்?'' தாஸ் அத்தான் கேட்டார்.

"ஒரு ஆள் பெரிய ஒரு டி.வியை மேலே கொண்டு வந்ததை நீங்க யாரும் பார்க்கலையா? காக்கி சீருடை அணிஞ்ச ஒரு இளைஞன்... அவனுக்கு யார் கதவைத் திறந்துவிட்டது?'' நான் கேட்டேன்.

பணியாட்களுக்கும் என் கேள்வி வியப்பாகத் தோன்றியது.

"நாங்க யாரும் பார்க்காம ஒரு ஆளும் படிகளில் ஏறமுடியாது.'' அவர் கூறினார்.

மீண்டும் மேலே சென்று அந்த டி.வி. செட்டை சோதித் துப் பார்ப்பதற்கு எனக்கு கூச்சமாக இருந்தது. அவையனைத்தும் நான் கனவு கண்டவையாக இருக்குமோ? கனவென்பதைப் புரிந்துகொண்ட தருணத்தை நீட்டி வைக்கவாவது என்னால் முடிகிறது என்பதற்காக நான் சந்தோஷப்பட்டேன்.