லசேரியிலிருந்து நான் குறட்டைவிட்டு உறங்கியிருக்கவேண்டும். அந்த பென்ஸ் காரின் பின் இருக்கைக்கு ஒரு மெத்தையின் சுகம் இருந்தது.

அதிர்ச்சியுடன் நான் கண்விழித்தபோது, ஒரு பங்களாவின் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் கார் நின்று கொண்டிருந்தது.

நாய்களின் குரைக்கும் சத்தம் கேட்டது. வாகனம் நிறுத்தப்படும் இடத்திலிருந்த மின் விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் இரண்டு உயரமான அல்ஸேஷ்யன் நாய்களை நான் பார்த்தேன்.

"கடிக்குமோ?'' நான் நண்பனிடம் கேட்டேன்.

Advertisment

"விருந்தாளிகளைக் கடிக்காது''. சிரித்துக் கொண்டே நண்பன் காரின் கதவைத் திறந்தான்.

நாய் என்னை முகர்ந்து பார்த்தது. அவ்வளவு தான்.

விருந்தாளிகளுக்கு என விசேஷமான வாசனை எதுவும் இருக்கிறதோ? திடீரென புதிய விளக்குகள் எரிந்தன. பங்களாவின் நிழல்களிலிருந்து ஒரு வேலைக் காரன் தோன்றினான். ஓட்டுநர் கதவைத் திறந்தார்.

Advertisment

வேலைக்காரன் பெட்டிகளை எடுத்தான்.

முனகியவாறு வந்து சேர்ந்த எஸ்டேட்டின் காற்று என் பருத்திச் சட்டைக்குள் குளிர்ந்த நகங்களைப் பதித்தபோது, நான் நடுங்கியவாறு நின்றுகொண்டிருந்தேன்.

"ஸ்வெட்டர் வேணுமா?'' நண்பன் கேட்டான்.

"வேண்டாம்.''

"வா... இந்த குளிரில் நிற்கவேண்டாம்.''

பங்களாவிற்குள் நுழைவதற்குமுன்பு நான் சுற்றிலும் பார்த்தேன். வாகனம் நிறுத்தப்படும் இடத்தைத் தாண்டி, வாசலில் அழகான நீரைப் பொழியச்செய்யும் இயந்திரம்...

வெளிச்சம் பரவியிருக்கும் எல்லைவரை மலர்ந்து நின்று கொண்டிருக்கும் ஜெரானியா வும்... டாலியாவும்.... க்ளாடியோலியும். ஒரு பகுதியில் உருவாக்கியிருந்த மலைச் சரிவு... அதை யொட்டி இருந்த ஒரு அவுட் ஹவுஸ்...

பங்களாவின் உட்பகுதி ஒரு இந்தி திரைப் படத்திற்கான செட்டை வெல்லும் வகையில் இருந்தது.

சரவிளக்குகள் பல வகைகள்... பல நிறங்கள்... ஸலார்ஜங்க் மியூஸியம் என் ஞாபகத்தில் வந்தது.

விலை மதிப்புள்ள ஃபர்னிச்சர்கள்... அவற்றின் மீதிருந்த மென்மையான துணியின் வண்ணத்தை யும், தரையில் மிதித்தால் பதியக்கூடிய விரிப்பின் வண்ணத்தையும் தேர்வுசெய்த மனிதன், நிறத் தைப் பற்றியும் அழகைப் பற்றியும் உள்ள அறிவியலைக் கற்றவனாக இருக்கவேண்டுமென தோன்றியது.

ss

பிரகாசமான ரோஸ் உட் புத்தக அடுக்குகள்.. காவியங்களிலிருந்து இர்விங்வேலஸின் "ஆர்டாக் மென்ட்' வரை இருக்கக்கூடிய நூல்கள்...

அறையின் ஒரு மூலையில் மூன்றடி உயரத்திலிருந்த தியானத்திலிருக்கும் புத்தர்... இன்னொரு மூலையிலிருந்த மேஜையில் வில்லுடன் இருக்கும் வில்யம் டெல்லின் வெண்கலச் சிலை...

இவற்றையெல்லாம்விட என்னை ஈர்த்தது... சுவரின் பாதி அளவிற்கு கையால் வரையப்பட்டிருந்த ஒரு எண்ணெய் சாய ஓவியம்!

ஒரு குதிரையின் ஓவியம்... கருத்த குதிரை...

அதன் ஒவ்வொரு சதையிலும் ஓவியரின் தூரிகை, பலத்தை ஒன்று சேர்த்துத் திரட்டி வரைந்திருந்தது.

கூர்மையான கண்கள்... காற்றில் பறக்கும் சிறிய ரோமங்கள்.... ஒரு முன்னங்கால் அமைதியற்ற நிலையின் சின்னத்தைப்போல சற்று உயர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. கீழே... புல் கொடிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. எந்த நிமிடத்திலும் ஓவியத்தின் சட்டகத்தைவிட்டு குதிரை குதித்துப் பாயலாம்.

நான் குதிரையைக் கூர்ந்து பார்த்தவாறு நின்று கொண்டிருந்தபோது, நண்பன் கூறினான்.

"இங்கு மிகவும் அரிதாகவே ஆட்கள் வருவார்கள். அவர்கள் அனைவரையும் இந்த குதிரை கவர்ந்து ஈர்க்கும்.''

"உயிருள்ள குதிரை...'' நான் முணுமுணுத்தேன்.

"மகாராணியின் குதிரை...''

"மகாராணியா?''

"அவற்றையெல்லாம் பிறகு கூறுகிறேன். நாம் ஏதாவது சாப்பிட வேண்டாமா? நண்பன் கேட்டான்.

நான் கடிகாரத்தைப் பார்த்தேன். ஒன்றரை...

"இந்த நேரம் கெட்ட நேரத்திலா?''

"ஏதாவது...''

நாங்கள் சாப்பிடும் அறைக்குள் சென்றோம்.

இன்னொரு மாய உலகம்... அங்கு பார்த்த "கட் க்ளாஸ்' அரசர்களின் சாப்பாட்டு மேஜைகளுக்கு அழகு சேர்ப்பதாக இருந்தன. அங்கிருந்த தட்டுகளும் குவளைகளும் ஜப்பானிய பாணியில்...இல்லாவிட்டால்... ஃப்ரெஞ்ச்.. கோவில் சிலைகள் அளவிற்குப் பழமையானவை... வெட்டக்கூடிய கத்திகள் அனைத்தும் தனி வெள்ளியில் இருந்தன.

இந்த குளிர்ந்த வேளையிலும் ஆவி பறக்கக்கூடிய பலவிதமான உணவு வகைகள் மேஜையின்மீது வைக்கப்பட்டிருந்தன. பார்த்தால் மட்டுமே போதும்... வயிறு நிறைந்துவிடும்.

நான் ஒரு ரொட்டித் துண்டை ஜாமில் புரட்டி சாப்பிட்டேன்.

படுக்கையறைக்குள் என்னை அழைத்துச் சென்றபோது, நண்பன் கூறினான்:

"அதிகாலையில் நான் பெங்களூருக்குச் செல்கிறேன். மூன்று நாட்கள் கடந்தபிறகுதான் திரும்பி வருவேன். என் அம்பாஸிடரும் ஓட்டுநரும் இருப்பது இங்கேயேதான். போரடிப்பது மாதிரி இருந்தால், மெர்க்காராவிற்குப் போ. இங்கிருந்து பதினெட்டு மைல்... ஓ...! மெர்க்காராவைப் பார்ப்பதற்காக வரலையே? கதை எழுதுவதற்கு அல்லவா? சாமுவேல் நல்ல உணவு தருவான். பிறகு... என் பாரில் அனைத்தும் இருக்கிறது.''

மென்மையான தலையணையில் முகத்தை வைத்தவாறு வெண்ணிறப் போர்வைக்கும் கனமான கம்பளிக்கும் அடியில் நான் படுத்தபிறகே நண்பன் இடையிலிருந்த கதவை அடைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

எனக்கு உறக்கம் வரவில்லை.

ஒரு வார காலம் ஒரு திரைப்படத்திற்கான கதையை எழுதுவதற்கு, ஆரவாரமும் தொலைபேசி தொல்லையும் இல்லாத ஒரு இடத்தில் இருக்க வேண்டுமென நினைத்தபோது, நண்பன் கூறினான்:

"என் எஸ்டேட் பங்களாவிற்கு வா. ஈ கூட நுழையாத இடம்...''

ஈ அல்ல.... சாதாரண மனிதர்கள்கூட உள்ளே நுழையத் தயங்கக்கூடிய அளவிற்கு பணச் செழிப்பு இந்த கட்டடத்தில் இருக்குமென நான் நினைக்கவில்லை.

நான் படுக்கையில் புரண்டேன். கதையைப் பற்றி சிந்தித்தவாறு படுத்திருந்தேன்.

கதை வளர்ந்தது. அது என் நண்பனின் கதையாக மாறியது.

கடுமையான உழைப்பாளி.

தைரியசாலி.

தீர்மானங்களை எடுப்பதில் கில்லாடி. பிறப் பதற்கு முன்பே, தலையில் நல்ல குணங்களையும் கெட்ட குணங்களையும் எழுதி வைக்கக்கூடிய... மனிதர்களுக்கு அப்பாலிருக்கும் ஆற்றல் இருக்கும் பட்சம், நல்ல குணங்களை மட்டுமே தலையில் எழுதி வாங்கிக் கொண்ட நல்ல மனிதன்.

சிந்தனைகளில் முற்போக்கு எண்ணங்களுடன் இருக்கும் மனிதன்... அன்றாட வாழ்க்கையில் தான் சம்பளம் அளிக்கும் தொழிலாளிகளைவிட எளிமையாக வாழும் ஒரு புதிய முனிவர்...

கதை எழுதுபவர்களுக்கு இல்லாத ஒரு குணம் என் நண்பனுக்கு இருந்தது.

"ரிஸ்க்' எடுப்பது...

நீரின் போக்கிற்கு எதிராக நீந்துவது... காற்று வீசுவதோடு சேர்ந்தல்ல... காற்றுக்கு எதிராகவே உயரக் கூடிய பட்டம் பறக்கவேண்டும் என்ற தத்துவஞானி யார்?

இந்த இரவு வேளையில் நான் அந்த தத்துவ ஞானியை அதிகமாகத் தேடவில்லை.

தலசேரியை அடைவதற்கு முன்பே... நான் உறங்குவதற்கு முன்பே.... இந்த காபி தோட்டத்தை வாங்கிய கதையை நண்பன் கூறினான்.

296 ஏக்கர்.

உரிமையாளர் படிக்காத ஜாதி. இந்த எஸ்டேட் டின் முன்னாள் உரிமையாளர் ஒரு கூர்க்கி அழகி. அனைவரும் அவளை "மகாராணி அம்மா' என்று அழைப்பார்கள். அந்த அழகியிடமிருந்து அந்த முட்டாளிடம் தோட்டம் எப்படி வந்து சேர்ந்தது என்பதைப் பற்றி கேட்க வேண்டும் என்று அப்போது தோன்றியது.

கேட்கவில்லை.

நண்பன் கூறினான்: "அந்த முட்டாள் 22 லட்சம் விலையாகக் கூறினான். நியாயமான விலை 35 வரும். நான் கையிலிருந்து ஐந்து லட்சத்தைக் கொடுத்தேன். மீதி வங்கிக் கடன். அடுத்து வரும் ஐந்து வருட காலம் காபிக்கான பணம் முழுவதையும் காபி போர்ட் வங்கியில் அடைத்துக்கொள்ளும். அதைத் தொடர்ந்து நான் இந்த எஸ்டேட்டின் உரிமையாளராக காலப்போக்கில் ஆகிவிடுவேன்.

அந்த முட்டாளிடம் எனக்கு ஒரேயொரு கோபம் தான் இருந்தது. அவன் பங்களாவிலிருந்த மதிப்பு வாய்ந்த பொருட்கள் பலவற்றையும் அழித்து விட்டான்.''

நான் மீண்டும் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தேன்.

எங்கிருந்தோ அல்ஸேஷ்யன் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.

சிறிது நேரம் கடந்ததும், நான் சற்று அயர்ந்து விட்டேன். கனவு கண்டேன். கறுத்த குதிரையின்மீது அமர்ந்தவாறு கிரீடமணிந்த மகாராணி வேகமாக பாய்ந்து செல்கிறாள்!

கையில் சாட்டை... பொத்தான் இடாத வெண்ணிற மேலாடை...சவாரி செய்யும்போது இருக்கக்கூடிய தோற்றம்...

மென்மையான சரீரம்... அழகான முகம்... அந்த உதடுகளின் மூலைகளில் சற்று கடுமை இருக்கின்றதோ? குளம்படி சத்தம்... மிகவும் பலமாக... நான் கண்களைத் திறந்தேன்.

சாளரத்தின் திரைச்சீலை வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.

கதவில் மெல்லிய தட்டுதல்... சாமுவல்- காபி ட்ரேயுடன்.

காபி பருகியபிறகு, வெளியே வந்தேன். நீரைச் சிதறவிட்டுக் கொண்டிருந்த எந்திரத்தைச் சுற்றியவாறு அல்ஸேஷ்யன் நாய்கள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.

மலையின் சரிவில்... அவுட் ஹவுஸுக்குப் பின்னால்.... இரவில் பார்த்திராத காகித மலர்களின் கொத்துகள்... தூரப் பார்வையில் முல்லைப் பூக்களை அணிந்திருக்கும் பசுமையான அழகிகளைப் போன்ற காபிச் செடிகள்... மிகவும் தூரத்தில் பணியாட்களின் வரிசையான இருப்பிடங்கள்...

நான் வெறுமனே நடந்தேன். வாசலில்...

அவுட் ஹவுஸுக்கு... அங்கிருந்து ஆரம்பிக்கும் எஸ்டேட்டின் சரளைக் கற்களாலான சாலைக்கு...

நான் ஒரு திறந்த டென்னிஸ் மைதானத்தை நினைவுபடுத்தக் கூடிய புல்வெளியில், ஒரு புதிய காலை வேளையின் நறுமணம் நிறைந்த சுத்தமான காற்றை அன்னையின் முலைப் பாலைப்போல ஆர்வத்துடன் அனுபவித்தவாறு மல்லார்ந்து படுத்திருந்தேன்.

தூசியும் புகையும் இல்லாத காற்று, எந்தவொரு மதுவாலும் தரமுடியாத போதையை அளிக்குமென எனக்குத் தோன்றியது. இங்கு...இப்படியே படுத்திருக்கலாம்.

மேலே.. இன்னும் நீல நிறமாகாத வானம்...

தரையில் ஃபோம் ரப்பரைப் போன்ற பசும்புல்...அதில் ஒட்டியிருக்கும் பனித்துளிகள் என் முதுகை முத்தமிடும் ஆயிரம் உதடுகள்...

இந்த எண்ண ஓட்டத்தைத் தகர்க்கும் வகையில் எஜமான்மீது பக்தி வைத்திருக்கும் சாமுவல் ஒரு பெரிய ப்ளேட்டில் எனக்கு பழரசத்தையும் டோஸ்ட்டையும் பாதியாக வெந்திருக்கும் முட்டையையும் கொண்டு வந்தான். மல்லார்ந்து படுத்திருந்த எனக்கு முன்னால் நின்றிருந்த சாமுவல் அரேபிய கதைகளில் வரும் ஒரு சமையல்காரனான ஜின் என்பதைப்போல தோன்றினான்.

அவனைத் திருப்தி செய்வதற்காக நான் பழரசத்தைப் பருகினேன். ஒரு ஹாஃப் பாய்ல்ட் முட்டையையும் சாப்பிட்டுவிட்டு, பிறகு... அவன் போவதற்காகக் காத்திருந்தேன்.

அவன் போகவில்லை.

அப்போது நான் கேட்டேன்:

"சாம்... யார் இந்த மகாராணி?''

"நான் சமீபத்தில்தான் வந்தேன், சார்.''

-சாமுவல் ஒரு மறைக்கும் மனிதனாக மாறினான்.

"எனக்கு இந்த மகாராணியைப் பற்றிய சில விஷயங்கள் தெரியணுமே! ஒரு கதை எழுதுவதற்கு...''

இவ்வாறு கூறும்போது, மக்கள் விழுந்து விடுவார்கள்.

மக்களுக்குக் கதைகள் எழுதுபவர்களையும் கவிஞர்களையும் பிடிக்குமல்லவா?

ஆனால், சாம் விழவில்லை. அது மட்டுமா? என்னைச் சற்று உரசிப் பார்த்தான்: "சார்... நீங்கள் கதை எழுதுபவரா? ஆஃபீஸராக இருப்பீர்கள் என்று நான் நினைத்தேன்.''

"அப்படியா? சாம்... நீ போ... நான் இன்னும் கொஞ்சம் தூங்கணும்... இந்த பசும்புல்லில்..."

ஒரு பைத்தியம் பிடித்த மனிதனிடமிருந்து விலகிச் செல்லும் வேகத்துடன் ட்ரேயைக் கையில் வைத்தவாறு அவன் சென்றான்.

நான் தூங்க நினைக்கவில்லை. அந்த நல்ல காற்றை ஆவேசத்துடன் சுவாசிக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. எனினும், நான் உறங்கிவிட்டேன். நேரம் எவ்வளவு ஒடியிருக்கும்? என்னை யாரோ பிடித்து குலுக்கி எழச் செய்தார்கள்.

அப்போது புல்லில் மல்லார்ந்து படுத்திருந்த நான் பார்த்தது...என்னை முழுமையாக ஆக்கிரமிக்கும் வகையில் என் சரீரத்திற்கு மேலே கால்களை விரித்து வைத்துக்கொண்டு நின்றிருக்கும் ஒரு வயதான மனிதனை...

வெளியே தைரியம் இருப்பதைப்போல காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்.

என்னை ஆக்கிரமித்து நின்றிருக்கும் அவனுக்கு வயது என்ன இருக்கும்? தீர்மானிக்க முடியவில்லை. தொண்ணூறு இருக்கும். நூற்றுப் பத்து இருக்கலாம்.

ஒளிர்ந்துகொண்டிருக்கும் வழுக்கைத் தலை...

அதன் ஓரங்களில் பறந்துகொண்டிருக்கும் வெண்ணிற சிறிய ரோமங்கள்.. அவன் ஒரு பழைய குதிரையாக இருப்பானோ? நீளமான வெள்ளை தாடி..பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள பிரச்சாரகர்கள் பொறாமைப் படுவார்கள்.

"நீ யார்?'' அவன் கேட்டான்.

"நான் இங்கு ஒரு விருந்தாளி.''

"என் பெயர் தெரியுமா?''

"தெரியாது'' என நான் சைகை செய்தேன்.

"சித்தய்யா!'' உரத்த குரலில் அவன் கூறினான்.

"ஓ...!''

"இந்தத் தோட்டம் யாருடையது என்பது தெரியுமா?''

நான் என் நண்பனின் பெயரைக் கூறினேன்.

சித்தய்யா பைத்தியம் பிடித்தவனைப் போல சிரித்தான்.

"இல்லை!''

"பிறகு...?'' என் விசாரணை.

"மகாராணி அம்மாவோட தோட்டம்.''

நான் சிரித்துவிட்டேன். அது எனக்குத் தெரிந்த விஷயம்தானே?

நான் கூறினேன்: "டேய்... சித்தய்யா. தோட்டம் அவளுக்குச் சொந்தமானதாக இருந்தது. அது பழைய கதை... இப்போது தோட்டம் என் நண்பனுக்குச் சொந்தமானது.''

"இல்லை, சார்.'' சித்தய்யா என் சரீரத்திற்கு அருகிலிருந்து தான் விரித்து வைத்திருந்த கால்களை விலக்கினான். தொடர்ந்து அவன் கதையைக் கூறினான்:

"சார்... வரவேற்பறையில் ஒரு கறுத்த குதிரையின் படம் இருக்கிறது. அந்த குதிரைக்கு தினமும் எண்ணெய்யைப் பூசி தடவிக் கொடுப்பவன் நான். அந்த குதிரை என்றால், மகாராணிக்கு உயிர். ஒருநாள் குதிரை லாயத்திற்கு வருவதற்கு எனக்கு சற்று தாமதமாகிவிட்டது. என்ன காரணம்? என் மனைவிக்கு காய்ச்சல். மனைவி என்பவள் குதிரையைவிட பெரிதுதானே, சார்? நான் தாமதமாக வந்ததற்காக மகாராணி அம்மா என்னைக் குதிரையின் சாட்டையால் அடிச்சாங்க. சார்...

தெரியுமா? பெங்களூர் பந்தயத்தில் எப்போதும் கோப்பை வாங்குபவன் அந்த குதிரைதான்.

அந்த கறுத்த ராட்சசன்! அவனைப் பராமரிக்கும் அக்கறையில் பாதியைக் கணவருக்குச் செலுத்தி யிருந்தால், மகாராணியின் கணவர் இறந்திருப்பாரா, சார்? அந்த நல்ல மனிதர்... மிகப்பெரிய அப்பிராணி!

அம்மாவோ?அந்தக் கறுத்த குதிரையைவிட நெருப்பு நிறைந்த பெண்!

சார்... ஒருநாள்... கணவர் இறந்த பிறகு, மகாராணி அம்மா வாசலில் அமர்ந்திருந்தார். நாற்காலியில். வெயில் படுவதற்காக சரீரத்தில் துணி இல்லை, சார். அம்மா எண்ணெய் தேய்ச்சிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்தான்... ஒரு இளைஞன். அம்மா அவன் முதுகில் எண்ணெய் புட்டியை எறிந்தார்.

அன்றே அவனை அம்மா குதிரைக்காரனாக ஆக்கிட்டாங்க.

என்னைத் தோட்டத்துக்கு அனுப்பிட்டார். மண் வெட்டுவதற்கு....களை பறிப்பதற்கு.

மகாராணி அம்மா எனக்கு ஒருமுறைகூட சட்டை தந்ததில்லை. ஒரு நல்ல வார்த்தைகூட கூறியதில்லை. ஆனால், அவனை அம்மா ஒரு மகாராஜாவாக ஆக்கினார். அவன் தடவி விட்டது யாரை சார்? குதிரையையா....? இல்லாவிட்டால்....?

அடுத்த பெங்களூர் பந்தயத்திற்கு மகாராணி அம்மாவும் அவனும் சேர்ந்து போனார்கள். நம்முடைய குதிரை வெற்றி பெற்றுவிட்டது.

அன்றிரவு ஒரே ஹோட்டல் அறையில் மகாராணி அம்மாவும் அந்தக் குதிரைக்காரனும் தங்கினார்கள், சார்.

தெரியுமா? அம்மாவிற்கு எப்போதும் இதயத்தில் நோய் இருந்தது.முன்பு நான்தான் மாத்திரை கொடுப்பேன். பிறகு... அவன் கொடுத்தான்.

பாவம், மகாராணி அம்மா! முன்பு இந்தத் தோட்டத்தை விலைக்கு வாங்குவதற்காக வந்த ஒரு வெள்ளைக்காரரைக் கேலிசெய்து அனுப்புவதற் காக, புகையிலை பைப்பில் நெருப்பு பற்ற வைப்பதற்கு நூறு ரூபாய் நோட்டைக் கொளுத்திய என் மகாராணி அம்மா!

ஒரு போதாத நிமிடத்தில்... அம்மா இந்தத் தோட்டம் முழுவதையும் அந்தச் சதிகாரனுக்கு... வில் பத்திரம் மூலமாக.

தவறாக நினைக்காதீர்கள், சார். பொறாமையால் சொல்லவில்லை.

அவர்கள் எப்போதும் ஒன்றாகத்தான் படுத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு இரவு வேளையில்

அம்மாவுக்கு மார்பு வலி வந்திருக்கிறது. அந்தத் துரோகி மாத்திரையைத் தரவில்லை. என் மகாராணி அம்மா இறந்துவிட்டார். அது நடந்து பத்தாவது நாளன்று அந்தக் குதிரையும் இறந்து விட்டது.

அந்தத் துரோகி தோட்டத்தின் உரிமையாளராக ஆகிவிட்டான்.

தோட்டம் பாழானது.

நாசமடைந்து, விற்றுவிட்டான்.

இப்போது யாரோ வாங்கினார்கள். சார்... உங்களின் நண்பரா? இந்தத் தோட்டம் யாருடையது... சார்?

என்னுடையது.... இங்கு பணி செய்தவர்களுக்குச் சொந்தமானது. மகாராணி அம்மாவுடன் சேர்ந்து படுத்தவர்களுக்குச் சொந்தமானது அல்ல.

பாருங்கள், சார். அந்த காபி பூக்களுக்கு வெள்ளை நிறத்தத்தைத் தந்தது யார்?

கடவுள்.

பிறகு....

தொழிலாளிகள்.

என்ன சார்....? எதுவுமே சொல்லாம இருக்கீங்க?''

மலையாளமும் தமிழும் கன்னடமும் கலந்த சித்தய்யாவின் கதையைக் கேட்டபோது, என்ன கூறவேண்டும் என்ற வடிவமே எனக்கு இல்லாமலிருந்தது.

நான் பங்களாவை நோக்கி நடந்தேன்.

சாமுவல் எதிர்பார்த்து நின்றிருந்தான்.

"சாம்... யார் இந்த சித்தய்யன்?''

"சார்... நீங்க பார்த்தீங்களா?''

"ஆமாம்.''

"கிறுக்கன்!''

"கிறுக்கனா?''

"பிறகென்ன...? காபி பூவிற்கு வெள்ளை நிறத் தைத் தந்தது அவனாம்!''