"கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.'
-என்பார் வள்ளுவர். இதன் பொருள், "நடுநிலை தவறி, ஒரு சார்பாக நடந்துகொள்ளலாம் என்று ஒருவன் நினைக்கத் தொடங்கிவிட்டான் என்றாலே; அவன் கெட்டழியப் போகிறான் என்று பொருள்' என்பதாகும்.
இந்தக் குறள், ஒரு சார்பாக ஆட்சித் தேரை உருட்டிக்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு மிகப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. காரணம், மதச் சார்பற்ற இந்திய நாட்டின் பிரதமரான மோடி, அதற்கு எதிராகவும், இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணாகவும் தன்னை ஒரு மதத்தினருக்கு மட்டுமான ஆட்சியாளராகக் கருதிக்கொண்டு இருக்கிறார்.
காரணம், அவர் இந்துமதச் சிந்தனையில் ஊறிப்போனவர். அதோடு, ஆர்.எஸ்.எஸ். பயிற்சி எடுத்தவர், அதனால் தான் அவரது அனைத்து செயல்களிலும் "இந்துத்துவா' தன் முகத்தைக் காட்டுகிறது. மோடி இந்துத்துவா கொள்கையில் ஆர்வம் கொண்டவராக இருப்பதை, நாம் தவறு என்று சொல்லவில்லை. அது அவரது தனிப்பட்ட உரிமை.
அப்படியொரு கொள்கையை நெஞ்சு நிறைய நிரப்பிக்கொண்டி ருக்கிற அவர், ஒரு இந்து மத சாமியாராகவோ, மடாதிபதியாகவோ ஆகியிருக்க வேண்டும். அப்படி அவர் ஆகியிருந்தால். அவரை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இந்து மத நம்பிக்கையில் தீவிரம் கொண்டிருக்கும் அவர், அரசியலுக்கு வந்ததும், நடுநிலையாளர் போல் நடித்து அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று, அவர் தொடர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, அதில் அமர்ந்திருப்பது தான் தவறு, டெல்லி அரியணையில் அமர்ந் திருக்கும், அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், நிதின் கட்காரி உட்பட அத்தனை பேரும் காவி கட்டாத கார்ப்பரேட் சாமியார்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் தங்களை இந்துமதப் பிரதிநிதிகளாக வெளிக் காட்டிக் கொள்ள கொஞ்சமும் வெட்கப்படாதவர்கள். அதனால்தான் "ஒரே நாடு! ஒரே இனம்! ஒரே மொழி! ஒரே மதம்!' என்று பரவசமாக பஜனை பாடி வருகிறார்கள்.
ஒரு பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர், அந்தப் பஞ்சாயத்தில் இருக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்.
இல்லை என்றால் அவர் பொதுமக்கள் சேவைக்குத் தகுதியில்லாதவர் ஆவார். ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கே இதுதான் விதி என்றால்; ஒரு நாட்டின் பிரதமர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் என்றால், இங்கிருக்கும் இந்துக்களுக்கு மட்டுமல்ல; முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஜைனர்களுக்கும், புத்த மதத்தினருக்கும், ஏன் இங்குள்ள அனைத்து மதத்தினருக்கும் அவர்தான் பிரதமர். அதை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
"அதெல்லாம் இல்லை. இந்தியாவில் இருக்கும் இந்துக்களுக்கு மட்டும்தான் நான் பிரதமர்'' என்று மோடி சொல்வாரானால், அவர் பிரதமர் பொறுப்புக்குத் தகுதியற்றவர் என்று பொருள்.
இங்கு இரண்டுமுறை ஆட்சி பீடம் ஏறிய மோடி என்ன செய்தார்?
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்து, சிறுபான்மை மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்க முயன்றார்.
காஷ்மீருக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் அரசியலமைப்பு சட்டம் 370- ஆவது பிரிவை, நிர்தாட்சண்யமாக நீக்கியதோடு, காஷ்மீருக்கான அத்தனை சலுகைகளையும் பறித்தார்.
சிறுபான்மையினரின் மத உரிமைகளைப் பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை அரங்கேற்றி வருகிறார்.
-இப்படி தொடர்ந்து சிறுபான்மை மக்களைக் குறிவைத்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது மோடி அரசு.
அப்படிப்பட்டவர் இந்த முறையும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்.
தெற்கில் மட்டுமல்லாது வடக்கிலும் நிலைமை சரியில்லை என்று தெரிந்ததும், தோல்வி பயத்தில் இருக்கும் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில், மதவெறி என்கிற ஆபத்தான ஆயுதத்தை பகிரங்கமாகவே கையில் எடுத்திருக்கிறார்.
பெரும்பான்மையாக உள்ள இந்துக்களைக் கவரவேண்டும் என்றும், அவர்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் வளைக்கவேண்டும் என்றும் துடிக்கும் அவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான நெருப்பை ஊதி ஊதிப் பெரிதாக்கப் பார்க்கிறார்.
குறிப்பாக கடந்த 20-ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாராவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, தான் இந்த நாட்டின் பிரதமர் என்பதை மறந்துவிட்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர்....
= காங்கிரஸ் கட்சி இங்கே ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர் களுக்கு முன்னுரிமை உண்டு என்று அறிவித்தார்கள். இது சரியா?
= தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு "சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு' என்று சொன்னது. அதைப்போல இப்போதும் சொத்துக்களைப் பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் கூறுகிறது. இதை ஏற்பீர்களா?
= அதாவது நாட்டினரின் சொத்துக்களை எல்லாம் வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்? அதிக குழந்தை பெற்றவர்களுக்குதான் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.
அதாவது நம் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு நம் சொத்துக்களைப் பகிர்ந்தளிக்க நினைக்கிறார்கள். இதில் உங்களுக்குச் சம்மதமா?
-இதுதான், காங்கிரஸைத் தாக்குவதாக நினைத் துக்கொண்டு, பிரதமர் மோடி. இஸ்லாமியர் களுக்கு எதிராக வீசிய குண்டுகள்.
காங்கிரஸ் கட்சி நாட்டின் சொத்துக்களை எல்லாம் முஸ்லீம்களிடம் ஒப்படைக்கப் போவது போலவும், இஸ்லாமியர்களும் இதற்காகவே ஏக்கத்தோடு காத்திருப்பவர்களைப் போலவும் மோசமாக சித்தரிக்கப் பார்க்கிறார் மோடி.
அதோடு, இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள் என்றும் மிக மட்டமான வார்த்தையால் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படியெல்லாம் பேசி, அங்கே கூடியிருந்த மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட முனைந்திருக்கிறார் மோடி.
அவர் ஓட்டு வாங்குவதற்காக, இஸ்லாமியர் களை பலிகடா ஆக்குவதை எப்படி நாம் ஏற்பது?
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும், ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறது.
= இத்தகைய நிலையில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா... சொல்லுங்க!
-ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்