மனித வாழ்க்கையை மகத்தான சிந்தனைகள் வழிநடத்துகின்றன. செக்கு மாடுபோல ஒரே இடத்தைச் சுற்றி வரும் ஒரே மாதிரியான வாழ்க்கையில் புதுமைகள் நடப்பதில்லை. இயல்பு வாழ்க்கையிலிருந்து மாறுபடும் எண்ணங்கள் புதிய கண்டுபிடிப்புகளைத் தருகின்றன. சிந்திக்கும் ஆற்றல், மனிதனை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
மரணம் என்பதைக்கூட சிந்திக்கமறந்த நிலை என்று அறிஞர்கள் கருதுவதை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும். இந்த உலகம் சிந்தனையாளர்களுக்கு உரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து எப்போதும் அவர்களைப் போற்றி வருகிறது. விடுதலை உணர்வு கொண்ட சிந்தனையாளனைத் தன் கட்டளைக்கு அடிபணிய வைக்க ஆட்சியும் - அதிகாரமும் போட்டி போடுகின்றன. ஆனால் அவனோ அவற்றிற்குத் தன்னை ஒப்புக் கொடுக்காமல் நிமிர்ந்து நிற்கிறான்.
எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும், தன் எண்ணங்களால் உயர்ந்த பலரின் வாழ்க்கை
அடுத்த தலைமுறைக்கு மனிதநேயத்தைப் போதித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் எப்போதும் தன் மக்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு அவர்களுக்காகவே தன் வாழ்நாளைச் செலவு செய்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். ஓய்வறியா அந்த உத்தமர் இன்று சென்னை கடற்கரையில், அறிஞர் அண்ணாவிடம் பெற்ற இதயத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காகச் சென்றிருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் அதியங்களில் ஒன்றாகஇந்தத் தமிழ்நாட்டில் வந்து பிறந்தார் கலைஞர். 1924-ஆம் ஆண்டுஜூன் மாதம் 3-ஆம் தேதி, திருவாரூரின் திருக்குவளை என்ற ஊரில் பிறந்து, இந்தக் குவலயத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார். இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டுவிழாவைச் சிறப்பாகக்கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் என்று சொல்லப்பட்டாலும், சமத்துவத்தையும் - சுயமரியாதையையும் ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது என்று வாழ்ந்தவர்.
மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று முழங்கும் தந்தை பெரியார் பயிற்சிப் பட்டறையில் உருவானவரின் சொல்லும் செயலும் இப்படித்தானே இருக்கமுடியும்! பிறப்பின் அடிப்படையில், பாலின ரீதியில், பொருளாதார நிலையில் சொல்லப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்ட கடைசி மூச்சுவரை பாடுபட்டவர். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை கடைசி மனிதனுக்கும் கொண்டு சேர்த்த மகத்தானவர். மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். 1957-இல் முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், தான் மறையும் வரை தான் போட்டியிட்ட தொகுதியில் ஒருமுறையும் தோற்றதே இல்லை என்பது தனி வரலாறு.
இதுவரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். சுதந்திரத் தினத்தன்று மாநில முதல்வர்கள் அவரவர் சட்டமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றவேண்டும் என்ற இவரின் கோரிக்கை 1974-இல் நிறைவேறியது. அதன்படி அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திரத் தினத்தன்று அந்தந்த மாநில முதல்வர்கள் அவரவர் சட்டமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றும் உரிமை பெற்றுள்ளனர். இன்னொரு பக்கம் திரைப்படத்திற்குக் கதை - வசனம் எழுதிப் பெயரும் புகழும் பெற்றார்.
அதுவரை திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோர் பெயர்களே திரையில் இடம்பெறும் சூழலில் கதை - வசனம் எழுதியவர் என்று கலைஞர் பெயரைத் திரையில் தொடக்கத்திலேயே இடம்பெறச் செய்ததால் இரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கைத் தெரிந்துகொள்ளலாம். அனல் பறக்கும் புரட்சிகரமான வசனங்கள் ஆகட்டும், அன்புசொட்டும் காதல் வசனங்கள் ஆகட்டும் எல்லாமேகச்சிதமாக எழுதக்கூடியவர். திரை நட்சத்திரங்களைத்தாண்டி இவரின் வசனத்திற்காகவும் படம் வெற்றிபெற்றதைப் பாராட்டாத திரையுலகம் இருக்காது.
இவர் தலைமையேற்ற பிறகு கவியரங்க மேடைகள் தனித்த அடையாளமும் மரியாதையும் பெற்றன. சொற்களில் விளையாட்டு நடத்துவதில் இவருக்குத் தனி விருப்பம்உண்டு. உதாரணமாக, படித்தேன்என்று சொல்லும்போது, படிதேன் என்று சொல்லைப் பிரித்துவேறு பொருள் தரும் வாக்கியத்தை உருவாக்கித் தந்துவிடுவார். தெய்வத்தாய் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’’ என்ற பாடல் பிறந்ததற்குச் சுவாரசியமான கதை ஒன்று உண்டு.
நூற்றாண்டுநாயகரின் மூன்றெழுத்து என்றபிரபலமான கவிதையே இப்பாடல் தோன்ற காரணமானது.அக்கவிதையில் தமிழ், பண்பு,அன்பு, காதல், வீரம், களம், வெற்றி,அறிவு, அண்ணா, தி.மு.க. ஆகியஅனைத்தும் மூன்றெழுத்து கொண்ட சொற்கள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும். கவிஞர் வாலியின் பாடல் பிறக்க இக்கவிதை அடிப்படையாக அமைந்து விட்டது. ஒற்றுமைக்காக முத்தமிழ் அறிஞர் கொடுக்கும் மிக எளிமையான விளக்கத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொல்லும்போது தான் உதடுகள்கூட ஒட்டும்’’ என்ற வரிகள் இன்றும் தமிழர்கள் மனத்தில் நிலைத்து நிற்கின்றன.
தன்னைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் மனிதனுக்குள் சமூகச் சிந்தனை உண்டாகும்போது மக்கள் தனக்கான தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் ஏதோ ஒரு சில வீடுகளில் மட்டும்தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பும் சாமானிய மக்கள் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் வீடுகளில் அனுமதி கேட்டு நிற்பர். அப்படி அனுமதிக்கும் நபர்களிடம் சில்லரை காசுகள் வசூலிக்கப்படும். நிகழ்ச்சி முடிந்து போகும்போது உட்கார்ந்த இடத்தை விளக்குமாறால் கூட்டி விட்டுச் செல்லவேண்டும் என்ற நிபந்தனைவேறு. உட்கார்ந்த இடத்தைச் சுத்தப்படுத்தி விட்டுச் செல்லவேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு மனிதனை அவமானப்படுத்த முடியுமா என்ன?
இதைப் பார்க்கும் ஒரு தலைவர் சாமானிய மக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதேஎன்று வேதனைப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட தலைவர் சிந்தனையில் வீடுதோறும் தொலைக்காட்சிப் பெட்டி தர வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? இதுதான் கலைஞரின்அணுகுமுறை. இந்தக் கொள்கை புரியாமல் இலவசங் களைக் கொடுத்து இந்த மக்களைச் சோம்பேறிகளாக மாற்றிவிட்டனர் என்று பேசுபவர்கள் மனசாட்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
சமனற்ற நிலை என்பது சமூகத்தில் இருக்க வேண்டிய அமைதியைக் கெடுத்துவிடும் என்ற புரிதல் அவசியம்.
இப்படி - கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், தொழில் வளர்ச்சி, சமூக நலம், மீனவர் நலன், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் நலன், சுற்றுச்சூழல், விளையாட்டு என்று எல்லாவற்றிலும் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி மிகுந்த திறமையுடன் செயல்பட்டார். தனக்குக் கிடைத்த முதல்வர் என்ற பொறுப்பைக் கொண்டு பெரியார் - அண்ணாவின் சிந்தனைத் திட்டங்களை நிறைவேற்றி மகிழ்ந்தார்.
தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு எதிராக நின்றதில்லை. இன்னும் சொல்லப்போனால், கோயில்களில் அர்ச்சனை செய்யும் குருக்களுக்கும் நலத்திட்டங்களை ஏற்படுத்தியவர் என்பதில் அவரின் மனிதநேயம் சாட்சியாகிறது. கலைஞர் தலைமையிலான அரசுகடவுளுக்கு ஏற்றும் சூடத்திற்கு (கற்பூரம்) வரி போட்டதில்லை என்பதே உண்மை நிலவரம். இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் 1967-வரை காங்கிரஸ் ஆட்சியே நிலையாக இருந்தது.
ஒரு கட்டத்தில் நாட்டின் விடுதலைக்குக் காரணமான காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்துத் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியைப் பிடித்ததற்குக் காரணம் கட்சி முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும், கட்சியின் செயல்திட்டங்களும் ஆகும். அப்போது தமிழிலும் - ஆங்கிலத்திலும் புலமை பெற்ற தன்னிகரில்லாத தலைவரான பேரறிஞர்அண்ணா முதல்வர் ஆனார். அவரின் மறைவுக்குப்பிறகு முதல்வரான கலைஞர் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.
மாநிலத்தில் வறுமை தலைவிரித்தாடிய காலத்தில் ‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்’ (ரேஷன்) தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதத்தை வழங்கினார். ஒரு ரூபாய்க்கு அரிசி மூன்று படி இலட்சியம் ஒரு படி நிச்சயம்’’ என்ற அண்ணாவின் விருப்பத்தை உண்மையாக்கினார். அரசியல் தலைவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் அரசியல் பயணம் என்பது தவிர்க்க முடியாதது. பல தலைவர்கள் பதவிக்கு வந்ததும் தமக்குப்பிடித்தமான நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம். அப்போது அங்கிருக்கும் கலாசார பண்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் காட்டுவர்.
ஆனால் தன் மண்ணின், தன் மொழியின், தன் இனத்தின் பெருமையைச் சொல்லிவிட்டு வரவிரும்பியவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. தன் முதல் பயணத்தின் இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இவர், இங்கிலாந்து அரசு என்னைத் தனது நாட்டிற்கு அழைத்தபொழுது சுற்றலாவிற்கான செலவினைத் தானே ஏற்றுக்கொள்ள விழைந்தது. ஆனால், விருந்தனராகச் செல்லும் அமைச்சர் போன்றோரின் பயணச் செலவினைஅந்தந்த அரசே மேற்கொள்ள வேண்டும் என்றுஅண்மைக் காலமாக இந்திய அரசு கடைப்பிடித்து வரும் மரபினை ஒட்டி, அரசாங்கச் செலவிலேயே நான்வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிட்டது. இந்த ‘நன்றிக் கடனை’ ஓரளவு தீர்க்க என்னுடைய பயணஅனுபவங்களை மேடைகளில் கூறாது, அரசாங்க ஏடான ‘தமிழரசி’ வாயிலாக வெளியிட்டு முடித்திருக்கிறேன்’’, என்ற நிலைப்பாடு நெகிழ்ச்சியானது.
தள்ளாத வயதிலும் இப்படி ஓயாமல் உழைக்க வேண்டுமா என்று தந்தை பெரியாரைப் பார்த்துக் கேட்கும்போது, ‘’நான் தினமும் இட்லி சாப்பிடுகிறேன், சோறு சாப்பிடுகிறேன். அதற்காக ஏதாவது உழைக்க வேண்டாமா’’ என்று சொல்வதைக் கலைஞரிடம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இன்றைக்கு உள்ளூர் மனிதர்களை உலக மனிதர்களாக மாற்றி இருக்கிறது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. சமூக ஊடகங்கள் ஆட்சி செலுத்தும் இந்த நாளில் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. இனிசமூகத்தின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கப் போகிறதுஎன்று அவதானித்து அதற்கு ஏற்ப திட்டங்களைத் தீட்டியவர்கள் தப்பித்துக் கொண்டனர். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களின் இன்றைய தகவல் தொழில்நுட்ப சாதனைக்கு முதன்மைக் காரணமானார் டாக்டர் கலைஞர்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் படித்து,பட்டம் பெற்று, உரிய வேலை வாய்ப்புகளைப் பெற்று, வீட்டிற்கு விளக்காகவும் - நாட்டிற்குத் தொண்டர்களாகவும் இருக்க வேண்டும் என்றுவிரும்பினார். இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை உண்டாக்க தகவல் தொழில்நுட்ப பூங்காவை நிறுவினார். அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும், துறைசார்ந்த அதிகாரிகளையும் அழைத்து மாவட்டந்தோறும் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க ஆணையிட்டார். மேலும் இவை அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதுபோல சென்னையைத்தலைமையிடமாகக் கொண்டு செயல்பட சென்னையில் டைடல் பூங்கா அமைத்ததைத் தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றே சொல்லலாம்!
இது மாநிலம் முழுவதும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இங்குப் பணியாற்றிய பல இளைஞர்கள் வெளிநாடுகளில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, ஒரு மடிக் கணினியைமுதலீடாக வைத்துக்கொண்டு தனியாகச் சம்பாதிக்கும் திறமை பெற்று உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே
போல வெளிநாடுகளில் இருக்கும் சாலை வசதிகளைப் போலப் பல மேம்பாலங்களைக் கட்டிச் சாதனை படைத்தவர். இரவு தூங்கும்போது ஒரு மாநிலத்தில் இருந்தால், காலை கண்விழிக்கும்போது வேறு மாநிலத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லும்அளவிற்கு சாலை அமைப்புகளும், நவீன பேருந்துகளும் பாராட்ட வேண்டிய முன்னெடுப்புகள்.
வெகு தூரம் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகளில் இரண்டு ஓட்டுநர்களை நியமித்துப் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்து மக்களின் நாயகனாகவும், தொழிலாளிகளின் தோழனாகவும் உருவெடுத்தது எப்போதும் வியக்க வைக்கிறது. தமிழ் மண்ணின் கடற்கரை நிலத்திற்கு ‘நெய்தல்’ என்று பெயர். அந்த நிலத்தின் தன்மைக்கு விவசாயம் செய்ய இயலாது. எனவே கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் அம்மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீன் பிடித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இதனாலேயே, ‘‘தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான் - கரை மேல் இருக்கவைத்தான் - பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான் என்று கவிஞர் வாலி பாடல் எழுதியிருப்பார்.
அந்தமக்களின் வாழ்வில் ஒளியேற்ற ‘மீன்வளத்துறை’ என்ற துறையை உருவாக்கியதுடன், அதற்கான அமைச்சகமும் அமைத்த பண்பாளர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது கடலில் காற்று - மழை அதிகமானால் அந்த ஆபத்தை அறிய ‘வாக்கிடாக்கி’ என்னும் கருவிகளை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கினார். மேலும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தின்போது மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். அதே நேரத்தில் அவர்களுக்கு அந்தக் காலத்தில் பொருளாதார உதவி செய்ததும் கலைஞர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது. மீனவ சமுதாயத்தில் பிறந்து பகுத்தறிவும் - பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு, உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த மா. சிங்காரவேலர் பெயரைச் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ‘சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலர் மாளிகை’ என்று பெயர் சூட்டினார்.
தமிழகத்தை மேலும் வளர்ச்சியுள்ள மாநிலமாக மாற்ற பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று விரும்பிய கலைஞர், பெண்களைக் காவல் துறையில் பணியாற்றும் நிலையை உருவாக்கினார். பெண்களைத் தனக்கான அடிமையாகவும், பாலியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருளாகவும் நினைத்த சமூகத்தில் பெண்களை ஆண்களுக்கு நிகராகவேலை பார்க்க வழியமைத்துக் கொடுத்தார். ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்யத் தகுதியானவள் பெண். இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுவது கவனத்திற்குரியது. பெண்களைக் காவல்துறையில் சேர்க்க வேண்டும்.
பெண்கள் இராணுவத்திலும் சேர்ந்துபணியாற்ற வேண்டும். அப்போதுதான் பெண் அடிமைத்தனம் ஒழியும், பெண்களின் உணர்வுகளுக்கு ஆண்கள் மதிப்பளிப்பார்கள் என்று ஐயா பெரியார் கண்ட கனவை நனவாக்கினார். இன்று மகளிர் காவல்துறை பொன்விழா கண்டிருக்கிறது என்பது கூடுதல் செய்தி. தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். மழைக்காலங்களில் கொட்டித் தீர்க்கும் மழைநீரைச் சேமித்து வைத்து ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.
நீர் நிலைகளைக் குறிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் தண்ணீரை நிர்வகித்த தமிழினத்தின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன. காற்று வரும் திசைகளை வைத்து - கொண்டல், கோடை, வாடை, தென்றல் என்று காற்றுக்குப் பெயரிட்டதும், நிலத்தின் அடிப்படையில் உணர்வுகளைப் புரிந்துகொண்டதும், கட்டடப் பணிக்கான விதிகளை வகுத்ததும் தமிழர்களின் அறிவியல் அறிவை உணர்த்துகின்றன. அறிவியல்
அறிவுக்குத் துணை நிற்கும்விதமாக - கரிகாலன் கட்டிய கல்லணையை இன்றுவரை உலகம் வியக்கிறது. இது போல, கலைஞரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அணைகள் ஓரளவு வறட்சியைஎதிர்கொள்ள உதவுகின்றன.
பருவ காலங்களில் பெய்யும் மழை நீரைத் தேக்கிவைத்துக்கொண்டு கோடைக் காலத்தில் மக்களுக்கான குடிநீராக வழங்கியதுடன், இன்று லாரிகளில் வரும் தண்ணீருக்கும், தெருக்களில் அமைக்கப்பட்ட குடிநீர்த்தொட்டிகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்த ஈரமிக்கவர். அதனாலோ என்னவோ ஈரமிக்க கடற்கரையில் தலைசாய்ந்து படுத்திருக்கிறார். 2018, ஆகஸ்டு, ஏழில்நம்மை விட்டு மறைந்தாலும் இன்றும் அவரின் படைப்புகளாலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களாலும் நம் நினைவுகளில் நீங்காமல் வாழ்ந்து வருகிறார்.
ஒருவர் தன் மறைவுக்குப் பிறகு இந்தப் பூமியில் விட்டுச் செல்லத் தகுதியானவை அவர் எழுதிய புத்தகங்கள், அவரின் பிள்ளைகள், அவர் வாழ்ந்த வீடு. அந்தவகையில் கலைஞரின் படைப்புகள் படிப்பவரின் சிந்தனைக்கு விருந்தாகவும், அவரின் மனப்பதற்றத்திற்கு மருந்தாகவும் இருக்கின்றன. அவரின் வீடு அவரின்வரலாற்றை மௌனமாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. இன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் - கலைஞரின் பெயர்
சொல்லும் பிள்ளையாக, திராவிடக் கொள்கைகளின் நீட்சியாக, முற்போக்குக் கருத்துக்களின் மாளிகையாகச் செயலாற்றுவதை உலக நாடுகளும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன!*
-முனைவர் இரா. மஞ்சுளா