(எதியோப்பியா என்றால் பசியோடும் பட்டினியோடும் எலும்பும் தோலுமாக உ''ருக்குப் போராடும் வறண்டுபோன ஒரு கொடிய பூமிதான், உலக வரலாற்றின் நினைவுக்கு வரும். இப்போது அந்த நாடு, தனது முகாரி முகவரியை பூபாளமாக மாற்ற, பசுமையைத் தொட்டுத் தன்னை புதிதாய் வரைந்துகொண்டிருக்கிறது. அதற்கு நம் மதுரைத் தமிழர் ஒருவர், தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு, அந்த சாப பூமிக்கு வரம் கொடுத்துகொண்டிருக்கிறார். ஒரு தனி மனிதரால் கூடஒரு நாட்டின் தலையெழுத்தைத் திருத்தமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார், நம் மதுரைத் தமிழரான முனைவர் கண்ணன் அம்பலம்.

அவர் குறித்த வியர்வை சொட்டும் தகவல்களை மதிப்போடு தருகிறது இந்தக் கட்டுரை. )

ஜல்லி−க்கட்டு வீரர்களும் ரசிகர்களும் வருடமொரு முறை வந்துபோகும் இடம்தான் பொந்துகம்பட்டி கிராமம். மதுரை அலங்காநல்லூரிலிருந்து பாலமேடு வழியாக 7 கி.மீ பயணம் செய்தால் பொந்துகம்பட்டி கிராமமே வந்து நம்மை வரவேற்கும். அந்த கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு எதிராக கம்பீரமாக காட்சியளிக்கிறது அந்த காளை''ன் உருவச்சிலை. சிலையாக இருக்கும் காளையைப்பற்றி கேட்டதும், அந்த கிராமத்தினர் உருகிப் போகின்றனர்.

bency

Advertisment

''அது காளை''ல்லிங்க, எங்க காவல் தெய்வமுங்க, பொந்துகம்பட்டி கிராமக் காளையை அவிழ்த்து விடுறாங்கன்னாலே, வாடிவாசல் பக்கம், ஒரு பய நிக்கமாட்டானுக. மீறிப் பிடிக்க வந்தவனுங்கள பந்தாடி, பறக்கவிட்டுடும். இத்தனைக்கும், ஓடுற காளை''ல்ல, நின்னு விளையாடுற, நின்னுகுத்தி' காளையாக்கும்''

இன்று எதியோப்பிய மக்கள் காவல் தெய்வமாகக் கொண்டாடிவரும் பேராசிரியர் கண்ணன் அம்பலம், இந்தப் பொந்துகம்பட்டிக் கிராமம் நமக்களித்த சொத்து. பொந்துகம்பட்டி கிராமத்தில் பிறந்து, தான் பணிபுரியும் எதியோப்பியக் கிராமங்களின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கும் பேராசிரியர் கண்ணன் அம்பலம் தமிழரின் பெருமையை எதியோப்பியாவில் நிலைநாட்டி வருகிறார்.

மதுரை தியாகராயர் கல்லூரி''ன் வேதி''யலில் இளங்கலைப் படிப்பும், சென்னைக் கிறித்துவக் கல்லூரி''ல் முதுகலையும் முடித்து, ஐ.ஏ.எஸ். கனவு களோடு டில்லி பயணித்தவர். அதே கனவுகளோடு டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஓசம) பொதுநிர்வாகத்தில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சிப் படிப்பும் முடித்திருக்கிறார். ஐ.ஏ.எஸ். தேர்வில் மூன்று முயற்சிகளுக்குப் பின்னும் வெற்றி கிடைக்காததால், எதியோப்பியாவின் ஒலேகா பல்கலைக்கழகத்தில் கிடைத்த விரிவுரையாளர் பணியை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். தற்போது அங்கு துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisment

நைஜீரியாவிற்கு அடுத்து ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு எதியோப்பியா. மூன்றில் ஒரு பகுதி இஸ்லாமியர். ஆப்பிரிக்கா வின் பழமையான முஸ்லீம் குடியேற்றப் பகுதியான நெகாஷில் பகுதி எதியோப்பியாவில்தான் அமைந்துள்ளது.

எதியோப்பிய இனக்குழுக்களுக்கிடையே அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது பல்வேறுவிதமான வளர்ச்சித் திட்டங்களை முடங்கச் செய்துவிடுகின்றன. அரசியல் அழுத்தங்கள் ஒருபுறம், போதிய கல்வியறிவு, விழிப்புணர்வு போதாமை ஒருபுறம் இருக்க ஊடகச் சுதந்திரமும் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இவ்வாறான பிரச்னைகள் நிறைந்த இடத்திற்கு வெளிநாட்டவர்கள் குடிபெயரவோ, உயர் பதவிகளை வகிக்கவோ, களப்பணி செய்யவோ தயங்குவார்கள்.

bency

மதுரை''ல் இருந்து பணிக்காகச் சென்ற ஒரு தமிழர், அப்பகுதிக்குக் குடிபெயர்ந்து, அம்மக்களை நேசித்து, அவர்களோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்து, அவர்களின் அடிப்படை பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்ல கிராமங்களின் மனங்களையும் வென்றிருக்கிறார்.

ஒன்சிமாஸ் நஸீப், (Onesimos Nesib) :

புனிதர் என்றும் ஒரோமா இலக்கியத்தின் முன்னோடி என்றும் இவர் புகழப்படுகிறார். புனித நூலான பைபிளை முதன்முதலாக ஒரோமா மொழி''ல் மறு ஆக்கம் செயதவர்.

இவர் அடக்கம் செய்யப்பட்ட நகரம் நெகம்டே. இந்த நகரம் முன்னாள் ஒலேகா ராஜ்யத்தின் தலைநகராகவும் விளங்கியது. ஒலேகா ஒரோமோ கலாச்சார அருங்காட்சியகத்தின் தாயகமாகவும் அமைந்துள்ள நெகம்டேவில்தான் ஒலேகா பல்கலைக்கழகம் தன் கல்விப்பணியை 2007-ஆம் ஆண்டு தொடங்க, நமது தமிழ்க் கதாநாயகன் கண்ணன் அம்பலம் 2009 ஆம் ஆண்டு விரிவுரையாளராக இங்குப் பணியில் இணைகிறார்.

இப்படிப் பெருமை மிகுந்த எதியோப்பியாவிற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் தாங்கள் விருப்பமா, என்று பேராசிரியரிடம் ஒரு விடியோ நேர்காணலில் கேட்ட போது, சிரித்துக்கொண்டே, ''எனது ஐ.ஏ.எஸ். கனவு தொடர்ந்து என்னிடமிருந்து விலகிய நேரத்தில் கிடைத்த வேலையை ஒப்புக்கொள்வோம் என்ற மனநிலைதான் அப்போது என்னிடம் இருந்தது. சிலர் ஆப்பிரிக்கா தேசம் வேண்டாமே என்றார்கள். நான் என் மனம் சொன்னதைக் கேட்டேன். ஒலேகா பல்கலையின் விரிவுரையாளர் பணியை ஏற்றுக் கொண்டேன்'' என்றதும், ""நல்லவேளை உங்களுக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் பொந்துகம்பட்டி கிராமத்தை ஆப்பிரிக்க தேசம் மட்டுமல்ல எங்களுக்கும் தெரிந்திருக்காது'' எனச் சொன்னேன்.

இதே கருத்தைத்தான் தமிழ்த் திரையுலகின் பன்முகக் கலைஞர் இயக்குநர் கரு. பழநியப்பனும் குறிப்பிட்டிருந்தார் என்கிறார் கண்ணன் அம்பலம்.

bency

பாலமேடு நகரப்பஞ்சாயத்தின் அரசு மேநிலைப்பள்ளியில் படிக்கும்போது அங்குள்ள ஆசிரியர் குப்புசாமிதான் சமூகச் சேவைக்கான விதையை பேராசிரியர் மனத்தில் விதைத்திருக்கிறார்.

அந்த விதை அவரின் ஈர நெஞ்சின் உரத்தில் துளிர்விடத் தொடங்க - தோட்டவேலை, மதுரை தியாகராயர் கல்லூரி''ல் தேசியச் சேவைத் திட்டம் (சநந) எனக் கிளைகள் விரிய, சென்னை''லிருந்து டில்லிக் குப் பயணிக்கை''ல் ஓசம வின்''ஜீலம் மாணவர் விடுதியின் தலைவராக்கியுள்ளது. இப்போது குப்புசாமி ஆசிரியர் இருந்த இடத்தில் முல்லைப்பெரியாறு அணைக் கதாநாயகன் பென்னிகுக் நாற்காலிபோட்டு சக்கென அமர்ந்துவிட்டார்.

களம் - எதியோப்பியாவின் நெகம்டே அல்லது ஒலேகா பல்கலைக்கழகம்.

விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தோமா, கைநிறையச் சம்பளம் வாங்கினோமா, வீட்டிற்கு அனுப்பியதுபோக மீந்த ஊதியத்தைச் சேமித்தோமா என்ற செக்குமாட்டு வாழ்க்கையிருந்து வேறு திசையில் பயணிக்கிறது அவர் மனம். அந்த நாளில்தான் ஒலேகா பல்கலைக்கழக ஊழியர் கூட்டத்தில் அதன் தலைவர் (அந்தப் பல்கலையின் துணைவேந்தர் போன்ற பதவி) பேசுகிறார்.

''பல்கலைக் கழகம் ஆரம்பித்து ரெண்டு வருஷம்தான் ஆகிறது. இது ஒரு குழந்தையைப் போல, இந்தப் பல்கலைக்கழகம் என்ற குழந்தையை வளர்த்தெடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது ...''

என முடிக்கவும் பேராசிரியர் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. கல்வியறிவில் பின்தங்கிய அந்தப் பகுதி மக்கள் பல வருடங்களாக எதியோப்பிய அரசிடம் போராடித்தான் அந்தப் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மைகளெல்லாம் இணைய,''இனி நாம இங்கேதான் இருக்கணும்'' என்ற உறுதி பிறக்கிறது அவர் உள்ளத்தில்.

இனி,

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியில் பேராசிரியருடனான உரையாடல்கள் அப்பப்ப, அடைப்புக்குறிக்குள் தெறிக்கும் - தெறிப்புக்குத் தயாராவோம்.

''மதுரை அலங்காநல்லூர் பக்கத்துல பொந்து கம்பட்டிதான் என்னோட கிராமம். கஷ்டப்பட்ட விவசாயக்குடும்பம். குடும்பத்தோடு போய்க் களை எடுக்கிறது, நாத்து நடறதுன்னு இளம்பிராயம் பச்சைய வாசனையோடு கழிந்தது. படிக்க வைக்க முடியாத அளவுக்கு வறுமையான சூழலில் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளில விடுதியில தங்கிப் படிச்சேன். 12 ஆம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தேன். வயல் வேலைக்குப் போன என்னை என் பள்ளித் தலைமை ஆசிரியர் எங்க வீட்டுல பேசி மேலே படிக்கச் சொன்னார். மதுரை தியாகராசர் கல்லூரியில பி.எஸ்.ஸி.''ல் வேதியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன்''

இயற்கை''லேயே புத்திகூர்மையும் கூடவே அவருடன் பயணித்திருக்கிறது. யோசிக்கத் தொடங்குகிறார்.

அந்த வறுமைதான் கடைசிவரை அவரது "வறுமையை அழித்தொழிக்கும்' பணியைச் செவ்வனே தொடர வழிவகுத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

''இங்குள்ள மக்கள் பெரும்பாலும் காலணிகள் அணிவதில்லை. கரடுமுரடான பாதைகளைக்கூட வெற்றுக் கால்களோடு சர்வசாதாரணமாகக் கடப்பார் கள். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல, சாலை வசதிகள் கிடையாது. ஆறு, ஓடைகளைக் கடக்க பாலங்கள் கிடையாது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவைகள் அனைத் தையும் பார்த்து விட்டு என்னால் சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை. மனதில் ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது.''

ஒலேகா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பணிக்கு மத்தி''ல் ஒருநாள், ஒரு முதுமையான பாட்டி பாதையின் குறுக்கே போகும் ஆற்றைக் கடக்க முடியாமல் ஆற்றின் நடுவே தத்தளித்த வண்ணம் நம்பிக்கையோடு கடந்துகொண்டிருக்க, இவரது இதயம் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. உடனடியாகக் களத்தில் இறங்கினார். அந்தச் சுற்றுவட்டாரக் கிராமங்கள், அந்த மக்களின் வாழ்வாதாரம், சாலைப் பயணம் என சகலத்தையும் அறிந்துகொண்டார்.

அந்தக் கிராமத்தின் பெயர் சிவக்கா. அதுபோல பல கிராமங்களில் மக்களின் பொக்குவரத்திற்குத் தடையாக இருப்பது இதுபோல் சிறிய ஆறுகள் என்பதையும், ஆற்றைக் கடக்கும் சில சமயங்களில் மரணங்கள் நிகழ்ந்ததையும் கண்டறிகிறார்.

அவர்களில் யாரும் பொறியாளர்கள் இல்லை. ஆனாலும் இணைப்புப் பாலம் அமைக்க முடிவெடுக்கிறார் பேராசிரியர். தன் மாணவர்கள், ஊர்ப்பெரியவர்களுடன் பேசிப் பாலம் அமைக்கத் திட்டமிடுகிறார்கள். சிறிய பாலம் என்பதால் அங்குள்ள மரங்களை வெட்டி ஆற்றின் குறுக்கே அளவெடுத்து வைக்கிறார்கள். இதோ பாலம் ரெடி. தொழில் நுட்பம்?

நம் வீடுகளின் முன்னே கார்ப்பரேஷன்காரர்கள் தோண்டும் மழைநீர்க் கால்வாய்களைக் கடக்க நாம் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பம்தான். அந்தப் பாலம் அமைத்த பிறகுதான் வேறு பிரச்சினைகள் வரத்தொடங்கின.

நெகம்டே நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் கேழ்வரகு, வேர்க்கடலை, மாம்பழம் அதிகமாக விளைகின்றன. மக்களின் பொக்குவரத்திற்கு அதிகமாகப் பயன்படுவது கழுதைகள்தான். கழுதைகள் மரப் பாலத்தைக் கடக்கும்போது அதன் கால்கள் மரக்கட்டைகளின் இடுக்குககளில் சிக்கி விபத்திற்குக் காரணமாக அமையத் தொடங்கி''ருந்தன. எனவே மரப் பாலத்தைக் கான்கிரீட் பாலமாக மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது அதிகச் செலவு பிடிக்கும் பணி. மேலும் அரசிடம் அனுமதி வாங்கவேண்டிய நிலை.

பேராசிரியர் தனது மாணவர்களோடு அந்தக் கிராமத்தின் தலைவரைச் சந்திக்கிறார். ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரே தன் இல்லம் தேடி வரும் நிகழ்வு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் அதிசயம்தான். நாங்களும் சிமின்ட் பாலம் அமைக்கும் பணிக்கு உதவுகிறோம் எனக் கிராமத் தலைவர் சொல்ல, அரசின் உதவி தேவைப்படாததால், அனுமதியும் கிடைக்க தொடர் பாலங்கள் சமுதாயப் பாலங்களாக உருவாகத் தொடங்கின. பொருளாதாரம் பாலத்தைச் சந்திக்கமுடியாமல் திணறும்போது தனது ஊதியத்தால் அதனைச் சரிசெய்துகொண்டார் பேராசிரியர்.

அதன்பிறகு பாலங்கள் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கத் தொடங்கின.

நெகம்டே நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை மலைகள் சூழ்ந்திருக்கும். அங்கு அதிக எண்ணிக்கை யில் நீரூற்றுகள் இருந்தன. அவைதான் அந்தக் கிராமத்தின் தாகம் தீர்க்கும் அமுதசுரபிகள். யிஒருமுறை அந்த நீரைக் கைகளில் அள்ளிப் பார்த்த பேராசிரியர் அதிர்ச்சிக்குள்ளானார். காரணம் நீரூற்றுகள் சுமந்துவந்த வண்டல் மண்துகள்கள். சமையலுக்கும் குடிநீருக்கும் அந்த அசுத்த நீரைத்தான் மொத்தக் கிராமமும் பயன்படுத்தி வருகிறது என்ற உண்மை தெரிய வருகிறது. வரட்சிக் காலங்களில் சிறிய குட்டைபோலத் தேங்கிக் கிடக்கும் நீரைத்தான் பருகிக் கொண்டிருக்கிறார்கள்.சிறிய கட்டமைப்புகளைக் கட்டி, அதன்மூலம் நீரை வடிகட்டும் வசதியைத் தன் மாணவர்களோடும் கிராம மக்களின் உதவியோடும் செய்துமுடித்திருக்கிறார். இப்போது அந்த கிராமங்கள் சுத்தமான தண்ணீர் மட்டுமின்றி, சுத்தமான காற்றையும் சுவாசிக்கின்றன.

''நான் பொறுப்பேற்று மாணவர்கள், கிராமங்கள் ஒருங்கிணைப்பில் உருவாகும் பாலத்திற்குச் சில காத்திரமான சிறப்பம்சங்கள் உள்ளன. தனியொருவனின் திட்டமானது கூட்டு முயற்சியின் செயல் வடிவமாக உருவெடுக்கும்போது அது சமுதாயத்திற்குச் சொந்தமாகிவிடுகிறது. பாலம் கட்டுமானத்தின் மூலப்பொருள்களான இரும்புக்கம்பி, பைப், சிமின்ட் போன்றவற்றை நான் வாங்கிச்செல்வேன். மாணவர்களும் என்னுடன் இருப்பார்கள். மரம், கற்கள் போன்றவற்றை மக்களிடம் கொண்டுவரச் சொல்வேன். இந்தப் பாலம் கூட்டு உழைப்பில் உருவான சமுதாயப் பாலமாகப் (ஈர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் இழ்ண்க்ஞ்ங்) பரிணமிக்கும். இது நம்ம பாலம் என்ற பொறுப்பு மக்களுக்கு வரும்போது பாலமே பெருமைப்படும்தானே !''

நெகம்டே கிராம மக்களால் நினைத்துப் பார்க்கமுடியாத வாழ்க்கை அதிசயங்களை நிகழ்த்திக் காட்டிவருகிறார் கண்ணன் அம்பலம்.

அவர் தனது ஆதர்சமாகக் கருதுவது முல்லைப் பெரியாறு அணைக் கதாநாயகன் பென்னிகுயிக்கைத்தான்.''எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக் நம் தாகத்தைத் தீர்க்கும்போது, நாம் எதியோப்பிய மக்களின் தாகம் மட்டுமல்ல பசியையும் தீர்க்வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இயற்கையாகவே எழுந்தது.''

அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மதுரையில் இருக்கிறார்கள். கண்ணன் அம்பலத்தைப் பொறுத்தவரை, முதல் மனைவியே கிராமம்தான் எனும் அளவிற்கு கிராம மக்களோடு ஒன்றாக, ஒரே குடும்பமாகக் கலந்துவிட்டார். அந்தக் கிராமத் தலைவரே''எங்க பொண்ணக் கட்டிக்குங்க ..'' என்று கூறும் அளவிற்குக் கிராமத்தை நேசிப்பவர்.

இனி பேராசிரியர் கண்ணன் அம்பலம் நேர்காணலில் நம்முடன் பேசுகிறார்.

இதுவரை நீங்கள் கட்டிய போக்குவரத்துப் பாலங்களின் அளவைக் கூறுங்களேன்.

பாலத்தின் நீளம் அதிகபட்சமாக சுமார் 24 மீட்டர், 4 மீட்டர் அகலம். பாலங்கள் அமைத்துத் தரச்சொல்லி 1000 கி?மீ தூரத்திற்கப்பாலிருந்தெல்லாம் அழைப்புகள் வருகின்றன. எங்களது சொந்தப் பணத்தில் பாலங்கள் அமைப்பதால் அரசிடமிருந்து அனுமதி வாங்கவேண்டிய கஷ்டங்கள் இல்லாததாலும், பணிகளைச் செப்பனிடவும், விரைந்து முடித்திடவும் முடிந்தன. மேலும் பொறியாளரை வைத்துப் பாலம் அமைப்பதில் பல சிக்கல்கள், நேர விரயங்கள் இருந்ததாலும் பொறியாளர், அரசின் அனுமதி போன்ற காலதாமதச் சிக்கல்கள், மன அழுத்தங்கள் இல்லாமல் பாலங்கள் உயிர்பெறத் தொடங்கின.

பாலங்கள் குடிநீர் கட்டமைப்புகள் பற்றி?

2021 மார்ச் 13 ஆம் தேதி கட்டிய பாலத்துடன், இதுவரை 60 பாலங்கள். 33 குடிநீர் கட்டமைப்புக் குழாய்கள் அமைத்து நீரைச் சுத்திகரித்திருக்கிறோம்.

நீரைத் தேக்கிவைத்துக்கொள்ள ஒரு சிறிய அணைகட்டியிருக்கிறோம். அத்துடன் அவர்கள் தேவையை உணர்ந்து பாதுகாக்கப்பட்ட கழிப்பிட வசதியும் செய்துகொடுத் திருக்கிறோம். சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் கழிப்பிட வசதிசெய்து பள்ளியின் சுகாதாரத்தில் மாணாக்கரின் கவனம் ஈர்த்திருக்கிறோம். ஒரு கிராமத்திற்கு மின்வசதியும் செய்துகொடுத்திருக்கிறோம்.

தொடர்கிறார் கண்ணன் அம்பலம். இப்போது கிராமத்தின் இதயத்தை நமக்காகத் திறக்கிறார்.

''மாணவர்களின் தன்னார்வம் அதிகரித்திருக்கி றது. மாணவர்கள் படிப்பு முடிந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். ஒரு பிரச்சினையை சமூகநலன் கொண்டு பார்த்துச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்தைப் பொறுத்தவரை அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன. பொறுப்புள்ள, சமூக அக்கறையுள்ள மனிதர்தான் கிராமத்தின் தலைவராக இருக்கிறார்.

கிராமத்தில் ஏற்படும் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள அவரே தீர்த்துவைக்கிறார்.

இங்கு மதம் முக்கியமில்லை. நோய்நொடிகளிலிருந்து விடுபட்டுக் குணமாகக் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது. அறுவடை காலங்களில் ஒரு விவசாயிக்காக அந்தக் கிராமமே துணைநிற்கிறது. கிராமத்தில் ஏழையின் வீட்டில் மரணம் சம்பவித்தால், அங்கு ஈமக் காரியங்களைத் தங்கள் சொந்தச் செலவில் செய்துமுடிக்கும் சமுதாயக் குழு இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தொடக்கம் முதல் இறுதிவரை அவரவர் கலாச்சாரத்தின் படி நிகழ்வை முடித்துவிடுவார்கள்.

அதுபோல தனியொருவர் வீடுகட்டும் நிகழ்வில், அந்தக் கிராமமே முன்வந்து நிற்கும். கட்டுமானம் முடியும்வரை உடலுழைப்பையும் சிறந்த ஆலோசனையும் கிராம மக்கள் வழங்கிவருகிறார்கள். கிராமத் தலைவர் அனைத்துப் பொறுப்புகளையும் எடுத்துக் கொள்வார்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் சமையலுக்கு உதவும் பொருட்களின் வியாபாரத்தில் அதிக அளவில் பெண்கள்தான் ஈடுபடுகிறார்கள். எடைக்கு எடை அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டால், மகிழ்வோடு பணத்தைப் பெற்றுக்கொண்டு கூடுதலாகவும் (கொசுறு) கொஞ்சம் பொருட்களைப் புன்னகையோடு வழங்கும் பாணி நெகிழவைக்கும்'' என்கிறார் பேராசிரியர்.

""இங்கு கிராமங்களில் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சமுதாயக் கூட்டம் போன்று ஒரு சந்திப்பு நடைபெறுகிறது. அனைவருக்கும் தேநீர் பரிமாறப்படுகிறது. கடந்த சந்திப்பிற்குப் பிறகான கிராமத்தின் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. குடும்பப் பகை தாண்டிய சச்சரவுகள், விவசாய மற்றும் நிலத் தகராறுகள் விவாதிக்கப்பட்டுத் தீர்த்து வைக்கப்படுகின்றன. அதாவது காவல்துறை செய்யவேண்டிய பணியை அந்தக் கிராமத் தலைவர் தலைமை''ல் அந்தக் குழு செய்துமுடிக்கிறது.

சில தீர்க்கமுடியாத, சிக்கலான பிரச்சினைகளுக்காக அரசாங்கமே இவர்கள் உதவியை எதிர் பார்த்து நிற்கும் அளவிற்குத் தன்னலமில்லாத பணிகளை ஒரு கிராம அமைப்பாக இருந்துகொண்டு நிறைவேற்றி வருகிறது அந்தக் கிராமத்தின் சமுதாயக் குழு.

எதியோப்பியாவின் அரசியல் பிரச்சினைகள் பல இருந்தும் இந்தக் கிராம மக்கள் எந்தவித எதிர்பார்ப்புமுன்றி பாசம் காட்டுபவர்கள். நாம் அவர்களுக்கு உதவுகிறோம் என்பது தெரிந்தால் நிறைய மரியாதை கொடுப்பவர்கள். தன்னலம் கருதாது மக்களோடு ஒன்றுவதென்பது ஒரு வரம். கூடுதலாக கிராம மக்களின் அன்புதான் அனைத் தையும் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்களை ஈடுபடுத்தாமல் நான் எந்தப் பணியையும் செய்வதில்லை. எது ஒன்று நமக்குச் சொந்தமானதோ அதனைமட்டுமே பாதுகாக்கும் எண்ணமுடையவர்கள் நாம். பாலங்களும், குடிநீர் கட்டமைப்புகளும் நம்முடையது என்ற எண்ணம் கிராம மக்களுக்கு வரவேண்டும். அப்போதுதான் அவைகளைப் பாதுகாக்கும் மாண்பு வளரும். அதனால் அவர்களைக் கொண்டே எங்களது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் வடிவம் தந்திருக்கிறேன். சிறிய கட்டமைப்பை உருவாக்க அதிகபட்சம் 100 டாலர்கள் செலவாகும். இதனைப் பெரும்பாலும் எனது ஊதியத்திலிருந்து செலவுசெய்வேன். சில சமயங்களில் நண்பர்கள் தருவார்கள். பணத்தைவிட முக்கியம் உடலுழைப்பு. இதனைக் கிராம மக்கள் தருவார்கள். இது ஒரு கூட்டு முயற்சிதான்.''

பேன்டமிக் கரோனா வைரஸ் தொற்று குறித்த எச்சரிக்கைச் செய்திகளையும் அவ்வப்போது அவர்களிடமும் சொல்லிலி வருகிறார்.

நூல் மற்றும் கட்டுரைகளுடன் பத்திற்கும் மேற்பட்ட வெளியீடுகள், துறை சார்ந்த ஆய்வு இதழ்களில், சமூக அறிவியல் ஆய்வின் உலக இதழ் உட்பட (ரர்ழ்ப்க் ஓர்ன்ழ்ய்ஹப் ஞச் நர்ஸ்ரீண்ஹப் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்) 5 இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.

அரசாங்கம், தனியார் துறை, சேவை நிறுவனம், கார்ப்பரேட்கள், சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் கொஞ்சம்கூட மக்கள் பணியாற்ற, மக்களின் குறைகளை அறிந்திட, அவர்களின் சிக்கல்கள் களைந்திட எந்தவிதமான சிறு முயற்சிகளும் எடுக்காத நிலையில் தனியொருவராக நின்று எதியோப்பியக் கிராமங்களின் முகத்தையே மாற்றியமைக்கும் நவீன பென்னிகுயிக் கண்ணன் அம்பலம் மதுரை மண்ணின் மைந்தர் எனும்போது கூடுதல் பாசம் வருவதும் இயற்கைதானே. சாதி, இனம், மதம், மொழி, தேசம் கடந்து முன்பின் அறிந்திடாத மக்களின் மனங்களில் வேரூன்றி நிற்கும் அந்தத் தமிழருக்குச் சிகரங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

நெகம்டே சூப்பர் ஸ்டாரின் சேவையைப் பாராட்டுவோம்.