சீனா, நைஜீரியா, ஆஃப்ரிக்கா, துருக்கி ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நாட்டுப்புறக் காதல் கதைகள் நான்கினை இங்கு உங்களின் வாசிப்புக்கு விருந்தாக்குகிறேன்.

இவை நாட்டுபுறக்கதைகள் என்பதால் அதை ஈன்றவர் பெயர் இல்லை. உலக நாட்டுப்புறக் கதைகளை மறுகூறல் முறையில் மறு ஆக்கம் செய்த கதைகள் இவை. இக்கதைகள் பல்வேறு இணைய தளங்களிலும், மின்நூல்களிலும் இடம்பெற்ற ஆங்கிலம் வழிக் கதைகளை மூலமாகக் கொண்டு மறு ஆக்கம் செய்யப்பட்டவை. கதைசொல்லலுக்கே உரித்தான முறையில் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு, சுவாரஸ்யத்தைக் கூட்டி இவற்றை எழுதி யிருக்கிறேன். நான்கு கதைகளும் நான்கு விதமான சுவையுடன், மாறுபட்ட கதைக் களங்களும், கற்பனை வளமும், அழகியலும், இலக்கியச் சுவையும் கொண்டவையாக இருக்கும். சுவைத்துப் பார்த்து உங்கள் அனுபங்களையும், கருத்துகளையும் தெரிவியுங்கள்.

நிலா எப்படி அழகானது?

(சீன நாட்டுப்புறக் கதை)

Advertisment

உலகம் இருண்டு கிடக்கிற இரவுகளில், நிலா தனது வட்ட வடிவம், வெண்ணிறம், இதமான ஒளி ஆகியவற்றால் வானில் அழகுற ஒளிர்கிறது. அது அழகாக இருப்பது மட்டுமல்ல; தான் வாழ்ந்துகொண்டிருக்கிற வானத்துக்கும் தனது ஒளியால் அழகூட்டுகிறது. அது மட்டுமா; நாம் வாழ்கிற இந்த பூமியையும் நிலா எவ்வளவு அழகானதாக மாற்றிவிடுகிறது! பகல்பொழுதில் அழகற்றதாகவும், அசிங்கமாகவும் காட்சியளிக் கிற இடங்கள்கூட நிலவொளியில் அழகானதாக மாறிவிடுவது, ஒரு மாயாஜாலம் போலத் தோன்றும்.

ரசனை உள்ள எல்லோருமே நிலாக் காலங்களில், அதன் பால் போன்ற வெண்மை, கண்களை உறுத்தாத பிரகாசம், குளுமையான மென்னொளி ஆகியவற்றை ரசிப்பார்கள். பௌர்ணமி மற்றும் அதை ஒட்டிய நாட்களில், மக்கள் தமது வீட்டு வாசலில் அமர்ந்து, நிலவொளியை ரசித்தபடி அரட்டையடிப்பது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, நிலாச் சோறு உண்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது முந்தைய காலங்களில் வழக்கமாக இருந்தது.

கவிஞர்களும் காதலர்களும் நிலவை அதிகமாக விரும்புவார்கள். காரணம், அது அவர்களின் ரசனை மற்றும் காதல் உணர்ச்சியைக் கூட்டுவதால்தான்.

Advertisment

ஆனால், நிலா இப்போது இருப்பதுபோல முன்பு அழகானதாக இல்லை. ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு நிலவின் முகம் ஒரே இரவில் இதுபோல் மாறியது. அதற்கு முன்பு நிலவின் முகம் கருத்ததாகவும், மூட்டமானதாகவுமே இருந்தது. அதனால் யாருமே அதை விரும்பவில்லை. அதனால் நிலா எப்போதும் வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.

நிலவின் முகத்தைப் பார்க்கக்கூடியவையாக இருந்த நட்சத்திரங்கள் மற்றும் பூக்களிடம் இதுபற்றி ஒரு நாள் நிலா குறைபட்டுக்கொண்டது.

நான் நிலவாக இருப்பதற்கு விரும்பவில்லை. நட்சத்திரமாகவும் மலராகவும் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு நட்சத்திரமாக இருந்தால், மிகச் சிறிதாக இருந்தாலும்கூட, மனிதர்கள் என் மீது கவனம் கொள்வார்கள். ஆனால், நான் நிலவாகப் பிறந்து விட்டேன். அதனால் ஒருவரும் என்னை விரும்புவது இல்லை. நான் ஒரு மலராக இருந்திருந்தால், பட்டாம்பூச்சிகளும், தேன் சிட்டுகளும், தேனுண்ணி வண்டுகளும் என்னை உயிருக்குயிராக விரும்பியிருக்கும். தோட்டத்தில் என்னைக் காண அழகிய மானிடப் பெண்களும் வருவார்கள். அவர்கள் என்னைத் தனது கூந்தலில் சூடிக்கொண்டு, அழகுக்கு அழகு சேர்ப்பார்கள். அழகிய பெண்களின் தலை மீது ஏறியிருக்கிற பெருமையும், எனது அழகு மற்றும் நறுமணத்துக்காக அவர்களால் பாராட்டப்படுகிற மகிழ்ச்சியும் எனக்குக் கிடைத்திருக்கும். அல்லது ஒருவேளை நான் காட்டுப் பூவாக வனத்தில் மலர்ந்திருந்தாலும், மனிதர் யாரும் என்னைப் பார்த்திராவிட்டாலும்கூட, நிச்சயமாக கானப் பறவைகள் என்னருகே வந்து இனிமையான பாடல்களை எனக்காகப் பாடும். ஆனால் நான் அழகற்ற நிலவாகப் பிறந்துவிட்டேன். ஒருவரும் என்னை விரும்புவதோ மதிப்பதோ இல்லை…”

அப்போது நட்சத்திரங்கள், “நாங்கள் உனக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. நாங்கள் உன்னிலிருந்து ஒளியாண்டு தொலைவுகளுக்கு அப்பால் இருக்கிறோம்.

எங்களுடைய இடத்தை விட்டு எங்களால் இடம்பெயர முடியாது. நாங்கள் எங்களின் கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம். கருமையான இரவுகளில் எங்களுடைய சிற்றொளியால் மினுங்கி, வானத்தை மேலும் அழகுபடுத்துகிறோம். எங்களால் அதை மட்டுமே செய்ய இயலும்” என்று சொல்லிவிட்டு வருத்தமான நிலவைப் பார்த்து இனிமையாகப் புன்முறுவல் செய்தன.

புன்னகை மாறாப் பூக்கள் நிலவை ஆதுரமாகப் பார்த்துவிட்டு, “உனக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்கும் தெரியவில்லை. உலகின் மிக அழகான குமரியால் பராமரிக்கப்படும் அழகிய தோட்டத்தில் நாங்கள் நலமாக இருக்கிறோம். அவளது பெயர் ஸே நியோ. நாங்கள் அவளை மிகவும் நேசிக்கிறோம். அவளும் எங்களை மிகவும் நேசிக்கிறாள். அவள் மிகவும் ஆதரவானவள். எவர் ஒருவர் பிரச்சனையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவுவாள். நாங்கள் அவளிடம் உன்னைப் பற்றி சொல்கிறோம்” என ஆறுதல் கூறின.

அப்போதும் நிலா சோகத்தோடேயே இருந்தது.

ஒரு நாள் மாலை அது அந்த அழகான குமரி ஸே நியோவைக் காணச் சென்றது. அது அவளைக் கண்டதுமே அவளிடம் காதல் வயப்பட்டது.

“உனது முகம் மிகவும் அழகாக இருக்கிறது. உனது அசைவுகள் இதமானதாகவும் அருளார்ந்ததாகவும் உள்ளன. நீ என்னிடம் வந்தால், உன் மூலமாக எனது முகமும் அழகாகிவிடும். எனவே நீ என்னிடம் வர வேண்டும் என விரும்புகிறேன். நீ என்னுடன் வந்துவிடு. நாம் இருவரும் ஒன்றாக, பொருத்தமானவர்களாக இணைந்திருப்போம். இந்த பூமியில் உள்ள மிக மோசமான மனிதர்கள் அனைவரும் உன்னை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நீ எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று எனக்கு சொல்.”

நான் எப்போதுமே மகிழ்ச்சியோடும், கனிவோடும் உள்ள மனிதர்களுடன் வாழ்ந்து வருகிறேன். அதுதான் நான் நல்லவளாகவும் அழகானவளாகவும் இருக்க காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”

ஒவ்வொரு நாள் இரவிலும் நிலா அவளைக் காணச் சென்றது. அது அவளது ஜன்னலைத் தட்டியதும் அவள் வருவாள். அவள் எவ்வளவு மென்மையானவளாகவும், அழகாகவும் இருக்கிறாள் என்பதை நிலா பார்க்கும்தோறும் அதன் காதல் அதிகரிக்கும். அவள் எப்போதும் தன்னோடு இருக்கவேண்டுமென்ற ஆசையும் மிகும்.

அவளுக்கு நிலவின் மீது முதலில் இரக்கம் மட்டுமே இருந்தது. தொடர்ந்து பழகப் பழக, அவளும் காதல் கொண்டுவிட்டாள்.

ஒரு நாள் ஸே நியோ தனது தாயாரிடம் சொன்னாள், நான் நிலவுடன் சென்று அதனுடன் வாழ விரும்புகிறேன். நீ என்னை போக அனுமதிப்பாயா?”

அவளது தாய் அப்போது ஏதோ யோசனையில் இருந்ததால் மகள் கேட்டது அவள் காதில் விழவில்லை. எனவே, அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அதைக் கண்ட ஸே நியோ, தனது தாய்க்கு அதில் விருப்பமில்லாததால்தான் சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறாள் என எண்ணிக்கொண்டாள்.

பிறகு அவள் தனது தோழிகளிடம் தான் நிலவின் மணப்பெண்ணாக செல்லவிருப்பதாகத் தெரிவித்தாள்.

ஒருசில நாட்களில் அவ்வாறே அவள் சென்றுவிட்டாள். அன்றைய இரவில்தான் நிலா முதல்முறையாக பால் போன்ற ஒளியுடன் அழகாக ஒளிர்ந்தது.

ஸே நியோவின் தாயார் அவளைத் தேடிப் பார்த்து எங்கும் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவள் நிலவின் மணப்பெண்ணாக சென்றுவிட்ட தகவலை அவளது தோழி ஒருத்தி தெரிவித்த பிறகே தாய்க்கு முழு விவரமும் தெரிந்தது. மகள் இப்படிச் செய்துவிட்டாளே என்ற வருத்தம், அவள் இப்போது எப்படி இருக்கிறாளோ என்ற கவலை ஆகியவற்றோடு, என்றேனும் அவள் தன்னைக் காண வருவாள் என ஒவ்வொரு நாளும் தாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

வருடங்களுக்குப் பிறகு வருடங்கள் கழிந்தன. ஸே நியோ பூமிக்குத் திரும்பவேயில்லை. “

அவள் நிலவிலேயே தங்கிவிட்டாள். இனிமேல் ஒருபோதும் திரும்ப மாட்டாள்” என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

ஒரு காலத்தில் உலகின் மிக அழகான பெண்ணாக இருந்த ஸே நியோவால்தான் நிலவின் முகம் இப்போதும் அழகாக இருக்கிறது. அது தனது மணப்பெண்ணை இந்த பூமியிலிருந்து எடுத்துக்கொண்டதால்தான் நன்றிக் கடனாக தனது இதமான ஒளியை வழங்கியபடி, இந்த பூமியை இன்னமும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

மண்டையோட்டை மணந்த பேரழகி (நைஜீரிய நாட்டுப்புறக் கதை)

எஃபியோங் ஏடம்மின் மகள் அஃபியோங், பேரழகி. அவளை மணந்துகொள்ள செல்வந்தர்கள் பலரும் போட்டியிட்டு, எஃபியோங்கிடம் பெண் கேட்டு வந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் எஃபியோங்கின் நண்பர்களும்கூட. ஆனால், அவர்கள் வயோதிகர்கள்; அவலட்சணமானவர்கள். எனவே, அஃபியோங் அவர்களைப் புறக் கணித்துவிட்டாள்.

அவளைப் பெண் கேட்டு வந்த உள்ளூர் இளைஞர்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

தனக்குக் கணவனாக வரப் போகிறவன், இளைஞனாக மட்டுமன்றி, அழகானவனாகவும், உறுதியானவனாகவும் இருக்கவேண்டும் என்று அவள் பிடிவாதமாக இருந்தாள்.

அஃபியோங்கின் பேரழகின் புகழ், நாடு முழுதும் பரவியதோடு, ஆவிகளின் நிலத்திற்கும் பரவியது. அங்கிருந்த மண்டையோடு அதைக் கேள்விப்பட்டு, அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டது.

அதனால் அது தன் நண்பர்களிடம் சென்று, அவர்களின் அழகான உடல் பாகங்களை இரவல் கேட்டது. ஒருவரிடம் தலை, இன்னொருவரிடம் உடல், வேறொருவரிடம் கைகள், மற்றொருவரிடம் கால்கள் என அவரவரின் அழகான பாகங்களை மண்டையோடு இரவலாகப் பெற்றுக்கொண்டது.

அவற்றைப் பொருத்திக்கொண்டதும் மண்டையோடு இப்போது, தனித் தனியான அத்தனை அழகுகளும் மொத்தமாகச் சேர்ந்து, பேரழகனாக ஆகிவிட்டது.

அது, ஆவிகளின் நிலத்திலிருந்து வெளியேறி, மனிதர்களின் நாட்டிற்குள் வந்து, அஃபியோங்கின் ஊரை அடைந்தது. சந்தையில் அவளைக் கண்டு, அவளது பேரழகில் மயங்கியது. ஆனால், அவள் அப்போது மண்டையோட்டை கவனித்திருக்கவில்லை.

அந்நிய நாட்டு ஆடவனான மண்டையோட்டின் பேரழகு, சந்தையில் கவனிப்புக்குள்ளானது. செய்தி பரவி, அஃபியோங்கின் காதுக்கும் வந்து சேர்ந்தது. அவளும் அந்தப் பேரழகனைக் காண ஆவலோடு விரைந்து வந்தாள்.

இரவல் அழகோடு இருக்கும் மண்டையோட்டைக் கண்டதுமே, அதன் அழகில் மயங்கி, அதனிடம் காதல் வயப்பட்டாள். மண்டையோட்டிடம் சென்று தன் காதலைத் தெரிவித்து, தன் வீட்டுக்கு வந்து தன்னைப் பெண் கேட்குமாறு சொன்னாள்.

மண்டையோடு எல்லையற்ற மகிழ்ச்சியோடு அவளுடன் அவளது வீட்டிற்கு வந்தது.

நான் உங்கள் மகளை விரும்புகிறேன்; அவளும் என்னை விரும்புகிறாள். எங்களுக்கு மணம் செய்து வையுங்கள்” என்று மண்டையோடு கேட்டது.

எஃபியோங்கும், அவரது மனைவியும் அதை முதலில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தொலைதூரத்தில் இருக்கும் அந்நிய நாட்டவருக்கு தங்களுடைய மகளைக் கொடுப்பதில்லை என அவர்கள் கூறினர்.

ஆனால் அஃபியோங், மண்டையோட்டை மணந்து கொள்வதில் உறுதியாக இருந்ததாள். வேறு வழியின்றி, அவர்கள் இருவருக்கும் அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

மண்டையோடு இரண்டு தினங்கள் மணமகள் வீட்டில் தங்கி இருந்தது. அதற்கு அடுத்த நாள், தனது நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னது.

அஃபியோங் அதனுடன் செல்ல சம்மதித்தாள். ஆனால், எஃபியோங் அதை மறுத்து, நீ போக வேண்டாம் எனத் தடுத்தார். அவள் அதைக் கேட்கவே இல்லை. பெற்றோரை மீறி, புதுக் கணவனுடன் புகுந்த வீடு நோக்கி சென்றாள்.

மனிதர்களின் தேச எல்லையைக் கடந்து, ஆவிகளின் நிலத்திற்குள் சென்றதுமே, மண்டையோட்டுக்கு இரவல் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து, தாங்கள் இரவல் கொடுத்ததைத் திரும்பக் கேட்டு, வாங்கிச் சென்றனர்.

முதலாவதாக தலை, அடுத்ததாக கைகள், பிறகு கால்கள், இறுதியாக உடம்பு என ஒவ்வொன்றும் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

dd

மிச்சமிருந்த மண்டையோட்டைப் பார்த்து அஃபியோங் பயந்தாள். அது தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்து, தனது ஊருக்குத் திரும்பிச் செல்ல விரும்பினாள்.

ஆனால் மண்டையோடு அவளை மிரட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது.

அங்கே மண்டையோட்டின் தொண்டு கிழமான தாயார் ஆவி இருந்தது. அந்த ஆவியால் வேலை எதுவும் செய்ய இயலாது. அஃபியோங்தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து, ஆவிக் கிழவிக்கு எல்லா பணிவிடைகளையும் செய்தாள். அதனால் அந்தக் கிழட்டு ஆவிக்கு அஃபியோங்கிடம் நன்றி உணர்ச்சியும், அன்பும், இரக்கமும் ஏற்பட்டன.

இங்குள்ள பிசாசுகள், நர மாமிசம் தின்னக் கூடியவை. இங்கே நீ இருப்பது தெரிந்தால், அவை உன்னைக் கொன்று தின்றுவிடும். எனவே, எவ்வளவு சீக்கிரம் நீ உனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியுமோ, சென்று விடு! நான் உனக்கு உதவுகிறேன்” என்றது அது.

மண்டையோடு வீட்டில் இல்லாதபோது அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆவிக் கிழவி, சிலந்தியை வரச் செய்து, அஃபியோங்கிற்கு புதிய நாகரிகத்தில் கூந்தல் பின்னிவிடச் செய்தது. பட்டாம்பூச்சியை வரவழைத்து, அழகிய ஆடைகளை அணிவித்துவிடச் செய்தது.

பிறகு, காற்றை அழைத்தது. முதலில் வந்த காற்று, இடி - மின்னல் - மழையுடன் கூடிய சூறாவளி. எனவே, அதை வேண்டாம் என்று திருப்பி அனுப்பிவிட்டது, அந்த ஆவி.

அடுத்ததாக வந்தது, இதமான தென்றல்.

அதனிடம் அஃபியோங்கை ஒப்படைத்து, “இவளை இவளது பிறந்த வீட்டுக்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடு” என்று கூறி, அஃபியோங்கிற்கு பிரியாவிடை கொடுத்து, வழியனுப்பி வைத்தது.

தென்றலும் அவளைத் தூக்கிச் சுமந்து, பத்திரமாகக் கொண்டுவந்து அவளது வீட்டில் இறக்கிவிட்டது.

மகள் உயிர் தப்பி திரும்பி வந்த சம்பவத்தால், பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அஃபியோங்கின் தோழிகளையும், தங்களின் உறவினர் களையும், உள்ளூர் பிரமுகர்களையும் அழைத்து, எட்டு நாட்களுக்கு விருந்து நடத்தி, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். ஆடலும் பாடலும், வாண வேடிக்கைகளுமாக ஊரே அமர்க்களப்பட்டது.

எஃபியோங் மன்னரை சந்தித்து, ஒரு கோரிக்கையை வைத்தார். அதன்படி மன்னரும் ஒரு ஆணை பிறப் பித்தார். இனிமேல் ஊரிலுள்ள யாரும் தெரியாத தூரதேசத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய மகளை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது என்பது சட்டம் ஆயிற்று.

அதன் பிறகு எஃபியோங் தனது நண்பர் ஒருவரை மணந்து கொள்ளும்படி மகளிடம் சொன்னார். அவளும் சம்மதித்து அவரை மணந்துகொண்டாள். அவர்கள் இருவருக்கும் நிறைய குழந்தைகள் பிறந்து, நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

காதலுக்குப் பல் இல்லை!

(ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதை)

அந்தக் கானகத்தின் அரசனான சிங்கம், ஒரு கன்றுக் குட்டியின் அழகில் மயங்கி, அதனிடம் காதல் வயப் பட்டது. அந்த இளம் கன்றுக் குட்டி தனியாக துள்ளித் திரிந்துகொண்டிருக்கும் சமயங்களில், அதனிடம் தன்னுடைய காதலைத் தெரிவிக்கச் செல்லும். ஆனால், கன்றுக்குட்டியோ, சிங்கம் தன்னைப் பிடித்துத் தின்னத்தான் வருகிறது என்று பயந்து, பாய்ந்து ஓடி விடும்.

ஒரு முறை சிங்கம் அதை ஒருவாறு மடக்கிப் பிடித்து, “நான் உன்னைத் தின்ன வரவில்லை. ஐ லவ் யூ, செல்லக்குட்டீ…” என்று கொஞ்சியது.

கன்றுக்குட்டி அதைக் கேட்டு இன்னும் மிரண்டு விட்டது. ஆனாலும் அது ஆச்சரியப்பட்டு, “சிங்கம் அதற்கு இரையாகக்கூடிய விலங்கினத்தைக் காதலிப் பது பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது. அது நடக்காத காரியம். நான் உங்களை நம்பமாட்டேன்” என்றது.

நிஜமாகவே நான் உன்னைக் காதலிக்கிறேன், புஜ்ஜுக் குட்டீ! உன்னைப் போன்ற செம ஃபிகரை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. உன்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்புகிறேன்.” இதில் ஏதோ சதி உள்ளது என்று கருதிய கன்றுக் குட்டி, “நான் எனது பெற்றோர் பார்த்துவைக்கும் மாப்பிள்ளையைத்தான் மணந்து கொள்வேன். நீங்கள் வேண்டுமானால் என் பெற்றோரிடம் பேசிப்பாருங்கள். அவர்களுக்கு சம்மதம் என்றால், எனக்கும் சம்மதம்” என்று நைச்சியமாக சொல்லிவிட்டு, சிங்கத்திடமிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

தங்களின் வசிப்பிடத்திற்குச் சென்ற அது, தனது பெற்றோரிடம் முறையிட்டது: “ஒரு சிங்கம் என்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொல்லி, ஈவ் டீசிங் செய்கிறது. என் பெற்றோரிடம் வேண்டுமானால் பேசிப் பாருங்கள் என்று அதனிடம் டிமிக்கி காட்டிவிட்டு வந்துவிட்டேன். அந்த சிங்கத்தைப் பார்த்தாலே எனக்கு நடுக்கமாக இருக்கிறது. அது நிச்சயமாக உங்களைத் தேடி வந்து என்னைப் பெண் கேட்கும். எப்படியாவது அதனிட மிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.”

தாய் மாடு பதற, அதையும் சாந்தப்படுத்திய தந்தை எருது, “கவலைப்படாதீர்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்” என தைரியப்படுத்தியது.

மறுநாள் அதேபோல சிங்கம் புல் கட்டு, தவிடு - புண்ணாக்கு முதலான சீர் செனத்தியோடு அங்கு வந்து, கன்றுக்குட்டியைப் பெண் கேட்டது.

எருது: “சிங்கமும் பசுங்கன்றும் திருமணம் செய்துகொள்வதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. அது அமெரிக்காவில்கூட இல்லாத காரியம். மேலும், நாங்கள் ஆச்சாரமானவர்கள். எனவே, இதற்கு சம்மதிக்க இயலாது.”

சிங்கம்: “இதுவரை இல்லாவிட்டால் என்ன, மாமா? நாம் புதிய சரித்திரம் படைப்போம். இது எங்களின் புரட்சிகர கலப்புத் திருமணமாக இருக்கும்.”

மாடு: “இல்லை; அதை நாங்கள் சம்மதிக்க மாட்டோம்; எங்கள் உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”

சிங்கம்: “யார் ஏற்றாலும், ஏற்றுக்கொள்ளா விட்டாலும் நீங்கள் சம்மதித்தே ஆகவேண்டும். இது அரச கட்டளை. என்னை மீறி உங்களால் இந்தக் காட்டுக்குள் வாழ இயலாது. இங்கிருந்து நீங்கள் தப்பிச் செல்லவும் இயலாது. இப்போதே நீங்கள் சம்மதித்து, எங்களது திருமணத்தை நடத்த வேண்டும்!”

உடனே எருது பணிந்து, “அரசே! உங்களை எதிர்த்து எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பது எங்களுக்கு நன்கு தெரியும். உண்மையிலேயே, உங்களை மருமகனாக அடைவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் மகள் சிறுமி; மிகவும் மென்மையானவள். அவள் உங்களின் பற்களையும் நகங்களையும் பார்த்து பயப்படுகிறாள். எனவே, உங்களுடைய பற்களையும் நகங்களையும் கழற்றி விடுவதற்கு நீங்கள் சம்மதித்தால், நாங்கள் பெருமகிழ்ச்சியோடு எங்களுடைய மகளை உங்களுக்கு மணமுடித்துத் தருவோம்” என்றது.

காதலில் மதிமயங்கி இருந்த சிங்கம் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டது.

எருதும் மாடும் சேர்ந்து, தமது உறுதியான கால் குளம்பால் உதைத்து உதைந்தே சிங்கத்தின் பற்களையும் நகங்களையும் ரத்தம் வர உதிர்த்துவிட்டன. சிங்கத்தின் வாயிலும், கால் விரல்களிலும் ரத்தம் கொட்டியது. உயிர் போகிற மாதிரி வலி. எனினும், காதல் மயக்கத்தில் இருந்த சிங்கம், அதைத் தாங்கிக்கொண்டது.

இனி எங்களின் திருமணத்தை நடத்திக் கொடுங்கள்.”

பல் இழந்த ரத்தப் பொக்கை வாயில் வேதனையோடு சொன்ன சிங்கத்தைப் பார்க்க கன்றுக்குட்டிக்கே பரிதாபமாயிற்று.

எருதும் மாடும் நகைத்தன.

திருமணமா? முட்டாள் பயலே! இனி நீ சிங்கம் அல்ல. உன்னுடைய பற்களும் நகங்களும் இல்லாமல் உன்னால் யாரையும் ஒன்றும் செய்ய முடியாது. பற்கள் இல்லாததால் இனிமேல் உன்னால் இறந்து போன விலங்குகளைக்கூட தின்ன இயலாது. பட்டினி கிடந்து, கூடிய விரைவிலேயே நீ சாகப் போகிறாய்.

அதற்குள் ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு. இல்லா விட்டால் உன்னை எங்களின் கொம்புகளால் முட்டிக் கொன்றுவிடுவோம்.”

காதல் மயக்கத்தில் ஏமாந்த சிங்கம், வேறு வழியின்றி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, பகுடு மற்றும் பாத வலியோடும், காதல் தோல்வி சோகத்தோடும் அங்கிருந்து வெளியேறியது.