எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற மகா கலைஞன். குயில்கள் கூவித்திரியும் கோணோட்டம்பேட்டை என்கிற கிராமத்தில் கண் மலர்ந்தவர். இது இங்குள்ள திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே இருக்கும் குயில்பாடும் சிற்றூர்.
அங்கே ஹரிகதா காலட்சேபம் செய்யும் சாம்பமூர்த்தி -சகுந்தலாம்பாள் என்கிற கலைத் தம்பதிகளுக்கு 1946 ஜூன் 4 ஆம் தேதி மகனாகப் பிறந்தார் எஸ்.பி.பி.
அவர் அம்மாவும் நன்றாகப் பாடக்கூடியவர்.
இளமையெனும் பூங்காற்று
அப்பாவும் அம்மாவும் பாடக் கூடியவர்கள் என்பதால், மாணவப் பருவத்திலேயே எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் இசையின் மரபணுக் கள் அமர்ந்துகொண்டு தர்பார் நடத்தத் தொடங்கி விட்டன. அதனால் பள்ளி மேடைகளில் அவர் பாட ஆரம்பித்தார். அந்த இனிய கந்தர்வக்குரல் அனைவரையும் ஈர்த்தது. அதுதான் அவரைத் திரைப்பட ஒலிப்பதிவுக் கூடங்களுக்கு, அவரின் கைகளைப் பிடித்து அழைத்து வந்து, மாபெரும் இசைக் கலைஞனாக கொஞ்சம் கொஞ்சமாக சிறகடிக்க வைத்தது. .
இவருடன் பிறந்தவர்கள் என்றால் இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும். இவர்களில் இளைய சகோதரியான எஸ்.பி. சைலஜாவும், அண்ணனைப் பின்பற்றிப் பாடத்தொடங்கி, ஆயிரக்கணகான பாடல்கள் பாடியிருக்கிறார். விருதுகளையும் குவித்திருக்கி றார்.
இசையாய் மலர்ந்தார்
எஸ்.பி.பி.யின் சொல்லுக்குக் கட்டுண்டு, புல்லாங்குழலும் ஆர்மோனியமும் கூட வித்தை காட்டின. இவற்றை அவ்வளவு அழகாக அவர் இசைப்பாராம். பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூர், ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த எஸ்பி.பி.க்கு திடீரென ஏற்பட்ட டைபாய்டு காய்ச்சல், அவர் பொறியியல் படிப்பைக் கத்தரித்தது. பின்னர் அவரது படிப்பைச் சென்னையில் தொடரவைத்தது. அதன்பின் கல்லூரிப் பாடல் போட்டிகளில் யில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார்.
64-ல் சென்னையில் இருக்கும் ’தெலுங்கு கலாச்சார நிறுவனம்’ நடத்திய இசை நிகழ்ச்சியில் அவர் பாடியபோது, அதற்கு நடுவராக வந்த தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணியின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தார். அவர் அவரைத் தெலுங்குப் படங்களில் பாடவைத்தார். இதன் பின்னர் தான் தமிழ்த்திரையுலக வானில் அவரது வண்ணச் சிறகுகள் விரியத்தொடங்கின. சாந்தி நிலையத் தில் ’இயற்கை என்னும் இளைய கன்னியை அவர் முதலில் பாடினாலும், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் அவர் பாடிய ‘ஆயிரம் நிலவே வா...’ பாடல்தான் அவருக்கு முதல் முகவரியானது. அதிலிருந்து அவர் குரல் இசைச்சிறகு கட்டி எட்டுத் திசையிலும் பறக்கத் தொடங்கிவிட்டது.
இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய நட்பை பெற்ற எஸ்.பி.பி., இளையராஜா சகோதரர் களோடு சேர்ந்து மெல்லிசைக் கச்சேரிகளையும் ஆரம்ப நாட்களில் நடத்திவந்தார் எஸ்.பி.பி. பின்னர் ராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தமிழ் மக்களின் இதயத்தில் இடம் பிடித்து, அவர்களின் அன்றாட வாழ்வோடு முழுதாகக் கலந்துவிட்டார். அவரோடு கடைசி நாட்களில், சிறு ஊடல் ஏற்பட்டபோதும், ராஜா கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், புன்னகையோடு தனது நண்பனின் கோபத்தையும் தாங்கிக்கொண்டார் எஸ்.பி.பி.
இளம் வயதிலேயே அவரது திருமணம் நடந்துவிட்டது. தனது உறவுக்காரப் பெண்ணான சாவித்ரியை, பெற்றோர் எதிர்ப்பை மீறிக் காதல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இசை வானம் படிக்கட்டுகளைக் கொடுக்க, அவற்ற்றில் அவர் ஏறிக்கொண்டே இருந்தார்.
ஆறு தேசிய விருதுகள்
இதுவரை 42 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி.பி., ஆறு தேசிய விருதுகளை தன் இனிய குரலால் வாங்கிக் குவித்திருக்கிறார்.
79-ல் தெலுங்கில் வெளியான சங்கராபரணம் படத்தில் அவர் பாடிய ’ஓம்கார நாதானு....’ என்னும் பாடல்தான் அவருக்கு முதல் தேசிய விருதை பூச்செண்டாகக் கொடுத்து வாழ்த்தியது. முறையாக இசையைக் கற்காமலே, கர்நாடக சங்கித வித்வான்களை எல்லாம் திகைக்க வைக்கும் அளவிற்கு அந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் தேனாய்ப் பெருக்கெடுத்து ஓடியது. கர்நாடக சங்கீதத்தை வேப்பங்காயாக நினைத்திருந்த இளைஞர்கள் கூட இந்தப் பாடலுக்கு அடிமையாகி, அதைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்து கொண்டாடினார்கள். இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய அந்த படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அத்தனைப் பாடல்களையும் எஸ்.பி.பி, தனித்துவத்தோடு பாடியிருந்தார்.
அடுத்து இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தி படமான ’ஏக் துஜே கேலியே’ படத்தில் இடம்பெற்ற ’தேரே மேரே பீச் மெயின்’ பாடலுக்காக 1981-ல் எஸ்.பி.பி. இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார். எல்.வி. பிரசாத் தயாரிப்பில் வெளியான அந்த படத்திற்கு லக்ஷ்மிகாந்த் இசையமைத்திருந்தார்.
அடுத்ததாக கே. விஸ்வநாத் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஜெயப் பிரதா, சரத்பாபு நடிப்பில் வெளியான ’சாகர சங்கமம்’ என்னும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற ""வேதம் அனுவனுவனுவனா"" என்ற பாடலைப் பாடியதற்காக அவருக்கு மூன்றாவது முறையாக தேசிய விருது கிடைத்தது.
அதன்பின் 1988-ல் வெளியான ’ருத்ரவீணா’ படத்தில் பாடிய ’செப்பலாணி உண்டி’ பாடலுக்காக அவர் 4வது முறையாக தேசிய விருதைப் பெற்றார்.
அடுத்து 5ஆவது முறையாக கன்னடத்தில் வெளியான ’சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர காவாய்’ படத்தில் இடம்பெற்ற ’உமண்டு குமண்டு கன கர்’ பாடலுக் காக தேசிய விருதைப் பெற்றார்.
கடைசியாக 1997 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி, நாசர் நடிப்பில் தமிழில் வெளியான ’மின்சார கனவு’ படத்தில் வரும் ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருதைப் பெற்று, இசை ரசிகர்களை மகிழவைத்தார். இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான். இப்படி 6 தேசிய விருதுகளைப் பெற்று இசையுலகில் உயர்ந்து நின்றார் எஸ்.பி.பி.
-இது தவிர 25 நந்தி விருதுகளையும் ஏராளமான பல மாநில விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார் எஸ்.பி.பி. அவர் போகாத நாடில்லை. ஏறாத மேடையில்லை. அடையாத சிறப்பும் இல்லை. 74 வயதிலும், இளைமை குன்றாத, அமுதம் சுரக்கும் அட்சயக் குரலாக அவர் குரல் இருந்தது.
எப்போதும் ஓய்வில்லாமல் மக்கள் மத்தியிலேயே வானம்பாடி யாய்க் கானம்பாடிக்கொண்டிருந்த அவர், கொரோனா விழிபுணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டார். தனது அறக்கட்டளை மூலமும் உதவிக் கரம் நீட்டினார். கவியரசு வைரமுத்துவிடம் கேட்டு வாங்கி, மூன்று கொரோனா விழிப்புணர் வுப் பாடல்களையும் பாடினார்.
கடைசியில் கொரோனா தொற்றுக்கே அவர் ஆளாகி நிரந்தர மௌனத்தில் மூழ்கியதுதான் சிகரத் துயர்.
கடைசி நாட்கள்
ஜூலை மாத இறுதியில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் எஸ்.பி.பி. அதன் பின்னரே அவர், வாழ்வின் எதிர் திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். ஆகஸ்ட் 3 அன்று, அவருக்கு லேசான காய்ச்சலும் சளியும் ஏற்பட, சரணின் நண்பரும் குடும்ப டாக்டருமான தீபக்கிடம் ஆலோசனை செய்தார் எஸ்.பி.பி. இதைத் தொடர்ந்து டாக்டர், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ள,அன்றே செய்து கொண்டார். மறுநாள் செவ்வாய்க் கிழமை பாசிட்டிவ் என ரிசல்ட் வர, அவர் குடும்பமே கவலையில் மூழ்கியது. எஸ்.பி.பி.யோ, கொஞ்சமும் கவலைப்படாமல், ’என்னால் குடும்பத்தில் யாருக்கும் இது பரவ வேண்டாம். நான் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுகிறேன்’ என்று கிளம்பியிருக்கிறார்.
இன்று செவ்வாய்க்கிழமை.
அதனால் நாளை புதன் கிழமை போகலாம் என்று குடும்பத்தினர் சொல்ல, 5 ஆம் தேதி எம்.ஜி.எம். மருத்துவமனையில் உற்சாகம் இழக்காமலே அட்மிட் ஆனார் எஸ்.பி.பி.
மருத்துவமனையில் நெகிழ்ச்சிக் காட்சிகள்
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்க டாக்டர்கள் விரும்பினர். எஸ்.பி.பி. தயங்குவாரோ என்று டாக்டர்கள் நினைத்ததற்கு மாறாக, ’எனக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்’ என்று சொன்ன எஸ்.பி.பி., மூச்சுக் குழலுக்குள் சுவாசக் கருவியை செலுத்தும்வரை, பலமுறை குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் மகிழ்வாகப் பேசியிருக் கிறார்.
அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தீபக் சொல்கிறார்...
முதல் நான்கு நாட்கள் நல்லபடியாக தனக்கான அறையில் அமைதியாக புத்தகம் படித்தார்.தொலைக்காட்சி பார்த்தார். எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் இருந்தார். அவருக் காக உருவாக்கப்பட்ட சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த போது, எங்களுக்குக் குறிப்பு கள் எழுதுவார். அந்தக் குறிப்பில் ஒவ்வொரு முறையும் ’உங்கள் அனைவருக்கும் என் மரியாதையுடன்..’ என்று தான் ஆரம்பிப்பார். சிகிச்சை யின்போது அனைத்து மருத்துவர்கள், ஊழியர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். அவர் இறப்பதற்கு சில நாள்கள் முன்பு வரை தினமும் 20 நிமிடம் எழுப்பி உட்கார வைப்போம். ஆனால் கடைசி 48 மணி நேரங்களில் எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விட்டது’’
மருத்துவமனைக்கு வந்த மனைவி மகள், மகன் உள்ளிட்ட தன் குடும்பத்தினரைப் பார்க்கும் போது அவர் முகம் மலர்ந்திருக் கிறார். மருத்துவமனையிலேயே அவரது திருமண நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது முகத்தில் உற்சாகத்தைத் தேக்கிவைத்து அனைவரையும் மகிழ வைத்திருக்கிறார்.
பேரப்பிள்ளைகள் அவருக்கு வாழ்த்துக்களை எழுதிக்கொண்டு வந்து கொடுத்து, அவரை மகிழவைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் கண்ணில்படும்படி ஒட்டிவைத்திருக்கிறார்கள். இதற்கிடையே, இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள், அவர் நலம்பெறவேண்டும் என்று பேசி வெளியிட்ட வீடியோக்களை, டாக்டர்கள் முன்னிலையில் அவரிடம் போன் மூலம் காட்டியிருக்கிறார் சரண். உடனே அவரை அருகில் வரச்சொல்லி, அந்த போனுக்கு முத்தம் கொடுத்தும் நெகிழ வைத்திருக்கிறார் எஸ்.பி.பி. அவருக்காக திரையுலகப் பிரமுகர்கள் நடத்திய பிரார்த்தனைத் தகவலும் அவரிடம் சொல்லப்பட, அவர் முகத்தில் நிம்மதி நிலவியிருக்கிறது. அதே போல அவர் பாடிய காதல் பாடல்களையும் அவர் சிகிச்சை பெற்ற அறையில் மெல்ல ஒலிக்க வைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவரின் மன அழுத்தம் குறைந்து, அவரது கான்சியஸின் அளவு உயர்த்தாம்.
அதே போல் அவருக்கு ’ஆர்ம்ஸ் சைக்கிள்’ என்ற கருவி மூலம் பிஸியோ தெரஃபி சிகிச்சையும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் முழுமையாக ஒத்துழைத்திருக்கிறார் எஸ்.பி.பி.
மௌன ராகமான இதயம்.
இப்படி, மீண்டெழுந்து வருவதற்கான அனைத்து அடையாளங்களும் எஸ்.பி.பி.யிடம் தெரிந்த நிலையில்தான், திடீரென்று 23 ஆம் தேதி அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த எக்மா கருவியின் எதிர்விளைவாக அதி தீவிரத் தொற்றும், மூளை நரம்பில் ரத்தக் கசிவும் ஏற்பட்டு, அவர் நினைவை இழக்கத் தொடங்கிவிட்டார் என்கிறது மருத்துவர்கள் தரப்பு. எஸ்.பி.பி. என்னும் இசை, மௌன ராகமாய் மாறியது.
25-ஆம் தேதி மதியம் 1.04-க்கு அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனைவின் நிர்வாக உதவி இயக்குநர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க, அது எஸ்.பி.பி.யின் ரசிகர்களைக் கண்ணீர் மழையில் நனைய வைத்தது. மருத்துவமனை முன் ஏராளமான ரசிகர்கள் குவியத் தொடங்கினர். மகன் சரணும், தந்தையின் மரணத்தை அறிவித்து அனைவருக்கும் நெகிழ்வோடும் தவிப்போடும் நன்றி சொன்னார்.
மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பாரதிராஜா, மீடியாக்களிடம் பேசமுடியாமல் பேசி, கண்ணீர் வடித்தார். நடிகர் கமல் முதல்நாள் இரவும், அதற்கு முன்பும் மருத்துவமனைக்குக் கவலையோடு வந்து சென்றதில், அப்போதே பலருக்கும் நிலைமையின் கனம் புரியத் தொடங்கிவிட்டது.
இறுதி யாத்திரை
மருத்துவமனையில் இருந்து எஸ்.பி.பி.யின் உடல், அன்று மதியம் 3.50-க்கு, சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப் பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். மறுநாள் காலை, எஸ்.பி.யின் உடல் அவரது தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொற்று பயமில்லாமல் கூட்டம் நெருக்கியடித்ததால், மாநகராட்சி அதிகாரிகளின் அறிவுறுத்தலால் அன்று இரவு 8 மணிக்கே, அலங்கரிக்கப்பட்ட வாகனத் தில் அவரது உடல் ஏற்றப்பட்டு தாமரைப்பாக்கம் பண்ணை இல்லத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. வழி நெடுகிலும் அவரது உடலுக்கு ரசிகர்கள் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மறுநாள் காலை 11 மணியளவில், எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. அரசு மரியாதைக்குப் பின்னர், வைதீக சடங்குகளோடு, விண்ணளாவப் புகழோடு வாழ்ந்த அந்த மகா கலைஞனின் உடல், மண் மகளின் மடியில் கிடத்தப்பட்டது.
எஸ்.பி.பி.யென்னும் எட்டாவது ராகம் காற்றில் முழுதாகக் கரைந்து கலைந்துவிட்டது.
படங்கள்: அசோக்& ஸ்டாலின்