"அரிது அரிது மானிடராய் பிறத் தல் அரிது.
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
-என்று, உயிரினங்களிலேயே மேம்பட்டதான மானிடப் பிறவியின் உயர்வு குறித்துப் பாடினார் ஔவையார். சகல குறைபாடுகளை யும், போராட்டங்களையும் தாண்டி, பிறப்பெடுத்திருக்கிறோம் நாம். அப்படி இருந்தும் வாழ்வின் மதிப்பு தெரியாமல், தோல்வி மனப்பான்மை கொண்ட இளைஞர் கள் பலரும் தற்கொலை முடிவைத் தேடிக்கொள்வதை நினைத்தால் வேதனை மிகுகிறது.
இரவென்றால் பகல் உண்டு. மலர் என்றால் முள் உண்டு. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த சிக்கலைப் பொறுமையோடும், மனவலிமையோடும் ஏதிர்கொண்டு, சரி செய்து கொள்வதே சரியான முடிவாகும். அன்றி, தோல்வி வந்துவிட்டதே என்று வருந்தி, மன உறுதி இழந்துவிடுவது கோழைத்தனமாகும்.
எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் நம்மை உயரத்திற்கு அழைத்து செல்லவே வருகின்றன. மாற்றுக் கருத்துக்கள் மூலமே நமது கருத்தும், செயலும் இன்னும் மேம்படும். வருகின்ற சோதனைகள் எல்லாமே சாதனையாக மாற்றிக்கொள்ள நமக்குக் கிடைக்கிற வாய்ப்பாகும்.
போர்களில் தொடர்ந்து கொண்ட அரசர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் மனதில் ஒரு பயம் நுழைந்தது. தனது எதிரிகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து வந்து நம்மை முற்றுகையிட்டால் என்ன செய்வது என்று யோசித்த அவர், வெளியில் வருவதையே குறைத்து விட்டார். இது அவரது வெற்றிகளின் சந்தோஷத்தையே காணாமல் செய்துவிட்டது. பிறகு அரசர், பலத்த பாதுகாப்புடன் ஒரு தனி மாளிகை கட்டினார். முன்பக்கம் மட்டும் ஒரு சிறிய நுழைவுவாயில் அவர் செல்வதற்கு அமைத்துக்கொண்டார். அதில் அவரே உடலை குறுக்கியபடி தான் நுழையமுடியும்.
அந்த குறுகிய கதவின் வெளிவாயிலிலும் ஏராள மான காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.
மாளிகையை பார்வையிட்ட மன்னர் தளபதியையும், அமைச்சரையும் பாராட்டினார். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், பலமாக சிரித்தார். மன்னன் கோபத்துடன் காரணம் கேட்க அப்பெரியவர் சொன்னார், "இந்த பாதுகாப் பான மாளிகை பிரமாதம்தான். அந்த சிறிய நுழைவு வாயிலைத் தவிர " என்றதுடன், தொடர்ந்து சொன்னார்,
"அந்த வாயில் வழியாக எதிரிகள் உள்ளே வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் ? பேசாமல் அதையும் அடைத்து விட்டு நீங்கள் உள்ளே பாதுகாப்பாக பயமில்லாமல் இருக்கலாம் அல்லவா " என்றார்.
மன்னர் , “அதெப்படி முடியும், அது சமாதி மாதிரியல்லவா இருக்கும்” என்றார். “இப்பொழுது மட்டும் எப்படி இருக்கிறதாம், சமாதி போல் தானே" என்றார் பெரியவர். மன்னன் சிந்திக்கத் துவங்கினார்.
பெரியவர் தொடர்ந்தார் , “மன்னா, எதிரிகள் உங்களைக் கொல்லாவிட்டாலும் நீங்கள் ஒரு நாள் மரணிக்கத்தானே போகிறீர்கள். தடைகளையும், சுவர்களையும் விலக்கி வைத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழமுடியும். தடைகளும், எதிர்ப்புகளுமே ஒரு விஷயத்தின் முழு பரிணாமத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இருள் இல்லையெனில் வெளிச்சத்தை எங்ஙனம் உணரமுடியும் ? வெயிலின் அனலில் தானே நிழலின் குளுமை அருமை தெரிகிறது !” -இதை பெரியவர் சொல்லச் சொல்ல மன்னரின் மனக்கதவு திறந்தது.
மன்னர், ஜன்னல்களும், வாயிற்கதவுகளும் அமைக்கச் சொல்லி பணித்து, அந்த மாளிகையை மறுபடியும் வாழத் தகுதியானதாக மாற்றினார். கூடவே வெளியில் அதிகம் வந்து மக்களுடன் கலந்து பழகி, எதார்த்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.
பிரச்சனை என்று ஒன்று வரும்பொழுது, கோபமோ, வருத்தமோ, பதட்டமோ கொள்ளாமல் , முதலில் காரணம் என்னவாக இருக்கமுடியும் என்று யோசிக்கத் தவறிவிடுகிறோம். பிரச்சனைக்கு காரணம் அடுத்த எவரோ என்று முடிவுசெய்யும் முன்னால் , நாமே காரணமாக இருப்போமோ என்று ஆராய்ந்து பார்த்தோமெனில் , பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் எளிதாகி விடும்.
பிரச்சனைகள் தற்காலிகமானவை எனில், உடனுக்குடன் ஆராய்ந்து செய்ய வேண்டியதை பக்குவமாக செய்வோம். நிரந்தரப் பிரச்சனைகள் எனில் , உதாரணத்திற்கு , தீராத வியாதி, மண வாழ்க்கை முறிவு, உடல் ஊனமுள்ள குழந்தை பிறப்பு போன்ற நிலைமைகளில் , மனம் தளராது , இயல்பை ஏற்றுக்கொண்டு, அதில் எதிர் நீச்சல் போட்டு வாழப் பழக்கிக்கொள்வோம். ஒன்றை நினைத்து, நினைத்து வேதனை பட்டுக்கொண்டே இருப்பின் உடல் மற்றும் மனபலம் குறையுமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வோ, மன அமைதியோ கிடைக்காது.
எது நேர்ந்தாலும் எதிர்மறை எண்ணங்களை நெருங்க விடாமல் இருந்தால் போதும். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நேர்மையான சிந்தனையும் , நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் சாதிக்கலாம் தத்துவ மேதை சாக்ரடீஸ் மரண தண்டனை கைதியாக இருந்தபோது, தண்டனை நிறைவேற்றபடுவதற்கு சில தினங்களுக்கு முன், இசைக் கற்றுக் கொள்ள விரும்பினார். மரணம் தன்னை நெருங்குவதை பற்றிக் கவலைப்படாமல் இசை பயின்றார். குறுகிய காலத்திலேயே நல்ல தேர்ச்சி யும் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மரணத் தேதி அறிந்திருந்தும் , தனது ஆற்றலை முழுமையாக நம்பி தன் விருப்பத்தை மன உறுதியுடன் அடைந்தார், அனுபவித்தார்.
தனக்குள் இருக்கும் பேராற்றலைக் குறைத்து மதிப்பிடுதலே, மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதன் காரணம். நம் இலட்சியத்திற்காக , வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாம் வாழ்ந்தோமெனில், மிக உயர்ந்த அங்கீகாரங்கள் நம்மைத் தேடி வரும்.
நம் இலட்சியம் சரியா, தவறா , முடியுமா முடியாதா, நடைமுறைக்கு ஏற்றதா, நடக்குமா, நடக்காதா என்பதை நிகழ்கால நிலைமையை மனதில் வைத்து முடிவுசெய்ய இயலாது.
இலட்சியத்தை அடைய , நிறைவேற்ற நாம் எடுக்கும் அடிகளில் , முயற்சியில் நிகழ்காலம் பெரும் மாற்றத் தைக் காட்டும். நம் தீவிர, தீராத தாகமாய் எடுக்கும் முழுமையான முயற்சி சாதாரண நிகழ்காலத்திலிருந்து , மிக உயர்வான எதிர் காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கும்.
என்னென்ன வேண்டாம் என்பதை சிந்திப்பதை விட , என்ன வேண்டும் என்ற எண்ணங்களைப் புகுத்துவது தான் சரியான வாழ்க்கை அணுகுமுறை. வாழ்க்கை நம்மோடு விளையாடாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
எதிர்ப்புகளையும், தடைகளையும் கண்டு பயந்து விலகுவதால் நாம் எடுத்த செயல் முழுமையடையாது. செயல் செய்தல் வேண்டும். ஒரு செயல் செய்யத் துவங்கினால் அதற்கான தடைகள் தானாக வரும். அது நடைமுறை உண்மை. விடா முயற்சியும், அறிவாற்றலும், தன்னம்பிக்கையும் ஒரு சேர செயலாற்றி அந்த தடைகளை வெற்றிகொள்ள வேண்டும். தோல்வியைத் தோல்வி அடையச் செய்யவேண்டும்.
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனையவேண்டும். அதையும் மீறித் துன்பம் வந்துவிட்டால், மனம் தளராது அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் நம் வள்ளுவர்.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.